சென்னை பல்லாவரத்தில் 3 பேர் பலி.. கழிவுநீர் கலந்த குடிநீர் காரணமா? பெரும் அதிர்ச்சி!


சென்னை பல்லாவரம் மலைமேடு பகுதி மக்கள் சுமார் 30 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, தலை சுற்றல் ஏற்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் அருகே மலைமேடு பகுதியில் வசித்து வரும் மக்கள் சுமார் 30 பேருக்கு நேற்று வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைசுற்றல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்டோர், தனியார் மருத்துவமனையில் சிலர் என மொத்தம் 32 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடிநீரில் கழிவுநீர் கலந்திருந்ததாகவும், அந்த தண்ணீரைப் பருகியதால் உடல் உபாதைகள் ஏற்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதில் திருவேதி என்பவர் நேற்று இரவு உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மோகன்ராஜ் என்பவர் இன்று உயிரிழந்துள்ளார். மேலும், வரலட்சுமி என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் கூடியுள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அறிந்த அமைச்சர் தா.மோ. அன்பரசன், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு குடிநீர் காரணமில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையே, மாநகராட்சி அதிகாரிகள் மாதிரி நீர் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும்.
Share on:

அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்த மக்கள்.. கலெக்டரையும் விடலையே.. விழுப்புரத்தில் பரபரப்பு


பெஞ்சல் புயலால் பெய்த கனமழையின் காரணமாக விழுப்புரம் மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வரும் சூழலில் இன்று வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், முன்னாள் எம்பியுமான கவுதம் சிகாமணி, கலெக்டர் பழனி ஆகியோர் மீது மக்கள் சேற்றை வாரி இறைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயலால் சென்னை உள்பட வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த புயல் கரையை கடந்தாலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகப்பட்சமாக 51 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், திண்டிவனம் உள்பட பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மரக்காணம், கோலியனூர், நன்னாட்டம்பாயைம், பஞ்சமா தேவி, கல்பட்டு, பிடாகம், குச்சிப்பாளையம், பேரங்கியூர், நன்னாடு, பெரும்பாக்கம், காணை, மாம்பலப்பட்டு, காங்கேயனூர், செஞ்சி, மேல்மலையனூர், வானூர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

வீடுகள், கடைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். பல இடங்கள் குட்டி தீவு போல் காட்சியளிக்கிறது. மேலும் விளைநிலங்களில் மழைநீர் புகுந்துள்ளதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் மழை நீர் வெளியேறாததால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினர், காவல்துறை, தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். பெஞ்சல் புயலின்போது தமிழக அரசு சென்னையை மட்டுமே கவனத்தில் கொண்டுள்ளது. பிற மாவட்டங்களை கண்டுகொள்ளாமல் விட்டதே இந்த வெள்ள பாதிப்புக்கு முக்கிய காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதற்கிடையே தான் இன்று வெள்ளம் பாதித்த இருவேல்பட்டு பகுதியில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து வெள்ள ஆய்வு மற்றும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் பொன்முடி இன்று சென்றார். அவருடன் மகனும், கள்ளக்குறிச்சி முன்னாள் எம்பியுமான கவுதம சிகாமணி, விழுப்புரம் கலெக்டர் பழனி உள்ளிட்டவர்கள் இருவேல்பட்டுக்கு சென்றனர்.

அப்போது அவர்களுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சேற்றை வாரி இறைத்தனர். அமைச்சர், பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, கலெக்டர் பழனி ஆகியோரின் மீது சேற்றை வாரி இறைத்தனர். பொன்முடி, கவுதம சிகாமணி, கலெக்டர் பழனி மற்றும் அருகே நின்ற நிர்வாகிகள், அதிகாரிகள், போலீசார் ஆகியோரின் சட்டைகளில் சேறு பட்டது. பொன்முடி வெள்ளை சட்டை, வேஷ்டி அணிந்திருந்த நிலையில் அவரது சட்டையில் சேறு பட்டு புள்ளி புள்ளியாக தெரிந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு அவர்களை போலீசார் பத்திரமாக காரில் அழைத்து சென்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வலைதளங்களில் பரவி வருகிறது.
Share on:

தத்தளிக்கும் விழுப்புரம்.. ஆங்காங்கே நின்ற ரயில்கள்.. 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்.. எந்தெந்த இடங்கள்?


விழுப்புரத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் பல இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. விக்கிரவாண்டி – முன்டியம்பாக்கம் இடையே உள்ள ரயில்வே பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் ஆங்காங்கே பாதி வழியில் நிறுத்தப்பட்டன. ரயில் சேவை பாதிப்படைந்த நிலையில், 100 சிறப்பு பேருந்தகளை அறிவித்து தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. மாவட்டத்தின் பல இடங்களும் வெள்ளத்தில் மிதந்தது. விழுப்புரம் பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என பல இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. வரலாறு காணாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்த நிலையில் ரயில் சேவையும் கடுமையாக இன்று பாதித்தது.

விக்கிரவாண்டி – முன்டியம்பாக்கம் இடையே உள்ள ரயில்வே பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது. அபாயகரமான சூழல் அங்கு காணப்பட்டதால் ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் ரயில்வே பாலத்தின் மீது வெள்ளம் ஓடியதால் சென்னை எழும்பூர் – நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தென்காசி, ராமேஸ்வரம் இடையே இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

சென்னை – தென் மாவட்டங்கள் இடையே இன்று 16 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோவை – தாம்பரம் சிறப்பு ரயில் விழுப்புரத்துடன் நிறுத்தப்பட்டது. கொச்சுவேலி – தாம்பரம், நாகர்கோவில் – தாம்பரம் ஆகிய ரயில்கள் விழுப்புரத்துடன் நிறுத்தப்பட்டன. ரயில் சேவை பாதிக்கப்பட்டு இருப்பதால் விழுப்புரம் பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ரயில்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. தெற்கு ரயில்வே அதிகாரிகள் கோரிக்கையை ஏற்று 100 சிறப்புப் பேருந்துகளை இயக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து கழகம் கூறியிருப்பதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பெய்த பலத்த மழை காரணமாக ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், தென்னக ரயில்வே விழுப்புரம் கோட்ட அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பொது மக்கள் தங்களது சொந்த இடங்களுக்கு பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள ரயில் நிலையங்களுக்கு 100 சிறப்புப் பேருந்துகளை இயக்கிட நடவடிக்கை மேற்கொண்டார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, ஃபெஞ்சல் புயலால் பெய்த பலத்த மழை காரணமாக, 30.11.2024 மற்றும் 01.12.2024 ஆகிய தினங்களில் விழுப்புரம். திண்டிவனம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளானார்கள். மேற்கண்ட விழுப்புரம் மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வையிட்டு. பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

மேலும், மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் களத்தில் ஆய்வு மேற்கொண்டு அறிவுறுத்தியதன் அடிப்படையிலும், தென்னக ரயில்வே விழுப்புரம் கோட்ட அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, திருச்சி – சென்னை ரயில் வழித்தடம் மற்றும் விழுப்புரம் – காட்பாடி ரயில் வழித்தடங்களில் பாதிப்பு ஏற்பட்டு இடையில் ரயில்கள் நிறுத்தப்பட்ட ரயில் நிலையங்களில் உள்ள பயணிகளை பாதுகாப்பாக அவர்களது சொந்த இடங்களுக்கு செல்லும் வகையில், விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் மாம்பழப்பட்டு இரயில் நிலையத்திற்கு 15 பேருந்துகள்.

வெங்கடேசபுரம் இரயில் நிலையத்திற்கு 15 பேருந்துகள், விழுப்புரம் இரயில் நிலையத்திற்கு 15 பேருந்துகள், அரகண்டநல்லூர் இரயில் நிலையத்திற்கு 15 பேருந்துகள் மற்றும் சென்னை செல்லும் பயணிகள் வசதிக்காக வழக்கமாக செல்லும் பேருந்துகளுடன் கூடுதலாக 40 பேருந்துகள் என மொத்தம் 100 சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share on:

சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல வேண்டிய 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.


வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் நாளை பிற்பகல் கரையை கடக்க உள்ளது. அப்போது சூறாவளிக் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுஉள்ளது.

இந்நிலையில், சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, மைசூரு, புவனேஸ்வர், கவுகாத்தி, புனே உள்ளிட்ட பல நகரங்களுக்கு செல்லும் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மோசமான வானிலை காரணமாக திருச்சி – சென்னை இடையேயான இண்டிகோ விமானம் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. வானிலையை பொறுத்து மாற்றம் செய்யப்படும் என விமான நிலைய நிர்வாகம் கூறியுள்ளது.

விமான புறப்பாடு நேரத்தை அறிந்து கொண்டு பயணத்தை திட்டமிட வேண்டும் என பயணிகளுக்கு ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
Share on:

வெள்ளை அறிக்கை வெளியிடுமா திமுக அரசு?


* அதிமுக ஆட்சி காலத்தில் மின் கட்டணம் உயர்த்தும் பொழுது மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒவ்வொரு மண்டலத்திலும் மக்கள் கருத்து கேட்பார்கள் ஆனால் திமுக அரசு மக்கள் கருத்து கேட்காமலே 3 முறை மின்கட்டண உயர்வு செய்துள்ளது.

* அதே போல் 2018 ஆம் ஆண்டு சொத்து வரி 25% முதல் 50% வரை உயர்வு செய்து கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது அப்பொழுது கடுமையாக எதிர்த்து போர்க்கொடி தூக்கிய திமுக தனது ஆட்சியில் 300% வரை வரி உயர்த்தி தனது சர்வாதிகார போக்கை காட்டியுள்ளது.

* தமிழ் நாட்டில் திமுக ஆட்சியில் ஒரு கோடியே பதினைந்து இலட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1000/- கொடுத்துவிட்டு ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தினருக்கும் கட்டண உயர்வு, வரி உயர்வு மற்றும் விலைவாசி உயர்வால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ.6000/- வரை கூடுதல் செலவு ஆகிறது.

* இப்படி எல்லா வகையிலும், எல்லா துறைகளிலும் மிக கடுமையான கட்டண உயர்வு வரி உயர்வு செய்தும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் பல லட்சம் கோடி அதிகரிக்க காரணம் என்ன?

* திமுக ஆட்சிக்கு முன் துறை வாரியாக ஆண்டு வருமானம் எவ்வளவு? திமுக ஆட்சிக்கு பின் துறை வாரியாக ஆண்டு வருமானம் எவ்வளவு? மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களுக்கு செய்த செலவு எவ்வளவு? வளர்ச்சி பணிகளுக்கு செய்த செலவு எவ்வளவு? தமிழகத்தின் கடன் திமுக ஆட்சிக்கு முன் எவ்வளவு? திமுக ஆட்சிக்கு பின் எவ்வளவு? இதுகுறித்த விவரங்களை பொதுமக்கள் அறியும் வண்ணம் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
Share on:

அதானி விவகாரம், லஞ்சம் கொடுக்கப்பட்டது எப்படி?


* அதானி விவகாரத்தில் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் எப்படி கொடுக்கப்பட்டது என்கிற விவரம் அதானி கிரீன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், கவுதம் அதானியின் மருமகனுமான சாகர் அதானியின் மொபைல் போனைப் பயன்படுத்தி, கண்டறிந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* 2022-ம் ஆண்டு அதானி மற்றும் Azure Power Global Limited நிர்வாகிகளுக்கு இடையே சந்திப்பு நடந்துள்ளதாகவும் அதில், கௌதம் அதானி லஞ்சம் வழங்கும் திட்டத்தின் விரிவான அம்சங்களையும், அரசாங்க அதிகாரிகளுக்கு பணத்தை வழங்க தனிப்பட்ட முறையில் எடுத்த நடவடிக்கைகள் உட்பட அணைத்து விவரங்களும் விவாதிக்கப்பட்டு,

* அதில் Azure இன் நிர்வாகிகள், Excel மற்றும் PowerPoint ஐப் பயன்படுத்தி, இரு நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் வகையில் அதானி கிரீன் செலுத்திய லஞ்சத்தை திருப்பிச் செலுத்துவதற்க்கு சுருக்கமாக ஒரு பகுப்பாய்வைத் தயாரித்தனர்.அதில் 2.3 gigawatts மின்சாரம் கொண்ட திட்டம் ஒன்றிற்கு ஒரு மெகாவாட்டிற்கு சுமார் $30,000 (இந்திய மதிப்பில் 25 லட்சம்) லஞ்சம் கணக்கிடப்பட்ட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

* அமெரிக்க அதிகாரிகள் தங்கள் குற்றப்பத்திரிகையில் பரிவர்த்தனைகளை “ஊழல் சூரிய திட்டம்” என்று குறிப்பிட்டுள்ளனர். 2019 – 2020 காலகட்டத்தில் அதானி கிரீன் மற்றும் அஸூர் ஆகியவை மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI) மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி டெண்டர்களை வழங்கின. அமெரிக்க அதிகாரிகள் அதானி மற்றும் பிறர் இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து SECI உடன் ஒப்பந்தங்களில் ஈடுபட ஒரு திட்டத்தை வகுத்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். அதன் பின் 2021 – 2022 காலகட்டத்தில் SECI -யிடம் இருந்து மின்சாரம் வாங்க மாநில அரசுகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

* இதன் மூலம் இந்த ஊழலில் மத்திய அரசுக்கும் தமிழ்நாடு உட்பட குற்றம் சாட்டப்பட்ட 5 மாநில அரசுகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது.
Share on:

யானைகள் வழித்தடத்தில் கொள்ளை போகும் மண்.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு


கோவையில் யானைகள் வழித்தடத்தில் வனப் பகுதியில் சட்ட விரோதமாக மண் எடுப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விரிவான விளக்க அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் வனப்பகுதியில் யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக மண் அள்ளப்படுவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கோவை மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, கோவை மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, மாவட்ட நீதிபதியின் அறிக்கை குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறிப்பிட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தால் மட்டுமே முழுமையான விவரம் தெரிய வரும் என்றும், மாவட்ட நீதிபதியின் அறிக்கையில் 40 சதவீதம் மட்டுமே வெளிவந்திருக்கிறது என்றும் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புருஷோத்தமன் குறிப்பிட்டார்.

அப்போது நீதிபதிகள், மாவட்ட நீதிபதி அளித்த அறிக்கையில், 10 மீட்டர் ஆழத்துக்கு பெருமளவில் மண் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை எப்படி ஈடுகட்ட போகிறீர்கள்?. சட்டவிரோதமாக மண் எடுப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?. பெரும் மலைகள் காணாமல் போயிருக்கின்றன. கனிமவளத் துறை உதவி இயக்குனர் என்ன நடவடிக்கை எடுத்தார்? என அரசு தரப்புக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

மேலும், மாவட்ட நீதிபதியின் அறிக்கை மனசாட்சியை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது எனக் கூறிய நீதிபதிகள், சட்ட விரோதமாக எடுக்கப்படும் மண்ணை கொண்டு செல்வதற்காக நீரோடையின் மீது பாலம் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட நீதிபதி அறிக்கையில் கூறியுள்ளதை சுட்டிக்காட்டினர்.

சட்டவிரோதமாக மண் எடுத்தது யார் என தெரியவில்லை என காவல்துறையினர் கூறுவதை நம்ப வேண்டுமா?. சட்ட விரோதமாக மண் எடுப்பவர்களை இரண்டு நாட்களில் கண்டுபிடிக்க முடியாதா? எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

பின்னர் அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணையை டிசம்பர் 6 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், வனப் பகுதியில் சட்டவிரோதமாக மண் எடுப்பது குறித்து வனத் துறையினர் தெரிவித்தும் கனிமவளத் துறை உதவி இயக்குனர், சம்பந்தப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுட்டிக்காட்டினர்.

பின்னர், சட்டவிரோதமாக மண் எடுப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது?. சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?. வனப்பகுதியில் எவ்வளவு பரப்புக்கு சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளது?. சட்டவிரோதமாக மண் எடுக்க உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்பன குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

முழுமையாக அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் வழக்கை வேறு அமைப்பு விசாரணைக்கு மாற்ற நேரிடும் எனவும் எச்சரித்தனர். மேலும், வழக்கின் அடுத்த விசாரணையின்போது கனிமவளத் துறை ஆணையர், கோவை மாவட்ட ஊரக காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வன அதிகாரி ஆகியோர் நேரில் ஆஜராகி இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதேபோல, மாவட்ட நீதிபதியின் அறிக்கையின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்த பரிந்துரைகளுடன் அறிக்கைகளை தாக்கல் செய்ய மனுதாரர்கள் தரப்புக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
Share on:

சென்னை வேளச்சேரி ஏரியில் அரசு என்ன தான் செய்ய போகிறது.. கொதிக்கும் மக்கள்.. அங்கு நடப்பது என்ன?


சென்னை வேளச்சேரி ஏரியில் அரசு என்ன தான் செய்ய போகிறது.. ஏன் நேற்று மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.. வேளச்சேரி ஏரியை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை கணக்கெடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த உறுதிமொழி என்ன.. சற்று விளக்கமாக பார்ப்போம்.. 265 ஏக்கர் பரப்பில் இருந்த இந்த ஏரி வெறும் 55 ஏக்கராக சுருங்கிவிட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு எடுக்கும் நடவடிக்கைளை பற்றியும் பார்ப்போம்.

சென்னை மாநகரம் வளர்ச்சிக்காக விட்டுக்கொடுக்கவே கூடாத பல விஷயங்களை விட்டுக்கொடுத்திருக்கிறது. இனிமேல் உருவாக்கவே முடியாத பல நீர் நிலைகளை அதற்காக பறிகொடுத்துள்ளது. நீர்நிலைகளை மட்டுமல்ல, நீர்வழிப்பாதைகள், வாய்க்கால்கள், அரசு நிலங்கள், பொதுப்பாதைகள், சாலைகள், காடுகள், வனப்பகுதிகள் என எல்லா இடத்தையும் பறிகொடுத்துள்ளது. அதன் காரணமாகவே வெள்ளம் வந்தால் வெளியேற வழியில்லாமல் பரிதவித்து நிற்கிறது. குறுகிய நாட்களில் மிக மிக அதிகமான மழை பெய்யும் போது, வெள்ளம் வெளியேற வழியில்லாமல் அப்படியே தேங்கிவிடுகிறது..

அப்படி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்று தான் வேளச்சேரி. வேளச்சேரி ஏரி என்பது சென்னையின் முக்கிய ஏரிகளுள் ஒன்று . 1975ம் ஆண்டுகளில் சுமார் 265 ஏக்கர் பரப்பில் இருந்த இந்த ஏரி, அரசின் திட்டங்கள், சாலை விரிவாக்கம், மக்கள் ஆக்கிரமிப்பு என பல்வேறு காரணங்களால் 55 ஏக்கர் பரப்பிற்கு சுருங்கிவிட்டது. இதுபற்றி பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளது. 2015 வெள்ளத்திற்கு பிறகு நீர் நிலை ஆக்கிரமிப்பு விவகாரங்களில் அரசும் சரி, நீதிமன்றமும் சரி, தயவு தாட்சணை இன்றி கடுமையான நடவடிக்கைளை எடுத்து வருகின்றன. ஒரு கட்டத்தில் நீதிமன்றம், வேளச்சேரி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் நிலைகளை மேம்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த சூழலில் இந்த ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கரையில் சுமார் 955-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. இதையடுத்து நீர்வளத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகிய துறைகள் இணைந்து பயோ மெட்ரிக் முறையில் ஆக்கிரமிப்பு வீடுகளை கணக்கெடுக்கும் பணியை கடந்த வாரம் தொடங்கினார்கள். அதன் காரணமாக வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு அதற்கான பயோமெட்ரிக் கணக்கெடுக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டார்கள்.

இதற்கு வேளச்சேரி ஜெகநாதபுரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள், தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து வீடுகளை கணக்கெடுப்பு நடத்த விடாமல் அதிகாரிகளை தடுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடினார்கள். 3-வது நாளாக நேற்று காலை ஜெகநாதபுரம், ராஜலட்சுமி நகர், சசி நகர், காந்தி நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்பட பொதுமக்கள் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயோமெட்ரிக் கணக்கு எடுப்பதை நிறுத்தும் வரை தொடர்ந்து இங்கேயே போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி அங்கேயே இருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பா.ஜனதா சார்பில் கரு.நாகராஜன், தே.மு.தி.க மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு என்று தங்களை அகற்றினால் எங்கு செல்வோம் என்று கேள்வி எழுப்பினார்கள். அப்படி அகற்றுவதாக இருந்தால் எல்லோரையும் அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இதற்கிடையில் போராட்டம் நடத்திய மக்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் மா சுப்பிரமணியன், இந்த பகுதியில் உள்ள 955 வீடுகள் பாதிக்காத வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இந்த கணக்கெடுப்பை தமிழக அரசு செய்யவில்லை. நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயம் உத்தரவின்பேரில் செய்யப்படுகிறது. இந்த பகுதிகள் நீர்நிலை பகுதியில் இல்லை என்பதை பசுமை தீர்ப்பாயத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் நிரூபிக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அந்த பணியை அரசு வக்கீல் மேற்கொண்டு வருகிறார்.

இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் மீது சட்டப்படி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களை பதற்றம் அடைய செய்யக்கூடாது. இப்பகுதி மக்களின் வீடுகளின் எண்ணிக்கையை வைத்து நீதிமன்றத்தில் வாதாட கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதே தவிர வேறு எதற்காகவும் இல்லை. இங்குள்ள குடியிருப்புகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சட்ட ரீதியிலான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு பாதுகாப்பாக முதல்வரும், அரசும் இருக்கும்” என்றார். அமைச்சரின் உறுதி மொழியை ஏற்றுக்கொண்ட மக்கள், காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை சுமார் 11 மணி நேரம் நடந்த தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.

2007ம் ஆண்டு நீர் நிலைகளை குடியிருப்புகளை வகை மாற்றம் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து, வேளச்சேரி ஆக்கிரமிப்பு விவகாரத்தில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றமும், பசுமை தீர்ப்பாயமும் உத்தரவிட்டுள்ளது. 2007க்கு பிறகு நீர்நிலைகளை குடியிருப்புகளாக வகை மாற்றம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. அதற்கு முன்பு வகை மாற்றம் செய்திருந்தால் பிரச்சனை இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் அரசு எடுத்து வைக்கும் வாதத்தில் அடிப்படையில் தான் வேளச்சேரி மக்களுக்கு விடிவு பிறக்கும். ஏனெனில் பயோமெட்ரிக் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அளந்து வீடுகளால் நீர் பிடிப்பு பகுதிகளில் பாதிப்பு இல்லை என்பதையும், அந்த மக்களின் வாழ்வியல் சூழல்களையும், சிக்கல்களையும் எடுத்து வைக்க வேண்டும். அப்போது தான் இந்த மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.
Share on:

தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!



வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், சென்னை உட்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. மேலும் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் வங்கக்கடலில் புயல் உருவாவது இயல்பான ஒன்றாக மாறியிருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. தொடக்கத்தில் ஏற்பட்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொஞ்சம், கொஞ்சமாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவும், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியிருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மறுபுறம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதால் தற்போது சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.

கனமழையை பொறுத்தவரை இன்று மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் என 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

நாளை, மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் என 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல விழுப்புரம், கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் அரியலூர் என 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே நேரம் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தவிர, நாளை மறுநாள் அதாவது நவ.27ம் தேதி கடலூர் மற்றும் மயிலாடுதுறைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அன்றைய தினம் விழுப்புரம், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வட மாவட்டங்களை பொறுத்தவரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களான பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
Share on:

தமிழக ரேஷன் கடைகளில் அரிசி ஏற்றி இறக்கும்போது சிந்தியதால் ரூ.1,900 கோடி நஷ்டம்.. ஆய்வில் தகவல்

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசியை ஏற்றி இறக்கும்போது சிந்திய அரிசிகளால் மட்டுமே ரூ.1,900 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (ICRIER) வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..

தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 34,790 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 33,377 கடைகள் கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படுகிறது. இதில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள முழு நேரக் கடைகள் 18,782 ஆக உள்ளது. பகுதி நேர ரேஷன் கடைகள் 9,388 ஆக இருக்கிறது. ஆயிரம் முதல் ஆயிரத்து 500 குடும்ப அட்டைகள் கொண்ட முழு நேரக் கடைகள் 4,352 ஆகவும் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளின் மூலம் அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை, ஆயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சுமார் 2 கோடி பேருக்கு கைரேகை பெற்று வழங்கப்படுகிறது.

இந்நிலையில் ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வீணாவது குறித்து நாடு தழுவிய ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அதில் தமிழகத்தில் 2022-23ம் ஆண்டில் தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 5.2 லட்சம் டன் அரிசி, அரசின் கணக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, பயனாளிகளைச் சென்றடையவில்லை. இது நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட வேண்டிய அரிசியின் அளவில் 15.80 சதவிகிதம் என்று கூறப்பட்டுள்ளது.

ராய தாஸ், ரஞ்சனா ராய் மற்றும் அசோக் குலாட்டி ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு நடத்தி வெளியிட்ட ஆய்வின் அறிக்கையில் தான் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23-ம் ஆண்டிற்கான அரிசியின் பொருளாதாரச் செலவு ஒரு குவிண்டால் அரிசிக்கு ரூ.3,670 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 20 கிலோ அரிசி என்று விநியோகிக்கப்படும் நிலையில், மூட்டையில் ஏற்பட்ட கசிவின் காரணமாக சிந்திய அரிசியின் அளவு சுமார் 21.67 லட்சம் குடும்பங்களுக்கு உணவளித்திருக்கும் அளவுக்கு சமமானது என்று கூறப்பட்டுள்ளது.

அரிசி கசிவு தொடர்பான ஆய்வில் கசிவு குறைவாக இருக்கும் மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடு 7-வது இடத்தில் இருக்கிறது. அதேநேரம் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தமிழ்நாட்டை விட கசிவு விகிதம் குறைவாக உள்ளது. அகில இந்திய அளவில், தோராயமாக 20 மில்லியன் டன் அரிசி மற்றும் கோதுமை மக்களுக்கு சென்றடையவில்லை என கூறப்படுகிறது. இதனால் சுமார் ரூ.69,108 கோடி நிதி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆய்வின் முடிவுகள் ஒருபுறம் எனில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உணவு பொருட்களின் கசிவைக் குறைக்க நடவடிக்கையை குறைத்து வருவதாக கூறப்படுகிறது. ஜனவரி 1, 2023 முதல் மே 31, 2024 வரை, சிவில் சப்ளைஸ் சிஐடி சுமார் 42,500 குவிண்டால் கடத்தப்பட்ட அரிசியை பறிமுதல் செய்துள்ளதாகவும், அதன் மதிப்பு சுமார் ரூ.2.4 கோடி என்றும் அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆதார் அடிப்படையில் குடும்ப அட்டை வழங்கப்படுவதால், போலி குடும்ப அட்டை புழக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது என்றும் 2 தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த ஆய்வு அறிக்கை குறித்து இரண்டு நாள் முன்பு கருத்த தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் உரியவர்களை சென்றடையாமல் கசிந்து செல்வதால் 2022-23ம் ஆண்டில் நாடு முழுவதும் ரூ. 69,000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், தமிழ்நாட்டில் இலவசமாக வழங்கப்பட வேண்டிய அரிசி மக்களுக்கு வழங்கப்படாமல் வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டதன் மூலமாக மட்டும் ரூ. 1,900 கோடி தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சிக் குழு (Indian Council for Research on International Economic Relations) என்ற பொருளாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மக்களுக்கு சென்றடைய வேண்டிய உணவு தானியங்கள் முறைகேடான வழிகளில் திருப்பிவிடப்படுவதை மத்திய, மாநில அரசுகள் தடுக்கத் தவறியது கண்டிக்கத்தக்கது.

2022-23ம் ஆண்டில் தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 5.2 லட்சம் டன் அரிசி, அரசின் கணக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, பயனாளிகளைச் சென்றடையவில்லை. இது நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட வேண்டிய அரிசியின் அளவில் 15.80 சதவிகிதம் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிசி பயனாளிகளைச் சென்றடையவில்லை என்றால், எங்கு சென்றிருக்கும் என்ற வினாவுக்கு பதிலளித்த ஆராய்ச்சி அறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவரான பேராசிரியர் அசோக் குலாட்டி, அந்த அரிசி வெளிச்சந்தையில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் அல்லது ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கலாம்” என்று கூறியிருக்கிறார். அதாவது நியாயவிலைக் கடைகளில் மொத்தம் 21.67 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச அரிசி அப்பட்டமாக கடத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் இதன் பொருள்.

தமிழ்நாட்டில் ஏழை மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசியில் ரூ. 1,900 கோடி மதிப்புள்ள 5.2 லட்சம் டன் அரிசி கடத்திச் செல்லப்படுவதை மன்னிக்கவே முடியாது. அரசு மற்றும் அரசுத்துறை அதிகாரிகளின் துணையின்றி இந்தக் கடத்தல் நடைபெற்றிருக்க வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது. இதே காலகட்டத்தில் வெறும் ரூ. 2.4 கோடி மதிப்புள்ள 42,500 டன் கடத்தல் அரிசியை மட்டும்தான் தமிழக அரசு பறிமுதல் செய்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கடத்தல் தொடர்பாக ஒரு சில நியாயவிலைக் கடை ஊழியர்கள் தவிர வேறு யார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.” என்று கூறியுள்ளார்.
Share on: