நீ ஒரு “சார்” உடன் இருக்க வேண்டும்.. அண்ணா பல்கலை. மாணவியை மிரட்டிய ஞானசேகரன்.. யாரந்த சார்?


சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுடன் இன்னொரு நபருக்கும் தொடர்பு உள்ளதாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அந்த மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் தந்த மற்றொரு நபர் யார் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஞானசேகரன் என்ற ஆள் மட்டும் தனியாக குற்றம் செய்யவில்லை என்று பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளாராம். அதோடு ஆடி காரில் ஒருவர் வந்ததாக கூறி உள்ளார்.

இதெல்லாம் போக.. உன்னுடைய வீடியோவை.. வைத்து இனி உன்னை அழைப்பேன். நீ வர வேண்டும். உன்னை ஒரு சாரிடம் கூட்டி செல்வேன். நீ ஒத்துழைக்க வேண்டும். நீ Sir ஒருவருடனும் இருக்க வேண்டும். தயாராக இரு என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

அந்த சார் யார்… அந்த சார் யார்.. அவர் பல்கலையில் வேலை செய்பவரா.. இல்லை வெளியே இருக்கும் ஏதாவது ஒரு சாரா என்ற கேள்வி எழுந்துள்ளது….
Share on:

Continue Reading

திருப்பூர் அருகே குப்பையில் கிடந்த பல நூறு ரேஷன் கார்டுகள்.. பல்லடம் அருகே வருவாய் துறை தீவிர விசாரணை


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் குப்பையில் கிடந்த 292 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் தீவிர விசாணை நடத்தினார்கள். குப்பையில் கிடந்தவை திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ரேஷன் கார்டுகள் என்பது தெரியவந்தது. கடந்த 2017 முதல் 2020-ம் ஆண்டு வரை அச்சிடப்பட்ட குடும்ப அட்டைகள் என்பதும் தெரியவந்துள்ளது.

ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், துவரம்பருப்பு மற்றும் பல்வேறு பொருட்களை வாங்குவதற்கு குடும்ப அட்டை வேண்டும். குடும்ப அட்டை இருந்தால் தான் மகளிர் உரிமை பெற முடியும். இதேபோல் அரசு தரும் பல்வேறு நிவாரண உதவிகளையும் பெற முடியும்.. குடும்ப அட்டை பெற வேண்டும் என்றால், அதற்கு வருவாய்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும். நீண்ட செயல்முறைக்கு பிறகே குடும்ப அட்டைகள் கிடைக்கும்.

இந்த சூழலில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகரில் உள்ள காட்டுப்பகுதியில் குப்பைகள் போடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நேற்று அங்கு குப்பை போடச்சென்ற சிலர் குவியல் குவியலாக ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் கிடப்பதை கண்டு அதிர்ந்து போனார்கள். இதுகுறித்து நாராணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு வந்த நாராணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பல்லடம் வட்ட வழங்கல் அலுவலர் அம்பிகா உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அங்கு குப்பைகளில் போடப்பட்ட தமிழ்நாடு அரசின் 292 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை கைப்பற்றினார்கள்.அந்த கார்டுகள் திருப்பூர் தெற்கு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த குடும்ப அட்டைகள் என்பது தெரியவந்தது. கடந்த 2017 முதல் 2020-ம் ஆண்டு வரை அச்சிடப்பட்ட குடும்ப அட்டைகள் என்பது தெரியவந்தது. இந்த அட்டைகள் எப்படி வந்தது என்பது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரேஷன் கார்டுகள் விண்ணப்பித்து பெறுவது என்பது எளிதானது அல்ல என்கிற நிலையில், சுமார் 292 பேருக்கு குடும்ப அட்டைகள் தராமல் குப்பையில் வீசப்பட்டது ஏன் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட குடும்ப அட்டைகள் பல்லடம் பகுதியில் உள்ள குப்பை தொட்டிக்கு எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் பல்லடம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Share on:

அரசு ஊழியரின் சொத்து, கடன்.. தனிப்பட்ட விவரங்கள் அல்ல – உயர்நீதிமன்றம் திட்டவட்டம்


அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத் துறை உதவிப் பொறியாளராக பணியாற்றிய காளிப்ரியன் என்பவரின் சொத்துக்கள், கடன்கள் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் திம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளார்.

ஆனால், இந்த தகவல்கள் அரசு ஊழியரின் தனிப்பட்ட விவரங்கள் எனவும், அவை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விலக்களிக்கப்பட்டவை எனவும் கூறி, தகவல்கள் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பான உத்தரவை எதிர்த்து சீனிவாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி, தகவல் உரிமைச் சட்டம் 8வது பிரிவின் கீழ் சில தனிப்பட்ட தகவல்கள் வழங்க விலக்களிக்கப்பட்டுள்ளது என்றும், அரசுப் பணி சார்ந்த தகவல்களை வழங்கலாம் எனவும், அரசு ஊழியர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வது அடிப்படை உரிமை எனவும் வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு ஊழியர்களின் பணியை பாதிக்கச் செய்யும் தகவல்கள் பாதுகாக்கப்பட்டவை தான் என்றபோதும், அரசு ஊழியர்களின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட வேண்டும் எனவும், அவை பொதுமக்கள் பரிசீலனையில் இருந்து பாதுகாக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல எனக் கூறிய நீதிபதி, தகவல்கள் வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரத்தை மீண்டும் மாநில தகவல் ஆணையத்துக்கு அனுப்பிய நீதிபதி, சட்டப்படி மீண்டும் பரிசீலித்து இரண்டு மாதங்களில் முடித்து வைக்க உத்தரவிட்டார்.
Share on:

நெல்லை கொலை.. காவலர்கள் மீது நடவடிக்கை! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் கவனக்குறைவாக இருந்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி நகரின் மையப் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாயாண்டி என்ற இளைஞர் நேற்று பட்டப்பகலில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். நீதிமன்ற வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களையும் மீறி இந்தப் படுகொலை நடந்திருந்தது.

மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் வரும் அனைவரும் தீவிர ஆய்வுக்குப் பிறகே அனுமதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. ஆனால், காவல்துறையின் சோதனையையும் மீறி கொலையாளிகள் ஆயுதங்களுடன் உள்ளே வந்தது எப்படி? அப்படியானால், காவல்துறையினர் கவனக்குறைவாக இருந்தார்களா? அல்லது கொலையாளிகள் ஆயுதங்களுடன் உள்ளே நுழைவதை காவல்துறையினரே கண்டும் காணாமலும் விட்டுவிட்டார்களா? என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன.

கொலை நடந்த சில மணி நேரங்களில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். இப்படி இருக்கையில், சம்பவம் நடந்தபோது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதேநேரம் கவனக்குறைவாக இருந்த போலீசார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Share on:

திருநெல்வேலி நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டி கொலை.. ஜாதி ரீதியிலான கொலையால் பழிக்குப்பழி


திருநெல்வேலி சாந்தி நகரில் திருநெல்வேலி – திருச்செந்தூர் ரோட்டில் மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ளது. இன்று காலையில் வழக்கம்போல் நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் பணிக்கு வந்து கொண்டிருந்தனர்.

அதேபோல் வழக்கு தொடர்பாக பொதுமக்களும் நீதிமன்றத்துக்காக வந்து கொண்டிருந்தனர். பொதுவாக திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு வருவோரை போலீசார் சோதனை செய்த பிறகு தான் உள்ளே அனுமதிப்பார்கள்.

இந்நிலையில் தான் இன்று காலையில் திருநெல்வேலி நீதிமன்ற வாசல் அருகே இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை 4 பேர் கும்பல் சுற்றி வளைத்தது. அந்த இளைஞர் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடிய நிலையில் விரட்டிய கும்பல் அந்த இளைஞரை சரமாரியாக வெட்டி கொன்றது. அதன்பிறகு 4 பேரும் காரில் ஏறி அங்கிருந்து தப்பினர். அப்போது ஒருவரை வழக்கறிஞர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படை்த்தனர். மற்ற 3 பேர் தப்பி சென்றனர்.

இதுபற்றி அறிந்தவுடன் பாளையங்கோட்டை போலீசார், போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து கொலையான நபரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். அப்போது கொலையானவர் கீழநத்தத்தை சேர்ந்த சண்முகம் மகன் மாயாண்டி என்பதும், அவர் கொலை வழக்கு ஒன்றில் ஆஜராக நீதிமன்றம் வந்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஹைகிரவுண்ட் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் கொலையான மாயாண்டியின் பின்னணி பற்றி போலீசார் விசாரிக்க தொடங்கினர். அப்போது தான் ஜாதி ரீதியாக நடந்த கொலைக்கு பழிக்கு பழி வாங்க அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதாவது திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தத்தை சேர்ந்தவர் ராஜா மணி. பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். இவர் திமுகவில் செயல்பட்டதோடு, பெட்டிக்கடை நடத்தியதோடு, வார்டு உறுப்பினராகவும் இருந்தார். கடந்த 2023 ஆகஸ்ட் 13ல் கீழநத்தத்தில் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த கும்பல் அவரை வெட்டி கொன்றது.

இந்த கொலையில் கீழ்நத்தத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் மாயாண்டி, இசக்கி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மாயாண்டி இன்று திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நிலையில் அவரை 4 பேர் கும்பல் வெட்டி கொன்று விட்டு காரில் தப்பிய நிலையில் ஒருவர் சிக்கி உள்ளார். 3 பேர் தப்பித்துவிட்டனர். இதனால் ஜாதி ரீதியிலான பிரச்சனையில் கடந்த ஆண்டு ராஜாமணியை கொன்ற நிலையில் அதற்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே தான் நீதிமன்றம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து மற்ற 3 கொலையாளிகளை போலீசார் தேடிவருகின்றனர். இந்த சம்பவத்தால் திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Share on:

ஒரே நாடு ஒரே தேர்தல்.. தேர்தல் முறையையே மாற்றும் சட்டம்.. ஆதரிக்கும், எதிர்க்கும் கட்சிகள் எவை எவை?


ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இன்று மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் லோக்சபாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை அறிமுகம் செய்தார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளி செய்தன. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் கட்சிகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளின் பட்டியல் இங்கே.

பா.ஜ.க
தேசிய மக்கள் கட்சி (NPP)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம்
அப்னா தால்
கண பரிஷத்
பிஜு ஜனதா தளம் (பிஜேடி)
ஜனதா தளம் (ஐக்கிய)
லோக் ஜன சக்தி கட்சி (ஆர்)
மிசோ தேசிய முன்னணி தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி
சிரோமணி அகாலி தளம் (SAD)
ஐக்கிய மக்கள் கட்சி லிபரல்
பாட்டாளி மக்கள் கட்சி
இந்திய குடியரசுக் கட்சி (ஏ)
தமிழ் மாநில காங்கிரஸ் (எம்)
ராஷ்ட்ரிய லோக் ஜனதா தளம்
ஐக்கிய கிசான் விகாஸ் கட்சி
பாரதிய சமாஜ் கட்சி
கோர்கா தேசிய லிபரல் முன்னணி
இந்துஸ்தானி ஆவம் மோர்ச்சா
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்
திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி
ஜன் சுரஜய் சக்தி ராஷ்ட்ரிய லோக்
ஜன சக்தி கட்சி மகாராஷ்டிரவாதி
கோமந்தக் கட்சி
நிஷாத் பார்ட்டி புதிய நிதி கட்சி
ராஷ்டிரவாதி காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்)
ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி
சிவசேனா
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா

ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கும் கட்சிகளின் பட்டியல்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை எதிர்க்கும் அரசியல் கட்சிகளின் பட்டியல் இங்கே.

ஆம் ஆத்மி கட்சி (AAP)
பகுஜன் சமாஜ் கட்சி (BSP)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
காங்கிரஸ் சமாஜ்வாதி கட்சி
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
திரிணாமுல் காங்கிரஸ்
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)
திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக)
நாகா மக்கள் முன்னணி
விடுதலை சிறுத்தைகள் கட்சி
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)
விடுதலை சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா

தேர்தல்:ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு பரிந்துரைத்தபடி, இந்த மசோதா உருவாக்கப்பட்டு அது அமைச்சரவை ஒப்புதலும் பெறப்பட்டு தற்போது தாக்கலாக உள்ளது . ஒரே நாடு ஒரே தேர்தலை அவ்வளவு எளிதாக நடத்தி விட முடியாது. இதற்கு சட்டம் ஒன்று கொண்டு வர வேண்டும் என்பதை தாண்டி அதோடு சில சட்டங்களை திருத்த வேண்டும். இன்று மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் வேறு சில சட்டங்களை திருத்த வேண்டும்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இந்திய அரசியலமைப்பில் குறைந்தபட்சம் ஐந்து பிரிவுகளில் திருத்தங்கள் தேவைப்படும்.

1. பாராளுமன்றத்தின் அவைகளின் காலம் தொடர்பான பிரிவு 83,

2. குடியரசுத் தலைவரால் மக்களவையை கலைப்பது தொடர்பான பிரிவு 85,

3. மாநிலத்தின் பதவிக் காலம் தொடர்பான பிரிவு 172 சட்டமன்றங்கள்,

4. மாநில சட்டமன்றங்களை கலைப்பது தொடர்பான சட்டப்பிரிவு 174

5.மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்துவது தொடர்பான பிரிவு 356 ஆகியவற்றில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
Share on:

அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழல், முறைகேடு.. என்னதான் செய்றீங்க? தமிழக அரசிடம் கேட்ட சென்னை ஐகோர்ட்!


தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த கோகிலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ள தனது கணவர் சிறையில் பார்த்த வேலைக்காக அவருக்கு வழங்கப்படும் ஊதியம் நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை என கூறியுள்ளார்.

வழக்கு விசாரணையின் போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தமிழகத்தில் உள்ள சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் 14 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக மத்திய தணிக்கைத் துறை கூறியது தொடர்பாக செய்தித் தாள்களில் வெளியான செய்தியை தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, இந்த குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது எனக் கூறிய நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருந்தனர். மேலும், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை டிசம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, அறிக்கையை தாக்கல் செய்தார்.

அறிக்கையை பார்த்த நீதிபதிகள், முறைகேடு தொடர்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய தணிக்கைக்குழுவின் அறிக்கை வெளியான நிலையில் கடந்த 13 ஆம் தேதி தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் இவ்வளவு நாட்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பினர்.

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடு தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? இது போன்ற புகார்களை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்கிறதா? எனக் கேள்வி எழுப்பினர். தவறு இழைத்த அதிகாரிகள் அனைத்து பலன்களையும் பெற்றுக்கொண்டு ஓய்வு பெற அனுமதிக்கக்கூடாது எனவும், இதுபோன்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறினர்.

இதற்கு பதில் அளித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், 2022 ஆம் ஆண்டு மத்திய தணிக்கை குழுவின் அறிக்கை வெளியானதில் இருந்து, அதுதொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு, அதன்பின்னர் தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஊழல் புகார்களை அரசு தீவிரமாக கருதுவதாகவும் உறுதி தெரிவித்தார்.

இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜனவரி 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Share on:

தமிழக அரசுக்கு எதிராக வலுவான போராட்டம் நடத்துவோம்… அரசு ஊழியர்கள் அதிரடி எச்சரிக்கை


தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவராக இருந்தபோது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று தெரிவித்தார். ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் செல்வம் கூறினார்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15-வது மாநில மாநாடு தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி பேரணி நடந்தது. இந்தபேரணியை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தெ.வாசுகி தொடங்கிவைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் (பொ) சா.டேனியல் ஜெயசிங் தலைமை வகித்தார். சிஐடியு தேசிய இரா.கருமலையான் மாநாட்டை தொடங்கிவைத்தார். தொடர்ந்துதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15-வது மாநில மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது. மாநிலம் முழுவதுமிருந்து 1,000 பிரதிநிதிகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

முன்னதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவராக இருந்தபோது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று தெரிவித்தார். ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை.

நிறுத்திவைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு பலன்களை வழங்க வேண்டும். அவுட்சோர்சிங், ஒப்பந்த முறையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும். அரசு துறைகளில் உள்ள 6 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அதேபோல் தமிழகத்தில் தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட 3.5 லட்சம் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். எங்கள் கோரிக்கைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். தமிழக அரசும் ஏற்றுக் கொண்டது.

ஆனால் 42 மாத காலங்கள் ஆகியும் இதுவரை ஒரு கோரிக்கையை கூட நிறைவேற்றவில்லை. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினை 8 முறை சந்தித்து பேசியும் எந்த பயனும் ஏற்படவில்லை அரசு ஊழியர்களால்தான் 6-வது முறையாக திமுக ஆட்சிக்கு வந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஆனால் எங்களது கோரிக்கைகள் குறித்து ஏன் மவுனமாக இருக்கிறார் என்று இதுவரையில் தெரியவில்லை. அரசு ஊழியர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். மேலும், அரசின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். எனவே, தமிழக முதல்வர் உடனடியாக தனது மவுனத்தை கலைத்து, நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். இல்லையெனில் அரசுக்கு எதிராக வலுவான போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றுவோம்” இவ்வாறு செல்வம் கூறினார்.
Share on:

பைக் டாக்ஸிக்கு முற்றுப்புள்ளி? சிறப்பு தணிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு


வணிக நோக்கத்திற்காக (பைக் டாக்ஸி) பயன்படுத்தப்படும் பைக்குகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

பெரு நகரங்களில் போக்குவரத்து சிக்கலை தவிர்க்கவும், குறைந்த கட்டணத்தில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரவும் பைக் டாக்ஸிகள் மிகவும் உதவியாக இருக்கின்றன. சென்னையிலும் தமிழகத்தின் இதர நகரங்களிலும் பைக் டாக்ஸிக்கு மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது. இது கிக் எனப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை பெரும் அளவில் உயர்த்தியிருக்கிறது. ஆனால் மறுபுறம் ஆட்டோ மற்றும் கார் டாக்ஸி டிரைவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மட்டுமல்லாது பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் மீது ஏராளமான புகார்கள் வந்தன. குறிப்பாக பெண் பயணிகளிடம் சில பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட தொடங்கினர். ஆபத்தான முறையில் பயணிப்பது, விபத்தை ஏற்படுத்தும் வகையிலும், மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாகனத்தை இயக்குவது போன்ற புகார்களில் பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் தொடர்ந்து சிக்கினர். இதனையடுத்து இதற்கு உரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று புகார்கள் எழுந்தன.

ஆட்டோவைவிட கட்டணம் குறைவாக இருப்பதால், ஆட்டோ ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. பைக் டாக்ஸியை கைவிட வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர். போராட்டங்கள் தீவிரமடையும்போது பைக் டாக்ஸி முறை நிறுத்தப்படும் என்று அமைச்சர்கள் அறிவித்து வந்தனர். ஆனால் இது குறித்த உறுதிப்பூர்வமான உத்தரவு எதுவும் வெளியாகாமல் இருந்தது. இப்படி இருக்கையில் திடீரென பைக் டாக்ஸி குறித்து அதிரடி அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது வணிக நோக்கத்திற்காக (Bike-Taxi) பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மண்டல மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டு மண்டலம் வாரியாக தினசரி மாலை 7 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்யவும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

வாடகை வாகனத்தில்தான் பயணிகளை ஏற்ற முடியும். தொழில்முறைக்கு வாடகை வாகனங்களைதான் பயன்படுத்த வேண்டும். இந்த வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால், பைக் டாக்ஸிக்கு பயன்படுத்தப்படுவது சொந்த வாகனங்களாகும். சொந்த வாகனத்தை தொழில்முறையாக வாடகைக்கு பயன்படுத்தவது போக்குவரத்து சட்டத்தின்படி குற்றமாகும். எனவேதான் பைக் டாக்ஸி முறைக்கு எதிரான வாதங்கள் பலமானதாக இருக்கின்றன.
Share on:

கிளாம்பாக்கத்தில் என்ன நடக்கிறது.. அடியோடு சரிந்த அரசு பஸ் பயணிகள் எண்ணிக்கை.. கொதிப்பில் டிரைவர்கள்


சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நேற்று அரசு விரைவு போக்குவரத்து கழக டிரைவர்கள், கண்டக்டர்கள் திடீரென ஆவேசத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர பஸ் நிலையத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் நிற்கும் நடைமேடைக்கு செல்லும் வழி மூடப்பட்டதால் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்சில் பயணம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. முழு பின்னணி குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

சென்னை கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து முனையத்தில் இருந்து தான் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், வடக்கு மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விமான நிலையத்திற்கு நிகரான வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்கள், அரசு போக்குவரத்து கழக பஸ்கள் , ஆம்னி பேருந்துகள் மற்றும் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இந்த பேருந்து நிலையத்தை தனியார் நிறுவனம் தான் முழுமையாக கட்டுப்பாட்டில் எடுத்து பராமரிக்கிறது.

இந்த நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் நிற்கும் நடைமேடை எண்கள் 1, 2 இடத்துக்கு செல்லும் வழியை பராமரிப்பு பணிகள் என்று காரணம் காட்டி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பராமரிக்கும் தனியார் நிறுவனத்தினர் திடீரென அண்மையில் மூடி வைத்தார்கள். இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் நேராக ஆம்னி பேருந்து நிறுத்தத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக வெகுவாக குறைந்துவிட்டது.

அதேபோல் மாநகர பஸ் நிலையத்தில், பயணிகளுக்காக இயக்கப்படும் பேட்டரி வாகனங்கள் மாநகர பஸ் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பஸ்கள் நிற்கும் இடத்தில் பயணிகளை இறக்கி விட்டிருக்கிறார்கள். இதன் காரணமாகவும் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்சில் பயணம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் உரிய நேரத்திற்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கு முக்கிய காரணம் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தை பராமரிக்கும் தனியார் நிறுவனம்தான் என்று கூறி நேற்று திடீரென பேருந்து நிலைய வளாகத்திற்குள் அரசு விரைவு போக்குவரத்து கழக டிரைவர்கள், கண்டக்டர்கள் தரையில் அமர்ந்து ஆவேசத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது டிரைவர்கள், கண்டக்டர்கள் போலீசாரிடம் கூறும் போது, “சென்னை மாநகர டவுன் நிலையத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் நிற்கும் நடைமேடைக்கு செல்லும் வழி பராமரிப்பு என்ற பெயரில் மூடப்பட்டிருக்கிறது. அதனை உடனடியாக அகற்ற வேண்டும், மாநகர பஸ்சிலிருந்து இயக்கப்படும் பேட்டரி வண்டிகளை ஆம்னி பஸ் நிலையத்திற்கு சென்று பயணிகளை இறக்கி விடக்கூடாது என கோரிக்கை வைத்தனர். இதற்கு போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உங்கள் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள் கலைந்து சென்றனர். திடீர் போராட்டத்தால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Share on: