
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட போது தலைமறைவான அசோக் குமார், சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அமலாக்கத்துறை, அசோக் குமாரை வலைவீசி தேடி வந்த நிலையில் அவர் சிக்கவில்லை.
2011 – 2015 வரையிலான காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசுப் போக்கு வரத்துக் கழகப் பணியாளர்களை நியமிப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2023 ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி ரெய்டுக்கு பிறகு செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, கரூர் ராம் நகரில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வந்த புதிய பங்களாவில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர், வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால், பலமுறை சம்மன் அனுப்பியும், அசோக்குமார் ஆஜராகாமல், தொடர்ந்து ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக தலைமறைவாகவே இருந்து வந்தார்.
அசோக் குமாரின் மொபைல் எண்கள் ஸ்விட்ச் ஆஃப் மோடிலேயே இருந்தன. அசோக் குமார் வெளி மாநிலத்தில் தலைமறைவாக இருப்பதாகவும், வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார் என்றும் தகவல்கள் பரவி வந்தன. இதற்கிடையே, கரூர் ராமேஸ்வரபட்டியில் வசிக்கும் தனது பெற்றோரை அசோக் குமார் அவ்வப்போது பார்த்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. எனினும், அவர் அமலாக்கத் துறையினரிடம் சிக்கவில்லை.
கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவர் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வெளியே வரவில்லை. இந்த வழக்கில் ஓராண்டுக்கும் மேலாகச் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு பலமுறை நிராகரிக்கப்பட்டது. ஒரு முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதி ஜெயசந்திரன், அசோக்குமார் தலைமறைவாக உள்ள நிலையில் ஜாமீன் கொடுக்க முடியாது என்றார்.
இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல கட்ட முயற்சிக்கு பிறகு ஒரு வழியாக ஜாமீன் பெற்றார் செந்தில் பாலாஜி. அதன் பிறகு செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து விடுதலை ஆனதும் அமைச்சராக மீண்டும் பதவியேற்றார். அப்போது அசோக் குமார் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அப்போதும் வெளியே வரவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியை ரகசியமாக சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
கரூர் – சேலம் புறவழிச்சாலையில் ராம் நகர் பகுதியில் கட்டப்பட்டு வந்த சொகுசு பங்களா கட்டப்பட்ட நிலம் வாங்கியதில் மோசடி இருப்பதாகவும், அந்த கட்டடத்திற்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு கட்டி வந்ததாகவும் புகார்கள் எழுந்தன. இந்த கட்டுமான பணிகளும் நிறுத்தப்பட்டன.
இந்தச் சூழலில் தான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுப்பிய சம்மனை தொடர்ந்து இன்று நேரில் ஆஜராகி உள்ளார் அசோக் குமார். அசோக் குமாருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நீதிமன்றம், ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் ஜாமீன் உத்தரவாத தொகையாக ரூ.2 லட்சம் செலுத்த அசோக்குமார் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது.