கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு வழக்கில் மெத்தனால் வாங்க உதவியதாக கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த இரு வியாபாரிகள் உள்பட மூவரை சிபிசிஐடி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் வரை பலியாகிவிட்டனர். இன்னும் சிலர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து விசாரணை அலுவலரான கூடுதல் எஸ்.பி. கோமதி தலைமையிலான தனிப்படை குழுவினர் தீவிர விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்ததாக கண்ணுக்குடி என்கிற கோவிந்தராஜ், அவரது விஜயா, சகோதரர் தாமோதரன், அவருடைய மனைவி சந்திரா, முக்கிய எதிரியான மாதேஷ், சேஷசமுத்திரத்தைச் சேர்ந்த சின்னத்துரை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அது போல் மெத்தனால் விற்பனையில் தொடர்புடையதாக சங்கராபுரம் வட்டம் விரியூர் ஜோசப் ராஜா, ராமர், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த மதன்குமார், கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம், தம்பிபேட்டையைச் சேர்ந்த ராஜா உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் மாதேஷுக்கு மெத்தனால் வாங்க ஜிஎஸ்டி ரசீது அளித்து உதவியதாக கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சிப்ஸ் கடை நடத்தி வந்த சக்திவேல், மீன் வியாபாரம் செய்து வந்த கண்ணன், வழக்கில் தொடர்புடைய சேலம் மாவட்டம், கருமந்துறை கல்லாநத்தத்தைச் சேர்ந்த சங்கர் ஆகிய மூவரை சிபிசிஐடி போலீஸார் நேற்று கைது செய்தனர்.
அது போல் இன்று அய்யாசாமி, தெய்வாரா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இத்துடன் சேர்த்து கள்ளச்சாராய வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு சென்னை, மதுரவாயலைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் மெத்தனால் விநியோகித்தது தெரியவந்தது.
எம்ஜிஆர் நகரில் உள்ள உறவினர் வீட்டில் சிவக்குமார் பதுங்கியிருப்பதாக கிடைத்தத் தகவலின்பேரில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று அவரைக் கைது செய்து சிபிசிஐடி போலீஸிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் புழலை அடுத்த வடபெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் சிவக்குமார் பணியாற்றி வந்தாராம்.
கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு அவர் மெத்தனால், டர்பன்டைன் எண்ணெய் ஆகியவற்றை விநியோகம் செய்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக அந்த ரசாயன தொழிற்சாலை உரிமையாளரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
தென்காசி: ‛‛குட்கா விற்று கைதானவரின் மனைவி தானே நீ” என்று திமுகவை சேர்ந்த தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியை பார்த்து பெண் கவுன்சிலர் கேள்வியெழுப்பி வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்ட பஞ்சாயத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளன. இதில் 10 வார்டுகளில் திமுக, 3 வார்டுகளில் காங்கிரஸ், ஒரு வார்டில் மதிமுகவினர் வெற்றி பெற்றனர். இதன்மூலம் மாவட்ட பஞ்சாயத்து திமுக வசமானது.
திமுகவை சேர்ந்த தமிழ் செல்வி மற்றும் கனிமொழி ஆகியோர் இடையே மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை பிடிப்பதில் போட்டி ஏற்பட்டது. இதில் தமிழ்செல்வி 8 வாக்குகள் பெற்று வென்றார். கனிமொழி தோற்றுப்போனார். இதையடுத்து தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக தமிழ் செல்வி உள்ளார்.
இந்நிலையில் தான் தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ் செல்வி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தின்போது கவுன்சிலர் கனிமொழி, அனைத்து வார்டு கவுன்சிலர்களுக்கும் சரியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறினார். இந்த வேளையில் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதத்தின்போது கவுன்சிலர் கனிமொழி, ‛‛பாகுபாடு காட்டக்கூடாது. மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக (தமிழ் செல்வி) இருப்பவரின் கணவர் குட்கா விற்று கைது செய்யப்பட்டவர். நீங்களும் இங்கே குட்கா விற்கவா வந்து இருக்கீங்க. கணவர் கைதுக்கு பொறுப்பேற்று தலைவி பதவியில் இருந்து விலக வேண்டும்” என்று கூறினார். இதனால் தலைவி தமிழ் செல்வி தனது இருக்கையில் இருந்து எழுந்தார்.
இந்த வேளையில் பூங்கோதை என்ற கவுன்சிலர் எழுந்து கனிமொழியிடம் தலைவி தமிழ் செல்விக்கு ஆதரவாக வாக்குவாதம் செய்தார். ‛‛கட்சியை பற்றி நினைக்காமல் இப்படி பொதுவெளியில் விமர்சிக்கலாமா?” என்று பூங்கோதை கேட்டார். அதற்கு கனிமொழி, ‛‛நீ சும்மா இரு” என்று ஆக்ரோஷமாக கூறினார். இதையடுத்து தலைவி தமிழ் செல்வி கூட்டத்தை புறக்கணித்து எழுந்து சென்றார். தலைவி தமிழ் செல்வி, கனிமொழி இடையே ஏற்கனவே தலைவர் பதவியை கைப்பற்றுவதில் பிரச்சனை ஏற்பட்டது.
இதற்கிடையே தான் சமீபத்தில் தமிழ் செல்வியின் கணவரான, திமுகவை சேர்ந்த ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ் பெங்களூரில் இருந்து 600 கிலோ குட்கா கடத்தி வந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் தான் கவுன்சிலர் கனிமொழி, மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்செல்வியை அப்படி கூறி விமர்சனம் செய்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்ததில் 50 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இப்படி குடித்தவர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம், நெஞ்செரிச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கிறது. எனவே உறவினர்கள் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு 35 பேர் உயிரிழந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க மதுவிலக்கு பிரிவு செயல்பட்டு வருகிறது. இருப்பினும் பாக்கெட்டில் சாராய விற்பனை தமிழகத்தின் பல பகுதிகளில் படுஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது என தொடர் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இப்படி இருக்கையில்தான் கள்ளக்குறிச்சியில் பாக்கெட் சாராயம் குடித்த 50 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உடனடி ஆக்ஷனில் இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை ஷ்ரவண் குமார் ஜடாவத்தை பணியிடமாற்றம் செய்தும் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி மதுவிலக்குப் பிரிவையே கூண்டோடு சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதேபோல உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில் கள்ளச்சாராய வழக்கை சிபிசிஐடியிடமிருந்து சிபிஐ வசம் மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், தமிழக அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.செல்வம், “தமிழ்நாடு அரசின் மொத்த துறையும் தோல்வி அடைந்துள்ளது. பலி எண்ணிக்கை 100 தொட வாய்ப்புள்ளது. கருணாபுரத்தில் உள்ள 500 பேரில் 300 பேர் விஷச்சாராயம் அருந்தியுள்ளனர். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் பணம் பெற்றுக்கொண்டு விஷச்சாராய விற்பனையை அனுமதித்துள்ளனர். சட்டவிரோத விற்பனை குறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் தற்போது சிபிசிஐடிக்கு மாற்றுவதில் பலனில்லை” என வாதத்தை முன்வைத்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், “விஷச்சாராய விற்பனையை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? 2023ம் ஆண்டு விஷச்சாராய பலி ஏற்பட்டதை அடுத்து விஷச்சாராயத்தை ஒழிக்க கடந்த ஓராண்டில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? கள்ளக்குறிச்சியில் விஷச்சாராய விற்பனை தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
இதற்கு முன்பும் விஷச்சாராய மரணம் நிகழ்ந்தும் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை? விஷச்சாராய விற்பனை தொடர்பாக கவனத்திற்கும் கொண்டு வந்தும் அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன. இதற்கு யார் பொறுப்பு?” என தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், பி.எஸ். ராமன், “பொதுநல வழக்கு என்றுக்கூறி அரசியல் உள்நோக்கத்துடன் வாதம் முன்வைக்கப்பட்டது. மனுதாரர் கட்சி ஆட்சியில் இருந்த போது 2001ம் ஆண்டு புதுப்பேட்டையில் விஷச்சாராய மரணம் நிகழ்ந்தது. கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி 47 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 117 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 89 பேர் உடல் நிலை சீராக உள்ளது. கூடுதல் மருத்துவக்குழு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர். மது விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கைகள் தொடரும். அவர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் பாயும்.
விஷச்சாராய மரணங்களை தடுப்பது தொடர்பாக ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 161 மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்” என்று பதிலளித்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வரும் புதன்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருக்கின்றனர். அதேபோல விழுப்புரம், மரக்காணம் சம்பவங்களுக்கு பிறகு விஷச்சாரய விற்பனையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கவும், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. ஒரே இடத்தில் 21 பேரின் உடல்களை தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஷசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் உடல்கள் கோமுகி நதிக்கரையில் தகனம் செய்யப்பட உள்ளன. இதற்கிடையே இறுதிச்சடங்கு நடந்து வரும் இடத்தில் கனமழை பெய்து வருகிறது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு அடுத்த கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்ததாக 109 பேர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர்.
அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரை 39 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுக்க இந்த சம்பம் பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டி கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 200 லிட்டர் விஷ சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்ததில் அதில் மெத்தனால் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட எஸ்பியை சஸ்பெண்ட் செய்துள்ள தமிழக அரசு, மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஷ்ரவன் குமார் ஜடாவத் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக எம் எஸ் பிரசாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி முழுவதுமே சோகத்துடன் காட்சி அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்படுகிறது. கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றங்கரையோரம் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வத்திப்பெட்டி போல் கட்டைகளை வைத்து வரிசையாக தகனம் செய்ய இடம் அமைக்கப்பட்டுள்ளது.
அது போக 7 பேருக்கு நல்லடக்கம் செய்ய குழித்தோண்டப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகள் பார்ப்பவர்களின் கண்களையே குளம் ஆக்குவது போல அமைந்துள்ளது. கண்ணீருடன் கவலை தோய்ந்த முகத்துடன் விஷசாராயத்திற்கு குடும்ப உறுப்பினரை பலி கொடுத்த துயரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அழுதுகொண்டு நிற்கும் காட்சிகளும் நெஞ்சை உறைய வைப்பதாக அமைந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதை நகராட்சி ஊழியர்கள் கவனித்து வருகிறார்கள். உறவினர்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோமுகி ஆற்றங்கரையில் மருத்துவ குழுவும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இறுதிச்சடங்கு நடந்து வரும் இடத்தில் கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் இறுதிச்சடங்குக்காக அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டைகள் நனைந்துவிட்டன. இதனால் மீண்டும் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தொடந்து ஒவ்வொருவரின் உடல்களாக தகனம் செய்யப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கள்ளக்குறிச்சி நகர்ப்பகுதியைச் சேர்ந்த கருணாபுரம் பகுதியில் கண்ணுக்குட்டி என்ற பட்டப்பெயர் கொண்ட நபர் ஒருவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். பல முறை சிறை சென்றுள்ள இவர் மீண்டும் மீண்டும் கள்ளச்சாராய விற்பனையை தொடர்ந்து வந்துள்ளார்.
அரசு மதுபானக் கடையான டாஸ்மாக்கில் மதுபானங்கள் விலை அதிகம் என்பதால், கருணாபுரம் பகுதியை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் கள்ளச்சாராயத்தை நாடி வந்துள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதியில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் 50க்கும் அதிகமானவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் கள்ளச்சாராயம் குடித்த சுரேஷ், பிரவீன், சேகர், மகேஷ், ஜெகதீஷ் ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே தான் 14 பேர் உயர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இத்தகைய சூழலில் தான் ஜிப்மர் மருத்துவுமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பலியாகி உள்ளனர். மணி, கிருஷ்ணமூர்த்தி, இந்திரா ஆகியோர் சிகிச்சை பலனின்றி இன்று மாலையில் பலியாகி உள்ளனர். மற்ற 11 பேருக்கும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்துள்ள கள்ளச்சாராய சாவு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாராயம் குடித்தவர்கள் உயிரிழந்தது எப்படி என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சாராயம் விற்பனை செய்தவரை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
* பொதுமக்களுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதி சான்றிதழ், பிறப்பு இறப்பு சான்றிதழ், வருவாய் சான்றிதழ், ஓய்வூதியப் பலன்கள், பொது விநியோக திட்டப்பலன்கள் உள்ளிட்டவற்றை உள்ளிட்டவற்றை வின்னிப்பித்த குறிப்பிட்ட நாட்களுக்கும் பெரும் வகையில் சேவை உரிமை சட்டம் (Right to Service Act) நிறைவேற்றப்படும்.
* லோக் ஆயுக்தா முறையாகவும் முழுமையாகவும் செயல்பட வைத்தல்.
* ஊழல் அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
* உழவர் சந்தை உயிரோட்டப்பட்டு பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
* மாதம் ஒரு முறை மின் கட்டட்ணம் செலுத்துத்ம் முறை அமல்படுத்தப்படும்.
* 500 புதிய கலைஞர் உணவகங்கள் திறக்கப்படும்.
* 100 நாள் வேலைத் திட்டம், 150 நாளாக உயர்த்தப்படும்.
* தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு
* காஸ் சிலிண்டருக்கு மானியமாக ரூ.100 வழங்கப்படும்.
* அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்கர்ளுக்கு இலவச டேட்டாட்வுடன் கைக்கணினி வழங்கப்படும். கல்வி
நிறுவனங்களில்…
கருணை அடிப்படையில் சத்துணவு திட்ட அமைப்பாளராக பணி வழங்குமாறு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தவில்லை எனக்கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் உள்ள பால்வார்த்து வென்றான் கிராமத்தை சேர்ந்த கோமதி என்பவருக்கு கருணை அடிப்படையில் 8 வாரத்தில் சத்துணவு அமைப்பாளராக நியமித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தனக்கு பணி வழங்காத திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோமதி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனு நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறினார்.
இதற்கு பதிலளித்த மனுதாரர் வழக்கறிஞர் எஸ்.தமிழ்செல்வன், மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அரசு சார்பில் இரு நீதிபதிகள் அமர்வில் வாதிடப்பட்டதாக கூறினார்.
குவைத் தீவிபத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரின் நிலை என்ன என தெரியாமல் இருந்த நிலையில் அந்த 3 பேர் உள்பட 7 பேர் பலியாகிவிட்டனர்.
குவைத் தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட தமிழர்களும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஏற்கெனவே செஞ்சியை சேர்ந்த முகமது ஷெரிப்பின் நிலை என்னவென தெரியாமல் அவருடைய குடும்பத்தினர் கவலையில் உள்ள நிலையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குவைத்தின் மங்காப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள். இந்த அடுக்குமாடி குடியிருப்பு கேரளாவை சேர்ந்த என்பிடிசி குழுமத்திற்கு சொந்தமானது. இதன் உரிமையாளர் கே.ஜி. ஆபிரகாம்.
இந்தியாவில் இருந்து குவைத் மங்காப் நகருக்கு வேலை தேடி செல்லும் தொழிலாளர்கள் அங்கு தங்கி பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்றைய தினம் திடீரென தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
இதில் தரைதளத்தில் சமையலறையில் பிடித்த தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயை அணைத்தனர். ஆனாலும் தீ கட்டுக்குள் வரவில்லை. இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும் பல தொழிலாளர்கள் படுகாயம் அடைந்ததாக தெரிகிறது.
இந்த விபத்தில் சிக்கி இந்தியர்கள் 43 பேர் வரை பலியாகி இருக்கலாம் என சொல்லப்படுகிறது. குவைத் தீவிபத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று காலை குவைத்துக்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கே.வி. சிங் சென்றுள்ளார்.
பலியானவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாத நிலை உள்ளது. இதனால் டிஎன்ஏ சோதனை மேற்கொண்டால் மட்டுமே உடல்கள் எல்லாம் யாருடையது என தெரியவரும். இந்த தீவிபத்தில் கேரளா, தமிழகத்தை சேர்ந்தவர்கள் இறந்திருக்கலாம் என தெரிகிறது. தமிழகத்தை பொருத்தமட்டில் மொத்தம் 3 பேர் பலியாகிவிட்டனர்.
இந்த நிலையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமு, தூத்துக்குடியை சேர்ந்த மாரியப்பன் ஆகியோரும் இறந்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 5 பேராவது இறந்திருப்பர் என குவைத்தில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் தெரிவித்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடலூரை சேர்ந்த சின்னதுரை, பேராவூரணியை சேர்ந்த புனாப் ரிச்சர்டு, செஞ்சியை சேர்ந்த முகமது ஷெரிப்பின் நிலை என்னவென தெரியாமல் அவருடைய குடும்பத்தினர் கடுமையான மனவேதனையில் கண்ணீருடன் காத்திருந்தனர். இந்த நிலையில் குவைத் தீவிபத்தில் 7 தமிழர்கள் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களுடைய உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. வீராசாமி மாரியப்பன், முகமது ஷரீப், ரிச்சர்ட் ராய், சிவசங்கர், சின்னதுரை, கருப்பண்ணன் ராமு, ராஜு எபினேசர் ஆகிய 7 தமிழர்கள் உயிரிழந்தனர்.
காவிரி நதிநீரில் தமிழ்நாட்டுக்கான உரிய பங்கை கர்நாடகா திறந்துவிடாமல் துரோகம் செய்வதால் மேட்டூர் அணை வறண்டு போய் கிடக்கிறது. காவிரி டெல்டா பாசனத்துக்காக ஆண்டு தோறும் ஜூன் 12-ந் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை இன்று திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
கர்நாடகா அணைகளில் இருந்து திறந்துவிடப்படுகிற காவிரி நீர் மேட்டூர் அணையில் தேக்கப்பட்டு பாசனத்துக்கு திறந்துவிடப்படும். மேட்டூர் அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 120 அடி. மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக இருந்தால் பண்ணவாடி நந்தி சிலை உள்ளிட்டவை வெளியே தெரியும்.
பொதுவாக காவிரி டெல்டா மாவட்ட விவசாயத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் மேட்டூர் அணையில் நீர் இருப்பு போதுமான அளவு தற்போது இல்லை. இதனால் இந்த ஆண்டு காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை வழக்கமான ஜூன் 12-ல் திறக்கப்படவில்லை.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 43.71 அடியில் இருந்து 43.51 அடியாக சரிந்தும்விட்டது. மேட்டூர் அணைக்கான நீர் வரத்தும் 404 கன அடியாக மட்டுமே இருக்கிறது. அணையின் நீர் இருப்பு வெறும் 14 டிஎம்சி நீர்தான்.
கர்நாடகாவின் துரோகத்தால் மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து 61-வது முறையாக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இதனால் காவிரி டெல்டாவின் 12 மாவட்டங்களின் 16.40 லட்சம் ஹெக்டேர் நிலத்தின் பாசனமும் கேள்விக்குறியாகி நிற்கிறது..
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி முதல் ஜனவரி 28-ந் தேதி வரை 230 நாட்களுக்கு காவிரி நீர் திறப்பது வழக்கமான நடைமுறை. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியை தாண்டியதாக இருந்தால் 230 நாட்களுக்கும் தொடர்ந்து காவிரி டெல்டா பாசனத்துக்கஆன நீரைத் திறந்துவிட முடியும். தற்போதைய நிலையில் 1 டிஎம்சி நீரை திறந்துவிட்டாலே கூட 90 நாட்களுக்குதான் காவிரி டெல்டா பாசனத்துக்கு தேவையான நீர் கிடைக்கும். இதனால் இன்று மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.
புரட்சித் தலைவரை நெடுஞ்செழியன், மாதவன், பஉச, மதுரை முத்து போன்றவர்கள் பேசாத பேச்சா? ஆனால் அவர்களையும் இணைத்துக் கொண்டு கட்சியை வலுப்படுத்தினார்.
திமுகவை வீழ்த்த சரியான இயக்கம் அஇஅதிமுக என்பதை ஒற்றுமையாக தொடர்ந்து நிரூபிக்க தவறினால் அந்த வாய்ப்பு பாஜகவுக்கு செல்லும். இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.
அதிமுகவை ஒருங்கிணைப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி, முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர், பெங்களூரு புகழேந்தி, முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி ஆகியோர் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை கடந்த ஜூன் 8-ம் தேதி தொடங்கினர். இந்நிலையில் திமுகவை வீழ்த்த சரியான இயக்கம் அதிமுக என்பதை ஒற்றுமையாக தொடர்ந்து நிரூபிக்க தவறினால் அந்த வாய்ப்பு பாஜகவுக்கு செல்லும் என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: அடிமட்ட அதிமுக தொண்டனின் குரல். நல்ல முயற்சி, புரட்சித் தலைவரை நெடுஞ்செழியன், மாதவன், பஉச, மதுரை முத்து போன்றவர்கள் பேசாத பேச்சா? ஆனால் அவர்களையும் இணைத்துக் கொண்டு கட்சியை வலுப்படுத்தினார். ஆர்எம்வீ, காளி முத்து, பி.ஹெச்.பாண்டியன் போன்றவர்கள் பேசாத பேச்சா? ஆனால் அவர்கள் திரும்பி வந்த போது ஏற்றுக் கொண்டு கட்சியை வலிமையாக்கினார். மறப்போம் மன்னிப்போம் என்று அனைவரும் பழைய கசப்பான நிகழ்வுகளை மறந்து கட்சிதான் முக்கியம் என்ற எண்ணத்துடன் ஒன்று சேர வேண்டும். அஇஅதிமுகவின் இந்த பிரிவுகளை பயன்படுத்தி பாஜக வளர நினைக்கிறது.
அரசியல் களம் அஇஅதிமுக மற்றும் திமுக என்று தொடர வேண்டுமானால் அஇஅதிமுக ஒன்றிணைவதை தவிர வேறு வழி இல்லை. இதற்கு முந்தைய பிளவு மற்றும் பிரிவின் போது அதன் பலன் திமுகவுக்கு சென்றது. இப்போது திமுக ஆட்சி மீது சகலருக்கும் அதிருப்தி பெருகி வரும் நிலையில் அஇஅதிமுகவும் அதை பயன்படுத்தாமல் தங்களுக்குள் போட்டியிட்டு கொண்டு இருந்தால் அதனால் மக்களிடம் எழும் அதிருப்தியும் ஆதரவாக பாஜகவுக்கு செல்லும். திமுகவை வீழ்த்த சரியான இயக்கம் அஇஅதிமுக என்பதை ஒற்றுமையாக தொடர்ந்து நிரூபிக்க தவறினால் அந்த வாய்ப்பு பாஜகவுக்கு செல்லும். இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.