யூடியூப் சேனல் மூலம் ஆசையை தூண்டி பொதுமக்களிடம் நூதன மோசடி: விளம்பரம் பார்த்தாலே பணமோ பணம் கோவை நிறுவனம் மீது போலீஸ் வழக்கு: உரிமையாளருக்கு ஆதரவாக 10 ஆயிரம் பேர் குவிந்ததால் பரபரப்பு!


விளம்பரம் பார்த்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அளிக்கப்பட்ட புகாரில் கோவை தனியார் நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அந்த தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக 10 ஆயிரம் பேர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கோவை மாநகர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

நான் சமூக வலைத்தளங்களில் சைபர் குற்றங்கள் தொடர்பாக பார்த்து கொண்டிருந்தபோது, அதில் யூ டியூப் ஒன்றில் தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பர வீடியோவை பார்த்தேன். அந்த வீடியோவில் ரூ.5 முதல் ரூ.1,800 வரை சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் அந்த விளம்பரத்தில் பல்வேறு நிலைகளில் பல்வேறு தொகைகளை செலுத்தி உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டு இருந்தது. அடிப்படை உறுப்பினராக சேர ரூ.360-லிருந்து ரூ.1,21,260ம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் தொகைகளுக்கு ஆயுர்வேத மாத்திரைகள் மற்றும் ஹெர்பல் பொருட்கள் (இந்த பொருட்களை நிறுவனத்தின் உரிமையாளர் முறையான அனுமதியின்றி தயாரித்து விற்பதாக கூறப்படுகிறது) வழங்கப்படும்.

அவ்வாறு சேர்ந்த நபர்கள் அவர்களுக்கு கீழ் மேலும் புது நபர்களை அறிமுகப்படுத்தும்போது அவருக்கு ஏற்கனவே இருக்கும் உறுப்பினரில் இருந்து பதவி உயர்வு கொடுத்தும், புதிதாக சேரும் நபர்கள் கட்டும் தொகைக்கு ஏற்பவும், தினமும் விளம்பரம் பார்த்தால் அதிக வருமானம் ஈட்டலாம் என்று பொதுமக்களுக்கு பேராசையை தூண்டும் வண்ணம் அந்த விளம்பரம் இருந்தது. அந்த கேப்ஸ்யூலின் தரம் என்ன? என்பதைப் பற்றியோ, அவ்வளவு பெருந்தொகைக்கு வாங்கப்படும் அந்த ஆயுர்வேத பொருட்களை ஒரு சாதாரண மனிதன் என்ன செய்ய முடியும்? என்ற சிந்தனையோ இல்லாமல் அதிக வருமானம் பெற வேண்டி அவற்றை வாங்க பொதுமக்கள் தூண்டப்படுகிறார்கள்.

அவ்வாறு பெருந்தொகை கட்டி சேரும் நபர்களுக்கு விளம்பரம் பார்த்தால் பணம் கொடுப்பதாக கூறுவதில் எந்தவித சாத்திய கூறும் இருப்பதாக தெரியவில்லை. விளம்பரம் பார்த்தால் பணம் கொடுப்பதாக விளம்பரப்படுத்துபவர்கள் மேற்கண்ட ஸ்கீமில் சேருபவர்களுக்கு வருமானத்தை எந்த அடிப்படையில் கொடுப்பார்கள் என்ற எந்த ஒரு விபரமும் அவர்களது இணையதளத்தில் தெளிவாக தெரிவிக்காமல் பொதுமக்களை ஏமாற்ற வேண்டும் என்ற ஒரே கெட்ட நோக்கத்தோடு செயல்படுவதாக தெரிகிறது. மேலும் மருத்துவரின் பரிந்துரையின்றி கொடுப்பது தவறு என்று தெரிந்தும் தருவது சட்டத்திற்கு புறம்பானது.

எனவே மேற்கண்ட நிறுவனத்தில் உறுப்பினராகும் நபர்கள் அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு பல நிலைகளை கொண்ட அந்த நிறுவனத்தில் உறுப்பினராக பெரும் தொகையை செலுத்தி சேர்த்து விடவும் தூண்டப்படுகிறார்கள். மேலும் பொதுமக்களுக்கு ஆசை காட்டி, மருத்துவ துறையால் பரிந்துரைக்கப்படாத மற்றும் உறுதிப்படுத்தப்படாத பொருட்களை பொதுமக்களுக்கு கொடுப்பதாக ஏமாற்றி பெரும் தொகையை வசூலிக்கின்றனர். அந்த நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

அதன்பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் அந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே இந்த நிறுவனத்தின் உரிமையாளர் தமக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் ஒன்று கூட வேண்டும் என யூ டியூபில் வீடியோ பதிவிட்டு இருந்தார். இதையடுத்து கோவை நீலாம்பூர் எல்.அண்டு.டி பைபாஸ் அருகே நேற்று தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலத்தை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக திரண்டனர்.

அவர்கள் பொய் புகாரின் பேரில், நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். அவர்களிடம் போலீசாரும் நிறுவனத்தின் உரிமையாளரும் பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர். கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் இந்தியா முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளதாக தெரிகிறது. கோவையில் இந்த நிறுவனத்துக்கு ஆதரவாக திரண்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
Share on: