விவசாயிகளுக்குச் சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம்; பின்வாங்கிய அமலாக்கத்துறை?


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் என்பவருக்கு கடந்த ஆண்டு ஜூலையில் அமலாக்கத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் உள்ள முகவரியில் சாதி பெயரை குறிப்பிட்டு சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி ஆஜராக கூறி சம்மன் அனுப்பப்பட்டது. இதையொட்டி,சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு தங்களது ஆதார், வங்கிக் கணக்கு புத்தகத்துடன் சென்று குறிப்பிட்ட தேதியில் ஆஜராகியுள்ளனர்.

இந்த சம்மன் தொடர்பாக சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி ஆஜராக வந்த எழுதப் படிக்கத் தெரியாத பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகள் இருவரும் மிரட்டி துன்புறுத்தப்பட்டதாக நுங்கம்பாக்கம் போலீசில் வழக்கறிஞர் பிரவீனா என்பவர் மூலம் புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பியது தொடர்பாக அமலாக்கத்துறை மீது அளிக்கப்பட்ட புகாரின் மீது போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த புகார் குறித்து வழக்கறிஞர் பிரவீனாவிடம் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணையை நடத்தினர். அதேசமயம் விவசாயிகளின் 6.5 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரிக்கும் நோக்கில் சேலம் மாவட்ட பாஜக நிர்வாகி குணசேகரன் என்பவர் தொடர்ந்து பல்வேறு அச்சுறுத்தல்களையும், கொலை மிரட்டல்களையும் விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்தே அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் சாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவரும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 2ஆம் தேதி புகார் மனு அளித்தனர். எஸ்.பி. அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் நிலத்தை அபகரிக்க முயன்ற விவகாரத்தில் பாஜக நிர்வாகி குணசேகரன் மீதும் நடவடிக்கை எடுக்க மனுவில் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், விவசாயிகளுக்கு சாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பியிருந்ததையொட்டி, கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து விவசாயிகள் மீதான வழக்கைக் கைவிட அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Share on: