5 வருஷமா என்ன பண்ணீங்க? மதுரை எய்ம்ஸ் வேலை எப்போ முடியும்? மத்திய அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி!
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் எப்போது அறிவிக்கப்பட்டது? கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? கட்டுமான பணிகளை எப்போது தொடங்கி எப்போது முடிப்பீர்கள்? என ஐகோர்ட் கிளை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசு தரப்பில் எழுத்து பூர்வமான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படும் என 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி மத்திய பாஜக அரசு அறிவித்தது. ஆனால், இடம் தேர்வு செய்தது முதல் நிதி ஒதுக்குவது வரை இந்தத் திட்டம் கடந்த 9 ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் இதுவரை சுற்றுச்சுவர் தவிர கட்டுமான பணிகளே நடைபெறவில்லை. மதுரை எய்ம்ஸ் உடன் அறிவிக்கப்பட்ட பிற எய்ம்ஸ் மருத்துவமனைகள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டு விட்டாலும், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கே இன்னும் விடை தெரியாத நிலைதான் உள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பாஸ்கர் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும்? இந்த அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, கொரோனா தொற்று ஊரடங்கால் கால தாமதம் ஏற்பட்டது, கட்டுமான பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது, 2026க்குள் பணிகள் முடிந்துவிடும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. அதற்கு நீதிபதிகள், கொரோனா தொற்று எல்லாம் 2022 ஆம் ஆண்டே முடிந்துவிட்டது, அதையெல்லாம் காரணம் காட்டாதீர்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கி, எப்போது முடியும் என்பதை மத்திய அரசு எழுத்துப்பூர்வ அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.