கோவை, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு தீயை அணைக்க போனவர்களுக்கு காபி, டீ, செலவு மட்டும் ரூ.27.51 லட்சமாம்


கோவை மாவட்டம், வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க ஏற்பட்ட செலவினங்கள் குறித்து மாநகராட்சியில் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த கணக்கை பார்ப்பவர்களுக்கு தூக்கி வாரிப்போடும் என்பது நிச்சயம்.

கோவை வெள்ளலூர் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் இருந்தும் சேகரிக்கப்படும் குப்பைகளும் இப்பகுதியில் கொட்டி தரம் பிரிக்கப்படும். இங்கு அளவுக்கு அதிகமான குப்பைகள் சேகரமாகும் நிலையில், அடிக்கடி இப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவதும் வழக்கம். இதனால், குப்பைக் கிடங்கில் தீயை அணைக்கும் பணிக்காக இங்கு நிரந்தரமாகவே தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குப்பை கிடங்கு பகுதியில் உள்ள உரம் தயாரிக்கும் இடத்தின் அருகில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து 17ம் தேதி வரை நீடித்தது. கட்டுக்கடங்காத தீயைக் கட்டுப்படுத்துவதற்காக விமானப் படையில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள், 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், காவல் துறை, மருத்துவக் குழு, அலுவலர்களும் இப்பணியில் ஈடுபட்டனர்.

குப்பைகளை அகற்றுவதற்கான ஜேசிபி, ஜெட்லிங் மெஷின் உள்ளிட்ட வாகனங்களுக்கு டீசல், பெட்ரோல், கிரீஸ் ஆயில் ஆகியவற்றுக்கான செலவினம் மற்றும் தீயணைப்பு பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு சாப்பாடு, டீ, காபி உள்ளிட்டவை ஆகியவை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டன.

அந்த வகையில், உணவு, டீ, காபி, குளிர்பானங்கள், பழங்கள் ஆகியவற்றுக்கு மட்டும் 27,51,678 ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது. மேலும், டீசல் பெட்ரோல், கீரிஸ் ஆயில் 18,29,731 ரூபாயும், காலணிகள் 52,348 ரூபாயும், முகக்கவசம் 1,82,900 ரூபாயும், பொக்லைன், லாரி வாடகை 23,48,661 ரூபாயும், தண்ணீர் டேங்கர் லாரி வாடகை (பேரூராட்சி, தனியார் வாகனம்) 5,05,000 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
Share on:

மாஞ்சோலை விவகாரம்.! விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடிவு.!!


நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை கடந்த 1929-ம் ஆண்டு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. வரும் 2028-ம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் குத்தகை காலம் முடியவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே அந்த நிறுவனம், தேயிலை தோட்டத் தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப முடிவு செய்தது.

இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், மாஞ்சோலையில் இருந்து தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டது. மேலும் இந்த தேயிலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில், மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியேற்ற விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துராமன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு தேசிய மனித உரிமை ஆணையத்தில் விசாரணைக்கு வருகிறது.
Share on:

ஜாமீன் கேட்ட ஆருத்ரா நிறுவன மேலாளர்கள்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு.


தமிழகத்தில் ஆருத்ரா நிறுவனம் சார்பில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது. மொத்தம் ரூ.2,428 கோடி வரை பொதுமக்களிடம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் கிளை மேலாளர்கள் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு சென்னை, திருவள்ளூர், ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது.

இந்த நிறுவனம் அதிக வட்டி தருவதாக மக்களிடம் ஆசையை துண்டி, பண மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில், தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நிறுவனம், சுமார் ஒரு லட்சத்து 9,255 பேரிடம் ரூ.2,438 கோடி பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குநர் ரூசோ, ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் ஆவடி கிளை மேலாளர்கள் அருண்குமார், மற்றும் ஜெனோவா உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருண்குமார், ஜெனோவா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி தமிழ்செல்வி முன் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் வழக்கு விசாரணையில் இருப்பதால் ஜாமீன் வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆருத்ரா நிறுவனத்தின் அருண்குமார், ஜெனோவா ஆகியோரின் ஜாமீன் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தமிழகத்தில் இந்த நிறுவனம் சார்ந்த மோசடி என்பது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. இதில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்நிலையில்தான் வழக்கில் கைதாகி உள்ள சிறையில் உள்ள ஆவடி கிளை மேலாளர்கள் அருண் குமார், ஜெனோவா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் அவர்கள் 2 பேரும் புழல் சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை மீண்டும் தொடர்ந்துள்ளது.
Share on:

இந்திய பட்ஜெட் 2024 இன் முக்கியமான பகுப்பாய்வு


இந்திய பட்ஜெட் 2024 “புதிய இந்தியா”வுக்கான தொலைநோக்குப் பார்வையாகக் கூறப்பட்டது, ஆனால் உற்று நோக்கினால், தவறவிட்ட வாய்ப்புகள் மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் ஏராளமாக உள்ளது. வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதாக அரசாங்கத்தின் கூற்றுக்கள் இருந்தபோதிலும், தேசத்தைப் பாதிக்கும் முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் வரவு செலவுத் திட்டம் குறைவாகவே உள்ளது.

1. கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை, இந்த துறைகள் நாட்டின் முன்னேற்றத்திற்கும் அடித்தளம் ஆகும், ஆனால் ஒதுக்கப்பட்ட நிதி மக்களின் அடிப்படை தேவைககளுக்கு ஏற்ற அளவு இல்லை.

2. அதிகரித்து வரும் வேலையின்மை நெருக்கடியைத் தீர்ப்பதற்கான உறுதியான முன்முயற்சிகள் ஏதுமின்றி, வேலை உருவாக்கம் குறித்த பட்ஜெட்டின் வாக்குறுதிகள் வெற்றுத்தனமாக உள்ளன.

3. பட்ஜெட்டின் வருவாய் கணிப்புகள் அதிக நம்பிக்கையுடன் உள்ளன, அரசாங்கத்தின் நிதி இலக்குகளை அடையக்கூடிய திறனைப் பற்றிய சிக்கல்களையும் வெளிப்படுத்துகிறது. இந்த யதார்த்தமற்ற நம்பிக்கை அதிகக் கடனும் அதிக நிதிப் பற்றாக்குறையும் ஏற்படுத்தி, பொருளாதாரத்தை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கலாம்.

4. நிதியில் நகர மேம்பாட்டின் மீது செலுத்திய கவனத்தை கிராமப்புற பகுதிகளுக்கு செலுத்தவில்லை, விவசாய சீர்திருத்தங்களுக்கும் கிராமப்புற அடிப்படை வசதிகளுக்கும் போதுமான கவனம் இல்லை. இந்த மாறுபாடு கோடிக்கணக்கான விவசாயிகளின் மற்றும் கிராமவாசிகளின் துன்பத்தைப் புறக்கணிக்கிறது.

5. காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை பற்றிய பட்ஜெட்டின் மௌனம் முழுமையான திட்டம் தேவைப்பாட்டைக் கவனிக்காதது போல் உள்ளது, பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் கடுமையாகியுள்ள நிலையில், தெளிவான திட்டம் இல்லாமல், நாட்டின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது.

இந்திய பட்ஜெட் 2024 மாற்றத்தக்க மாற்றத்திற்கான ஒரு தவறவிட்ட வாய்ப்பாகும். தேசத்தின் அழுத்தமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக தற்போதைய நிலையை நிலைநிறுத்துகிறது, அரசாங்கம் உண்மையிலேயே உள்ளடக்கிய வளர்ச்சி உறுதிபூண்டிருக்கிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
Share on:

கள் விற்பனை.. தடையை நீக்குவது பற்றி ஏன் பரிசீலிக்க கூடாது.. தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி


தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது என்றும், வரும் 29 ஆம் தேதி இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடை, சூப்பர் மார்க்கெட்டுகளில் மது விற்பனைக்கு அனுமதி கோரியும், கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரியும் ஐடி ஊழியர் முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

தமிழகத்தில் மதுபானக் கடைகளை முற்றிலும் மூடி பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. எனினும், பூரண மதுவிலக்கு என்பது தற்போதைக்கு சாத்தியம் இல்லை எனவும் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவதுதான் அரசின் நோக்கம் எனவும் எனவும் ஆளும் கட்சி தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான், ரேஷன் கடைகளில் மதுவிற்பனையை அனுமதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐடி ஊழியர் முரளிதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில், 2020 – 21 ம் ஆண்டு 39 ஆயிரத்து 760 கோடி ரூபாயும், 2021- 22 ம் ஆண்டில் 42 ஆயிரத்து 421 கோடி ரூபாயும் விற்றுமுதல் பெற்றதாக கூறிய டாஸ்மாக் நிர்வாகம், இந்த ஆண்டுகளில் 161 கோடி ரூபாயும், 69 கோடி ரூபாயும் இழப்பை சந்தித்ததாகக் கூறியுள்ளது எனவும், இதன்மூலம் லாபம், வேறு திருப்பி விடப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

டாஸ்மாக்குக்கு மதுபானம் சப்ளை செய்யும் நிறுவனங்கள், பெரும்பாலும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமானதாக உள்ளதாகவும், இதனால் டாஸ்மாக் நிர்வாகம் குறிப்பிட்ட சில பிராண்ட் மதுபானங்களை மட்டும் விற்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக்கில் ஊழல் நிலவுவதாகவும், சென்னை விமான நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும், தமிழகத்தில் விற்கப்படும் மதுபானங்களின் தரத்தை விட, வெளிமாநிலங்களில் மதுபானங்களின் தரம் அதிகமாக இருப்பதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களுக்கு 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிகம் விற்பனை செய்வதாகவும், இதன்மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாயை டாஸ்மாக் கடை விற்பனையாளர், மேலாளர், துறை அமைச்சர் பகிர்ந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மதுபான பாட்டில்களில் அச்சிடப்பட்டிருக்கும் விற்பனை விலையை விட கூடுதல் விலை கொடுக்க வேண்டாம் என எல்லா டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட வேண்டும் எனவும், கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க, சில கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், மதுபானங்களை நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கள் விற்பனைக்கு தடை விதித்து 1986 ல் மதுவிலக்கு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தையும், டாஸ்மாக் மூலம் மது விற்பனை செய்வதற்கு அனுமதிதது 2003 ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தையும் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு, மதுபானங்களை சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகளில் விற்பது என்பது அரசின் கொள்கை முடிவு என தெரிவித்தது.

அதேசமயம், டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது அரசின் கொள்கை முடிவு எனவும், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க முடியாத ஏழை மக்களுக்காக, கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து அரசு ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது என விளக்கமளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Share on:

மைக்ரோசாப்ட் முடக்கத்தால், ஆதி காலத்துக்கே திரும்பிய மக்கள்! கைகளால் எழுதப்படும் விமான போர்டிங் பாஸ்


மைக்ரோசாப்ட் செயலிழப்பு (Microsoft outraged ) காரணமாக, விமான நிலையங்களில் சர்வர்கள் டவுன் ஆனதால் போர்டிங் பாஸ்கள் கைகளால் எழுதி கொடுக்கப்பட்டுள்ளன. விமான சேவையில் காலை 11 மணி முதலே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் 27 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் செயலிழப்பால் சென்னை, டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

பயணச் சீட்டு பதிவு, இணைய சேவை பணிகள் தாமதமாவதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு போர்டிங் பாஸ்கள் கைகளில் எழுதி கொடுக்கப்படுகின்றன. மைக்ரோசாப்ட் விண்டோஸ் சாப்ட்வேர் செயலிழந்துவிட்டதால் உலக அளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மைக்ரோசாப்ட் 365, XBox, Outlook ஆகியவை செயலிழந்துள்ளது. இதனால் மீடியா, தொழில்நுட்பம், வங்கி சேவை, மருத்துவ சேவை, விமான சேவை, அமேசான் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரச்சினையை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் விண்டோஸ் சாப்ட்வேரில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் பயனாளர்களின் பலரது கம்ப்யூட்டர்களில் Blue screen of Death Error ஏற்பட்டுள்ளது. அதாவது உங்கள் சாதனம் சிக்கலில் உள்ளதாக குறிப்பிட்டு ஆபரேட்டிங் சிஸ்டமே முடங்கிவிட்டது.

விண்டோஸ் எக்பியில் தற்போது 11 ஆவது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல புதிய அப்டேட்டுகளுடன் இந்த ஆபரேட்டிங் சிஸ்டம் செயல்படுகிறது. இதற்காக தொழில்நுட்ப ரீதியில் பல வரவேற்புகள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் இந்த செயலிழப்பு குறித்து பல நெட்டிசன்கள் நீல நிற ஸ்கிரீனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் வார இறுதிக்கு முந்தைய நாள் மைக்ரோசாப்ட் கூடுதலாக ஒரு விடுமுறை கொடுத்துவிட்டதாக கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனமும் கூறியிருப்பதாவது: பயனர்கள் பல்வேறு மைக்ரோசாப்ட் செயலிகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். இதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். பிரச்சினையைச் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் தற்போது வரை சாதகமான முடிவுகளே கிடைத்து வருகின்றன. இந்த சிக்கல் படிப்படியாக விரைவில் சரியாகும்” என தெரிவித்துள்ளனர்.

நீல நிற ஸ்கிரீன் என்பது சாப்ட்வேரே செயலிழந்ததை குறிக்கிறது. அதாவது விண்டோஸ் இயங்குதளம் ஆபத்தான நிலையில் உள்ளது. இனி அதில் பாதுகாப்பாக செயல்பட முடியாது என்பதைத்தான் Blue screen of Death என்கிறார்கள்.
Share on:

தூத்துக்குடி டூ மேட்டுப்பாளையம் ரயில்.. எங்கெல்லாம் நின்று செல்லும்.. நாளை முதல் சேவை தொடக்கம்.


தூத்துக்குடியில் இருந்து கோவை வழியாக மேட்டுப்பாளையத்திற்கு நாளை முதல் வாரத்திற்கு இரண்டு நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் எந்தெந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும், எத்தனை மணிக்கு புறப்படும் என்பது போன்ற விவரங்களை ரயில்வே வெளியிட்டுள்ளது. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பலரும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபார நிமித்தமாகவும் தொழில் நிமித்தமாகவும் பயணிக்கிறார்கள். நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் செல்வது என்றால் இவர்கள் கோவை வந்து அங்கிருந்து ரயில் அல்லது பேருந்துகளை பிடித்து தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பயண நேரம் அதிகமாவதால் தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு நேரடி ரயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.

தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் ரயில்: குறிப்பாக துத்துக்குடிக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயிலை விரைவில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தான் தற்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வாரம் 2 முறை சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி வருகிற 19 ம் தேதி முதல் இந்த ரயில் சேவை தொடங்க உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.

நாளை முதல் சேவை: முதல் சிறப்பு ரயிலை மேட்டுப்பாளையத்தில் இருந்து மத்திய அமைச்சர் எல். முருகன் மேட்டுப்பாளையத்தில் தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த ரயிலானது வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும். மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில் கோவை வழியாக அதிகாலை 4.20 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.

மேட்டுப்பாளையத்தில் இரவு 7.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில் கோவைக்கு 8.20 க்கு வந்து சேரும். கோவை ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நிற்கும். பின்னர் அங்கிருந்து 8.25 மணிக்கு புறப்பட்டு கிணத்துக்குடவுக்கு 9.14 மணிக்கு வந்து 9.15 மணிக்கு புறப்படும். பொள்ளாச்சிக்கு 9.30 மணிக்கு வரும் ரயில் 5 நிமிடங்கள் நிற்கும்.

பின்னர் பொள்ளாச்சியில் இருந்து 9.35 மணிக்கு புறப்பட்டு செல்லும் ரயில் உடுமைலைப்பேட்டை, பழனி, ஒட்டன் சத்திரம், திண்டுக்கல் வழியாக மதுரைக்கு இந்த ரயில் நள்ளிரவு 1.25 மணிக்கு வரும். 5 நிமிடங்கள் மதுரையில் நின்று செல்லும் இந்த ரயில் விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வழியாக அதிகாலை 4.20 மணிக்கு தூத்துக்குடிக்கு வரும்.

தூத்துக்குடியில் இருந்து: மறுமார்க்கத்தில் தூத்துகுடியில் இருந்து வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும். தூத்துக்குடியில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில், விருதுநகர், சாத்தூர் வழியாக மதுரைக்கு நள்ளிரவு 1.20 மணிக்கு வந்து சேரும்.

மதுரையில் இருந்து 1.25 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல், ஒட்டன் சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை வழியாக பொள்ளாச்சிகு அதிகாலை 4.45 மணிக்கு வரும். 5 நிமிடங்கள் நிற்கும் இந்த ரயில் பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வழியாக கோவைக்கு காலை 6.30 மணிக்கு வரும். 6.35 க்கு கோவையில் இருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு 7.40 மணிக்கு வந்து சேரும்.
Share on:

மின் கொள்முதலில் முறைகேடு? 26 ஆயிரம் கோடி இழப்பு? மூடி மறைக்கும் அரசு?


மின்சார வாரியத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு மின் கட்டணம் காரணம் அல்ல என்றும் மின் கொள்முதல் கட்டணம் நிர்ணயித்த தொகையைவிட அதிகமாகச் செய்ததுதான் என்ற புதிய விளக்கத்தை மின் ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த காந்தி முன்வைத்துள்ளார்.

திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் மின்கட்டண உயர்வு ஷாக் அடிக்கிறது எனப் போராட்டம் நடத்திய அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தது முதல் முறையாக கிட்டத்தட்ட 30% அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தினார். அது மட்டுமல்ல, அடுக்ககங்களில் பயன்படுத்தப்படும் நீர் மோட்டார்களுக்கு தனி கட்டணம் என்ற புதிய டெக்னிக் ஒன்றையும் அறிவித்தார்.

கூடவே லிஃப்ட் உள்ள வீடுகள், 5 வீடுகளுக்கு மேல் உள்ள அடுக்ககங்கள் என வகைவகையாக பிரித்து புதிய மின்கட்டணத்தை அறிவித்தார். இந்தக் கட்டண உயர்வு பொது மக்களை மிகக் கடுமையாகப் பாதித்தது. அதனைத் தொடர்ந்து இப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரை காத்திருந்துவிட்டு வெற்றி அறிவிப்பு வெளியான அடுத்த சில நாட்களில் மின் கட்டணத்தை அரசு உயர்த்தி இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்படப் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஆனால், தமிழ்நாடு அரசு கட்டண உயர்வு ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. மின்சாரம் பயன்படுத்தும் ஒருகோடி பயனாளிகளுக்கு எந்த வித கட்டண மாற்றமும் இல்லை என்றும் அதாவது 41.37% பேரை இது பாதிக்காது என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தக் கூடிய 63 லட்சம் பேருக்கு மாதம் 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் 300 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் மாதம் 15 ரூபாய்தான் இனி அதிகம் கட்ட வேண்டி வரும் என்றும் ஒரு சமாதானத்தை அரசு முன்வைத்துள்ளது.

அதுபோல 25 லட்சம் போர் 400 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்தப் பிரிவினர் மாதம் 25 ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டி இருக்கும் என்றும் 500 யூனிட் வரை மின் நுகர்வு செய்யும் சுமார் 13 லட்சம் பேர் இனி மாதம் 40 ரூபாய் கூடுதலாகக் கட்ட வேண்டி இருக்கும் என்று விளக்கம் அளித்துள்ள அரசு பிற மாநிலங்களை விடத் தமிழ்நாட்டில் மின் கட்டணம் குறைவு என்ற ஒரு கருத்தை முன்வைத்து வாதிட்டு வருகிறது. ஆனால், ஆட்சிக்கு வந்த 3 அண்டுகளில் 2 முறை மின் கட்டணத்தை உயர்த்தியது நியாயமே இல்லை என்கிறார் மின் ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த காந்தி. அவர் மின் வாரியத்தில் ஏற்படும் இழப்புக்குக் காரணமே வேறு என்று வாதிடுகிறார்.

இது பற்றி காந்தி கூறுகையில், “இந்த மின் கட்டண உயர்வைத் தமிழக அரசு நினைத்தால் தவிர்த்திருக்க முடியும்? இன்னும் சொல்லப்போனால் தவிர்த்திருக்க வேண்டும். இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டண உயர்வு கொண்டுவரப்பட்டது. அப்போது 40% அளவுக்குக் கட்டணத்தை உயர்த்தினார்கள். மின்சார வாரியம் இந்த ஆண்டுக்கான கணக்கு வழக்குகளை ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்திருக்கிறது.

அதாவது 2022 மற்றும் 23 ஆம் நிதியாண்டில் 7 மாதங்களில் மின்சார வாரியத்திற்கு வந்துள்ள வருமானம் 14,700 கோடி ரூபாய். இந்தளவுக்கு வருமான கிடைப்பதற்கு மின் கட்டணத்தை அதிக அளவு உயர்த்தியதுதான். இதற்கு முந்தைய 2021-22 ஆம் நிதியாண்டில் மின்சார வாரியத்தின் மொத்த வருவாய் இழப்பு 18 ஆயிரம் கோடியாக இருந்தது. அதில் 14 ஆயிரம் கோடிக்கு மேல் கூடுதல் வருமானம் வந்துவிட்டது. அப்படிப் பார்த்தால் இழப்பு தொகை என்பது 3 ஆயிரம் கோடி அளவுக்கு குறைந்துள்ளது.

ஆனால், கட்டண உயர்வு செய்யப்பட்ட பிறகும் 26 ஆயிரம் கோடி நஷ்டம் என்று ஒரு கணக்கைச் சொல்கிறது மின் வாரியம். இந்த நஷ்டத்தைத் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் உதய் மின் திட்டத்தின் ஒப்பந்தம். இப்போது 4.8% மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் மூலம் மட்டுமே மின் வாரிய இழப்பை ஈடு கட்ட முடியாது. ஆக, மின்சார வாரிய நஷ்டம் என்பது வேறு எங்கேயோ நடக்கிறது. அது முடிவில்லாமல் வளர்ந்து கொண்டே செல்கிறது.

மின்சார வாரியம் மிகமிக ஒழுங்கீனமாக இருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று தேவை இல்லை. அதைச் சரி செய்ய வேண்டிய ஒழுங்குமுறை ஆணையம் ஏனோ கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகிறது. இந்தக் கட்டண உயர்வு இத்துடன் முடிவுக்கு வரப்போவதில்லை. ஆண்டுக்கு ஆண்டு இனி வரும் காலங்களில் மின் கட்டணம் உயர இருக்கிறது.

தமிழ்நாடு அரசு 100 யூனிட் வரை மின்சாரத்தைப் பயன்படுத்தும் மக்கள் 89 லட்சம் என சொல்கிறது. ஆனால், இந்த 89 லட்சம் மக்கள் 2 மாதத்திற்கும் சேர்த்து 49 யூனிட் தான் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் வாழ்க்கைத் தரமே அப்படித்தான் உள்ளது. ஆக, இழப்பு என்பது மின் கட்டணத்தால் வரவில்லை. மின்சார கொள்முதலால்தான் இந்த 26 ஆயிரம் கோடி ஏற்பட்டுள்ளது.

சுமார் 33 ஆயிரம் கோடிக்குச் செய்திருக்க வேண்டிய மின்சார கொள்முதலை 43 ஆயிரம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உற்பத்தி செலவு 14 கோடி இருக்க வேண்டும். ஆனால் அது 21ஆயிரம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆக, இந்தக் கொள்முதல் உயர்வும் உற்பத்தி செலவும்தான் இந்த நஷ்டத்திற்குக் காரணம். இதை நான் சொல்லவில்லை. மின்வாரிய கணக்கே இதைத்தான் சொல்கிறது. இது சரிதானா என்பதை ஒழுங்குமுறை வாரியம் இன்னும் கணக்குப் பார்த்துச் சொல்லவில்லை. அது சொன்ன பிறகு உண்மை வெளிச்சத்திற்கு வரும்.

மின்சார வாரியத்தின் வணிகம் என்பது மின்சாரத்தை விலைக்கு வாங்கி விற்பது மட்டுமல்ல. இந்த வாரியத்திற்கு மிகப்பெரிய கட்டமைப்பு இருக்கிறது. 6 லட்சம் கிமீட்டருக்கு எல்.டி லைன் உள்ளது. 2 லட்சம் கி.மீட்டருக்கு ஹெச்.டி லைன் உள்ளது. 4 லட்சம் டிரான்ஸ்ஃபார்மர்கள் உள்ளன. 3.3 கோடி மின் இணைப்புகள் இருக்கின்றன. இந்தக் கட்டமைப்பைத் தனியார்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அதன் மூலம் ஒரு வணிகம் நடைபெறுகிறது.

ஒரே மின் பாதையில் ஆயிரத்திற்கும் அதிகமான தனியார் நிறுவனங்களின் மின்சாரம் பாய்ந்து வருகிறது. இந்தக் கணக்கை அரசு ஒழுங்குப்படுத்தவில்லை. அதில் வழங்கப்படும் சலுகைகளால்தான் மின்வாரியத்திற்கு இழப்பு வருகிறது. இதன் மூலம் 1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைச் சரி செய்தால், கட்டண உயர்வு என்பது வந்திருக்காது” என்கிறார்.
Share on:

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி புகார்!


முன்னாள் அ.தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கே.சி பழனிசாமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சீமான் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் சமீபகாலமாக பொது வெளியில் பேசும் பேச்சுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் அவர் மீது மற்றொரு புகார் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2 தினங்களுக்கு முன் மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் அமைந்திருப்பது குறித்து அவர் கடுமையாக விமர்சித்து பேசினார். சீமானின் இந்த பேச்சு அதிமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி புகார் மனு அளித்துள்ளார்.
Share on:

Continue Reading

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரிங்க: ஹைகோர்ட்


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை குறித்து கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்ட காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரிக்க வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ் எஸ் சுந்தர் மற்றும் செந்தில் குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ-யின் விசாரணை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், துப்பாக்கி சூடு சம்பவத்தை நியாயமாக விசாரிக்கவில்லை என்றும் அதிகாரிகள் தவறிழைக்கவில்லை என எப்படி அறிக்கை அளிக்க முடியும் என்றும் சி பி ஐ க்கு கேள்வி எழுப்பினார்கள்.

சுதந்திரமான விசாரணை அமைப்பின் முடிவு கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணை சிபிஐ-யின் கையாலாகாதனத்தை காட்டுவதாகவும் கண்டனம் தெரிவித்தனர்.

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள், அவர்களின் உறவினர்கள் பெயர்களில் உள்ள சொத்து விவரங்களை சேகரித்து, இரண்டு வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Share on: