நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தலைமை செயலர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்.. ஐகோர்ட் வார்னிங்


கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தமிழக அரசின் தலைமைச் செயலர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து 67 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து கள்ளச்சாராய உற்பத்தி மையமாகச் செயல்படும் கல்வராயன் மலைப் பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, அப்பகுதி மக்களுக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை நான்கு வாரங்களில் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், என். மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி அடையாள அட்டைகளை வழங்குவதற்காக முகாம்கள் நடத்தப்பட்டதாகவும் அதில் 2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

அதனை பரிசீலித்து அடையாள அட்டைகளை வழங்க மூன்று மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அடையாள அட்டைகள் வழங்கிய பின்னர் அது குறித்து அறிக்கை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், எங்களுக்கு அறிக்கை வேண்டாம் எனவும் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை தான் வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள் அடையாள அட்டைகளை வழங்குவதற்கு எதற்கு மூன்று மாதங்கள் என கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் தனது வாதத்தில் சாலை வசதிகள், பேருந்து வசதிகள் செய்யப்படவில்லை எனக் கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், கல்வராயன் மலைப் பகுதியில் இரண்டு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்குவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதிகள், அரசு அளிக்கும் விவரங்கள் போதுமானதாக இல்லை எனவும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க உத்தரவிட முடியாது எனக்கூறிய நீதிபதிகள் ஆனால் அந்த அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததால் தான் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

கல்வராயன் மலைப் பகுதி விவகாரத்தில் தலைமைச் செயலாளர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதிகள் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலர் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, கல்வராயன் மலைப் பகுதியில் மினிப் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து விழுப்புரம் மற்றும் சேலம் கோட்ட போக்குவரத்து மேலாண் இயக்குநர்கள் நேரிலோ அல்லது காணொளி மூலமாகவோ நாளை பிற்பகல் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.

மேலும், ஆசிரியர்களுடன் பள்ளிகள் இயங்குவது தொடர்பாகவும், மருத்துவர்களுடன் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுவது தொடர்பாகவும், சாலை வசதிகள் தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
Share on:

2026-ல் திமுக vs பாஜக-அதிமுகவை அகற்ற சதி- சென்னை பவள விழா மாநாட்டில் அம்பலம்..கேசி பழனிசாமி வார்னிங்!


2026 தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் இருந்து அதிமுகவை அகற்ற திமுகவும் பாஜகவும் இணைந்து சதி செய்து வருவதையே சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக பவள விழா மாநாடு அம்பலப்படுத்தி இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பு குழு முன்னாள் எம்பி கேசி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார். அதிமுக ஒன்றுபடாமல் போனால் 2026 தேர்தலில் திமுக vs பாஜக என்ற நிலைமைதான் உருவாகும் எனவும் கேசி பழனிசாமி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கமான எக்ஸ்-ல் கேசி பழனிசாமி பதிவிட்டுள்ளதாவது: நேற்று திமுகவின் பவள விழா நடைபெற்றது, பொதுவாக திமுக மாநாடுகளில் அதிமுகவுக்கு எதிரான தீர்மானங்களும், அறிவிப்புகளும், நிலைப்பாடுகளும் வெளிப்படும். அதேபோல் அதிமுக மாநாடுகளில் திமுகவிற்கு எதிரான நிலைப்பாடுகள் வெளிப்படும், ஆனால் நேற்றைய திமுக மாநாட்டில் முழுக்க முழுக்க மத்திய அரசாங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான கருத்துக்கள் மட்டுமே வெளிப்பட்டது.

“Cool Lip” போன்ற போதை பொருட்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வரை அதிகம் புழங்கிக்கொண்டிருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான கருத்துக்களை தெரிவித்திருக்கிறது.

அதேபோல் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக 850 போலீஸ் அதிகாரிகள் உள்ளனர் என்று உளவுத்துறை பட்டியல் தயரித்துள்ளது. இதன் உண்மைத்தன்மை என்ன?

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை 10 லட்சம் கோடி முதலீடு ஈர்த்துள்ளது என்று விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் உண்மையாக எவ்வளவு முதலீடுகள் இதுவரை வந்தடைந்துள்ளது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்பார்கள் அதுபோல அந்த 10 லட்சம் கோடி ஏட்டில் மட்டும் உள்ளதா நாட்டுக்குள்ள வந்துவிட்டதா என்பது தெரியவில்லை.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திமுக ஆட்சியில் தமிழக அரசாங்கத்தின் கடன் சுமார் 2 லட்சம் கோடி உயர்ந்துள்ளது மற்றும் டாஸ்மாக் வருமானம் கிட்டத்தட்ட சுமார் 2 மடங்கு உயர்ந்துள்ளது.

விடியல் ஆட்சியில் அதிகாலை விடிந்தவுடன் பால் பாக்கெட் கிடைக்கிறதோ இல்லையோ, தமிழகம் முழுவதும் மதுபானம் தாராளமாக கிடைக்கிறது.

இவைகளை மறைத்து உணர்ச்சிவையப்படக் கூடிய சித்தாந்த அரசியல் மூலமாக மீண்டும் ஆட்சியை பிடிக்க திமுக முயற்சி செய்கிறது. அதேபோல மத்திய பாஜக அரசாங்கமும் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. அதிமுகவை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்துகிற பணியை பாஜகவும் திமுகவும் ஒருங்கிணைந்து செயல்படுத்துகிறார்கள்.

அதிமுக தொண்டர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பயணிக்கிற அணி வழக்குகளுக்காக திமுகவிடம் அடைக்கலம் தேடியுள்ளதாலும், ஓ.பி.எஸ், சசிகலா, தினகரன் போன்றோர் பாஜகவிடம் அடைக்கலம் தேடியிருக்கிற காரணத்தாலோ சட்டமன்ற எதிர்க்கட்சியான அதிமுகவை புறக்கணித்து தாங்கள் மட்டுமே திராவிட கட்சி, திராவிட சித்தாந்தங்கள் தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று பறைசாற்றுகிறவகையில் இந்துத்துவா, திராவிட அரசியலை முன்னெடுத்துள்ளது. இது அதிமுகவுக்கு மிகவும் ஆபத்தானது.

அதிமுக தொண்டர்கள் அனைத்து மட்டங்களிலும் இதை உணர்ந்து வலிமையான ஒன்றுபட்ட_அதிமுக -வை கட்டமைத்து ஒரு திராவிட சக்தியாக அதிமுகவை நிலைநிறுத்த வேண்டும். வெறும் அறிக்கை அரசியலை மட்டுமே நம்பியியிருக்க கூடாது. இதை செய்ய தவறினால் 2026 தேர்தல் களம் திமுக VS பாஜக என்பதாக அமைந்துவிடும். இவ்வாறு கேசி பழனிசாமி எச்சரித்துள்ளார்.
Share on:

3 ஆம் பாலினத்தவர் என்பதால் கால்நடை மருத்துவ படிப்பு விண்ணப்பத்தை நிராகரிப்பதா? ஹைகோர்ட் அதிரடி


மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக, கால்நடை மருத்துவம் படிக்க விண்ணப்பித்தவரின் விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிவேதா என்ற மூன்றாம் பாலினத்தவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நடப்பு 2014-25ம் கல்வியாண்டுக்கான கால்நடை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்த விளக்க குறிப்பேட்டில், மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவாக வகைப்படுத்தவில்லை. எனவே கால்நடை மருத்துவ படிப்புக்கான விளக்க குறிப்பேட்டை ரத்து செய்து, மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு பிரிவில் மாணவர் சேர்க்கை வழங்க உத்தரவிடக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், கால்நடை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை கோரி சமர்ப்பித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட்டால் போதுமானது எனக் கோரப்பட்டது. இதற்கு மாணவர் சேர்க்கை குழு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரரின் விண்ணப்பத்தை இரு வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என மாணவர் சேர்க்கை குழுவுக்கு உத்தரவிட்டார். மேலும், மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது என மாணவர் சேர்க்கை குழுவுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கையும் முடித்து வைத்தார்.
Share on:

சென்னையில் கோர விபத்து! அரசு பஸ் விழுந்து ஆட்டோ நொறுங்கியது.. டிரைவர் பலி!


சென்னை மதுரவாயல் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாநகர பேருந்து சாலையின் பக்கவாட்டு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. பேருந்து விழுந்ததில் சர்வீஸ் சாலையில் சென்ற ஆட்டோ நொறுங்கியதில் ஆட்டோ ஓட்டுநர் பலியாகியுள்ளார்.

செங்குன்றத்தில் இருந்து தாம்பரம் சென்று கொண்டிருந்தது 104 வழித்தட சென்னை மாநகர பேருந்து. மதுரவாயல் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் சாய்ந்து, சர்வீஸ் சாலையில் கவிழ்ந்தது.

அப்போது, சர்வீஸ் சாலையில் ஆட்டோ ஒன்று சென்றுகொண்டிருந்த நிலையில், அதன் மீது விழுந்து ஆட்டோவை அப்பளம் போல் நொறுக்கியது பேருந்து. இதில், ஆட்டோ ஓட்டுநர் தினேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்த பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Share on:

அண்ணா: சரித்திரம் படைத்த சாமானியன்!


சுதந்திரத்திற்கு பின் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளே செல்வாக்கு பெற்றிருந்த சமயம் திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கி தமிழ்நாட்டில் முதன் முதலில் மாநில கட்சி ஒன்றின் ஆட்சிக்கு வித்திட்டவர் சி.என்.அண்ணாதுரை என்னும் அறிஞர் அண்ணா.

அறிஞர் அண்ணா அவர் காலத்தில் செய்த சாதனைகள் சில

* 1967ல் முதல்வராக பொறுப்பேற்ற அண்ணா அதுவரை மெட்ராஸ் என்று இருந்த மாநிலத்தின் பெயரை “தமிழ்நாடு” என்று மாற்றி பெயரிட்டார்.

*சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாவதற்கான அரசாணையை நிறைவேற்றினார்.

*நாடு முழுவதும் இந்தி மொழி படிப்பது கட்டாயமாக்கப்பட்டு மும்மொழி கொள்கை அமலில் இருந்தபோது, தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் படித்தால் போதும் என இருமொழி கொள்கையை கொண்டு வந்தார்.

*பேருந்து சேவைகள் அரசுடைமை ஆக்கப்பட்டு போக்குவரத்துக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

*ஏழைகளுக்கு பி.யு.சி வரை இலவச கல்வி வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

*கலப்பு திருமணம் செய்து கொள்வோரை ஊக்கப்படுத்த தங்க விருதுகள் வழங்கப்பட்டன.

*1968ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்தினார்.

*சென்னை கடற்கரை சாலையில் திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன், ஔவையார் உள்ளிட்ட தமிழ் சான்றோர்களுக்கு சிலை நிறுவப்பட்டது.

*அரசு அலுவலகங்கள் எந்தவித மத கடவுளர் படங்களும் இல்லாமல் நீக்கப்பட்டது.

*விதவை திருமணம் செய்து கொள்வோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தார்.

இவை மட்டுமல்லாமல் அண்ணா மறைந்த பின் சென்னையில் நடைபெற்ற அவரது இறுதி ஊர்வலத்தில் சுமார் 1.5 கோடி மக்கள் கலந்து கொண்டனர். இன்று வரையிலும் அதிகமான மக்கள் கலந்து கொண்ட தலைவரின் இறுதி ஊர்வலமாக அவரது இறப்பும் சாதனையாகவே தொடர்கிறது.
Share on:

ரூ.4,500 வரை அதிகரிப்பு.. தமிழகத்தில் ஆம்னி பஸ்களின் கட்டணம் கிடுகிடு உயர்வு..


தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கிடுகிடுவென அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் செல்லும் பஸ்களின் கட்டணம் என்பது குறைந்தபட்சமாக ரூ.2 ஆயிரமாகவும், அதிகபட்சமாக ரூ.4,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை.. நாளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதன்பிறகு மிலாடி நபி பண்டிகை திங்கட்கிழமை கொண்டாடப்படுவதற்கு பிறகு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) கொண்டாடப்பட உள்ளது. பிறையின் அடிப்படையில் மிலாடி நபி செப்டம்பர் 17 ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் செப்டம்பர் 16ம் தேதி விடுமுறை எடுத்தால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தயாராகி வருகின்றனர். பொதுமக்கள் கூட்ட நெரிசல் இன்றி சொந்த ஊர்களுக்கு செல்ல சென்னையில் இருந்து இன்று பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று மற்றும் நாளை 955 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று மற்றும் நாளை 190 பேருந்துகள் செல்ல உள்ளது. அதேபோல் பெங்களூர் உள்பட பல இடங்களுக்கும் 350 பஸ்கள் செல்ல உள்ளன.

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க தற்போது தமிழகத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களின் கட்டணம் என்பது கிடுகிடுவென அதிகரித்துள்ளது. அதாவது ஆம்னி பஸ்களின் கட்டணம் என்பது குறைந்தபட்சமாக ரூ.2000ல் இருந்து அதிகபட்சமாக ரூ.4,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து மதுரைக்கான ஆம்னி பேருந்து கட்டணம் ரூ.1900ல் இருந்து ரூ.4 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கோவை வரையிலான பேருந்து கட்டணம் ரூ.2,000 இருந்து ரூ.4,500 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை – நாகர்கோவில் பேருந்து கட்டணம் ரூ.2,500ல் இருந்து ரூ4,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சென்னை – திருநெல்வேலிக்கு பேருந்து கட்டணம் ரூ.2,000ல் இருந்து ரூ.4,200 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆம்னி பஸ்களின் கட்டணம் இப்படி கிடுகிடுவென உயர்வது இது முதல் முறைல்ல. பண்டிகை காலங்கள், தொடர் விடுமுறை உள்ளிட்ட வேளைகளில் ஆம்னி பஸ்களின் கட்டணம் என்பது தொடர்ந்து அதிகரிக்கும். அந்த வகையில் தான் இப்போது ஆம்னி பஸ்களின் கட்டணம் என்பது உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share on:

சென்னையில் பிறந்து டெல்லியை இடதுசாரி சித்தாந்தத்தால் சிவக்க வைத்த சீதாராம் யெச்சூரி!


ஆந்திராவைச் சேர்ந்த சீதாராம்யெச்சூரி தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தவர்.. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர் சங்கத் தலைவராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு இடதுசாரி சித்தாந்தத்தின் கோட்டையாக கட்டி எழுப்பியவர் சீதாராம் யெச்சூரி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக 32 ஆண்டுகாலம் பணியாற்றி அக்கட்சியின் பொதுச்செயலாளராக உயர்ந்த சீதாராம் யெச்சூரி இன்று உடல்நலக் குறைவால் காலமானார். சீதாராம் யெச்சூரியின் இழப்பு இந்திய இடதுசாரிகளுக்கு பேரிழப்பாகும்.

தமிழ்நாட்டின் சென்னையில் 1952-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ந் தேதி பிறந்தார் சீதாராம் யெச்சூரி. ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவர். கல்லூரி காலத்திலேயே இடதுசாரி மாணவர் சங்கத்தில் இணைந்து செயல்பட்டார். டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர் சங்கத் தலைவராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் சீதாராம் யெச்சூரி.

இந்திரா காந்தியின் அவசர நிலை அமல்படுத்தப்பட்ட காலத்தில் சிறைவாசம் அனுபவித்தார். 1984-ம் ஆண்டு முதல் 32 ஆண்டுகள், சிபிஎம் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்தார். 2005-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்பியாகவும் பதவி வகித்தார்.

நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் ஆயுதப் பாதையை கைவிட்டு ஜனநாயக அரசியலுக்கு திரும்ப வைத்ததில் சீதாராம் யெச்சூரி பெரும் பங்களிப்பு செய்தார். அண்மைக்காலமாக உடல்நலன் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சீதாராம் யெச்சூரி. கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் சீதாராம் யெச்சூரி சிகிச்சை பலனின்றி காலமானார்.

சீதாராம் யெச்சூரியின் மறைவு இந்திய இடதுசாரிகளுக்கு மிகப் பெரிய பேரிழப்பாகும். முதுபெரும் இடதுசாரித் தலைவரான சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.
Share on:

அரசு மருத்துவமனையில் ஃபுல் போதையில் இருந்த டாக்டர்.. திருவள்ளூரில் நோயாளிகள் அதிர்ச்சி!


திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் மது போதையில் ரகளை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறித்து விசாரணை மேற்கொள்ள மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி 2 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளார்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினந்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிசிக்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர் நல்லதம்பி என்பவருக்கு நேற்று இரவு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் பணிக்கு வந்த மருத்துவர் நல்லதம்பி அதிக மதுபோதையில் இருந்துள்ளார். அவர் நோயாளிகளுடன் உடன் இருந்த உறவினர்களை ஒருமையில் பேசி திட்டி உள்ளார்.

நோயாளி ஒருவர் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது பணியில் இருந்த பொது மருத்துவர் நல்லதம்பி என்பவர் அந்த நோயாளியிடம் இசிஜி எடுத்து வரச் சொல்லி அனுப்பி வைத்துள்ளார். பின்னர் மற்றொரு நோயாளியின் இசிஜியை பார்த்து அவருக்கு மருத்துவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் நோயாளியின் உறவினர்கள் மருத்துவரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் சமாதானம் செய்து மருத்துவரை அழைத்துச் சென்றுள்ளனர். அதைத்தொடர்ந்து, அந்த மருத்துவர் மதுபோதை மயக்கத்தில் மருத்துவமனைக்கு வெளியே படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு உள்ளே செல்லுமாறு தெரிவித்ததற்கு, அவர் போக மறுத்துள்ளார்.

அரசு மருத்துவர் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த போது மது போதையில் தூங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவராக இருந்துகொண்டு உயிர்களின் மீது அலட்சியாக இருந்த இந்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் குறிப்பிட்ட அந்த மருத்துவர், மதுபோதையில் தான் பணிக்கு வந்து தவறாக மருத்துவம் பார்த்தாரா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி 2 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளார்.
Share on:

ஒண்டிப்புத்தூரில் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்த வாகன ஓட்டிகள்!


கோவை மாவட்டம் ஒண்டிப்புத்தூரில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்ததில் இருவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அக்டோபர் மாதம் அல்லது நவம்பர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இந்த நிலையில் சாலைகளில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்காக ஆங்காங்கே பாதாள சாக்கடைகள் தோண்டப்பட்டு , மழை நீர், நீர் நிலைகளுக்கு செல்ல வழிவகை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் ஒண்டிப்புத்தூர் பகுதியில் முக்கிய சாலையில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அங்கு இன்னமும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அந்த பாதாள சாக்கடையையொட்டி இரும்பு தடுப்புகள் போடப்பட்டிருக்கின்றன.

அந்த சாலை பிஸியான சாலை என்பதாலும் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும் என்பதாலும் நெருக்கடியாகவே காணப்படும். அந்த வகையில் இன்று பிற்பகல் அவ்வழியாக ஒரு இரு சக்கர வாகனத்தில் இருவர் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பாதாள சாக்கைடை அருகே அவர்கள் சென்ற போது அங்கிருந்த தடுப்பில் அவர்களது வாகனம் லேசாக மோதியது. இதில் இருவரும் நிலைத்தடுமாறி அந்த பள்ளத்தினுள் விழுந்தனர். பைக் சாலையிலேயே விழுந்துவிட்டது.

இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் போக்குவரத்து போலீஸாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து பள்ளத்தில் விழுந்த இருவரையும் மீட்ட போலீஸார், அவர்கள் லேசான காயமடைந்ததால் மருத்துவமனையில் சேர்த்தனர்.

போக்குவரத்தில் பிஸியாக இயங்கும் அந்த சாலையில் இரும்பு தடுப்புகளை பாதுகாப்பாக வைக்காமல் ஏனோ தானோ என வைத்தது பெரும் தவறாகும். அது போல் இது போன்ற பணிகள் நடக்கும் போது அங்கு எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு கூறியிருப்பதாவது: விபத்து நடந்த ஒண்டிப்புத்தூர் சாலையில் இருக்கும் பாதாள சாக்கடைக்கான பள்ளத்தை ஆய்வு செய்வோம் என தெரிவித்திருந்தார். மழைக்காலத்திற்குள் இது போன்ற அபாயகரமான பள்ளங்களை மூடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
Share on:

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 6 படுகொலைகள் அரங்கேறியுள்ளது! கே.சி.பழனிசாமி காட்டம்


* மேற்கு வங்கத்தில் நடந்த ஒரு சம்பவம் கிட்டத்தட்ட மேற்குவங்க அரசை கிடுகிடுக்க வைக்கிற அளவு பூதாகரமாகியுள்ளது. ஆனால் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 6 படுகொலைகள் அரங்கேறியுள்ளது, மேலும் வார கொலைகள், மாத கொலைகள் என தினசரி பத்திரிகைகளில் தனி பட்டியலிடும் அளவு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. * ஆனால் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியால் இந்த அரசாங்கத்திற்கு எதிராக எதுமே செய்ய முடியவில்லை. காரணம் எடப்பாடிக்கும் அவரோடு இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் மீது இருக்கிற வழக்குகள். அதனால் அவர்கள் பேரளவு பேசிவிட்டு காலத்தை கழித்துக்கொண்டுள்ளார்கள். * இவர்களின் இந்த செயல்பாடற்ற தன்மையை பயன்படுத்தி பா.ஜ.க, நா.த.க, விஜய் போன்ற பலர் தங்களை வளர்த்துக்கொள்ள களத்திற்கு வருகிறார்கள், ஆளுக்கு ஒருகோடி உறுப்பினர்கள் என களத்தில் இறங்குகிறார்கள். * ஆனால் கட்சியை தனதாக்கிக்கொள்ள வேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தோடு மட்டுமே செயல்பட்டுவரும் EPS, அதிமுக கட்சி ரீதியாகவும், கூட்டணியாகவும் பலவீனமாக இருப்பதால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு பின் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து எப்படியாவது தேர்தலை தள்ளிவைத்துவிடலாமா என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். * வருகிற உள்ளாட்சி தேர்தலிலேயே நாம் வென்றுவிடுவோம் என்று நம்பிக்கையோடு கட்சிக்காரர்கள் களமிறங்க முடியவில்லை. அதற்குண்டான வலுவான கூட்டணி இல்லை, வலுவான தலைமை இல்லை என்றால் அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலில் என்ன நடக்கும்? இப்படியே சென்றுகொண்டிருப்பது அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல – கே.சி.பழனிசாமி
Share on: