வாட்டிய வறுமை.. தண்ணீரை குடித்து உயிர் வாழ்ந்த குடும்பம்.. விஷம் குடித்து தற்கொலை
ரேசன் கடைகளில் இலவச அரிசி.. மலிவு விலையில் எண்ணெய், பருப்பு, கோதுமை மாவு, ராகி மாவு போன்றவை கொடுப்பதே மக்கள் ஏழ்மையாலும் வறுமையாலும் வாடக்கூடாது என்பதற்காகத்தான். வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மதுரையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் உண்ண உணவு கூட இல்லாமல் வெறும் தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்துள்ளது ஒரு குடும்பம். இனியும் வாழ முடியாது என்று நினைத்து ஆண் பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் அந்த குடும்பத்தில் இருந்தவர்களோ விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வாசுகி, கோதண்டபாணி, உமாதேவி ஆகிய மூன்று பேரையும் விட்டு விட்டு பிரிந்து சென்று விட்டார் பாண்டியன். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போனது குடும்பம். வேலைக்கும் செல்லாமல் செலவுக்கும் பணமில்லாமல் போகவே, நகைகளை அடகு வைத்து செலவு செய்யத் தொடங்கினர்.
அக்கம் பக்கத்திலும் யாருடனும் பேசுவதில்லையாம். நகையை அடகுவைப்பதற்காக மட்டுமே கோதண்டபாணி வெளியே சென்று வருவாராம். வீடு தேடி வரும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தியுள்ளனர்
வீட்டில் இருந்த அனைத்துப்பொருட்களையும் விற்று சாப்பிட்ட நிலையில் மாடிப்படி கம்பி, குழாய் பைப் போன்றவற்றையும் அறுத்து எடைக்குப்போட்டு செலவு செய்தனர். கடைசியில் எதுவுமே இல்லாமல் போகவே, குடிநீர் மட்டுமே வீட்டில் இருந்தது. கடந்த ஒரு வாரமாக தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்தனர்.
வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே அக்கம் பக்கத்தினர் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அண்ணாநகர் காவல் நிலைய போலீசார் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு போய் பார்த்தனர். படுக்கை அறையில் கோதண்டபாணி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். வாசுகியும் உமாதேவியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருந்தனர். மூவரின் உடலுமே அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கியிருந்தது. வறுமை காரணமாகவே மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்றைய சூழ்நிலையில் 100 நாட்கள் பணிக்கு சென்றால் கூட மாதம் 6 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. சாதாரண வேலைக்கு சென்றால் கூட தினசரியும் 300 ரூபாய் சம்பாதிக்க முடியும் அப்படி இருக்கையில் உண்ண கூட உணவின்றி தண்ணீரை மட்டுமே குடித்து உயிர்வாழ்ந்த மூன்று பேர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டது மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.