விஷசாராய மரணம்.. 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்.. நெஞ்சை உறைய வைக்கும் சோக காட்சிகள்


கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. ஒரே இடத்தில் 21 பேரின் உடல்களை தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஷசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் உடல்கள் கோமுகி நதிக்கரையில் தகனம் செய்யப்பட உள்ளன. இதற்கிடையே இறுதிச்சடங்கு நடந்து வரும் இடத்தில் கனமழை பெய்து வருகிறது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு அடுத்த கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்ததாக 109 பேர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர்.

அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரை 39 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுக்க இந்த சம்பம் பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டி கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 200 லிட்டர் விஷ சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்ததில் அதில் மெத்தனால் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட எஸ்பியை சஸ்பெண்ட் செய்துள்ள தமிழக அரசு, மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஷ்ரவன் குமார் ஜடாவத் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக எம் எஸ் பிரசாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி முழுவதுமே சோகத்துடன் காட்சி அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்படுகிறது. கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றங்கரையோரம் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வத்திப்பெட்டி போல் கட்டைகளை வைத்து வரிசையாக தகனம் செய்ய இடம் அமைக்கப்பட்டுள்ளது.

அது போக 7 பேருக்கு நல்லடக்கம் செய்ய குழித்தோண்டப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகள் பார்ப்பவர்களின் கண்களையே குளம் ஆக்குவது போல அமைந்துள்ளது. கண்ணீருடன் கவலை தோய்ந்த முகத்துடன் விஷசாராயத்திற்கு குடும்ப உறுப்பினரை பலி கொடுத்த துயரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அழுதுகொண்டு நிற்கும் காட்சிகளும் நெஞ்சை உறைய வைப்பதாக அமைந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதை நகராட்சி ஊழியர்கள் கவனித்து வருகிறார்கள். உறவினர்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோமுகி ஆற்றங்கரையில் மருத்துவ குழுவும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே இறுதிச்சடங்கு நடந்து வரும் இடத்தில் கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் இறுதிச்சடங்குக்காக அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டைகள் நனைந்துவிட்டன. இதனால் மீண்டும் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தொடந்து ஒவ்வொருவரின் உடல்களாக தகனம் செய்யப்பட்டு வருகிறது.
Share on: