பைக் டாக்ஸிக்கு முற்றுப்புள்ளி? சிறப்பு தணிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு


வணிக நோக்கத்திற்காக (பைக் டாக்ஸி) பயன்படுத்தப்படும் பைக்குகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

பெரு நகரங்களில் போக்குவரத்து சிக்கலை தவிர்க்கவும், குறைந்த கட்டணத்தில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரவும் பைக் டாக்ஸிகள் மிகவும் உதவியாக இருக்கின்றன. சென்னையிலும் தமிழகத்தின் இதர நகரங்களிலும் பைக் டாக்ஸிக்கு மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது. இது கிக் எனப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை பெரும் அளவில் உயர்த்தியிருக்கிறது. ஆனால் மறுபுறம் ஆட்டோ மற்றும் கார் டாக்ஸி டிரைவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மட்டுமல்லாது பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் மீது ஏராளமான புகார்கள் வந்தன. குறிப்பாக பெண் பயணிகளிடம் சில பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட தொடங்கினர். ஆபத்தான முறையில் பயணிப்பது, விபத்தை ஏற்படுத்தும் வகையிலும், மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாகனத்தை இயக்குவது போன்ற புகார்களில் பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் தொடர்ந்து சிக்கினர். இதனையடுத்து இதற்கு உரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று புகார்கள் எழுந்தன.

ஆட்டோவைவிட கட்டணம் குறைவாக இருப்பதால், ஆட்டோ ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. பைக் டாக்ஸியை கைவிட வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர். போராட்டங்கள் தீவிரமடையும்போது பைக் டாக்ஸி முறை நிறுத்தப்படும் என்று அமைச்சர்கள் அறிவித்து வந்தனர். ஆனால் இது குறித்த உறுதிப்பூர்வமான உத்தரவு எதுவும் வெளியாகாமல் இருந்தது. இப்படி இருக்கையில் திடீரென பைக் டாக்ஸி குறித்து அதிரடி அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது வணிக நோக்கத்திற்காக (Bike-Taxi) பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மண்டல மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டு மண்டலம் வாரியாக தினசரி மாலை 7 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்யவும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

வாடகை வாகனத்தில்தான் பயணிகளை ஏற்ற முடியும். தொழில்முறைக்கு வாடகை வாகனங்களைதான் பயன்படுத்த வேண்டும். இந்த வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால், பைக் டாக்ஸிக்கு பயன்படுத்தப்படுவது சொந்த வாகனங்களாகும். சொந்த வாகனத்தை தொழில்முறையாக வாடகைக்கு பயன்படுத்தவது போக்குவரத்து சட்டத்தின்படி குற்றமாகும். எனவேதான் பைக் டாக்ஸி முறைக்கு எதிரான வாதங்கள் பலமானதாக இருக்கின்றன.
Share on:

கிளாம்பாக்கத்தில் என்ன நடக்கிறது.. அடியோடு சரிந்த அரசு பஸ் பயணிகள் எண்ணிக்கை.. கொதிப்பில் டிரைவர்கள்


சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நேற்று அரசு விரைவு போக்குவரத்து கழக டிரைவர்கள், கண்டக்டர்கள் திடீரென ஆவேசத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர பஸ் நிலையத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் நிற்கும் நடைமேடைக்கு செல்லும் வழி மூடப்பட்டதால் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்சில் பயணம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. முழு பின்னணி குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

சென்னை கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து முனையத்தில் இருந்து தான் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், வடக்கு மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விமான நிலையத்திற்கு நிகரான வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்கள், அரசு போக்குவரத்து கழக பஸ்கள் , ஆம்னி பேருந்துகள் மற்றும் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இந்த பேருந்து நிலையத்தை தனியார் நிறுவனம் தான் முழுமையாக கட்டுப்பாட்டில் எடுத்து பராமரிக்கிறது.

இந்த நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் நிற்கும் நடைமேடை எண்கள் 1, 2 இடத்துக்கு செல்லும் வழியை பராமரிப்பு பணிகள் என்று காரணம் காட்டி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பராமரிக்கும் தனியார் நிறுவனத்தினர் திடீரென அண்மையில் மூடி வைத்தார்கள். இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் நேராக ஆம்னி பேருந்து நிறுத்தத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக வெகுவாக குறைந்துவிட்டது.

அதேபோல் மாநகர பஸ் நிலையத்தில், பயணிகளுக்காக இயக்கப்படும் பேட்டரி வாகனங்கள் மாநகர பஸ் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பஸ்கள் நிற்கும் இடத்தில் பயணிகளை இறக்கி விட்டிருக்கிறார்கள். இதன் காரணமாகவும் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்சில் பயணம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் உரிய நேரத்திற்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கு முக்கிய காரணம் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தை பராமரிக்கும் தனியார் நிறுவனம்தான் என்று கூறி நேற்று திடீரென பேருந்து நிலைய வளாகத்திற்குள் அரசு விரைவு போக்குவரத்து கழக டிரைவர்கள், கண்டக்டர்கள் தரையில் அமர்ந்து ஆவேசத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது டிரைவர்கள், கண்டக்டர்கள் போலீசாரிடம் கூறும் போது, “சென்னை மாநகர டவுன் நிலையத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் நிற்கும் நடைமேடைக்கு செல்லும் வழி பராமரிப்பு என்ற பெயரில் மூடப்பட்டிருக்கிறது. அதனை உடனடியாக அகற்ற வேண்டும், மாநகர பஸ்சிலிருந்து இயக்கப்படும் பேட்டரி வண்டிகளை ஆம்னி பஸ் நிலையத்திற்கு சென்று பயணிகளை இறக்கி விடக்கூடாது என கோரிக்கை வைத்தனர். இதற்கு போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உங்கள் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள் கலைந்து சென்றனர். திடீர் போராட்டத்தால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Share on:

கோவை ஆயுள் தண்டனை கைதி கண்டுபிடித்த சோலார் ஆட்டோ.. ஒரு மணி நேரம் சார்ஜ் போட்டால் 80 கிமீ பயணிக்கலாம்


கோவை மத்திய சிறையில், சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் ஆட்டோவை தண்டனைக் கைதி யுக ஆதித்தன் என்பவர் உருவாக்கியுள்ளார். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியைச் சேர்ந்த ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் படித்துள்ள யுக ஆதித்தன், சிறையில் தள்ளிவிட்டார்களே, இனி அவ்வளவுதான் வாழ்க்கை என்று நினைக்காமல் தனது திறமையை வெளிப்படுத்தி புதுப்புது கண்டுபிடிப்புகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை அடுத்த மின்வெட்டுவாபாளையத்தை சேர்ந்த 35 வயதாகும் யுக ஆதித்தன் என்பவர், ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் படித்திருக்கிறார். இதன் மூலம் நல்ல வேலையில் இருந்த யுக ஆதித்தனின் வாழ்க்கை காதல் காரணமாக மோசமாக மாறியது. காதலி செய்த துரோகத்தை ஏற்றுக்கொள்ள முடியாத அவர், வேறுஒருவர் மூலம் பணம் கொடுத்து காதலியை தீர்த்து கட்ட ஏற்பாடு செய்தார். ஆனால் அந்த நபர் அவரின் காதலிக்கு பதிலாக உறவினர் ஒருவரை கொலை செய்தார். இந்த கொலை சம்பவம் கடந்த 2014-ம் ஆண்டு நடந்தது. போலீசார் யுக ஆதித்தனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 2016-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து யுக ஆதித்தன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்த போதிலும் முடங்கவில்லை,.. சிறையில் இருந்தபடியே திறமையை வெளிப்படுத்தி அவர் சாதிக்க தொடங்கினார். சிறை வளாகத்தில் உள்ள மத்திய தொழிற்கூடத்தில் யுக ஆதித்தனுக்கு வேலை கொடுத்தனர். அவர் குறைந்த செலவில் அதிக மைலேஜ் கொடுக்கக்கூடிய சோலார்(சூரிய ஒளி சக்தியில் இயங்க கூடியது) ஆட்டோவை தயாரித்து சாதனை படைத்திருக்கிறார். சிறை நிர்வாகம் கொடுத்து ஊக்கத்தால் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இது குறித்து கோவை மத்திய சிறை காவல் செந்தில்குமார் கூறும் போது, யுக ஆதித்தன் சோலார் ஆட்டோ ஒன்றை தயாரித்துள்ளார். இது மிகப்பெரிய சாதனை ஆகும். இந்த ஆட்டோவில் 7 பேர் சாதாரணமாக செல்லலாம். இந்த ஆட்டோவின் மேற்பகுதியில் 6 அடி நீளம், 4 அடி அகலத்தில் சோலார் பேனல் (சூரிய ஒளி தகடு) பொருத்தப்பட்டிருக்கிறது. சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை சேமிக்க ஆட்டோவில் 1,500 வாட்ஸ் அளவு கொண்ட பேட்டரியும் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆட்டோவை சூரிய ஒளியில் ஒரு மணி நேரம் நிறுத்தி வைத்தாலே போதும். ஆட்டோவில் இருக்கும், அந்த பேட்டரி சார்ஜ் ஏறி விடும்.

இப்படி ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால் 70 கி.மீ. முதல் 80 கி.மீ. தூரம் செல்லலாம். அதிகபட்சமாக 40 கி.மீ. வேகத்தில் இந்த ஆட்டோவில் செல்ல முடியும். இந்த ஆட்டோவை தயாரிக்க செலவு மிகவும் குறைவாகவே ஆனது. சாதாரண ஆட்டோ வாங்கவே ரூ.3 லட்சத்துக்கும் மேல் ஆகும் என்கிற சூழலில் வெறும் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் செலவில் சோலார் ஆட்டோவை தயாரித்து முடித்தார். அதற்கான சோதனை ஓட்டம் நடந்து முடிந்துவிட்டது. இந்த ஆட்டோவை சிறைத்துறை டி.ஜி.பி. மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டனர். இதனை தற்போது சிறை வளாகத்தில் இயக்கும்படி உயர் அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் இதுபோன்ற ஆட்டோக்களை இயக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்காக சோலார் ஆட்டோக்களை தயாரித்துக்கொடுக்கும்படி நாங்கள் யுக ஆதித்தனை கேட்டிருக்கிறோம்.

இந்த சோலார் ஆட்டோவை கோவை மத்திய சிறை வளாகத்தில், சிறை மெயின் கேட் வரை இயக்கி வருகிறோம். சிறையில் கைதிகளை பார்க்க வரும் முதியவர்களை மெயின்ரோட்டில் இருந்து உள்ளே ஏற்றி வருவதற்கும், பொருட்களை ஏற்றி வருவதற்கும், அவசர தேவைக்காகவும், சிறைக்குள் ரோந்து செல்லவும் இதை பயன்படுத்த ஆலோசித்து வருகிறோம். சோலார் ஆட்டோ, சிறைத்துறைக்குள் மட்டுமே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழக அரசு மற்றும் உயர் அதிகாரிகள் அனுமதி கொடுத்ததும், வெளியே விற்பனை செய்யவும் திட்டமிட்டு உள்ளோம். அதற்கான அனுமதி கிடைத்ததும், காப்புரிமை பெற்று, வெளியே விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார்.
Share on:

சென்னை பல்லாவரத்தில் 3 பேர் பலி.. கழிவுநீர் கலந்த குடிநீர் காரணமா? பெரும் அதிர்ச்சி!


சென்னை பல்லாவரம் மலைமேடு பகுதி மக்கள் சுமார் 30 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, தலை சுற்றல் ஏற்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் அருகே மலைமேடு பகுதியில் வசித்து வரும் மக்கள் சுமார் 30 பேருக்கு நேற்று வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைசுற்றல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்டோர், தனியார் மருத்துவமனையில் சிலர் என மொத்தம் 32 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடிநீரில் கழிவுநீர் கலந்திருந்ததாகவும், அந்த தண்ணீரைப் பருகியதால் உடல் உபாதைகள் ஏற்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதில் திருவேதி என்பவர் நேற்று இரவு உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மோகன்ராஜ் என்பவர் இன்று உயிரிழந்துள்ளார். மேலும், வரலட்சுமி என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் கூடியுள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அறிந்த அமைச்சர் தா.மோ. அன்பரசன், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு குடிநீர் காரணமில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையே, மாநகராட்சி அதிகாரிகள் மாதிரி நீர் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும்.
Share on:

அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்த மக்கள்.. கலெக்டரையும் விடலையே.. விழுப்புரத்தில் பரபரப்பு


பெஞ்சல் புயலால் பெய்த கனமழையின் காரணமாக விழுப்புரம் மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வரும் சூழலில் இன்று வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், முன்னாள் எம்பியுமான கவுதம் சிகாமணி, கலெக்டர் பழனி ஆகியோர் மீது மக்கள் சேற்றை வாரி இறைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயலால் சென்னை உள்பட வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த புயல் கரையை கடந்தாலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகப்பட்சமாக 51 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், திண்டிவனம் உள்பட பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மரக்காணம், கோலியனூர், நன்னாட்டம்பாயைம், பஞ்சமா தேவி, கல்பட்டு, பிடாகம், குச்சிப்பாளையம், பேரங்கியூர், நன்னாடு, பெரும்பாக்கம், காணை, மாம்பலப்பட்டு, காங்கேயனூர், செஞ்சி, மேல்மலையனூர், வானூர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

வீடுகள், கடைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். பல இடங்கள் குட்டி தீவு போல் காட்சியளிக்கிறது. மேலும் விளைநிலங்களில் மழைநீர் புகுந்துள்ளதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் மழை நீர் வெளியேறாததால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினர், காவல்துறை, தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். பெஞ்சல் புயலின்போது தமிழக அரசு சென்னையை மட்டுமே கவனத்தில் கொண்டுள்ளது. பிற மாவட்டங்களை கண்டுகொள்ளாமல் விட்டதே இந்த வெள்ள பாதிப்புக்கு முக்கிய காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதற்கிடையே தான் இன்று வெள்ளம் பாதித்த இருவேல்பட்டு பகுதியில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து வெள்ள ஆய்வு மற்றும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் பொன்முடி இன்று சென்றார். அவருடன் மகனும், கள்ளக்குறிச்சி முன்னாள் எம்பியுமான கவுதம சிகாமணி, விழுப்புரம் கலெக்டர் பழனி உள்ளிட்டவர்கள் இருவேல்பட்டுக்கு சென்றனர்.

அப்போது அவர்களுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சேற்றை வாரி இறைத்தனர். அமைச்சர், பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, கலெக்டர் பழனி ஆகியோரின் மீது சேற்றை வாரி இறைத்தனர். பொன்முடி, கவுதம சிகாமணி, கலெக்டர் பழனி மற்றும் அருகே நின்ற நிர்வாகிகள், அதிகாரிகள், போலீசார் ஆகியோரின் சட்டைகளில் சேறு பட்டது. பொன்முடி வெள்ளை சட்டை, வேஷ்டி அணிந்திருந்த நிலையில் அவரது சட்டையில் சேறு பட்டு புள்ளி புள்ளியாக தெரிந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு அவர்களை போலீசார் பத்திரமாக காரில் அழைத்து சென்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வலைதளங்களில் பரவி வருகிறது.
Share on:

தத்தளிக்கும் விழுப்புரம்.. ஆங்காங்கே நின்ற ரயில்கள்.. 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்.. எந்தெந்த இடங்கள்?


விழுப்புரத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் பல இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. விக்கிரவாண்டி – முன்டியம்பாக்கம் இடையே உள்ள ரயில்வே பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் ஆங்காங்கே பாதி வழியில் நிறுத்தப்பட்டன. ரயில் சேவை பாதிப்படைந்த நிலையில், 100 சிறப்பு பேருந்தகளை அறிவித்து தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. மாவட்டத்தின் பல இடங்களும் வெள்ளத்தில் மிதந்தது. விழுப்புரம் பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என பல இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. வரலாறு காணாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்த நிலையில் ரயில் சேவையும் கடுமையாக இன்று பாதித்தது.

விக்கிரவாண்டி – முன்டியம்பாக்கம் இடையே உள்ள ரயில்வே பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது. அபாயகரமான சூழல் அங்கு காணப்பட்டதால் ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் ரயில்வே பாலத்தின் மீது வெள்ளம் ஓடியதால் சென்னை எழும்பூர் – நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தென்காசி, ராமேஸ்வரம் இடையே இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

சென்னை – தென் மாவட்டங்கள் இடையே இன்று 16 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோவை – தாம்பரம் சிறப்பு ரயில் விழுப்புரத்துடன் நிறுத்தப்பட்டது. கொச்சுவேலி – தாம்பரம், நாகர்கோவில் – தாம்பரம் ஆகிய ரயில்கள் விழுப்புரத்துடன் நிறுத்தப்பட்டன. ரயில் சேவை பாதிக்கப்பட்டு இருப்பதால் விழுப்புரம் பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ரயில்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. தெற்கு ரயில்வே அதிகாரிகள் கோரிக்கையை ஏற்று 100 சிறப்புப் பேருந்துகளை இயக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து கழகம் கூறியிருப்பதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பெய்த பலத்த மழை காரணமாக ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், தென்னக ரயில்வே விழுப்புரம் கோட்ட அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பொது மக்கள் தங்களது சொந்த இடங்களுக்கு பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள ரயில் நிலையங்களுக்கு 100 சிறப்புப் பேருந்துகளை இயக்கிட நடவடிக்கை மேற்கொண்டார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, ஃபெஞ்சல் புயலால் பெய்த பலத்த மழை காரணமாக, 30.11.2024 மற்றும் 01.12.2024 ஆகிய தினங்களில் விழுப்புரம். திண்டிவனம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளானார்கள். மேற்கண்ட விழுப்புரம் மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வையிட்டு. பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

மேலும், மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் களத்தில் ஆய்வு மேற்கொண்டு அறிவுறுத்தியதன் அடிப்படையிலும், தென்னக ரயில்வே விழுப்புரம் கோட்ட அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, திருச்சி – சென்னை ரயில் வழித்தடம் மற்றும் விழுப்புரம் – காட்பாடி ரயில் வழித்தடங்களில் பாதிப்பு ஏற்பட்டு இடையில் ரயில்கள் நிறுத்தப்பட்ட ரயில் நிலையங்களில் உள்ள பயணிகளை பாதுகாப்பாக அவர்களது சொந்த இடங்களுக்கு செல்லும் வகையில், விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் மாம்பழப்பட்டு இரயில் நிலையத்திற்கு 15 பேருந்துகள்.

வெங்கடேசபுரம் இரயில் நிலையத்திற்கு 15 பேருந்துகள், விழுப்புரம் இரயில் நிலையத்திற்கு 15 பேருந்துகள், அரகண்டநல்லூர் இரயில் நிலையத்திற்கு 15 பேருந்துகள் மற்றும் சென்னை செல்லும் பயணிகள் வசதிக்காக வழக்கமாக செல்லும் பேருந்துகளுடன் கூடுதலாக 40 பேருந்துகள் என மொத்தம் 100 சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share on:

சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல வேண்டிய 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.


வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் நாளை பிற்பகல் கரையை கடக்க உள்ளது. அப்போது சூறாவளிக் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுஉள்ளது.

இந்நிலையில், சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, மைசூரு, புவனேஸ்வர், கவுகாத்தி, புனே உள்ளிட்ட பல நகரங்களுக்கு செல்லும் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மோசமான வானிலை காரணமாக திருச்சி – சென்னை இடையேயான இண்டிகோ விமானம் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. வானிலையை பொறுத்து மாற்றம் செய்யப்படும் என விமான நிலைய நிர்வாகம் கூறியுள்ளது.

விமான புறப்பாடு நேரத்தை அறிந்து கொண்டு பயணத்தை திட்டமிட வேண்டும் என பயணிகளுக்கு ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
Share on:

வெள்ளை அறிக்கை வெளியிடுமா திமுக அரசு?


* அதிமுக ஆட்சி காலத்தில் மின் கட்டணம் உயர்த்தும் பொழுது மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒவ்வொரு மண்டலத்திலும் மக்கள் கருத்து கேட்பார்கள் ஆனால் திமுக அரசு மக்கள் கருத்து கேட்காமலே 3 முறை மின்கட்டண உயர்வு செய்துள்ளது.

* அதே போல் 2018 ஆம் ஆண்டு சொத்து வரி 25% முதல் 50% வரை உயர்வு செய்து கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது அப்பொழுது கடுமையாக எதிர்த்து போர்க்கொடி தூக்கிய திமுக தனது ஆட்சியில் 300% வரை வரி உயர்த்தி தனது சர்வாதிகார போக்கை காட்டியுள்ளது.

* தமிழ் நாட்டில் திமுக ஆட்சியில் ஒரு கோடியே பதினைந்து இலட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1000/- கொடுத்துவிட்டு ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தினருக்கும் கட்டண உயர்வு, வரி உயர்வு மற்றும் விலைவாசி உயர்வால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ.6000/- வரை கூடுதல் செலவு ஆகிறது.

* இப்படி எல்லா வகையிலும், எல்லா துறைகளிலும் மிக கடுமையான கட்டண உயர்வு வரி உயர்வு செய்தும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் பல லட்சம் கோடி அதிகரிக்க காரணம் என்ன?

* திமுக ஆட்சிக்கு முன் துறை வாரியாக ஆண்டு வருமானம் எவ்வளவு? திமுக ஆட்சிக்கு பின் துறை வாரியாக ஆண்டு வருமானம் எவ்வளவு? மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களுக்கு செய்த செலவு எவ்வளவு? வளர்ச்சி பணிகளுக்கு செய்த செலவு எவ்வளவு? தமிழகத்தின் கடன் திமுக ஆட்சிக்கு முன் எவ்வளவு? திமுக ஆட்சிக்கு பின் எவ்வளவு? இதுகுறித்த விவரங்களை பொதுமக்கள் அறியும் வண்ணம் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
Share on:

அதானி விவகாரம், லஞ்சம் கொடுக்கப்பட்டது எப்படி?


* அதானி விவகாரத்தில் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் எப்படி கொடுக்கப்பட்டது என்கிற விவரம் அதானி கிரீன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், கவுதம் அதானியின் மருமகனுமான சாகர் அதானியின் மொபைல் போனைப் பயன்படுத்தி, கண்டறிந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* 2022-ம் ஆண்டு அதானி மற்றும் Azure Power Global Limited நிர்வாகிகளுக்கு இடையே சந்திப்பு நடந்துள்ளதாகவும் அதில், கௌதம் அதானி லஞ்சம் வழங்கும் திட்டத்தின் விரிவான அம்சங்களையும், அரசாங்க அதிகாரிகளுக்கு பணத்தை வழங்க தனிப்பட்ட முறையில் எடுத்த நடவடிக்கைகள் உட்பட அணைத்து விவரங்களும் விவாதிக்கப்பட்டு,

* அதில் Azure இன் நிர்வாகிகள், Excel மற்றும் PowerPoint ஐப் பயன்படுத்தி, இரு நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் வகையில் அதானி கிரீன் செலுத்திய லஞ்சத்தை திருப்பிச் செலுத்துவதற்க்கு சுருக்கமாக ஒரு பகுப்பாய்வைத் தயாரித்தனர்.அதில் 2.3 gigawatts மின்சாரம் கொண்ட திட்டம் ஒன்றிற்கு ஒரு மெகாவாட்டிற்கு சுமார் $30,000 (இந்திய மதிப்பில் 25 லட்சம்) லஞ்சம் கணக்கிடப்பட்ட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

* அமெரிக்க அதிகாரிகள் தங்கள் குற்றப்பத்திரிகையில் பரிவர்த்தனைகளை “ஊழல் சூரிய திட்டம்” என்று குறிப்பிட்டுள்ளனர். 2019 – 2020 காலகட்டத்தில் அதானி கிரீன் மற்றும் அஸூர் ஆகியவை மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI) மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி டெண்டர்களை வழங்கின. அமெரிக்க அதிகாரிகள் அதானி மற்றும் பிறர் இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து SECI உடன் ஒப்பந்தங்களில் ஈடுபட ஒரு திட்டத்தை வகுத்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். அதன் பின் 2021 – 2022 காலகட்டத்தில் SECI -யிடம் இருந்து மின்சாரம் வாங்க மாநில அரசுகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

* இதன் மூலம் இந்த ஊழலில் மத்திய அரசுக்கும் தமிழ்நாடு உட்பட குற்றம் சாட்டப்பட்ட 5 மாநில அரசுகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது.
Share on:

யானைகள் வழித்தடத்தில் கொள்ளை போகும் மண்.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு


கோவையில் யானைகள் வழித்தடத்தில் வனப் பகுதியில் சட்ட விரோதமாக மண் எடுப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விரிவான விளக்க அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் வனப்பகுதியில் யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக மண் அள்ளப்படுவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கோவை மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, கோவை மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, மாவட்ட நீதிபதியின் அறிக்கை குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறிப்பிட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தால் மட்டுமே முழுமையான விவரம் தெரிய வரும் என்றும், மாவட்ட நீதிபதியின் அறிக்கையில் 40 சதவீதம் மட்டுமே வெளிவந்திருக்கிறது என்றும் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புருஷோத்தமன் குறிப்பிட்டார்.

அப்போது நீதிபதிகள், மாவட்ட நீதிபதி அளித்த அறிக்கையில், 10 மீட்டர் ஆழத்துக்கு பெருமளவில் மண் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை எப்படி ஈடுகட்ட போகிறீர்கள்?. சட்டவிரோதமாக மண் எடுப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?. பெரும் மலைகள் காணாமல் போயிருக்கின்றன. கனிமவளத் துறை உதவி இயக்குனர் என்ன நடவடிக்கை எடுத்தார்? என அரசு தரப்புக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

மேலும், மாவட்ட நீதிபதியின் அறிக்கை மனசாட்சியை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது எனக் கூறிய நீதிபதிகள், சட்ட விரோதமாக எடுக்கப்படும் மண்ணை கொண்டு செல்வதற்காக நீரோடையின் மீது பாலம் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட நீதிபதி அறிக்கையில் கூறியுள்ளதை சுட்டிக்காட்டினர்.

சட்டவிரோதமாக மண் எடுத்தது யார் என தெரியவில்லை என காவல்துறையினர் கூறுவதை நம்ப வேண்டுமா?. சட்ட விரோதமாக மண் எடுப்பவர்களை இரண்டு நாட்களில் கண்டுபிடிக்க முடியாதா? எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

பின்னர் அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணையை டிசம்பர் 6 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், வனப் பகுதியில் சட்டவிரோதமாக மண் எடுப்பது குறித்து வனத் துறையினர் தெரிவித்தும் கனிமவளத் துறை உதவி இயக்குனர், சம்பந்தப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுட்டிக்காட்டினர்.

பின்னர், சட்டவிரோதமாக மண் எடுப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது?. சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?. வனப்பகுதியில் எவ்வளவு பரப்புக்கு சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளது?. சட்டவிரோதமாக மண் எடுக்க உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்பன குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

முழுமையாக அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் வழக்கை வேறு அமைப்பு விசாரணைக்கு மாற்ற நேரிடும் எனவும் எச்சரித்தனர். மேலும், வழக்கின் அடுத்த விசாரணையின்போது கனிமவளத் துறை ஆணையர், கோவை மாவட்ட ஊரக காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வன அதிகாரி ஆகியோர் நேரில் ஆஜராகி இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதேபோல, மாவட்ட நீதிபதியின் அறிக்கையின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்த பரிந்துரைகளுடன் அறிக்கைகளை தாக்கல் செய்ய மனுதாரர்கள் தரப்புக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
Share on: