தமிழகத்தில் போதை பொருட்கள் தாரளமாக கிடைப்பது போலீசாருக்கு தெரியாதா? சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி!


தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாகக் கிடைப்பது காவல்துறையினருக்கு தெரியுமா.. தெரியாதா எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்கத் தனி அமைப்பு ஏதேனும் உள்ளதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்குகளைச் சுதந்திரமான ஒரு அமைப்பின் வசம் ஒப்படைக்கலாமா என்றும் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

சென்னையில் குடிசைவாசிகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த 2017ஆம் ஆண்டு பெண்ணுரிமை இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

குடிசைவாசிகளுக்கு பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட நான்கு இடங்களில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அங்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பெரும்பாக்கம் துரைப்பாக்கம் உள்ளிட்ட நான்கு இடங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்து 2018ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி இப்பகுதிகளை ஆய்வு செய்து வழக்கறிஞர் ஆணையர் அளித்த அறிக்கையில், இந்த பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் தாராளமாக இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, வழக்கறிஞர் ஆணையர் அறிக்கையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராளமாகக் கிடைப்பதாகச் சுட்டிக்காட்டி இருக்கிறார். மேலும் போதை மறுவாழ்வு இல்லம் அமைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஆணையர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதேபோல, தமிழகத்தில் எல்லா இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாகக் கிடைப்பது குறித்து காவல்துறையினருக்கு தெரியுமா? தெரியாதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பள்ளி குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினர். போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்கத் தனி அமைப்பு ஏதேனும் உள்ளதா? இல்லையா? இந்த வழக்குகளைச் சுதந்திரமான ஒரு அமைப்பின் வசம் ஒப்படைக்கலாமா? என்றும் காவல்துறை தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேட்டனர்.

இதற்குப் பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், போதைப்பொருள் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குற்றங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் ஏராளமான காவல்துறையினரும் பணிக்கு அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள் என்று விளக்கம் அளித்தார். மேலும் போலீஸ் தரப்பு வழக்கறிஞர், வழக்கறிஞர் ஆணையர் அறிக்கையின் அடிப்படையில் எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.

வழக்கறிஞர் ஆணையர் அறிக்கையை அமல்படுத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்தப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், தாலுகா சட்டப்பணிகள் ஆணைக்குழுவும் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையைச் செப்டம்பர் 9ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
Share on:

பாரிவேந்தருக்கு சிக்கல்! மனுவை டிஸ்மிஸ் செய்த ஐகோர்ட்.. அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவு


அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை கோரி பாரிவேந்தர் பச்சைமுத்து தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மருத்துவக் கல்லூரியில் இடம் தருவதாக கூறி ரூ.88.66 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க பாரிவேந்தருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த பொத்தேரி பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றியதாக 2016 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. மாணவர்களை ஏமாற்றியதாக வேந்தர் மூவிஸ் இயக்குநராக இருந்த மதன், எஸ்ஆர்எம் கல்விக் குழும நிறுவனங்களின் தலைவர் பாரிவேந்தர் பச்சைமுத்து ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

மாணவர்களிடம் பல கோடி ரூபாய் வாங்கி ஏமாற்றிய குற்றச்சாட்டில் பாரிவேந்தர் பச்சைமுத்துவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்த பாரிவேந்தர், பணம் கொடுத்து ஏமாந்த மாணவர்களுக்கு ரூ.88 கோடியை திருப்பி அளித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்கப்பட்டதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

அதே நேரத்தில் ரூ.88 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வந்தது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் பாரிவேந்தரின் மகன் ரவி பச்சமுத்துவுக்கு கடந்த 2022, 2023ஆம் ஆண்டுகளில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்ஆர்எம் கல்விக் குழும நிறுவனங்களின் தலைவர் பாரிவேந்தரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனருமான பாரிவேந்தர் பச்சமுத்து வழக்கு தொடர்ந்தார். பாரிவேந்தர் தொடுத்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும், ரூபாய் 88.66 கோடி மோசடி தொடர்புடைய வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க பாரிவேந்தருக்கு உத்தரவிட்டுள்ள சென்னை ஐகோர்ட், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Share on:

1 மாணவி உட்பட 30 பேர்.. கஞ்சா சாக்லேட், ஆயில்.. கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் சிக்கியது என்னென்ன?


சென்னை பொத்தேரி பகுதியில் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் தங்கி இருக்கும் விடுதிகளில் இன்று காலை அதிரடி சோதனை நடத்திய போலீசார், ஏராளமான போதை வஸ்துகளை கைப்பற்றி உள்ளனர். போதைப்பொருட்களை பயன்படுத்திய மாணவர்கள் 30 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

சென்னை கூடுவாஞ்சேரியை அடுத்த பொத்தேரி பகுதியில் பிரபல தனியார் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவ, மாணவிகள் அதிகமானோர் பொத்தேரி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் விடுதிகள் மற்றும் தனியாக வீடு எடுத்து தங்கி படித்து வருகின்றனர்.

கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. மாணவர்களிடையே சமீப காலமாக பெருமளவு கஞ்சா புழக்கம் இருப்பதாக வந்த புகார்களின் அடிப்படையில் அவ்வப்போது சில கைது சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின் பெயரில், கூடுதல் ஆணையர் மகேஸ்வரி, உதவி ஆணையர் பவன் குமார் ரெட்டி தலைமையில் 25க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் மேற்பார்வையில், 1,000க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென பொத்தேரி பகுதியில் மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியைச் சுற்றிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் தனியாக அறை எடுத்து தங்கி இருக்கும் விடுதிகளிலும் தீவிர சோதனை நடைபெற்றது. விடுதிகளில் இருந்து வெளியே வரும் மாணவர்கள் சோதனைக்குப் பிறகே வெளியே அனுமதிக்கப்பட்டனர். இதனால் தாம்பரம், செங்கல்பட்டு இன்று காலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் இன்று நடத்திய அதிரடி சோதனையில் அரை கிலோ கஞ்சா மற்றும் 6 கஞ்சா சாக்லேட், கஞ்சா ஆயில் 20 எம்.எல், பாங் 5, ஸ்மோக்கிங் பார்ட் 1, ஹூக்கா மெஷின் 7, ஹூக்கா பவுடர் 6 கிலோ, ஊசிகள், மாத்திரைகள், போதை பெர்ஃபியூம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக 30 மாணவர்களைப் பிடித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு மாணவி உட்பட 30 மாணவர்களை போலீசார் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் யாரிடம் போதைப் பொருட்கள் வாங்குகிறார்கள்? போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் யார் யார்? மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் எப்படி கிடைக்கிறது? போதைப் பொருட்கள் எந்த நேரத்தில் கைமாற்றப்படுகிறது? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிகிறது.

போதைப் பொருட்களை பயன்படுத்தும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இனி அடிக்கடி, கல்லூரிகளைச் சுற்றியுள்ள விடுதிகளில் அதிரடி சோதனைகள் நடத்த போலீசார் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Share on:

சிலை கடத்தல் வழக்கு! பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்! சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை தீர்ப்பு


சிலை கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐஜியான பொன் மாணிக்கவேல், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழக சிலைக் கடத்தல் பிரிவில் ஓய்வு பெற்ற ஐஜியாக இருந்தவர் பொன் மாணிக்கவேல். இவர் மீது சிலை கடத்தல் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அண்மையில் அவர் வீட்டில் சிபிஐ ரெய்டும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் சிபிஐ வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொன் மாணிக்கவேல் மனு தாக்கல் செய்தார். அதில் டிஎஸ்பியான காதர்பாட்ஷா தொடர்ந்த வழக்கில் டிஐஜி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியைக் கொண்டு என் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதற்கு மாறாக சிபிஐ எஸ்.பி. என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார் என்றும் இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது: மனுதாரர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொன் மாணிக்கவேலை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தால்தான் அவருக்கும் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூருக்கும் உள்ள தொடர்பு குறித்து தெரிய வரும். எனவே பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார்.
Share on:

5 வருஷமா என்ன பண்ணீங்க? மதுரை எய்ம்ஸ் வேலை எப்போ முடியும்? மத்திய அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி!


மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் எப்போது அறிவிக்கப்பட்டது? கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? கட்டுமான பணிகளை எப்போது தொடங்கி எப்போது முடிப்பீர்கள்? என ஐகோர்ட் கிளை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசு தரப்பில் எழுத்து பூர்வமான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படும் என 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி மத்திய பாஜக அரசு அறிவித்தது. ஆனால், இடம் தேர்வு செய்தது முதல் நிதி ஒதுக்குவது வரை இந்தத் திட்டம் கடந்த 9 ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் இதுவரை சுற்றுச்சுவர் தவிர கட்டுமான பணிகளே நடைபெறவில்லை. மதுரை எய்ம்ஸ் உடன் அறிவிக்கப்பட்ட பிற எய்ம்ஸ் மருத்துவமனைகள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டு விட்டாலும், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கே இன்னும் விடை தெரியாத நிலைதான் உள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பாஸ்கர் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும்? இந்த அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, கொரோனா தொற்று ஊரடங்கால் கால தாமதம் ஏற்பட்டது, கட்டுமான பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது, 2026க்குள் பணிகள் முடிந்துவிடும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. அதற்கு நீதிபதிகள், கொரோனா தொற்று எல்லாம் 2022 ஆம் ஆண்டே முடிந்துவிட்டது, அதையெல்லாம் காரணம் காட்டாதீர்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கி, எப்போது முடியும் என்பதை மத்திய அரசு எழுத்துப்பூர்வ அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
Share on:

சேலம் டூ வேலூர்.. டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மாதம் பல லட்சம் ரூபாய் லஞ்சம் போகுது.. சூப்பர்வைசர் தகவல்.


டாஸ்மாக் கடைகளில் சென்னை பொறுத்தவரை பாட்டிலுக்கு 10 ரூபாயும், மற்ற ஊர்களில் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையிலும் அதிகம் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக தமிழக அரசு அறிவித்தாலும், 10 ரூபாய் அதிகம் வாங்குது மட்டும் நிறுத்தப்படவே இல்லை என புகார் உள்ளது. இந்நிலையில் 10 ரூபாய் கூடுதல் பணத்தில் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மாதம் மாதம் லஞ்சம் கிடைப்பதாக சூப்பர்வைசர் ஒருவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் சுமார் 4,300 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகின்றன. இதுதவிர தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்கள் 1,480 என்கிற அளவில் செயல்படுகிறது. இதுபோன தனியார் பார்கள், ஓட்டல்கள், பப்கள் செயல்படுகின்றன. மொத்தம் உள்ள 4300 டாஸ்மாக் கடைகளில் 3 ஆயிரம் கடைகளுக்கு அருகிலேயே மது அருந்தி செல்வதற்கான பார் வசதிகள் உள்ளன.தமிழ்நாட்டில் பொதுவாகவே டாஸ்மாக் கடைகளில் விற்பனை விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வரை வசூலிப்பதாக புகார்கள் உள்ளது. அரசு இந்த விவகாரத்தில் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தாலும் 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது என்பது குறையவே இல்லை..

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சோமநாயக்கன் பட்டி கிராமத்தில் உள்ள அரசு மதுபானக்கடையில் பணியாற்றும் சூப்பர் வைசர் ராகவன் என்பவர், வாடிக்கையாளர்களிடம் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கூடுதலாக வசூலிப்பதாக கூறி, வாடிக்கையாளர் ஒருவர் அவரிடம் செல்போனில் வீடியோ எடுத்தபடி வாக்குவாதம் செய்தார்.

அப்போது சூப்பர்வைசர் ராகவன், யார் நீ, எங்கே வேலை செய்கிறாய்.. என்னை கேட்பதற்கு நீ யார் என்று கேள்வி எழுப்பினார்.. அதற்கு வாடிக்கையாளரோ, நான் பொதுமக்களில் ஒருவன், இதனை நான் தான் கேட்பேன். இதனிடையே பேச மறுத்த சூப்பர் வைசர் பின்னர் மனக்குமுறலாக சில விஷயங்களை பேசினார். அதன்படி கூடுதலாக வசூலிக்கப்படும் 10 ரூபாய் லஞ்ச பணத்தில் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மாதம் மாதம் எவ்வளவு தரப்படுகிறது என்பதை விவரித்தார்.

அப்போது சேலம் எஸ்ஆர்எம்க்கு (மண்டல அதிகாரி) மாதம் மாதம் தொழிற்சங்கம் மூலம் 3000 தரப்படுவதாக சூப்பர் வைசர் கூறினார். மேலும் சேலம் அதிகாரி கட்டுப்பாட்டில் 500 டாஸ்மாக் கடைகளில் இருக்கிறது என்றும் ஒரு கடைக்கு மாதம் 3000 என்றால், 500 கடைக்கு எவ்வளவு போகும் என்பதை நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினார். அவர் கூறியபடி பார்த்தால் மாதம் 15 லட்சம் ரூபாய் பணம் போவதாக கூறப்படுகிறது.

இதுதவிர டிரான்ஸ்பர் மற்றும் பணியில் ஒருவரை போடுவதற்கு தனியாக தொகையை தர வேண்டும். ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் அந்த அதிகாரியின் கட்டுப்பாட்டில் வரும் என்றார். மேலும் இப்போது உள்ள அதிகாரி பெண் ஆவார். அவர் ஒருமுறை கூட கடை பக்கமும் வந்தது இல்லை என்று கூறிய சூப்பர் வைசர்,. அவர் பெயரை சொல்லி வரும் நபர்கள் வசூலித்து சென்று விடுகிறார்கள் என்றார். இதுபோக ஆடிட் வருவோருக்கு பணம் தர வேண்டும் என்று கூறினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் தரப்பில் விரைவில் விளக்கங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இதேபோல் முன்பும் லஞ்சம் குறித்த புகார்கள் வந்த போது அதனை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்திருந்தார்கள்.
Share on:

சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிர்ப்பு! நாளை விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்


சென்னையில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1ம் தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கை நாளை விசாரணைக்கு எடுப்பதாக தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மின்விளக்குகள் பொருத்துவது, பொதுமக்கள் போட்டியை 8,000 பேர் கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கார் பந்தயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட உள்ள வழக்கை இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது.

இதைக் கேட்ட பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, இந்த மனுவை நாளை விசாரிக்க ஒப்புதல் தெரிவித்தது.
Share on:

24 மணி நேரத்தில்.. தமிழக அரசியலை அதிரவைத்த.. நறுக்குன்னு 4 சம்பவங்கள்!


சம்பவம் 2 – கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு அரசியலில் 4 பெரிய சம்பவங்கள் நடந்து உள்ளன. தமிழக அரசியலை உலுக்கும் விதமாக மிகப்பெரிய மோதல்கள் நேற்று ஒரே நாளில் நடந்து உள்ளது. அந்த சம்பவங்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.

நேற்று முதல்நாள், அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அதில் மொத்த திமுகவையும், உதயநிதி ஸ்டாலினையும் ரஜினிகாந்த் மிக தீவிரமாக பாராட்டி பேசினார். அதில், ஒரு கட்சியை கட்டி காப்பது என்பது மிக கடினம், அதை சிறப்பாக செய்கிறார் முதலமைச்சர். முதலமைச்சர் கையில் புத்தகத்தை பெற்றதில் பெருமை. எப்போதுமே பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய மாணவர்கள் ஒரு பிரச்சனையாக இருக்க மாட்டார்கள். அவர்களை ஈஸியாக சமாளித்து விடுவார்கள். ஆனால் பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயம் அல்ல.. இங்கு ஏகப்பட்ட பழைய ஸ்டூடன்ஸ் உள்ளனர். அவர்கள் சாதாரண பழைய ஸ்டூடன்ஸ் இல்லை. அசாத்தியமானவங்க.. எல்லோரும் ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டு போகமாட்டேன் என உட்கார்ந்து கொண்டுள்ளனர். அவர்களை சமாளிப்பது எல்லாம் சாதாரணமாங்க, என்றும் பாராட்டி கூறினார்.

இதற்கு பதில் அளித்த துரைமுருகன், பல்லு விழுந்தபிறகும் நடித்துக்கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறதா? என்று கூறியுள்ளார். அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, சினிமாவில் மூத்த நடிகர்கள் எல்லாம் வயசாகி போய், பல் விழுந்து போய், தாடி வளர்த்து கடைசிக்கட்ட நிலையிலும் நடித்துக் கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறதா? அப்படித்தான்.. இவ்வாறு அவர் கூறினர். ரஜினிகாந்த், “ஓல்டு ஸ்டூடண்ட், கருணாநிதி கண்ணிலே விரல்விட்டு ஆட்டியவர் என்று துரைமுருகனை கலாய்த்து பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன், “பல்லு விழுந்த நடிகர்கள்” என்று கோபமாக கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உதயநிதி பேசுகையில், இளைஞர்களுக்கு வழிவிட்டு, வழிநடத்தி, அரவணைத்துச் செல்ல வேண்டும்.. இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு வழிவிட வேண்டும். நேற்று ரஜினிகாந்த் பேசினார். அவர் ஒரு வேண்டுகோள் வைத்தார். அது என்ன என்று சொல்ல மாட்டேன்.

ஆனால் அவரின் பேச்சுக்கு ஒரு இடத்தில் கைத்தட்டு அதிகம் வந்தது. அது எந்த இடம் என்று பாருங்கள். நேற்று சூப்பர் ஸ்டார் பேசியதை வைத்தே பாருங்கள். நான் எதோ மனதில் வைத்துக்கொண்டு பேசுவதாக நினைக்க வேண்டாம். இதுதான் என் வேண்டுகோள்., என்று உதயநிதியும் தன் பங்கிற்கு துரைமுருகனுக்கு பதிலடி கொடுத்தார்.

சம்பவம் 2 – நேற்று பாஜக கூட்டத்தில் பேசிய அண்ணாமலை , காலில் விழுந்து பதவி வாங்கியவர் எடப்பாடி பழனிசாமி. என்னைப் பற்றிப்பேச எடப்பாடி பழனிசாமி எனும் தற்குறிக்கு எந்த அதிகாரமும் இல்லை. எழுதி வச்சிக்கோங்க.. பா.ஜ.கவுக்கும் தி.மு.கவுக்கும் எக்காலத்திலும் உறவு இருக்காது”.. தி.மு.க, அ.தி.மு.க இரண்டுமே பா.ஜ.கவுக்கு எதிரிகள் தான். எடப்பாடி போல தற்குறி இல்லை நான், என்று அண்ணாமலை கூறி உள்ளார்.

சம்பவம் 3 – நாம் தமிழர் கட்சியினருக்கு.. திரள் நிதியிலோ, பிச்சை எடுத்தோ வந்த பதவி அல்ல என்று வருண்குமார் ஐபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். திமுக ஐடி விங்கில் வேலை பார்த்தார் என்றால் ஏன் ஐபிஎஸ் வேலை பார்க்க வேண்டும் என்றும், பெரிய வீரர் என்றால் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நேருக்கு நேர் மோத வேண்டும் என்றும் சீமான் சவால் விடுத்து பேசினார். திருச்சி எஸ்பி வருண்குமார் நாம் தமிழர் கட்சியினர் மீது தொடர் குற்றச்சாட்டு கூறி வரும் நிலையில் சீமான் இவ்வாறு பேசியுள்ளார். இதற்கு வருண்குமார் , திரள் நிதியிலோ, பிச்சை எடுத்தோ வந்த பதவி அல்ல. கடினமாக உழைத்து, இரவு பகலாக படித்து, ரத்தம் வேர்வை கண்ணீர் சிந்தி, சொந்த உழைப்பில் வாங்கிய வேலை. பெற்றோரின் கருணையால், உரப்புலி குலதெய்வத்தின் அருளால் UPSC CSE 2010 All India Rank 3 நினைவு கூறுகிறேன். First choice as IPS என்று பதிலடி கொடுத்துள்ளார்.

சம்பவம் 4: நேற்று பாஜக நிகழ்ச்சி ஒன்றில், நான் ஒண்ணும் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாம பா.ஜ.கவுக்கு வரல.. 6 மாசம் ஆச்சு இன்னும் எந்த பதவியும் கொடுக்கல என்று பாஜகவை விமர்சனம் செய்து அண்ணாமலை இருந்த மேடையிலேயே விஜயதரணி பேச பேச அண்ணாமலை கொடுத்த ரியாக்‌ஷன் கவனம் பெற்றது.

சரியாக தேர்தல் நேரத்தில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு செல்வது என்பது புத்திசாலித்தனமாக வேன்றுமென்றுல்லாம் தோன்றலாம். ஆனால் அப்படி 2024 லோக்சபா தேர்தலுக்கு முன் கட்சி மாறிய விஜயதாரணியின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதரணிக்கு பாஜகவில் எந்த பதவியும் வழங்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. Advertisement

அவருக்கு லோக் சபா தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.. விளவங்கோடு எம்.எல்.ஏ. பதவியில் இருந்து அவர் விலகியதால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் இடைத்தேர்தலிலும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. கட்சியிலும் அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Share on:

செருப்புக்காக நடந்த சண்டை.. நாமக்கல் பள்ளி மாணவன் பலியான சம்பவத்தில் வெளியான ‘ஷாக்’ தகவல்!


நாமக்கல் அருகே பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது.நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவர்கள் கிளம்பும்போது செருப்பு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் மரணத்தில் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்த வரகூர் அரசு பள்ளியில் இரு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். 11ஆம் வகுப்பு மாணவர்கள் இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அந்த மாணவர் உயிரிழந்துள்ளார். பள்ளி மாணவன் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோதலில் உயிரிழந்தவர் ஆகாஷ் (16) என்பதும், அவர் நவலடிபட்டியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், மாணவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது பற்றியும் விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எருமப்பட்டி அருகே உள்ள நவலடிபட்டியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநரான ரமேஷ். இவரது மகன் ஆகாஷ், வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அதே வகுப்பில், செல்லி பாளையத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி சுப்பிரமணி என்பவரின் மகனும் படித்து வந்துள்ளார்.

நேற்று மாலை 4 மணியளவில் பள்ளி முடிந்து வீட்டுக்கு கிளம்பும்போது, வகுப்பறை வாசல் ஓரத்தில் விட்டிருந்த ஆகாஷின் செருப்பை காணவில்லையாம். இதனால் கோபமடைந்த அவர், தனது செருப்பை எடுத்து ஒளித்து வைத்தது யார் என அங்கிருந்த மாணவர்களிடம் கேட்டு திட்டியுள்ளார்.

அப்போது செல்லிபாளையத்தைச் சேர்ந்த மாணவன், தான் தான் செருப்பை வைத்துள்ளதாகக் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் இருவரும் கடுமையாக தாக்கிக் கொண்டுள்ளனர். மாணவர்கள் விலக்கி விட முயற்சித்தும் தொடர்ந்து அடித்துக் கொண்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் சுருண்டு விழுந்த ஆகாஷ், நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் அவரை எழுப்ப முயன்ற நிலையில் அவர் மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து உடனடியாக மாணவர்கள், தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மாணவர் ஆகாஷ் பலியான நிலையில், எருமப்பட்டி போலீசார் மாணவர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பினர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, ஆகாஷ் உடன் சண்டை போட்ட மாணவர், தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வலிப்பு வந்து ஆகாஷ் மயங்கி விழுந்ததாக கூறினார்கள், நாங்கள் எருமப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றபோது, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறினார்கள். அங்கு சென்று பார்த்தபோது எங்கள் மகன் உயிருடன் இல்லை. எங்கள் மகன் இறப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என பலியான ஆகாஷின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடையே மோதல் சம்பவங்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. சாதிய ரீதியிலான மோதல், போதைப் பொருள் பழக்கம் ஆகியவை பள்ளி மாணவர்களிடையே அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், மாணவர்கள் மோதலில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
Share on:

பகீர்! மற்றொரு பள்ளியிலும் சிறுமி பாலியல் வன்கொடுமை.. சிவராமன் மீது 2வது போக்சோ வழக்கு பாய்ந்தது!


கிருஷ்ணகிரியில் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் மீது மேலும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராயக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் என்சிசி முகாம் நடத்திய போது 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிவராமன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில் கடந்த 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை என்சிசி முகாம் நடந்தது. அதில் அந்த பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற 8 ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை என்.சி.சி பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சிவராமன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிவராமன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த குற்றம் தெரிந்தும் அதை மறைக்க முயற்சி செய்த பள்ளியின் முதல்வர், தாளாளர் உட்பட 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். சிவராமன், போலியாக ஆவணங்களை தயார் செய்து ஏமாற்றியதும் அம்பலமாகி உள்ளது.

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். காவல்துறை தலைவர் பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றும், பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோரை ஆலோசித்து அவர்களின் நலம் காத்திட சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவையும் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இன்று விசாரணை தொடங்கியது.

இதற்கிடையே, சிவராமன் தன்னை வழக்கறிஞர் என்று கூறி ரூ.36 லட்சம் ஏமாற்றியதாக நேற்று எஸ்.பி அலுவலகத்தில் 7 பேர் புகார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் சிவராமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராயக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் என்சிசி முகாம் நடத்திய போது 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிவராமன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி கந்திகுப்பத்தில் போலி என்.சி.சி முகாம் நடத்தி தனியார் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிவராமன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த பாலியல் வழக்கையும் சேர்த்து, சிவராமன் மீது 3-வது வழக்கு பாய்ந்துள்ளது.

இதற்கிடையே, கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டதை அடுத்து அவருக்கு கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Share on: