100 ஆண்டுகளுக்கு முன் தாமிரபரணி..இதே டிசம்பர் 16-18-ல் இதே இடங்களில் வரலாறு காணாத வெள்ளம்-ஆச்சரியம்!


தற்போது திருநெல்வேலியை புரட்டிப் போட்ட தாமிரபரணி பெருவெள்ளம் இதே தேதிகளில் இதே இடங்களில் இதே பாதிப்புகளுடன் 100 ஆண்டுகளுக்கு முன்னர் 1923-ம் ஆண்டு நிகழ்ந்தது என்பது எவ்வளவு பெரிய வரலாற்று ஆச்சரியம்!

குமரிக் கடல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி 4 மாவட்டங்களில் வரலாறு காணாத பெருவெள்ளம் ஏற்பட்டது. இப்பெருமழை வெள்ளத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் திருநெல்வேலி மாவட்டம் மீள முடியவில்லை.

வரலாற்றில் ஒரு ஆச்சரியம் என்னவெனில் 100 ஆண்டுகளுக்கு முன்னர் 1923-ம் ஆண்டு டிசம்பர் 16, 17 தேதிகளிலும் அன்றைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் இதே பெருவெள்ளத்தை எதிர்கொண்டது. அதுவும் இப்போது எப்படியெல்லாம் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறதோ அதே இடங்களில் அதே மாதிரியான பாதிப்புகள் நிகழ்ந்தன என்பதை 1923-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி வெளியான இந்து நாளிதழில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.

1923-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி இந்து நாளிதழில் “Madura Floods” என்ற தலைப்பில் வெளியான செய்தியில் இடம் பெற்றுள்ள தகவல்கள்:

-தாமிரபரணி நதியில் கடந்த 4 நாட்களாக பெருவெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

– திருநெல்வேலியின் பெரும் குளங்கள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்தோடியது

-திருநெல்வேலி நகரத்தின் சன்னியாசி கிராமம், கைலாசபுரம், வீரராகவபுரம், சிந்துபூந்துறை பகுதிகளில் 3 முதல் 5 அடி உயரத்துக்கு வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

– திருநெல்வேலி பாலம் ஶ்ரீ வைகுண்டம், திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட ரயில் நிலையங்களை 3 நாட்களாக வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன

– ரயில் நிலையங்களின் ஆவணங்கள், ஊழியர் குடியிருப்புகள், ரயில்வே சொத்துகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

– ஶ்ரீவைகுண்டம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுவிட்டது. – ரயில்வே தடத்தில் தந்தி கம்பங்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

– ரயில்வே தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன

– தென்காசி முதல் திருவனந்தபுரம் வரையிலான ரயில் பாதையில் பாதிப்பு இல்லை.

இவ்வாறு 1923-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி நாளிட்ட தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

தற்போதைய பெருவெள்ளத்திலும் சிந்துபூந்துறை, வீரராகவபுரம் உள்ளிட்ட திருநெல்வேலியின் பல பகுதிகள் பல அடி உயர வெள்ளத்தில் மூழ்கின. ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் 3 நாட்களாக வெள்ளத்தின் நடுவே சிக்கிக் கொண்டது. ஶ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் 700க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தவியாய் தவித்து ராணுவம் வந்து மீட்கும் நிலைதான் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
Share on: