வேங்கைவயல் சம்பவத்தில் ‘ட்விஸ்ட்’.. ஒருவரின் DNA கூட ஒத்துப்போகவில்லை.. ஷாக் ஆன சிபிசிஐடி!
வேங்கை வயல் குடிநீர் தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியுடன், 31 பேருக்கு டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டதில் ஒருவரின் டிஎன்ஏவும் ஒத்துப்போகாதது தெரியவந்துள்ளது.கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள பட்டியல் இன மக்கள் வசிக்கும் தெருவில் இருக்கும் குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மனித கழிவுகளை கலந்தனர். பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் நடைபெற்ற இந்த கொடூரமான அருவெறுக்கதக்க செயல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த குற்றவாளிகள் யார் என புதுக்கோட்டை காவல்துறையினர் விசாரணையினை தொடங்கினர். அதனைத் தொடர்ந்து தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த விசாரணையில் இன்னும் முடிவு எட்டப்படாமல் இருந்து வருகிறது.
சிபிசிஐடி போலீசார் 221 பேரிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து சந்தேகத்திற்கிடமானவர்களாக கருதப்பட்ட 31 பேரிடம் மட்டும் டிஎன்ஏ (DNA) பரிசோதனை மேற்கொண்டனர். மனித கழிவு கலந்த குடிநீர் மாதிரிகளுடன் , 31 பேரின் டிஎன்ஏவை சென்னை மைலாப்பூர் தடவியல் ஆய்வக நிபுணர்கள் ஒப்பிட்டு பார்த்தனர்.
இந்த ஆய்வு முடிவின்படி, டிஎன்ஏ மாதிரிகள், மனித கழிவு கலக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளுடன் ஒத்துப்போகவில்லை என தெரியவந்துள்ளது. இதனை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், வேங்கை வயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார், அடுத்தகட்டமாக குற்றவாளிகளை கண்டறிய சந்தேகத்திற்கிடமான குறிப்பிட்ட 10 நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக நீதிமன்ற அனுமதியை கோரி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.