மிரட்டி மிக்ஜாம் புயல்.. சென்னையில் பல இடங்களில் பால் விநியோகம் கடுமையாக பாதிப்பு! எப்போது சீராகும்


மிக்ஜாம் புயல் சென்னையில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள, நகரில் பல்வேறு இடங்களிலும் பால் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னைவாசிகள் கடும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.

வங்கக் கடலில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நேற்று சென்னைக்கு அருகே வந்தது. அப்போது புயல் தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில், சென்னையில் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.நேற்று முன்தினம் இரவு ஆரம்பித்த மழை நேற்று நள்ளிரவு வரை பல்வேறு இடங்களிலும் கொட்டி தீர்த்தது. இதனால் சென்னையில் எல்லா இடங்களிலும் நீர் தேங்கி இக்கட்டான சூழல் ஏற்பட்டது.

வெள்ள நீரைக் கடல் உள்வாங்கவில்லை என்றும் இதன் காரணமாகவே சென்னையில் பல்வேறு இடங்களிலும் நீர் தேங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றிரவு மழை குறைந்து குறைந்த நிலையில், கடல் சீற்றமும் குறைந்தது. இதையடுத்து நீர் வடியத் தொடங்கியது. இப்போது நகரின் முக்கிய சாலைகளில் மட்டும் நீர் வடிந்துள்ளது. உட்புற சாலைகளில் இன்னும் நீர் வடியவில்லை. குறிப்பாகத் தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் அதிகம் தேங்கியுள்ளது.

மழை நீரை அகற்றும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இன்று இரவுக்குள் 75% இடங்களில் மழை நீர் அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், மழை காரணமாக மின் இணைப்பும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் புயலால் மழை நீர் தேங்கியுள்ள நிலையில், பல இடங்களில் நீர் கடல் போல் காட்சியளிக்கிறது.

இந்த கனமழையால் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆவின் பாலும் பல இடங்களில் கிடைக்கவில்லை என்றே பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இதனால் சென்னைவாசிகள், குறிப்பாகக் குழந்தைகளை வைத்திருக்கும் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை புறநகர்ப் பகுதிகளான மேடவாக்கம், வேங்கை வாசல், காமராஜபுரம் பகுதிகளில் ஆவின் பால் கிடைப்பதில்லை. இன்னும் சில இடங்களில் தனியார் பால் மட்டுமே இருப்பதாகவும் அதன் விலை அதிகமாக இருப்பதாகப் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

இதற்கிடையே ஆவின் பால் விநியோகத்தில் சில இடங்களில் மட்டுமே சிக்கல் இருப்பதாகவும் அதையும் விரைவாகச் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். சோழிங்கநல்லூர் உள்ளிட்ட சென்னை அருகில் உள்ள பால் பண்ணைகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. பால் விநியோகத்தைச் சீராக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
Share on: