தடதடக்கும் தாம்பரம்.. ஒரே நாளில் பெண் காவலர் உள்ளிட்ட 8 பேரிடம் செயின் பறிப்பு
தாம்பரம் அருகே ஒரே நாளில் எட்டு இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் காவலர் உள்பட எட்டு பேரிடம் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு தாம்பரத்தில் நேற்று ஒரே நாளில் பெண் காவலர் உள்பட எட்டு பேரிடம் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்திரா என்ற பெண் காவலர் நேற்று இரவு 9.40 மணியளவில் தன் பணியை முடித்துவிட்டு முடிச்சூரில் உள்ள தன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். தேவராஜா சாலையில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை பின்நோக்கி இரண்டு இளைஞர்கள் சென்றனர். ஒரு இளைஞர் நடந்தும், மற்றொரு இளைஞர் பைக்கிலும் அவரை பின்தொடர்ந்து சென்றனர்.
இந்திரா வீட்டுக் கதவை திறந்து கொண்டிருந்தார். அப்போது சிறிது நேரம் தாமதமானது. இதைப் பயன்படுத்திக் கொண்ட இளைஞர்கள் இந்திராவின் ஐந்து சவரன் தங்க செயினை பறித்து நொடிப் பொழுதில் பைக்கில் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த காவலர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இதேபோல தாம்பரம் ரயில்வே மைதானத்தில் பொருட்காட்சியை பார்வையிட வந்த ஒரு பெண்ணிடமும் தங்க செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட எட்டு இடங்களில் செயின் பறிப்பு கொள்ளை நடந்துள்ளது.
இதுகுறித்து எட்டு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல்துறையில் மூன்று தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். இந்த தொடர் கொள்ளை சம்பவங்களால் தாம்பரம் சுற்றுவட்டார பகுதி பெண்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாம்பரம் மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்துக்குட்பட்ட காவலர்கள் செம்மஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இதில் அனைத்து காவலர்களும் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மாலை வரை அந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
அதில் தாம்பரம் மாநகரில் உள்ள அனைத்து காவல்நிலைய காவலர்களும் கலந்து கொண்டனர். அதை நன்கறிந்த கொள்ளையர்கள் திட்டமிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை தெரிந்து கொள்ளையர்கள் பைக்கை சாலையோரமாக நிறுத்தி சென்றது தெரியவந்துள்ளது.
காவலர்கள் அந்த பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் கல்லூரி பொறியாளரிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.