
மதுரை திலகர் திடல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருப்பவர் விமாலா. இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு கோரி உயர்நீதிமன்ற கிளையில் ஜனார்த்தனன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “எனக்கு எதிராக திலகர் திடல் காவல் நிலையத்தில் என் மனைவி வரதட்சணை புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்த புகாரின் பேரில் நான் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானேன். புகார் தொடர்பாக என்னிடம் முதற்கட்ட விசாரணை நடத்தாமல் என்னை கைது செய்து காவல் ஆய்வாளர் சிறையில் அடைத்தார். ஏற்கெனவே உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் பற்றி உத்தரவிட்டு இருக்கிறது.
அந்த உத்தரவை காவல் ஆய்வாளர் விமலா பின்பற்றவில்லை. எனவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆய்வாளர் விமலா நீதிமன்றத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், இந்த ஆண்டு தமிழ்நாடு காவல் மகளிர் பிரிவு பொன்விழாவை கொண்டாடுகிறது. கடந்த 1973 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த பிரிவில் ஆரம்பத்தில் ஒரு சார்பு ஆய்வாளரும், 20 காவலர்களும் இருந்தனர். 1992 ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கில் முதல் முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அப்போதைய முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இன்று 222 மகளிர் காவல் நிலையங்கள் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வருகிறது. இதில் 35,359 போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். இந்த காவல் நிலையங்களில் வழக்கு விசாரணைகளின்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளாது. இதுகுறித்து டிஜிபியும் பதில் மனுவை தாக்கல் செய்தார்
7 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை பெறும் குற்றங்களில் இயந்திரத்தனமாக கைது செய்யக்கூடாது. அவசியம் இருந்தால் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை மீறினால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. உச்சநீதிமன்றம் இதைவிட மேலானது. அதன் உத்தரவை போலீஸ் பின்பற்ற வேண்டும். பெண்களை காக்கும் கேடயமாகவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்காணித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் இடமாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் பார்க்கப்பட்டன. ஆனால், பணம் மற்றும் அதிகாரத்தின் அடிப்படையில் கைது செய்து துன்புறுத்தும் இடமாகிவிட்டது.
பெரிய எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்ட மகளிர் காவல் நிலையங்கள் கட்டப்பஞ்சாயத்துக்கான இடமாக மாறி உள்ளன. 222 அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் பெண்கள், குழந்தைகள் பயமின்றி, சுதந்திரமாக கருத்து தெரிவிக்கும் வகையில் தனி விசாரணை அறை, பெண் வழக்கறிஞர், பெண் மனநல மருத்துவர்கள், சமூக ஆர்வலர், பெண்கள் மேம்பாட்டு முகாம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இதனை நிறைவேற்ற உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆய்வாளர் விமலா மன்னிப்பு கேட்டு இருப்பதால் அவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.