விளம்பரம் பார்த்தால் பணம் எனக் கூறி மோசடி? My V3 Ads நிறுவனர் சக்தி ஆனந்த் போலீஸ் விசாரணைக்கு ஆஜர்!


போனில் விளம்பரம் பார்த்தால் வருமானம் கிடைக்கும் என ஆசைகாட்டி காட்டி லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றி வருவதாக மை வி3 நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜர் ஆனார் MyV3 Ads நிறுவன அதிபர் சக்தி ஆனந்த்.

மொபைல் ஆப்பில், விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும் என ஏமாற்றி லட்சக்கணக்கானோரிடம் நூதன MLM மோசடி நடைபெறுவதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், கடந்த ஜனவரி 19ஆம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, MyV3 Ads நிறுவனத்திற்கு ஆதரவாக வாடிக்கையாளர்கள் அண்மையில் கோவையில் திரண்டனர்.

கடந்த திங்கட்கிழமை அன்று, கோவை நீலாம்பூர் எல்&டி பைபாஸ் பகுதியில் சுமார் 5 ஆயிரம் பேர் திரண்டனர். வெளியூர்களில் இருந்தும் பேருந்துகளில் வந்து மக்கள் கோவையில் குவிந்தனர். தங்களுக்கு வருவாய் வழங்கும் ஆன்லைன் செயலிக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறி ஆயிரக் கணக்கானோர் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரூ.300 கட்டி, ஆப்பில் சேர்ந்து, விளம்பரம் பார்த்தால், தினரி ரூபாய் 4 வங்கி கணக்கில் ஏறும். முதலீட்டு தொகை அதிகரிக்க அதிகரிக்க வருமானமும் அதிகரிக்கும். ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் கட்டி ஆயுர்வேத கேப்சூல்கள் வாங்கிக் கொள்ளலாம். அப்போது விளம்பரம் பார்த்தால் தினசரி ரூ.400 வருமானம் கிடைக்கும். மேலும், நீங்கள் மற்றவர்களை உறுப்பினராகச் சேர்த்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும் கூறி MyV3 Ads நிறுவனம் லட்சக்கணக்கானோரிடம் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் பார்க்கலாம் என ஆசை காட்டி மோசடியில் ஈடுபட்டதாக MyV3 Ads எம்.டி சக்தி ஆனந்த் மீது 5 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்காக, மை வி3 ஆட்ஸ் நிறுவனர் சக்தி ஆனந்த் கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆனார். தனது வழக்கறிஞருடன் சென்று ஆஜர் ஆனார் சக்தி ஆனந்த்.

இதற்கிடையே, கோவை MyV3 Ads நிறுவன அதிபர் சக்தி ஆனந்த் மீது, 16 பேர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். சக்தி ஆனந்த் ஏற்கனவே நடத்திய V3 ஆன்லைன் டிவி மூலம் மோசடியில் ஈடுபட்டு தங்களை ஏமாற்றியதாக புகார் தெரிவித்துள்ளனர்.
Share on: