1 மாணவி உட்பட 30 பேர்.. கஞ்சா சாக்லேட், ஆயில்.. கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் சிக்கியது என்னென்ன?
சென்னை பொத்தேரி பகுதியில் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் தங்கி இருக்கும் விடுதிகளில் இன்று காலை அதிரடி சோதனை நடத்திய போலீசார், ஏராளமான போதை வஸ்துகளை கைப்பற்றி உள்ளனர். போதைப்பொருட்களை பயன்படுத்திய மாணவர்கள் 30 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
சென்னை கூடுவாஞ்சேரியை அடுத்த பொத்தேரி பகுதியில் பிரபல தனியார் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவ, மாணவிகள் அதிகமானோர் பொத்தேரி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் விடுதிகள் மற்றும் தனியாக வீடு எடுத்து தங்கி படித்து வருகின்றனர்.
கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. மாணவர்களிடையே சமீப காலமாக பெருமளவு கஞ்சா புழக்கம் இருப்பதாக வந்த புகார்களின் அடிப்படையில் அவ்வப்போது சில கைது சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின் பெயரில், கூடுதல் ஆணையர் மகேஸ்வரி, உதவி ஆணையர் பவன் குமார் ரெட்டி தலைமையில் 25க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் மேற்பார்வையில், 1,000க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென பொத்தேரி பகுதியில் மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியைச் சுற்றிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் தனியாக அறை எடுத்து தங்கி இருக்கும் விடுதிகளிலும் தீவிர சோதனை நடைபெற்றது. விடுதிகளில் இருந்து வெளியே வரும் மாணவர்கள் சோதனைக்குப் பிறகே வெளியே அனுமதிக்கப்பட்டனர். இதனால் தாம்பரம், செங்கல்பட்டு இன்று காலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் இன்று நடத்திய அதிரடி சோதனையில் அரை கிலோ கஞ்சா மற்றும் 6 கஞ்சா சாக்லேட், கஞ்சா ஆயில் 20 எம்.எல், பாங் 5, ஸ்மோக்கிங் பார்ட் 1, ஹூக்கா மெஷின் 7, ஹூக்கா பவுடர் 6 கிலோ, ஊசிகள், மாத்திரைகள், போதை பெர்ஃபியூம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக 30 மாணவர்களைப் பிடித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு மாணவி உட்பட 30 மாணவர்களை போலீசார் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் யாரிடம் போதைப் பொருட்கள் வாங்குகிறார்கள்? போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் யார் யார்? மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் எப்படி கிடைக்கிறது? போதைப் பொருட்கள் எந்த நேரத்தில் கைமாற்றப்படுகிறது? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிகிறது.
போதைப் பொருட்களை பயன்படுத்தும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இனி அடிக்கடி, கல்லூரிகளைச் சுற்றியுள்ள விடுதிகளில் அதிரடி சோதனைகள் நடத்த போலீசார் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.