‘பிரிந்தவர்களிடம் பேசி கட்சியை ஒருங்கிணைக்க அதிமுக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு’


அனைத்துத் தலைவர்களிடமும் பேசி ஒருமித்த கருத்துடன் கட்சியை ஒருங்கிணைப்பதற்காக அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்திருப்பதாக முன்னாள் எம்பி-யான கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏ-வான ஜே.சி.டி.பிரபாகர், ஓபிஎஸ் அணியின் முன்னாள் கொள்கைப் பரப்புச் செயலாளரான வா.புகழேந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னையில் இன்று மூவரும் கூட்டாக அளித்த பேட்டியில், “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. இனிமேலும் இத்தகைய தோல்வி ஏற்படாமல் இருப்பதற்கும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பதற்கும் அனைவரும் ஒன்றுபட வேண்டியது அவசியம். அதற்காக நாங்கள் ஒரு அணியில் இருந்து இந்த ஒருங்கிணைப்புப் பணியைச் செய்ய முடியாது என்பதால் நாங்கள் இருந்த அணியில் இருந்து விலகி, தற்போது அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கி உள்ளோம்.

வெறுமனே அறிக்கையோ அல்லது சமூக வலைதளத்தில் பதிவையோ வெளியிட்டால் மட்டும் போதாது. தொண்டர்கள், தலைவர்கள் மனதைத் தொடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதனால்தான் அதிமுக தொண்டர்கள், தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியை நாங்கள் இன்று (ஜூன் 8) தொடங்கியுள்ளோம். இதற்காகவே எதிரும் புதிருமாக இருந்த நாங்கள் ஒன்றாகி இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறோம். யாரையும் நாங்கள் குறை சொல்லவில்லை. தற்போதைய சூழலில் அதிமுகவை அழிக்கப் பார்க்கின்றனர். இதை தலைவர்களும், தொண்டர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதிமுகவில் சாதாரண தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வர முடியும். அப்படிப்பட்ட உன்னதமான இயக்கம் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமானால் ஒன்றுபடுவது அவசியம். இதைத்தான் மக்களும், கட்சித் தொண்டர்களும் விரும்புகின்றனர். எனவே, அதிமுகவில் உள்ள அனைத்து அணியினரும், தொண்டர்களும் தங்கள் கருத்தை அதிமுக ஒருங்கிணைப்புக் குழு, எண்,44, கோத்தாரி சாலை, சென்னை என்ற முகவரிக்கு கடிதம் மூலம் அனுப்பலாம். அல்லது 9003847889 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மூலமாகவும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு தொண்டர்களின் கருத்துகளை தெரிந்து கொண்ட பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், சசிகலா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து நிதர்சனத்தை எடுத்துச் சொல்லி ஒருமித்த கருத்துடன் அனைவரையும் ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொள்வோம். எந்த அணியையும் சாராமல் கட்சியை ஒருங்கிணைக்கும் பணியில் மட்டும் ஈடுபட்டுள்ள எங்களுக்கு தலைவர்கள் கவுரவம் பார்க்காமல், காலம் தாழ்த்தாமல் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

வரும் 2026-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு இன்னமும் 18 மாதங்களே உள்ளன. எனவே, வரும் டிசம்பர் மாதத்துக்குள் அதிமுக ஒன்றிணைந்தாக வேண்டும்” என தெரிவித்தனர்.
Share on:

கோடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய ஐகோர்ட் அனுமதி! சசிகலா தரப்புக்கு நீதிபதிகள் எழுப்பிய கேள்வி!


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய, கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், அனுமதியின்றி கட்டடம் கட்டுப்பட்டுள்ளதால் அதற்கு வரி செலுத்த வேண்டும், விதிகளை மீறிய கட்டடத்தை இடிக்க வேண்டும் என கோடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன் தோஸ் கடந்த 2007 ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதனை எதிர்த்து கோடநாடு எஸ்டேட் மேலாளர் ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கோடநாடு எஸ்டேட்டில் எந்த விதி மீறலும் இல்லை எனக்கூறி கோத்தகிரி பஞ்சாயத்து தலைவர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து கடந்த 2008 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கோடநாடு பஞ்சாயத்து தலைவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் இன்று இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சொத்து வரி விதிப்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மட்டுமே கொடநாடு எஸ்டேட்டுக்குள் நுழைய அனுமதி கேட்பதாகவும், 2008 ஆம் ஆண்டிலிருந்து கொடநாடு எஸ்டேட்டுக்குள் யாரும் உள்ளே நுழைய முடியாத நிலை இருப்பதாகவும், கூடுதல் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டிருந்தால் என்ன செய்வது? எனவும் ஆய்வு செய்தால் தானே அது தெரிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், 2023 ஆம் ஆண்டு வரை சொத்து வரி செலுத்தப்பட்டுதாகக் கூறி, அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மேலும், கொடநாடு எஸ்டேட்டுக்குள் விதிகளை மீறி எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளவில்லை என தனி நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆய்வு செய்தால் தானே விதிமுறைகள் மீறப்பட்டிருக்கிறதா? என தெரியவரும் அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சசிகலா தரப்பு மூத்த வழக்கறிஞர், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே 2021 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்னரே ஆய்வு செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக பதிலளித்தார்.

இதையடுத்து, எஸ்டேட்டை ஆய்வு செய்யவும், சோதனை செய்யவும் அதிகாரிகளுக்கு முழு உரிமை உள்ளதாகக் கூறி, உரிய விதிமுறைகளை பின்பற்றி ஆய்வு செய்யலாம் என அனுமதியளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஆய்வின் போது நடுநிலையுடன் செயல்பட வேண்டும் எனவும், அங்கிருப்பவர்களை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Share on:

நாளை வாக்கு எண்ணிக்கை.. தமிழ்நாட்டின் 39 மையங்களிலும் பாதுகாப்பு தீவிரம்.. பணியில் 1 லட்சம் போலீசார்.


லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

இந்தியாவில் 543 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கும் முதல் கட்டமாக நடந்தது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என்று 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் மொத்தமாக 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ளன. இதற்கான பாதுகாப்பில் பணியில் மொத்தமாக 38 ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் ஈடுபடவுள்ளனர். அதேபோல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து வைக்கும் பணியில் 24 ஆயிரம் பேரும், வாக்கு எண்ணும் பணியில் 10 ஆயிரம் பேரும், நுண் பார்வையாளர்களாக 4,500 பேரும் ஈடுபடவுள்ளனர். வாக்கு எண்ணும் பணிகள் 39 மையங்களில் 43 கட்டிடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த மையங்களில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு அறை வீதம் 234 அறைகளில் வாக்கு எண்ணும் பணி நடக்கவுள்ளது. அதில் ஒரு அறையில் 14 மேஜைகள் வீதம் சுமார் 3,300 மேஜைகள் பயன்படுத்தப்படவுள்ளன. தேவைக்கேற்ப கூடுதல் மேஜைகளும் பயன்படுத்தப்படும். காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கவுள்ளது. முதல் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதன்பின் 8.30 மணிக்கு மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கும்.

இதில் வாக்கு எண்ணிக்கை செய்யப்படும் ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் தான் நடக்கும். வழக்கம் போல் ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை முடிவு மற்றும் முன்னிலை விவரங்கள் வெளியிடப்படும். வாக்கு எண்ணும் பணிகள் நடக்கும் மையங்களில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அட்டை வைத்துள்ள பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

அதேபோல் பாதுகாப்பு அறைக்கான பாதுகாப்பு பணியில் மத்திய ஆயுதப்படை போலீசார், அதற்கு அடுத்தபடியாக மாநில ஆயுதப்படை போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதன்பின் 3வது அடுக்கு பாதுகாப்பு பணியில் மாநில போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வாக்கு எண்ணும் மையங்களில் தலா ஆயிரம் போலீசார் வீதம் 40 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். அதேபோல் ரோந்து பணிகளில் 60 ஆயிரம் போலீசாரும், 15 கம்பெனி துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
Share on:

குப்பை அகற்றப்படாததை சுட்டிக்காட்டிய இளைஞர் மீது தாக்குதல்: கவுன்சிலர் உட்பட 4 பேர் மீது வழக்கு!


கோவையில் குப்பை அகற்றப்படாதது குறித்து கேள்வி எழுப்பிய இளைஞர் கவுதம் மீது தாக்குதல் நடத்தியதாக கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தாக்குதலில் காயமடைந்த கவுதம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 23-வது வார்டு ரயில்வே காலனி பகுதியில், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தூய்மைப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் குப்பை தேங்கி, சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர் கவுதம் என்பவர், 23-வது வார்டு காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் கவிதா புருஷோத்தமனிடம் புகாரளித்துள்ளார். ஆனால், நடவடிக்கை எதுவும் இல்லாததால், அவர் மேட்டுப்பாளையம் நகராட்சியில் புகார் அளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை (மே 30) அப்பகுதியில் தூய்மைப் பணியாளர்கள், துப்புரவு பணிக்காக வந்துள்ளனர். அப்போது அங்கு கவுன்சிலர் கவிதா, அவரது கணவர் புருஷோத்தமன், அவரது மகன் ஆகியோர் அங்கு வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த கவுதம், இங்கு தூய்மைப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது எனக் கூறியதுடன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கவுன்சிலரின் கணவர் உள்ளிட்டோர் கவுதமை தாக்கியுள்ளனர். இதில் கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டு கவுதம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காயமடைந்த கவுதம் அளித்த புகாரின் பேரில், கவுன்சிலர் கவிதா, அவரது கணவர் புருஷோத்தமன், மகன் கார்த்திக், நண்பர் நசீர் ஆகியோர் மீது மேட்டுப்பாளையம் போலீஸார் இன்று (மே 31) வழக்குப்பதிந்துள்ளனர். அதேபோல், கவுன்சிலர் கவிதா அளித்த புகாரின் பேரில், இளைஞர் கவுதம், அவரது தாயார் ஆகியோர் மீதும் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Share on:

“என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்” வெள்ளதுரை சஸ்பெண்ட்.. இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் அதிரடி நடவடிக்கை!


“என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்” என பெயர் பெற்ற ஏடிஎஸ்பி வெள்ளதுரை இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஏடிஎஸ்பி வெள்ளதுரை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று தமிழ்நாடு காவல்துறையில் அறியப்படுபவர். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு பிரபல ரவுடியான அயோத்திக்குப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 2004 ஆம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பனை என்கவுண்டர் செய்த தமிழக காவல் துறையின் சிறப்பு அதிரடிப் படையிலும் உறுப்பினராக இருந்தார் வெள்ளதுரை.

கடந்த 2013 ஆம் ஆண்டு மருதுபாண்டியர் குருபூஜையின் போது சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தியில் காவல்துறை எஸ்.ஐ ஆல்வின் சுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் இருவர் வெள்ளதுரை டீமால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

மதுரையில் சப் இன்ஸ்பெக்டர்களை குத்திய ரவுடிகள் கவியரசு, முருகன் ஆகியோர் என்கவுண்டர் செய்யப்பட்டதன் பின்னணியிலும் வெள்ளத்துரை உள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்துகள் மற்றும் தொழிற்சாலை பகுதிகளில் தொழில் நிறுவனங்களுக்கு தொல்லை தரும் நபர்களை தடுப்பதற்கான சிறப்புப் படை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார் வெள்ளதுரை.

தற்போது திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி ஆக பணியாற்றி வந்தார் வெள்ளதுரை. வெள்ளதுரை மீதான என்கவுன்டர் வழக்கு சிபிசிஐடியில் நிலுவையில் உள்ளது. ஏ.டி.எஸ்.பி வெள்ளதுரை இன்று பணி ஒய்வுபெற இருந்தார். இந்நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தியில் 2013 ஆண்டில் ராமு (26) என்கிற குமார் என்ற கொக்கி குமார் என்பவர், போலீஸ் காவலில் இருந்த போது மரணமடந்த வழக்கில் வெள்ளதுரைக்கு தொடர்பு இருப்பதாக இந்த சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் உள்துறை, வெள்ளதுரையை சஸ்பெண்ட் செய்துள்ளது. வெள்ளதுரை மீது சிபிசிஐடி பிரிவில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் உள்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான ஏடிஎஸ்பி வெள்ளதுரை இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் தமிழக அரசின் உள்துறையால் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share on:

சிக்கலில் தமிழகத்தைச் சேர்ந்த 50 அரசு அதிகாரிகள்.. லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்த அதிரடி முடிவு!


‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்ற பெயரில் செயல்படுத்தப்படும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் தமிழகத்தை சேர்ந்த 50 அதிகாரிகள் சிக்கியிருக்கிறார்கள். அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.

சொந்த வீடு கட்டுவது என்பது ஏழை-எளிய, நடுத்தர மக்களின் கனவாக உள்ளது. கோடிக்கணக்கான மக்கள் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்.சென்னை போன்ற நகர்புறங்களில் 600 சதுர அடியில் அடுக்குமாடி வீடு வாங்கவே ஆயுள் முழுவதும் உழைக்க வேண்டிய நிலை இருக்கிறது. சொந்த வீடு வாங்குவது என்பது இன்றைய நிலையில் அசாதாரண விஷயமாக பார்க்கப்படுகிறது.

விலைவாசி உயர்வுகளுக்கு மத்தியில் பிள்ளைகளை படிக்க வைத்து, திருமணம் நடத்தி, வீடு கட்டுவது என்பது மிகப்பெரிய சவாலான விஷயம் ஆகும். இப்படியான சூழலில் சொந்த வீடு கனவை நனவாக்கும் வகையில் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்ற பெயரில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பயனாளிகளுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சத்து 77 ஆயிரம் பணம் வழங்குகிறது.

இந்த திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய மோசடி அரங்கேறி இருப்பதை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த திட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

உதாரணமாக சொல்வது என்றால், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள சணபத்தூர் கிராமத்தில் வீடுகளை கட்டாத பயனாளிகளுக்கு ரூ.31 லட்சத்து 66 ஆயிரம் பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறதாம். இதேபோன்று இந்த திட்டத்தில் பயன்பெற தகுதி இல்லாதவர்கள் பெயரிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதாம். அதிகாரிகள் துணையுடன் போலி ஆவணங்கள் தயாரித்து ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பிரதமர் வீடு கட்டடும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் பணியாற்றிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகள் 50 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த திட்டத்தின் கீழ் நாகப்பட்டினத்தில் 146 பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியின் ரூ.1 கோடி அளவுக்கு முறைகேடு புகார் எழுந்திருக்கிறதாம். அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 10 அதிகாரிகள் மீது கடந்த மார்ச் மாதம் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். தற்போது இந்த மோசடி வழக்கில் 50 அதிகாரிகள் சிக்கி இருப்பபது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் மீது அடுத்தடுத்து கைது நடவடிக்கை பாயும் என்றும், இவர்கள் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Share on:

மோடியா? லேடியா? அண்ணாமலை தான் இப்படி பேசுறார்னா? தமிழிசையுமா? பிளாஷ்பேக் சொல்லி பாஜகவை அலறவிடும் KC. பழனிசாமி!


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவாதி என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறிவருகிறார்.

மீண்டும் கட்சியில் பொறுப்பு பெறவேண்டும் என்பதற்காக தமிழிசை இப்படி பேசுகிறாரா? என கே.சி.பழனிசாமி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவாதி என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறிவருகிறார். மேலும், ஜெயலலிதா ஒரு இந்துத்துவா தலைவர் என்று சொல்வதற்கான காரணங்களையும் ஆதாரங்களுடன் அண்ணாமலை அடுக்கியுள்ளார். இந்நிலையில், மதத்தை முன்னிறுத்தி மதத்தின் பெயரால் அரசியல் செய்வதை ஜெயலலிதா என்றுமே ஆதரித்ததில்லை என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்:
* “கரசேவையை ஆதரித்தது.
* கரசேவையை காரணம் காட்டி பாஜக ஆட்சி கவிழ்க்கப்பட்ட பொழுது இது தவறு என்று குரல்கொடுத்து.
* ராமர் கோவில்க்கு ஆதரவாக குரலில் கொடுத்தது.
* ராம சேதுவுக்கு ஆதரவு தெரிவித்தது.
* இன்று உயிரோடு இருந்திருந்தால் ராமர் கோவிலுக்கு சென்று வழிபட்டு இருப்பார்.”

இது எல்லாம் இறைபக்தி. இது வேறு மதவாத அரசியல் என்பது வேறு. மதத்தை முன்னிறுத்தி மதத்தின் பெயரால் அரசியல் செய்வதை ஜெயலலிதா அம்மா என்றுமே ஆதரித்ததில்லை.

அதனுடைய வெளிப்பாடுதான் மத்தியில் ஆளுகிற அரசாங்கங்கள் மாநில அரசாங்கங்களை கவிழ்த்த வரலாறு உண்டு. ஆனால் மாநில கட்சியான அதிமுக மத்தியில் ஆண்ட வாஜ்பாய் அரசாங்கத்தை கவிழ்த்தது. அதை செய்தவர் ஜெயலலிதா அம்மா.

அதன்பின் ஒரு பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன் “நான் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் அதற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் இனி மேல் எந்நாளும் பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்று உங்களிடம் எனது வாக்குறுதியாக கொடுக்கிறேன்” என்று கூறினார். “மோடியா? லேடியா?” என்று களம் கண்டார்.

அரசியல் அரிச்சுவடி அறியாத அண்ணாமலை இப்படி சொல்லி இருக்கலாம் ஆனால் ஒரு அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து வந்த திருமதி. தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் ஒருவேளை தான் சார்ந்து இருக்கிற கட்சிக்கு அதன் மாநில தலைவரை ஆதரித்துப் பேச வேண்டும் என்பதற்காக இப்படி பேசுகிறாரா? அல்லது மீண்டும் கட்சியில் பொறுப்பு பெறவேண்டும் என்பதற்காக இப்படி பேசுகிறாரா? என கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Share on:

ஜெயலலிதாவுக்கு ஹிந்துத்துவா சாயல் பூசுவதா? அண்ணாமலைக்கு கே.சி.பழனிசாமி கண்டனம்!


ஜெயலலிதாவுக்கு ஹிந்துத்துவா சாயல் பூசுவதா என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதற்கிடையே, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அதன்போது பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் இரட்டை இலக்கத்தில் வாக்கு வங்கியை பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு திமுகவின் இந்துத்துவா சித்தாந்தத்திலிருந்து விலகிச் செல்வதால் ஏற்பட்ட வெற்றிடத்தை தனது கட்சி நிரப்ப அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த அவர், இந்துத்துவா தலைவரான, அதிமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தமிழக அரசியலில் பாஜக நிரப்புகிறது என்றார்.

இதுகுறித்து கே.சி.பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “ஜெயலலிதா அம்மா மிகச்சிறந்த திராவிட தலைவர், சமூக நீதி காத்த வீராங்கனை என்ற…
Share on:

Continue Reading

”காவல் துறை Vs போக்குவரத்து துறை” – அரசுப் பேருந்துகளை வளைத்து வளைத்து அபராதம்… பரபரப்பாகும் தமிழகம்!


பல்வேறு விதிமீறல்களை சுட்டிக்காட்டி, தமிழகத்தின் பல பகுதிகளில் அரசுப் பேருந்துகளுக்கு போக்குவரத்துப் போலீசார் திடீரென அபராதம் விதித்து வருகின்றனர். காவல் துறை Vs போக்குவரத்து துறை என்று மாறியுள்ள இ்ப்பிரச்னைக்கு, தமிழக அரசு உடனடியாக தீர்வுகாண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் அரசு பேருந்தில் பயணித்த காவலர் டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சில தினங்களுக்கு முன் வைரலானது. அதுதொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு பல்வேறு விவாதங்களை கிளப்பியது. இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் அரசுப் பேருந்துகளை வளைத்து வளைத்து அபராதம் விதித்து வருகின்றனர்.

நேற்று (மே 23) மட்டுமே, ‘நோ பார்க்கிங்’, ‘ஓவர் ஸ்பீடு’ உள்ளிட்ட காரணங்களை கூறி, சென்னை உட்பட பல்வேறு இடங்களில் சுமார் 22 அரசுப் பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். இதேபோல, இன்று ஈரோட்டில் ஒரு வழி பாதையில் வந்த 12 அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவைதவிர, பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக பயணிகளை ஏற்றி செல்வதற்கும் அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அரசு பேருந்துகள் மீது காவல் துறை அபராத நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருப்பதாகவே இது பார்க்கப்படுகிறது.

நாங்குநேரி சம்பவம்தான் காரணமா?: போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரமும், பொறுப்பும் போக்குவரத்து போலீசாருக்கு இருக்கிறது. எனினும், நாங்குநேரியில் டிக்கெட் எடுக்காமல் நடத்துனரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட காவலர் ஆறுமுகபாண்டி மீது நடவடிக்கை எடுக்க, போக்குவரத்து துறை பரிந்துரை செய்த பிறகுதான் அபராத நடவடிக்கை வேகமெடுத்துள்ளது என்பதே பலதரப்பினரின் கருத்தாக உள்ளது.

குறிப்பாக, ஈரோட்டில் இன்று ஒருவழிப் பாதையில் வந்த அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலித்துள்ளனர். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்களில் பலர் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதும், அவர்களை போக்குவரத்து போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. அரசுப் பேுருந்துகளை மட்டும் நிறுத்தி அபராதம் விதிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ, போக்குவரத்து போலீசார், அரசுப் பேருந்துகளை குறிவைக்கின்றார்களா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

அரசுக்கே அபராதமா?: மேலும், அரசு பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட கூடுதல் பயணிகளை ஏற்றி செல்வதற்கு போலீசார் அபராதம் விதிப்பதென்பது அரசின் மீதே அபராதம் விதிப்பதை போல என்கின்றனர் பயணிகள். பீக் ஹவர்சில் போதுமான பேருந்துகள் இல்லாத காரணத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் வேறு வழியின்றி ஒரே பேருந்தில் ஏறி நின்றுகொண்டே பயணிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்த சூழலில், போக்குவரத்து போலீசார் பேருந்தை நிறுத்தி அபராதம் விதிக்கும்போது தாங்கள் கடும் இன்னலுக்கு ஆளாவதாக பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு போக்குவரத்து மற்றும் காவல் துறைக்கான விதிமுறைகள் குறித்த தெளிவான வழிகாட்டுதலை வெளியிட்டு பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பலதரப்பிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘காவலர்கள் பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ளும் விஷயத்தில் தமிழக அரசுத் தரப்பில் இரு ஆண்டுகளாகக் காட்டப்படும் அலட்சியம் காவல்துறைக்கும், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் இடையிலான மோதலாக மாறிவிடக் கூடாது. இதேநிலை தொடர்ந்தால், இது காவல்துறைக்கும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் இடையிலான மோதலாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. அத்தகைய மோதல் ஏற்பட்டால் அது பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மட்டுமின்றி, தமிழகத்தின் சட்ட ஒழுங்கையும் பாதிக்கக்கூடும். அதற்கு முன்பாக இந்த சிக்கலுக்கு தீர்வு காணப்பட வேண்டும்” என்று ராமதாஸ் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

பழிவாங்கும் நடவடிக்கை?: ‘போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிப்பது சரியே.ஆனால், த‌ங்க‌ளி‌ன் துறைக்கு நேர்ந்த அவமானத்தி‌ற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக இதை கருதி, பேச்சுவார்த்தை நடத்தி ‘சமரசம்’ ஏற்பட்டது என்று அறிவித்துவிட்டு மீ‌ண்டு‌ம் முந்தைய நிலைக்கே சென்றுவிடாம‌ல், காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ந்த நடவடி‌க்கைகளை தொடர வேண்டும். சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும். போக்குவரத்து விதிமீறல்க‌ளி‌ல் ஈடுபடும் ஓட்டுநர்களுக்கு இ‌ந்த விவகார‌ம் ஒரு பாடமாக இருக்கட்டும்’ என்று பாஜக மாநில துணைப் பொதுச் செயலாளர் நாராயணன் திருப்பதி இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
Share on:

சிங்கப்பூரில் பரவி வரும் புது வகை கொரோனா தொற்று.. தமிழக விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு!


சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதை அடுத்து கோவை விமான நிலையத்தில் தீவிரமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷார்ஜா, சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளுக்கு கோவை விமான நிலையத்தில் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக சிங்கப்பூரில் கே.பி.2 என்ற புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்றால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த சில வாரங்களில் தொற்று பரவல் உச்சத்தை எட்டும் எனக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் தற்போது பரவி வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு சில பகுதிகளில் பதிவாகி உள்ளது. ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரை அச்சமோ, பதற்றமோ தேவையில்லை எனவும் ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு, சிங்கப்பூர் மற்றும் சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகிறது. சிங்கப்பூரில் இருந்து வாரத்திற்கு ஐந்து நாட்களும், ஷார்ஜாவிலில் இருந்து வாரத்திற்கு 7 நாட்களும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து கோவை வரும் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சார்ஜா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கோவை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தானியங்கி காய்ச்சல் கண்டறியும் இயந்திரம் மூலம் காய்ச்சல் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வரும் பயணிகள் தனிமைப் படுத்தப்படுவார்கள் எனவும், அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, சென்னை, திருச்சி விமான நிலையங்களிலும் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Share on: