பாம்பு கடித்து பலியான விவசாயி குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் இழப்பீடு வழங்க ஹைகோர்ட் உத்தரவு.


ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்தால், பாம்பு கடிக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் பலியான விவசாயியின் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கப்பட வேண்டிய சுகாதார நிலையம் எப்படி பூட்டியிருந்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் புதுராஜ கண்டிகை கிராமத்தை சேர்ந்த முரளி என்ற விவசாயி, அவருடைய சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 6 ம் தேதி விவசாயம் செய்து கொண்டிருந்த போது, முரளியை பாம்பு கடித்தது. இதையறிந்த அவரது குடும்பத்தினர், அருகில் உள்ள கண்ணன் கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் திருவள்ளுர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

காலதாமதமாக அழைத்து சென்றதால் முரளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 24 மணி நேரமும் இயங்க வேண்டிய ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்தால் தான் தன்னுடைய கணவரை பலியானதாக கூறி அவரின் மனைவி அருணா வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில் கண்ணன் கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இழப்பீடாக 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்றும் குழந்தைகளின் கல்வி செலவையும் அரசு ஏற்க வேண்டும் என முரளியின் மனைவி அருணா கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பலியான முரளியின் மனைவி அருணாவுக்கு அரசு துறையில் தற்காலிக அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட்டார்.

மேலும் அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவுக்காக ரூ 2 லட்சத்தை அவர்களுடைய வங்கி கணக்கில் 2 வாரத்தில் அரசு செலுத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Share on:

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்தவர் பலி.. இருவருக்கு தீவிர சிகிச்சை!


விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன், முருகன் மற்றும் சிவச்சந்திரன். இவர்கள் மூவரும் சேர்ந்து கடந்த சனிக்கிழமை (ஜூன் 29) அன்று கள்ளச்சாராயம் குடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜெயராமன், முருகன் மற்றும் சிவச்சந்திரன் ஆகிய மூவருக்கும் திடீரென வயிற்று வலி மற்றும் எரிச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து, உடனடியாக அவர்களது உறவினர்கள் மூவரையும் அருகில் உள்ள இருவேல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு, அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் முருகன் மற்றும் சிவச்சந்திரன் ஆகியோர் சற்று உடல் தேறிய நிலையில் பொது வார்டிற்கு மாற்றப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால், ஜெயராமன் என்பவருக்கு உடல்நிலை அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளானதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் இன்று (ஜூலை 04) அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து ஜெயராமனின் மருமகன் அன்பழகன் என்பவர் கூறும்போது, “கடந்த சனிக்கிழமை எனது மாமனாருக்கு திடீரென உடல்நல கோளாறு என்று போன் வந்தது. அதன் அடிப்படையில், அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம்” என்று தெரிவித்தார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் கூறும்போது, “ஜெயராமன், முருகன் மற்றும் சிவச்சந்திரன் இவர்கள் மூவரும் புதுச்சேரியில் இருந்து வாங்கிவந்த கள்ளச்சாராயத்தை குடித்ததாக தெரிய வந்துள்ளது.

மேலும், இவர்கள் மூன்று பேரில் புதுச்சேரியில் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி வந்தது முருகன் தான் என்பதும் தெரிய வந்துள்ளது. ஆகவே இதன் அடிப்படையில், முருகன் மீது வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

இதற்கிடையில் தான், சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இது குறித்தும் விசாரணை நடத்தப்படும்” என தெரிவித்தார்.

மேலும், கள்ளச்சாராயம் குடித்து மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் என்பவர் தற்போது உயிரிழந்துள்ள சம்பவம் விழுப்புரம் பகுதியில் அதிகம் பேசுபொருளாகியுள்ளது.
Share on:

டாஸ்மாக் கடைகளில் 90 மில்லி மதுபாட்டில்கள்: தமிழ்நாடு அரசு அனுமதி; தீபாவளிக்கு வருமானம் அதிகரிக்க வழியா?


கள்ளச்சாரயம் குடித்து 67 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், டாஸ்மாக் கடையில் 90 மல்லி மதுபாட்டிகள் விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளில் 90 மில்லி (கட்டிங்) மது பாட்டில்களை விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை குடித்து 60-க்கு மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனாலும் தற்போது பூரண மதுவிலக்கு அமல்படுத்தும் சூழ்நிலையில் தமிழ்நாடு இல்லை என்று அமைச்சர் முத்துச்சாமி சட்டசபையில் தெரிவித்திருந்தார்.

மேலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தால், கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று கூறி சட்டதிருத்த மசோதாவை தாக்கல் செய்திருந்தார். இதனிடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் டாஸ்மாக் கடைகளில் 90 மில்லி மதுபாட்டிகள் விற்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பல உள் விவாதங்களுக்குப் பிறகு, சட்டப்பூர்வ கொள்முதல் மற்றும் மது விற்பனையில்90 மில்லி மது பாட்டில்களை விற்க அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றுள்ளது டாஸ்மாக் நிர்வாகம்.

தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள, சில அண்டை மாநிலங்கள் டெட்ரா பாக்கெட்டுகளில் குறைந்த அளவிலான மதுபானங்களை விற்பனை செய்து வரும் நிலையில், டாஸ்மாக் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. மதுபான உற்பத்தியாளர்களுடனான சந்திப்புக்குப் பிறகு, டாஸ்மாக் நிறுவனம், இந்த ‘கட்டிங்’ பாட்டில்களின் விலை நிர்ணையம் குறித்து தெரிவித்துள்ளது. அதன்படி, 90 மில்லி பிராண்டின் விலை சுமார் 80 ஆக இருக்கலாம் (180ml பாட்டில், இப்போது கிடைக்கும் சிறியது, விலை சுமார் 140 ஆகும்).

“பெரும்பாலும், இந்த தீபாவளிக்கு 90 மில்லி மதுபாட்டில்கள் தங்களுக்கு கிடைத்துவிடும் என்றும், இதனை தயாரிக்க, மது உற்பத்தியாளர்கள் ஆறு மாதங்களுக்கு மேல் கால அவகாசம் கோரியுள்ளதாகவும், டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 90 மில்லி பாட்டில்கள் மற்றும் டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானம் விற்பனை செய்யப்படுவது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்களை சேகரித்து இந்த முடிவை எடுத்துள்ளனர். தெலுங்கானா போன்ற மாநிலங்களில், மொத்த மதுபான விற்பனையில் பெரும்பகுதி 90 மில்லி மது பாட்டில்கள் மூலம் கிடைப்பதாக கூறப்படுகறது.

அதே சமயம் கேரளா போன்ற மாநிலங்களில், அவை அதிகமாக விற்க்கப்படவில்லை என்று ஒரு அரசாங்க அதிகாரி கூறினார். மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தி கள்ளக்குறிச்சி பகுதியில், 67 மரணமடைந்த சம்பவத்திற்கு பிறகு, இந்த ‘நிப் பாட்டில்களை’ அறிமுகப்படுத்த மாநில அரசின் நடவடிக்கை வேகமாக நடந்து வருகிறது.
Share on:

அதிகரிக்கும் நாய் கடி சம்பவங்கள்! நாய்களை பிடிக்க கூடாது என மிரட்டல்! சென்னை ஐகோர்ட்டில் பரபர வழக்கு.


சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள மெட்ரோ சோன் அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்தக் கோரிய விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என சென்ன மாநகராட்சி, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சமீப காலங்களாகத் தெரு நாய்கள் குழந்தைகளைத் துரத்திக் கடிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. குறிப்பாக சென்னையில் நாய்க் கடி சம்பவங்கள் மிகப் பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது.

வீதியில் நடந்து செல்வோரை கூட நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இதற்கிடையே சென்னை கோயம்பேட்டில் கட்டப்பட்டுள்ள ‘மெட்ரோ சோன்’ என்ற மிகப் பெரிய குடியிருப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இரவு பகல் பாராமல் சுற்றித் திரிந்து அங்குச் செல்பவர்களை விரட்டி கடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த தெரு நாய்களை அப்புறப்படுத்தக்கோரி அந்த குடியிருப்பில் வசிக்கும் ஷபீனா பாத்திமா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தடுப்பூசி போடப்படாத இந்த நாய்களைப் பிடித்துச் செல்ல மாநகராட்சி ஊழியர்கள் வந்தாலும் சமூக ஆர்வலர் எனக் கூறிக் கொள்ளும் சிலர், நாய்களைக் கொண்டு செல்ல ஊழியர்களைத் தடுப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நாய்களைத் துன்புறுத்துவதாகக் கூறி ப்ளு க்ராஸ் அமைப்பு மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என மாநகராட்சி ஊழியர்களை அவர்கள் மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சிக்குக் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. சென்னை மாநகராட்சி தரப்பில், மனுதாரரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை 8 வாரங்களுக்குத் தள்ளி வைத்தனர்.
Share on:

விஏஓ முதல் தாசில்தார் வரை.. லஞ்சத்தை சட்டம் ஆக்கிடுங்க.. திருநெல்வேலியில் இளைஞர் வெளியிட்ட வீடியோ


கூட்டு பட்டாவில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தேன், அதற்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுகிறாங்க.. எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேக்குறாங்க.. தயவு செய்து லஞ்சத்தை சட்டம் ஆக்கி விடுங்கள் என்று வருவாய்த்துறைக்கு எதிராக திருநெல்வேலியைச் சேர்ந்த கண்னன் என்பவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

பட்டா வாங்கும் விவகாரத்தில் விஏஓ முதல் நில அளவையார், தாசில்தார் வரை யாருமே லஞ்சம் கேட்கக்கூடாது என்று அரசு கடுமையாக உத்தரவிட்டுள்ளது. மேலும் பட்டா பெயர் மாறுதல், பத்திரப்பதிவு முறை போன்றவற்றில் பல்வேறு விஷயங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன. விரைவில் ஒரு நிமிடத்தில் பட்டா வழங்கும் அளவிற்கு நிலைமை வரப்போகிறது.

பல லட்சம் கடன் வாங்கி நிலம் அல்லது வீடு வாங்குவோர் பத்திரம் முடிக்கவும், பட்டா வாங்கவும் கையூட்டு கொடுக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்க அரசு இது வரை ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ஆனாலும் ஒரு சில இடங்களில் விஏஓக்கள், நகராட்சி ஊழியர்கள், தாசில்தார்கள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் உள்ளது. வருவாய் துறையில் பணியாற்றும் சில ஊழியர்கள் லஞ்சம் கொடுத்தால் தான் பணிகளை முடித்து தருவாகவும் குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் கண்ணநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஒருவர் கண்ணன் என்பவர் வருவாய்த்துறை அதிகாரிகள் கூட்டு பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் கேட்பதாகவும், அதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில் கண்ணன் கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே, வருவாய்த்துறை என்ற துறை இருக்கிறது. வருவாய்த்துறை ஆபிஸ்களில் காலை வைத்தாலே லஞ்சம் கேட்குறாங்க. லஞ்சம், லஞ்சம், எதற்கெடுத்தாலும் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. நான் கூட்டு பட்டாவில் பெயர் சேர்க்க விண்ணப்பித்து இருந்தேன்.. அதற்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார்கள். அதற்கு எல்லா ஆவணங்களும் சரியாக இருப்பதால் நான் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று உறுதியாக கூறினேன்.

இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், அந்த புகார் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. கடனை வாங்கி நான் இடத்தை வாங்கினால், இவர்களுக்கு லஞ்சம் கொடுத்து தாழ முடியாத நிலை இருக்கிறது. முதல்வர் அவர்களே, தயவு செய்து லஞ்சத்தை சட்டம் ஆக்கி விடுங்கள், இல்லாவிட்டால் லஞ்சம் கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்” என வீடியோவில் கண்ணன் கூறினார்.

கண்ணன் என்பவரின் இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள சேரன்மகாதேவி உதவி ஆட்சியர், இந்த புகார் தொடர்பாக இரு தரப்பினரிடைய விசாரணை நடந்து வருகிறது. வழக்கு விசாரணையின் இறுதி ஆணையின் படியே பட்டா மாறுதல் வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்.
Share on:

விருதுநகர் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 பேர் உயிரிழப்பு


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஏராளமான பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.. இந்த பட்டாசு தயாரிப்பு நிறுவனங்களில் உள்ளூர் மக்கள் ஏராளமானோர் கூலித்தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகிறார்கள்.

குறைவான ஊதியத்தில், தங்கள் உயிரையே பணயம் வைத்து பட்டாசுகளை தயார் செய்யும் ஆபத்தான இந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் எதிர்பாராத விதமாக ஏற்படும் பட்டாசு விபத்துகளில் அப்பாவி தொழிலாளர்கள் கருகி உயிரிழக்கும் துயரமும் ஏற்பட்டு விடுகிறது.

கடந்த சில நாட்களுக்குமுன்புகூட, சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் கீழதிருத்தங்கல்லை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலையில் திடீரென பட்டாசு வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி 5 பெண்கள், 3 ஆண்கள் என மொத்தம் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.. 11 பேர் படுகாயம் அடைந்தனர்..

பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்து கொண்டிருந்தபோசூ, உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாகவும், ஒரு அறையில் ஏற்பட்ட வெடிவிபத்து அடுத்தடுத்த அறைகளுக்கு பரவி 7-க்கும் மேற்பட்ட அறைகள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இப்போது இன்னொரு பட்டாசு வெடிவிபத்து விருதுநகர் மாவட்டத்தில் நடந்துள்ளது.. விருதுநகர் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து – 3 பேர் உயிரிழப்பு

சாத்தூர் அருகே பதுவார்பட்டியில் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது.. இந்த ஆலையில் இன்று காலை வழக்கம்போல் பணிக்கு தொழிலாளர்கள் வந்தநிலையில், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.. மற்ற தொழிலாளர்கள் பதறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.. ஆலையிலிருந்த 3 அறைகளும் இடிந்து சேதமாகியிருக்கின்றன.

உடனடியாக இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருக்கின்றன.. இந்த வெடிவிபத்துக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை.. வெடிவிபத்து நிகழ்ந்த பகுதியில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்..!

இன்று வார இறுதி நாட்கள் என்பதால் தொழிலாளர்கள் பெரும்பாலானோருக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவிட்டதால், அதிக உயிர்சேதம் ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Share on:

குடும்ப அட்டை.. தனியாக வாழும் கணவனுக்கும் சர்க்கரை அட்டைகள் வழங்கப்படுமா? தமிழக அரசு சொல்வது என்ன?


தனியாக வாழும் கணவனுக்கும் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசிடம் எழுப்பப்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தனி ரேஷன் கார்டு பெற குடும்ப தலைவரின் அனுமதி தேவை இல்லை என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதுகுறித்து வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பில், “ஒரு பெண்மணி கணவரால் நிராதரவாக கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசித்துவரும் நிலையில், அவரது ஆதார் எண் கணவர் வைத்திருக்கும் குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள நேர்வுகளில், சம்மந்தப்பட்ட பெண் மற்றும் அவரை சார்ந்துள்ள குழந்தைகள் தனியாக வசித்து வருவது தணிக்கை மூலம் உறுதி செய்து, எழுத்து மூலமான வாக்குமூலம் பெற்று,

சம்மந்தப்பட்ட அலுவலர் தனது அதிகார வரம்பினை பயன்படுத்தி குடும்பத்தலைவரின் அனுமதியில்லாமல் சம்மந்தப்பட்ட பெண்ணின் பெயரினை குடும்ப அட்டையிலிருந்து நீக்கவும், தனியாக வாழும் சம்மந்தப்பட்ட பெண்மணி புதிய குடும்ப அட்டைக் கோரும்போது சட்டபூர்வமான நீதிமன்ற விவாகரத்துச் சான்று போன்ற ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்க வலியுறுத்தாமல் புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
Share on:

எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு: யாரை பார்த்து அப்படி சொன்னீங்க? கே.சி.பழனிசாமி காட்டம்!


தமிழ்நாட்டில் அதிக தொண்டர்களைக் கொண்ட கட்சி அதிமுக என்று அக்கட்சியினரால் கூறப்படும் நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பல அணிகளாக அக்கட்சி பிரிந்து நிற்கிறது.

பெரும்பாலான பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருந்ததால் அவர் தனக்கு போட்டியாக வர வாய்ப்புள்ள சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை கட்சியிலிரிருந்து நீக்கினார். இவர்களுக்கு ஆதரவாக நின்றவர்களையும் கட்சியிலிருந்து வெளியேற்றினார். இந்த மூவரின் ஆதரவாளராக காட்டிக்கொள்ளாத அதே சமயம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தனது கருத்துக்களை சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைத்து வருபவர் கே.சி.பழனிசாமி.

அதிமுக பல அணிகளாக பிரிந்ததிலிருந்து தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்து வருகிறது. டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரும் தோல்வியையே சந்திக்கின்றனர். இதனால் பிரிந்து நிற்கும் அணிகள் எல்லாம் இணைய வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது.

கே.சி.பழனிசாமி, ஜேசிடி பிரபாகர், புகழேந்தி உள்ளிட்டவர்கள் இடம்பெற்றிருந்த அக்குழு சசிகலா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடும் என்று கூறப்பட்டது. ஆனால் இதை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார். எனவே ஒருங்கிணைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி தன்னைப் பற்றி தரக்குறைவாக பேசியதாக கே.சி.பழனிசாமி கோவை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “நான் கடந்த 1972ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தேன். 1982ஆம் ஆண்டில் அதிமுக இளைஞர் அணி மாவட்ட துணைச்செயலாளராக நியமிக்கப்பட்டேன். 1984ஆம் ஆண்டு காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்வானேன். 1989ஆம் ஆண்டு ஜெயலலிதா இருந்தபோது திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைக்க ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. கோவை விமான நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தபோது, அவரிடம் அதிமுக ஒருங்கிணைப்பு குழு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ரோட்டில் போகிற வருகிறவர்கள் குழு அமைத்தால் அதை கேள்வியாக கேட்கிறீங்க, அவர் கட்சியில் கிடையாது. ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது போய் சேர்ந்தார். அவரெல்லாம் ஒரு பெரிய ஆளுன்னு நினைத்து நீங்க கேக்குறீங்க என்று கூறியுள்ளார். எனவே அவர் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share on:

சட்டம் ஒழுங்கு என்னாச்சு? அடித்தே கொல்லப்பட்ட வடஇந்தியர்.. கலங்கிய கரூர்.. தமிழ்நாட்டில் இப்படியா?


தமிழ்நாட்டில் அடுத்தடுத்து குற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி உள்ளன. கரூரில் நேற்று முதல்நாள் நடந்த சம்பவம் ஒன்று மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சட்ட ஒழுங்கில் தமிழக அரசு சொதப்புகிறதோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

கரூரில் வடஇந்தியர் ஒருவர் அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக இதுபோன்ற சம்பவங்கள் வடஇந்தியாவில்தான் நடக்கும். குழு வன்முறைகள் அதிகம் வடஇந்தியாவில்தான் நடக்கும். ஆனால் தமிழ்நாட்டில் தற்போது அதேபோல் நடக்கும் சம்பவங்கள் மக்களை உலுக்கி உள்ளன.

கரூரில் வாங்கல் கிராமத்தில் வட இந்தியாவைச் சேர்ந்த ஒருவரை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் இருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். கொலையில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் வெளியிட்ட ஆதாரங்களின்படி, கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) பூர்ணிமா அளித்த புகாரின் அடிப்படையில், கிராமத்தில் உள்ள விநாயகர் கோயில் அருகே 30 முதல் 35 வயதுடைய ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. அதன்பின் அந்த மர்ம மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் வட இந்தியாவை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவரை ஐந்து பேர் அடிக்கும் வீடியோ வைரலானதை அடுத்து அவரது மரணம் கொலையாக பதிவு செய்யப்பட்டது.

வீடியோவில் இருந்த நபர்கள் எம் வினோத்குமார், எம் கரண்ராஜ், முத்து, பி கதிர்வேல் மற்றும் எம் பாலாஜி என அடையாளம் காணப்பட்டனர். இதில் போலீசார் மூலம் வினோத்குமார், கதிர்வேல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடி வருகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தை மேற்கோள்காட்டி போலீசார் கூறுகையில், இறந்தவர் சனிக்கிழமை மாலை வினோத்குமாரின் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுவிட்டார். இதையடுத்து, 5 பேரும் அவரை விரட்டிச் சென்று கட்டையால் தாக்கி, பைக்கை மீட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இவர் பைக்கை திருடியதால் அந்த கும்பல் அவரை அடித்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்தான் கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது. கள்ளக்குறிச்சி விவகாரம் திமுகவிற்கு மிகப்பெரிய அவப்பெயரை கொடுத்துள்ளது. திமுக எதிர்பார்க்காத பிரச்சனையாக கள்ளக்குறிச்சி பிரச்சனை உருவெடுத்துள்ளது. இந்த சம்பவத்தில் 62 பேர் பலியாகி உள்ளனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இந்த விவகாரம்தான் இத்தனை மரணங்களுக்கு காரணம். இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. உள்ளூர் போலீசாருக்கு தெரிந்தே கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து குற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி உள்ளன. சட்டம் ஒழுங்கில் தமிழக அரசு சொதப்புகிறதோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. போலீசார், உள்துறை சட்டம் ஒழுங்கை கவனிக்க முடியாமல் சொதப்புகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
Share on:

சடசடவென சரிந்து விழுந்த தேர்.. அடியில் சிக்கிய 6 பேரின் நிலை என்ன? அலங்கார பணியின்போது விபரீதம்!


புதுக்கோட்டை அருகே கோவில் திருவிழாவையொட்டி தேரை அலங்கரிக்கும் பணி நடந்தது. இந்த வேளையில் திடீரென்று தேர் சரிந்து விழுந்தபோது அடியில் 6 பேர் சிக்கினர். இதில் முதியவர் பரிதாபமாக பலியானார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ராமசாமிபுரம் உள்ளது. இங்கு முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நடக்கும் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

தேர் திருவிழாவின்போது அறந்தாங்கியை சுற்றிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வந்து பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் தான் தேர் திருவிழாவையொட்டி தேரை அலங்கரிக்கும் பணி நடந்தது.

நேற்றைய தினம் தேரை அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. கிராம மக்கள் இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த வேளையில் திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் தேர் சரிந்து விழுந்தது. இதில் அலங்கார வேலைகளில் ஈடுபட்டு இருந்தவர்கள் தேரின் அடியில் சிக்கினர். உடனடியாக அங்கிருந்தவர்கள் தேரை அகற்றி அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.

அப்போது ராமசாமிபுரத்தை சேர்ந்த மகாலிங்கம் (வயது 70) என்பவர் உள்பட 6 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அருகே உள்ள பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்தனர். அப்போது மகாலிங்கம் என்பவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

இதையடுத்து மற்ற 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அலங்கார பணியின்போது தேர் சரிந்து விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபகாலமாக தேர் மற்றும் தேரோட்டத்தின்போது பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அப்போது தேருக்கான வடம் அறுந்தது. அந்த கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் பக்தர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். அதோடு அபசகுணம் ஏற்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on: