ரூ.4,500 வரை அதிகரிப்பு.. தமிழகத்தில் ஆம்னி பஸ்களின் கட்டணம் கிடுகிடு உயர்வு..


தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கிடுகிடுவென அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் செல்லும் பஸ்களின் கட்டணம் என்பது குறைந்தபட்சமாக ரூ.2 ஆயிரமாகவும், அதிகபட்சமாக ரூ.4,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை.. நாளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதன்பிறகு மிலாடி நபி பண்டிகை திங்கட்கிழமை கொண்டாடப்படுவதற்கு பிறகு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) கொண்டாடப்பட உள்ளது. பிறையின் அடிப்படையில் மிலாடி நபி செப்டம்பர் 17 ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் செப்டம்பர் 16ம் தேதி விடுமுறை எடுத்தால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தயாராகி வருகின்றனர். பொதுமக்கள் கூட்ட நெரிசல் இன்றி சொந்த ஊர்களுக்கு செல்ல சென்னையில் இருந்து இன்று பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று மற்றும் நாளை 955 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று மற்றும் நாளை 190 பேருந்துகள் செல்ல உள்ளது. அதேபோல் பெங்களூர் உள்பட பல இடங்களுக்கும் 350 பஸ்கள் செல்ல உள்ளன.

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க தற்போது தமிழகத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களின் கட்டணம் என்பது கிடுகிடுவென அதிகரித்துள்ளது. அதாவது ஆம்னி பஸ்களின் கட்டணம் என்பது குறைந்தபட்சமாக ரூ.2000ல் இருந்து அதிகபட்சமாக ரூ.4,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து மதுரைக்கான ஆம்னி பேருந்து கட்டணம் ரூ.1900ல் இருந்து ரூ.4 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கோவை வரையிலான பேருந்து கட்டணம் ரூ.2,000 இருந்து ரூ.4,500 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை – நாகர்கோவில் பேருந்து கட்டணம் ரூ.2,500ல் இருந்து ரூ4,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சென்னை – திருநெல்வேலிக்கு பேருந்து கட்டணம் ரூ.2,000ல் இருந்து ரூ.4,200 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆம்னி பஸ்களின் கட்டணம் இப்படி கிடுகிடுவென உயர்வது இது முதல் முறைல்ல. பண்டிகை காலங்கள், தொடர் விடுமுறை உள்ளிட்ட வேளைகளில் ஆம்னி பஸ்களின் கட்டணம் என்பது தொடர்ந்து அதிகரிக்கும். அந்த வகையில் தான் இப்போது ஆம்னி பஸ்களின் கட்டணம் என்பது உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share on: