விருதுநகர் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 பேர் உயிரிழப்பு


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஏராளமான பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.. இந்த பட்டாசு தயாரிப்பு நிறுவனங்களில் உள்ளூர் மக்கள் ஏராளமானோர் கூலித்தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகிறார்கள்.

குறைவான ஊதியத்தில், தங்கள் உயிரையே பணயம் வைத்து பட்டாசுகளை தயார் செய்யும் ஆபத்தான இந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் எதிர்பாராத விதமாக ஏற்படும் பட்டாசு விபத்துகளில் அப்பாவி தொழிலாளர்கள் கருகி உயிரிழக்கும் துயரமும் ஏற்பட்டு விடுகிறது.

கடந்த சில நாட்களுக்குமுன்புகூட, சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் கீழதிருத்தங்கல்லை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலையில் திடீரென பட்டாசு வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி 5 பெண்கள், 3 ஆண்கள் என மொத்தம் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.. 11 பேர் படுகாயம் அடைந்தனர்..

பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்து கொண்டிருந்தபோசூ, உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாகவும், ஒரு அறையில் ஏற்பட்ட வெடிவிபத்து அடுத்தடுத்த அறைகளுக்கு பரவி 7-க்கும் மேற்பட்ட அறைகள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இப்போது இன்னொரு பட்டாசு வெடிவிபத்து விருதுநகர் மாவட்டத்தில் நடந்துள்ளது.. விருதுநகர் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து – 3 பேர் உயிரிழப்பு

சாத்தூர் அருகே பதுவார்பட்டியில் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது.. இந்த ஆலையில் இன்று காலை வழக்கம்போல் பணிக்கு தொழிலாளர்கள் வந்தநிலையில், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.. மற்ற தொழிலாளர்கள் பதறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.. ஆலையிலிருந்த 3 அறைகளும் இடிந்து சேதமாகியிருக்கின்றன.

உடனடியாக இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருக்கின்றன.. இந்த வெடிவிபத்துக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை.. வெடிவிபத்து நிகழ்ந்த பகுதியில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்..!

இன்று வார இறுதி நாட்கள் என்பதால் தொழிலாளர்கள் பெரும்பாலானோருக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவிட்டதால், அதிக உயிர்சேதம் ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Share on: