சென்னை வேளச்சேரி ஏரியில் அரசு என்ன தான் செய்ய போகிறது.. கொதிக்கும் மக்கள்.. அங்கு நடப்பது என்ன?


சென்னை வேளச்சேரி ஏரியில் அரசு என்ன தான் செய்ய போகிறது.. ஏன் நேற்று மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.. வேளச்சேரி ஏரியை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை கணக்கெடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த உறுதிமொழி என்ன.. சற்று விளக்கமாக பார்ப்போம்.. 265 ஏக்கர் பரப்பில் இருந்த இந்த ஏரி வெறும் 55 ஏக்கராக சுருங்கிவிட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு எடுக்கும் நடவடிக்கைளை பற்றியும் பார்ப்போம்.

சென்னை மாநகரம் வளர்ச்சிக்காக விட்டுக்கொடுக்கவே கூடாத பல விஷயங்களை விட்டுக்கொடுத்திருக்கிறது. இனிமேல் உருவாக்கவே முடியாத பல நீர் நிலைகளை அதற்காக பறிகொடுத்துள்ளது. நீர்நிலைகளை மட்டுமல்ல, நீர்வழிப்பாதைகள், வாய்க்கால்கள், அரசு நிலங்கள், பொதுப்பாதைகள், சாலைகள், காடுகள், வனப்பகுதிகள் என எல்லா இடத்தையும் பறிகொடுத்துள்ளது. அதன் காரணமாகவே வெள்ளம் வந்தால் வெளியேற வழியில்லாமல் பரிதவித்து நிற்கிறது. குறுகிய நாட்களில் மிக மிக அதிகமான மழை பெய்யும் போது, வெள்ளம் வெளியேற வழியில்லாமல் அப்படியே தேங்கிவிடுகிறது..

அப்படி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்று தான் வேளச்சேரி. வேளச்சேரி ஏரி என்பது சென்னையின் முக்கிய ஏரிகளுள் ஒன்று . 1975ம் ஆண்டுகளில் சுமார் 265 ஏக்கர் பரப்பில் இருந்த இந்த ஏரி, அரசின் திட்டங்கள், சாலை விரிவாக்கம், மக்கள் ஆக்கிரமிப்பு என பல்வேறு காரணங்களால் 55 ஏக்கர் பரப்பிற்கு சுருங்கிவிட்டது. இதுபற்றி பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளது. 2015 வெள்ளத்திற்கு பிறகு நீர் நிலை ஆக்கிரமிப்பு விவகாரங்களில் அரசும் சரி, நீதிமன்றமும் சரி, தயவு தாட்சணை இன்றி கடுமையான நடவடிக்கைளை எடுத்து வருகின்றன. ஒரு கட்டத்தில் நீதிமன்றம், வேளச்சேரி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் நிலைகளை மேம்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த சூழலில் இந்த ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கரையில் சுமார் 955-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. இதையடுத்து நீர்வளத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகிய துறைகள் இணைந்து பயோ மெட்ரிக் முறையில் ஆக்கிரமிப்பு வீடுகளை கணக்கெடுக்கும் பணியை கடந்த வாரம் தொடங்கினார்கள். அதன் காரணமாக வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு அதற்கான பயோமெட்ரிக் கணக்கெடுக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டார்கள்.

இதற்கு வேளச்சேரி ஜெகநாதபுரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள், தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து வீடுகளை கணக்கெடுப்பு நடத்த விடாமல் அதிகாரிகளை தடுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடினார்கள். 3-வது நாளாக நேற்று காலை ஜெகநாதபுரம், ராஜலட்சுமி நகர், சசி நகர், காந்தி நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்பட பொதுமக்கள் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயோமெட்ரிக் கணக்கு எடுப்பதை நிறுத்தும் வரை தொடர்ந்து இங்கேயே போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி அங்கேயே இருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பா.ஜனதா சார்பில் கரு.நாகராஜன், தே.மு.தி.க மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு என்று தங்களை அகற்றினால் எங்கு செல்வோம் என்று கேள்வி எழுப்பினார்கள். அப்படி அகற்றுவதாக இருந்தால் எல்லோரையும் அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இதற்கிடையில் போராட்டம் நடத்திய மக்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் மா சுப்பிரமணியன், இந்த பகுதியில் உள்ள 955 வீடுகள் பாதிக்காத வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இந்த கணக்கெடுப்பை தமிழக அரசு செய்யவில்லை. நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயம் உத்தரவின்பேரில் செய்யப்படுகிறது. இந்த பகுதிகள் நீர்நிலை பகுதியில் இல்லை என்பதை பசுமை தீர்ப்பாயத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் நிரூபிக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அந்த பணியை அரசு வக்கீல் மேற்கொண்டு வருகிறார்.

இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் மீது சட்டப்படி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களை பதற்றம் அடைய செய்யக்கூடாது. இப்பகுதி மக்களின் வீடுகளின் எண்ணிக்கையை வைத்து நீதிமன்றத்தில் வாதாட கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதே தவிர வேறு எதற்காகவும் இல்லை. இங்குள்ள குடியிருப்புகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சட்ட ரீதியிலான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு பாதுகாப்பாக முதல்வரும், அரசும் இருக்கும்” என்றார். அமைச்சரின் உறுதி மொழியை ஏற்றுக்கொண்ட மக்கள், காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை சுமார் 11 மணி நேரம் நடந்த தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.

2007ம் ஆண்டு நீர் நிலைகளை குடியிருப்புகளை வகை மாற்றம் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து, வேளச்சேரி ஆக்கிரமிப்பு விவகாரத்தில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றமும், பசுமை தீர்ப்பாயமும் உத்தரவிட்டுள்ளது. 2007க்கு பிறகு நீர்நிலைகளை குடியிருப்புகளாக வகை மாற்றம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. அதற்கு முன்பு வகை மாற்றம் செய்திருந்தால் பிரச்சனை இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் அரசு எடுத்து வைக்கும் வாதத்தில் அடிப்படையில் தான் வேளச்சேரி மக்களுக்கு விடிவு பிறக்கும். ஏனெனில் பயோமெட்ரிக் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அளந்து வீடுகளால் நீர் பிடிப்பு பகுதிகளில் பாதிப்பு இல்லை என்பதையும், அந்த மக்களின் வாழ்வியல் சூழல்களையும், சிக்கல்களையும் எடுத்து வைக்க வேண்டும். அப்போது தான் இந்த மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.
Share on:

தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!



வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், சென்னை உட்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. மேலும் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் வங்கக்கடலில் புயல் உருவாவது இயல்பான ஒன்றாக மாறியிருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. தொடக்கத்தில் ஏற்பட்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொஞ்சம், கொஞ்சமாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவும், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியிருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மறுபுறம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதால் தற்போது சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.

கனமழையை பொறுத்தவரை இன்று மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் என 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

நாளை, மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் என 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல விழுப்புரம், கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் அரியலூர் என 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே நேரம் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தவிர, நாளை மறுநாள் அதாவது நவ.27ம் தேதி கடலூர் மற்றும் மயிலாடுதுறைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அன்றைய தினம் விழுப்புரம், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வட மாவட்டங்களை பொறுத்தவரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களான பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
Share on:

தமிழக ரேஷன் கடைகளில் அரிசி ஏற்றி இறக்கும்போது சிந்தியதால் ரூ.1,900 கோடி நஷ்டம்.. ஆய்வில் தகவல்

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசியை ஏற்றி இறக்கும்போது சிந்திய அரிசிகளால் மட்டுமே ரூ.1,900 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (ICRIER) வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..

தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 34,790 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 33,377 கடைகள் கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படுகிறது. இதில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள முழு நேரக் கடைகள் 18,782 ஆக உள்ளது. பகுதி நேர ரேஷன் கடைகள் 9,388 ஆக இருக்கிறது. ஆயிரம் முதல் ஆயிரத்து 500 குடும்ப அட்டைகள் கொண்ட முழு நேரக் கடைகள் 4,352 ஆகவும் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளின் மூலம் அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை, ஆயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சுமார் 2 கோடி பேருக்கு கைரேகை பெற்று வழங்கப்படுகிறது.

இந்நிலையில் ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வீணாவது குறித்து நாடு தழுவிய ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அதில் தமிழகத்தில் 2022-23ம் ஆண்டில் தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 5.2 லட்சம் டன் அரிசி, அரசின் கணக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, பயனாளிகளைச் சென்றடையவில்லை. இது நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட வேண்டிய அரிசியின் அளவில் 15.80 சதவிகிதம் என்று கூறப்பட்டுள்ளது.

ராய தாஸ், ரஞ்சனா ராய் மற்றும் அசோக் குலாட்டி ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு நடத்தி வெளியிட்ட ஆய்வின் அறிக்கையில் தான் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23-ம் ஆண்டிற்கான அரிசியின் பொருளாதாரச் செலவு ஒரு குவிண்டால் அரிசிக்கு ரூ.3,670 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 20 கிலோ அரிசி என்று விநியோகிக்கப்படும் நிலையில், மூட்டையில் ஏற்பட்ட கசிவின் காரணமாக சிந்திய அரிசியின் அளவு சுமார் 21.67 லட்சம் குடும்பங்களுக்கு உணவளித்திருக்கும் அளவுக்கு சமமானது என்று கூறப்பட்டுள்ளது.

அரிசி கசிவு தொடர்பான ஆய்வில் கசிவு குறைவாக இருக்கும் மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடு 7-வது இடத்தில் இருக்கிறது. அதேநேரம் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தமிழ்நாட்டை விட கசிவு விகிதம் குறைவாக உள்ளது. அகில இந்திய அளவில், தோராயமாக 20 மில்லியன் டன் அரிசி மற்றும் கோதுமை மக்களுக்கு சென்றடையவில்லை என கூறப்படுகிறது. இதனால் சுமார் ரூ.69,108 கோடி நிதி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆய்வின் முடிவுகள் ஒருபுறம் எனில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உணவு பொருட்களின் கசிவைக் குறைக்க நடவடிக்கையை குறைத்து வருவதாக கூறப்படுகிறது. ஜனவரி 1, 2023 முதல் மே 31, 2024 வரை, சிவில் சப்ளைஸ் சிஐடி சுமார் 42,500 குவிண்டால் கடத்தப்பட்ட அரிசியை பறிமுதல் செய்துள்ளதாகவும், அதன் மதிப்பு சுமார் ரூ.2.4 கோடி என்றும் அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆதார் அடிப்படையில் குடும்ப அட்டை வழங்கப்படுவதால், போலி குடும்ப அட்டை புழக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது என்றும் 2 தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த ஆய்வு அறிக்கை குறித்து இரண்டு நாள் முன்பு கருத்த தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் உரியவர்களை சென்றடையாமல் கசிந்து செல்வதால் 2022-23ம் ஆண்டில் நாடு முழுவதும் ரூ. 69,000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், தமிழ்நாட்டில் இலவசமாக வழங்கப்பட வேண்டிய அரிசி மக்களுக்கு வழங்கப்படாமல் வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டதன் மூலமாக மட்டும் ரூ. 1,900 கோடி தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சிக் குழு (Indian Council for Research on International Economic Relations) என்ற பொருளாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மக்களுக்கு சென்றடைய வேண்டிய உணவு தானியங்கள் முறைகேடான வழிகளில் திருப்பிவிடப்படுவதை மத்திய, மாநில அரசுகள் தடுக்கத் தவறியது கண்டிக்கத்தக்கது.

2022-23ம் ஆண்டில் தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 5.2 லட்சம் டன் அரிசி, அரசின் கணக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, பயனாளிகளைச் சென்றடையவில்லை. இது நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட வேண்டிய அரிசியின் அளவில் 15.80 சதவிகிதம் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிசி பயனாளிகளைச் சென்றடையவில்லை என்றால், எங்கு சென்றிருக்கும் என்ற வினாவுக்கு பதிலளித்த ஆராய்ச்சி அறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவரான பேராசிரியர் அசோக் குலாட்டி, அந்த அரிசி வெளிச்சந்தையில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் அல்லது ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கலாம்” என்று கூறியிருக்கிறார். அதாவது நியாயவிலைக் கடைகளில் மொத்தம் 21.67 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச அரிசி அப்பட்டமாக கடத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் இதன் பொருள்.

தமிழ்நாட்டில் ஏழை மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசியில் ரூ. 1,900 கோடி மதிப்புள்ள 5.2 லட்சம் டன் அரிசி கடத்திச் செல்லப்படுவதை மன்னிக்கவே முடியாது. அரசு மற்றும் அரசுத்துறை அதிகாரிகளின் துணையின்றி இந்தக் கடத்தல் நடைபெற்றிருக்க வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது. இதே காலகட்டத்தில் வெறும் ரூ. 2.4 கோடி மதிப்புள்ள 42,500 டன் கடத்தல் அரிசியை மட்டும்தான் தமிழக அரசு பறிமுதல் செய்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கடத்தல் தொடர்பாக ஒரு சில நியாயவிலைக் கடை ஊழியர்கள் தவிர வேறு யார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.” என்று கூறியுள்ளார்.
Share on:

அமெரிக்கா பிடிவாரண்ட்- இந்திய மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அதானி லஞ்சம் கொடுத்தது ஏன்? 10 பாயிண்ட்ஸ்


அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானிக்கு எதிராக அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பது பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. அமெரிக்கா நீதிமன்றம் அதானிக்கு ஏன் பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும்? அதானி குழுமம் இந்திய மாநில மின்சார வாரிய அதிகாரிகளுக்கு ஏன் லஞ்சம் தர வேண்டும்? மத்திய அரசின் SECI நிறுவனத்துக்கு என்னதான் தொடர்பு? என்பதை சுருக்கமாகப் பார்க்கலாம்.

1) மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் SECI – Solar Energy Corporation of India. இது மத்திய அரசின் நவரத்தின நிறுவனங்களில் ஒன்றாகும். சூரிய ஒளி மின்சாரத் திட்டங்களை செயல்படுத்தக் கூடியது. மாநில அரசுகளுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை பெற்றுத் தரக் கூடிய நிறுவனம்.

2) மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான SECI எனப்படுகிற Solar Energy Corporation of India நிறுவனத்துடன் கவுதம் அதானியின் அதானி குழுமம் சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கான ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது.

3) தமிழ்நாடு, ஆந்திரா, சத்தீஸ்கர் மாநில அரசுகளின் மின்சார வாரியங்கள் SECI – Solar Energy Corporation of India நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன.

4) SECI – Solar Energy Corporation of India தமிழ்நாடு, ஆந்திரா, சத்தீஸ்கர் மாநில அரசுகள் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகவேர் அந்த மாநில அரசின் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அதானியின் அதானி குழுமம், அமெரிக்காவில் பட்டியலிடப்பட்ட எரிசக்தி நிறுவனமான Azure Power லஞ்சம் கொடுத்தன என்பது குற்றச்சாட்டு.

5) இப்படி மாநில அரசின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஒப்பந்தங்களைப் போட வைத்து மத்திய அரசின் Solar Energy Corporation of India நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளிதிட்டங்களைப் பெற்றது அதானி குழுமம்.

6) மாநிலங்களில் ஆளும் அரசுகள் தனியாகவும் அதானி குழுமம் உள்ளிட்டவைகளுடன் சூரிய ஒளி மின்சார கொள்முதல் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளவும் முடியும்.

7) இந்தியாவில் மாநில அரசின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இதன் மூலமாக இந்திய மத்திய அரசின் SECI – Solar Energy Corporation of India நிறுவனத்திடம் ஒப்பந்தங்களைப் பெற்றதை அமெரிக்காவின் முதலீட்டாளர்களிடம் மறைத்தது அதானி குழுமம். இப்படி லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களிடம் ரூ20,000 கோடி முதலீடுகளைப் பெற்றது அதானி குழுமம் என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு

8) தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளின் அதிகாரிகளுக்கு மொத்தம் ரூ2,029 கோடி ( 265 மில்லியன் டாலர்) லஞ்சம் தருவதற்கு அதானி குழுமம் ஒப்புக் கொண்டது என்பதும் அமெரிக்காவின் குற்றச்சாட்டு.

9) இந்தக் குற்றச்சாட்டில்தான் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

10) கவுதம் அதானி, சாகர் அதானி (அதானி கிரீன் எனர்ஜி), ரஞ்சித் குப்தா, ரூபேஷ் அகர்வால் (Azure Power) உள்ளிட்டோர் மீது அமெரிக்கா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Share on:

2021 திமுக பொறுப்பேற்றதில் இருந்து இன்று வரை திமுகவினர் உட்பட அணைத்து தரப்பு மக்களும் படும் துன்பம்!


1.) சொத்து வரி உயர்வு:

ஒருவர் மாநகராட்சி பகுதியில் 100சதுரடியில் வீடு கட்டி முடிக்கும் பொழுது காலியிட வரி, கட்டிட அனுமதி, சொத்து வரி, குடிநீர் இணைப்பு கட்டணம், பாதாளசாக்கடை கட்டணம், மின் இணைப்பு கட்டணம் உள்ளிட்டவைகளுக்கு முறையான கட்டணம் லஞ்சம் உள்ளிட்டவைகளை சேர்த்தால் ரூ 2,00,000/-க்கும் மேல் ஆகிறது. இதில் தொழிற்சாலை வகை கட்டிடங்களுக்கு இன்னும் பலமடங்கு உயர்வு, திமுக ஆட்சிக்கு முன்பு ஒரு சதுரடி வீடு கட்ட அனுமதி கட்டணம் ரூ.42, திமுக ஆட்சிக்கு பின்பு ஒரு சதுரடி ரூ.88, தொழிற்சாலை கட்டிடங்களுக்கு வணிக கட்டிடங்களுக்கு பலமடங்கு உயர்வு. (குறிப்பு: சொத்து வரி கட்ட தாமதம் ஆனால் அபராத வரி தி.மு.க ஆட்சியில் தான்)

2.) மின் கட்டணம் உயர்வு:

தமிழ் நாட்டில் திமுக 2021-ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பு ஏற்றதற்கு பின்பு 3 முறை மின்கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மின் இணைப்புக் கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பீக்அவர்ஸ் கட்டணமும் திமுக ஆட்சியில் தான். தொழில் நிறுவனங்களுக்கு திமுக ஆட்சிக்கு முன்பு 1KV நிலைக் கட்டணம் ரூ.35 திமுக ஆட்சிக்கு பின்பு ரூ.160. அதேபோல் மின் வாரியத்தில் லஞ்சமும் பலமடங்கு அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியில் பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் என அணைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு கண்ணீர் வடிக்கின்றனர்.

3.) பத்திர பதிவுத்துறை:

தமிழ் நாட்டில் திமுக 2021-ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பு ஏற்றதற்கு பின்பு பத்திர பதிவுத்துறையில் 20க்கும் மேற்பட்ட சேவைக் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. வழிகாட்டி மதிப்பு 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது. இதில் புதிய வகை லஞ்சமாக வழி காட்டி மதிப்பு நிர்ணயம் செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.2,50,000/- விவசாய பூமியை 25 சென்டுகளாக பிரித்து விற்க ஏக்கருக்கு ரூ.10,00,000/- (பத்திரப்பதிவுத்துறையின் புதிய பரிமாணம்).

4.) மதுபானவிற்பனை:

தமிழ் நாட்டில் திமுக 2021-ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பு ஏற்றதற்கு முன்பு அரசுக்கு மது வருவாய் ரூ.33,000 கோடிகள், தற்பொழுது மதுவருவாய் ஏறத்தாள ரூ.66,000 கோடிகள்.

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதற்கு பின்பு FL2, FL3 என்ற பெயரில் புதிதாக மதுக்கடைகள் உருவாகிக்கொண்டே இருக்கிறது. அங்கு இளைஞர்கள், பெண்கள், மாணவ சமுதாயத்தினர் குடித்துக்கொண்டிருக்கும் காட்சிகள், தமிழ்நாடு எங்கே சென்று கொண்டு இருக்கிறது என்பதை நினைத்தால் வெட்கமும் வேதனையும் தான் மிஞ்சுகிறது.

திமுக ஆட்சியில் தான் அதிக மது விற்பனை செய்த டாஸ்மாக் பணியாளர்களுக்கு பரிசும் பாராட்டும் செய்தது. இது எந்த வகையில் நியாயம்? இது தான் நல்லாட்சிக்கு சான்றா?

5.) போதை பொருள்கள்:

தமிழ் நாட்டில் திமுக 2021-ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்பு எப்பொழுதும் இல்லாத அளவில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை பரவி ஏழை எளியவர்கள், பள்ளிகல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என பலதரப்பட்ட மக்கள் நாசமாகிக் கொண்டு இருக்கிறார்கள். பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்து விட்டது. போதையில் சண்டைச்சரவுகள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், விபத்துக்கள் அனைத்திற்கும் காரணம் போதை பொருள்கள் தான் இதன் மீது திமுக அரசின் நோக்கம் என்ன?

6.) கனிமவளக் கொள்ளை:

தமிழ் நாட்டில் திமுக 2021-ஆம் ஆண்டு பொறுப்பு ஏற்றதர்க்கு பின் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்தவில்லை. மாறாக பல மடங்கு உயர்ந்துள்ளது. தங்கு தடையின்றி கனிமவளக் கொள்ளை நடைபெற்றுக்கொண்டே வருகிறது. தட்டி கேட்பவர்கள் தாக்கப்படுகிறார்கள் எல்லை ஓர பகுதிமக்கள் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
Share on:

கல்வராயன்மலை பகுதியில் வெள்ளிமலை – சின்ன திருப்பதி இடையே சாலை எப்போது அமைக்கப்படும்?


கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள வெள்ளிமலை-சின்ன திருப்பதி இடையேயான சாலை எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக, வாழ்வியல் மேம்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், கல்வராயன் மலைப்பகுதியில் 10 கிலோ மீட்டருக்கு சாலை சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், மண் சாலைகளை சீரமைக்க கால அவகாசம் வேண்டுமென தெரிவித்தார்.

கல்வராயன் மலைப்பகுதியின் முக்கிய சாலையான வெள்ளிமலை- சின்ன திருப்பதி இடையே சாலை எப்போது முடிக்கப்படும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், மதிப்பீடு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் கூடிய விரைவில் பணிகள் முடிக்கப்படும் என கூறினார்.

இதனையடுத்து, வெள்ளிமலை-சின்ன திருப்பதி இடையேயான சாலை எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Share on:

கடையை காலி செய்யாமல் ஏன் இப்படி அடாவடி செய்கிறீர்கள்? டாஸ்மாக் மேலாளருக்கு நீதிபதி கேள்வி


குத்தகை காலம் முடிந்து விட்டால், கடையை காலி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படி டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், மதுக் கடையை மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காமன்தொட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை முன் போலி மதுபானம் விற்பனை செய்ததாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், டாஸ்மாக் கடைக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்ட கடையை, குத்தகை காலம் முடிந்த பிறகும் காலி செய்யாதது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்ததால் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகம் முழுவதும் குத்தகை காலம் முடிந்த பிறகும் கடைகளை காலி செய்யாமல் நடத்தப்படுகிறது என்ற அறிக்கையுடன் நேரில் ஆஜராகும்படி டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் நேரில் ஆஜராகியிருந்தார். அப்போது, குறிப்பிட்ட கடையை மூன்று நாட்களுக்கு முன் காலி செய்து உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் மற்றும் டாஸ்மாக் தரப்பு வழக்கறிஞர் சதீஷ் ஆகியோர் தெரிவித்தனர்.

இதையடுத்து, 2019-ம் ஆண்டு குத்தகை காலம் முடிந்த போதும், கடையை காலி செய்யாதது ஏன் எனவும், இதை கேள்வி கேட்டால் காவல் துறையினரை வைத்து வழக்கு தொடர்வீர்களா எனவும், ஏன் இப்படி அடாவடி செய்கிறீர்கள் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அரசு நிலம் என்றால் சட்டத்தை பயன்படுத்தும் போது, தனிநபர்களுக்கு சட்டம் இல்லையா எனக் கேட்ட நீதிபதி, சட்டத்தை அரசு கையில் எடுக்க கூடாது எனவும் தெரிவித்தார்.

பின்னர், சுந்தருக்கு எதிரான வழக்கில் அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி ரத்து செய்த நீதிபதி, குத்தகை காலம் முடிந்தால், கடையை காலி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படியும், டாஸ்மாக் கடை வேண்டாம் என மக்கள் கூறினால், அந்த கடைகளை மாற்ற வேண்டும் எனவும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்டார்.
Share on:

கல்லாறு பழப்பண்ணையில் பொதுமக்களை அனுமதிப்பதே கிடையாது.. ஐகோர்ட்டில் தோட்டக்கலைத்துறை தகவல்!


யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக கல்லாறு தோட்டக்கலை பண்ணையில், பொதுமக்கள் பார்வையிடுவது நிறுத்தப்பட்டு விட்டதாக, அதன் இயக்குனர் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.

யானைகள் வழித்தடமாகவும், வனவிலங்கள் அதிகம் நடமாடும் பகுதியாகவும் உள்ள கோவை கல்லாறு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை பண்ணையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் டி.மோகன் அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கல்லாறு தோட்டக்கலை பண்ணைக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, கல்லாறு அரசு தோட்டக்கலைத் துறையின் இயக்குநர் குமாரவேல் பாண்டியன், யானைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல், அதன் வழித்தடங்களில் செல்வதற்காக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், 21 ஏக்கரில் பரப்பளவில் உள்ள கல்லாறு தோட்டக்கலை துறையின் நிலத்தில் ஆராய்ச்சி தவிர வேறு எந்த பணிகளும் நடத்தப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து சூரிய சக்தி மின்வேலிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளதாகவும், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க அதி நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான டெண்டர் கோரும் பணிகள் நடந்து வருவதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

யானைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு இடையூறு இல்லாமல் தோட்டக்கலை தொடர்பான ஆராய்ச்சிகளை மட்டுமே மேற்கொள்ளப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சிறுவர் பூங்காவில் இருந்த அனைத்து விளையாட்டு உபகரணங்களும் அங்கிருந்து அகற்றப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியுடன் பொதுமக்கள் பார்வையிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பதப்படுத்தப்பட்ட பழங்கள் உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை முற்றிலுமாக அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், தேவையில்லாத கழிப்பிட கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வரும் காலங்களில் எந்த கட்டுமானங்களும் தோட்டக்கலை பண்ணை இடத்தில் அமைக்கப்படாது என்றும் விவசாயிகள், தோட்டக்கலை ஆராயச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு மட்டுமே நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், கல்லாறு பகுதியில் மாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை மனித நடமாட்டம் இருக்கக் கூடாது என அறிக்கையில் குறிப்பிடப்படவில்லையே ஏன் என கேள்வி எழுப்பினர். அதேபோல் தோட்டக்கலை துறை பண்ணையில் காலியாக உள்ள 8 ஏக்கர் நிலத்தை என்ன செய்ய போகிறார்கள் என்பதும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதன் பின் உத்தரவிட்ட நீதிபதிகள், கல்லாறு தோட்டக்கலைத் துறை இயக்குனரின் அறிக்கை தெளிவாக இல்லை என்றும் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞரின் பரிந்துரையின் படி, தெளிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை டிசம்பர் 2 ஆம் தேதி தள்ளி வைத்தனர்.
Share on:

போதைப்பொருள்.. தமிழகத்தில் காவல்துறை நடவடிக்கையை கண்காணிக்க சிறப்பு குழு.. பரிந்துரைத்த ஹைகோர்ட்


தமிழகத்தில் போதைப் பொருளை கட்டுப்படுத்தும் காவல் துறையினரின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட போதை பொருள் தடுப்பு அதிகாரி, சிபிஐ அதிகாரி அடங்கிய சிறப்பு கண்காணிப்புக் குழுவை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

சென்னையில் பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரிய வழக்கு, நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி. பாலாஜி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகளையும், போதையில்லா தமிழ்நாடு என்ற இணையதளம் சார்ந்த செயலி துவங்கப்படுவது குறித்தும் விலக்கப்பட்டிருந்தது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அண்டை மாநிலங்களில் இருந்து கொரியர் மூலமாக, போதைப் பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைவதாக தெரிவித்தனர். மேலும், மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் போதை பொருட்கள் சாதாரணமாக கிடைப்பதாகவும், இதனை கட்டுபடுத்த மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சட்ட பணிகள் ஆணையக் குழுவிற்கு உத்தரவிட்டனர்.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து 100 மீட்டருக்குள் எந்த கடைகளும் அமைக்கக் கூடாது எனவும், போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவதில் காவல் துறையினரின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட போதை பொருள் தடுப்பு அதிகாரி ஒருவரையும், சிபிஐ அதிகாரி ஒருவரையும், அரசு அதிகாரிகள் அடங்கிய சிறப்பு கண்காணிப்புக் குழுவை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், சிறப்பு கண்காணிப்பு குழுவில் இடம்பெற உள்ள அதிகாரிகளின் விவரங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Share on:

சென்னையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்! ஸ்டான்லி மருத்துவமனையில் மனநல மருத்துவர் மீது நோயாளி தாக்குதல்


சென்னையில் மற்றொரு மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஹரிஹரன் என்ற மனநல மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மனநல மருத்துவர் ஹரிஹரன் மீது ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நோயாளி தாக்குதல் நடத்தியுள்ளார்.

மருத்துவரை தாக்கிய நபர் திருவான்மியூரைச் சேர்ந்த பரத் (35) என்பது தெரியவந்துள்ளது. பரத் என்பவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். அதன்பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்று மருத்துவர் ஆலோசனையின் பேரில் ஸ்டான்லி மருத்துவமனை சிகிச்சைக்காக வந்து செல்கிறார்.

அந்த வகையில் இன்று சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனை வந்தபோது மருத்துவர் ஹரிஹரனை முகத்தில் குத்தி சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளி உள்ளார். இதில் காயமடைந்த மருத்துவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.

முன்னதாக, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாய் பிரேமாவிற்கு நுரையீரல் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் கடந்தாண்டு மே முதல் நவம்பர் மாதம் வரை, சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் நிபுணர் மருத்துவர் பாலாஜியிடம் சிகிச்சை பெற்றுள்ளனர்.

ஆனால், சிகிச்சையில் தகுந்த முன்னேற்றம் ஏற்படாத நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சவிதா என்ற தனியார் மருத்துவமனையில் 3 மாத சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை, வெளிநோயாளி பிரிவில் மருத்துவரை சந்திக்க 4 பேருடன் விக்னேஷ் மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, புற்றுநோய் சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவர் பாலாஜியிடம் சுமார் அரை மணிநேரம் விக்னேஷ் பேசியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில், தான் வீட்டில் இருந்து கொண்டு சென்ற கத்தியால், மருத்துவர் பாலாஜியின் இடது கழுத்தில் 2 முறை குத்தியுள்ளார். இதில், மருத்துவர் பாலாஜிக்கு ரத்தம் கொட்டியது.

படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜி, உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வெளியேற முயன்ற விக்னேஷை, பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சூழலில் ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share on: