ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மத்திய தொழில்பாதுகாப்பு படை பயிற்சி மையத்துக்கு 2 நாள் பயணமாக இன்று அமித்ஷா வருகிறார். அமித்ஷாவை வரவேற்கும் வகையில் பாஜகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் அமித்ஷாவுக்கு பதில் நடிகர் சந்தான பாரதியின் போட்டோ இடம்பெற்று உள்ளதால் பலரும் பாஜகவினரை கிண்டல், விமர்சனம் செய்து வரும் சூழலில் போஸ்டரில் இடம்பெற்றிருக்கும் பெண் நிர்வாகி மறுப்பு தெரிவித்து விளக்கமளித்துள்ளார்.
பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர் அமித்ஷா. இவர் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக உள்ளார். அமித்ஷா இன்றும், நாளையும் 2 நாள் பயணமாக தமிழகம் வருகை தர உள்ளார்.
தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையத்துக்கு தான் இன்று அமித்ஷா வருகை தர உள்ளார்.
அமித்ஷாவை வரவேற்கும் வகையில் ராணிப்பேட்டை, அரக்கோண, தக்கோலத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் அமித்ஷாவின் போட்டோவிற்கு பதில் நடிகரும், இயக்குநருமான சந்தான பாரதியின் போட்டோ இடம்பெற்றுள்ளது. அதில் சந்தானபாரதியின் போட்டோவுடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ‛‛ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் இந்தியாவின் இரும்பு மனிதரே! வாழும் வரலாறே! வருக! வருக! என எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் அருள்மொழி, மாநில செயற்குழு உறுப்பினர் ராணிப்பேட்டை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் பாஜகவினர் தாமரை.
சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை குறி வைத்து அமலாக்கத் துறை இன்று ரெய்டை தொடங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் 15 மாதங்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, பல்வேறு பிரயத்தனத்திற்கு பிறகு கடந்த 2024 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.
அவர் ஜாமீனில் வந்த அடுத்த இரு நாட்களிலேயே அவருக்கு தமிழ்நாடு மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின.
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்களும் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தி பாலாஜியின் ஆதரவாளர்களான கரூர் ராயனூரில் வசிக்கும் கொங்கு மெஸ் மணி மற்றும் கரூர் ஆத்தூர் பிரிவு அருகே கோதை நகரில் வசிக்கும் சக்தி மெஸ் சக்திவேல், செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும் பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரருமான எம்சிஎஸ் சங்கரின் வீடு இருக்கும் கரூர் பழனியப்பா நகரிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் காலை முதல் 5 கார்களில் வந்த 20 பேர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
தற்போது 7 மணி நேரத்திற்கு மேலாக அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் செந்தில் பாலாஜி வசம் உள்ள மதுவிலக்குத் துறையின் கீழ் இயங்கும் சென்னை எழும்பூரில் தாளமுத்த நடராசன் மாளிகையில் உள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தி வருகிறது. இது அரசியல் வட்டாரத்தை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 3 வயது குழந்தை பாலியல் தொல்லை கொடுத்து முகத்தில் கல்லால் தாக்கிய வழக்கில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு பற்றி மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி, 3 வயது குழந்தை சிறுவனின் முகத்தில் துப்பியது தான் சம்பவத்துக்கு காரணம் என்று கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 3 வயது சிறுமி. அங்கன்வாடி சென்று வந்தார். இந்நிலையில் தான் 16 வயது சிறுவன் சாக்லேட் தருவதாக கூறி சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சிறுமி எதிர்ப்பு தெரிவித்து அழுத நிலையில் சிறுவன் குழந்தையின் தலை மற்றும் முகத்தில் கல்லால் தாக்கிவிட்டு ஓடிவிட்டார். இதில் சிறுமியின் கண்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சிறுமி நீண்டநேரமாகியும் வீட்டுக்கு வராததால் பெற்றோர் தேடிப்பார்த்தனர். அப்போது ரத்த காயத்துடன் சிறுமி உயிருக்கு போராடினர். அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுபற்றி சிறுமியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரில் போலீசார் 16 வயது சிறுவனை கைது செய்தனர். இதுபற்றி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி இன்று கூறிய கருத்து சர்ச்சையாகி உள்ளது. மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலெக்டர் மகாபாரதி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது
கடந்த வாரம் 3 வயது சிறுமிக்கு நடந்த சம்பவத்தை பார்த்தீர்களே ஆனால் அந்த குழந்தையே தவறாக நடந்துள்ளது. நீங்கள் கவனித்து பார்த்தால் அது உங்களுக்கு தெரியும். எனக்கு கிடைத்த ரிப்போர்ட்டின்படி அந்த பையனின் முகத்தில் குழந்தை துப்பி உள்ளது. இதுதான் காரணம். 2 பேரையுமே பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் Prevention is better than anything cure(வருமுன் காப்பதே சிறந்தது). Cure-யை விட Prevention ஆக செயல்பட வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்த்தால் குழந்தைகளுக்கு சொல்லி தருவது குறித்து பெற்றோர்களுக்கு உணர வைக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் எல்லாம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். இருப்பினும் குழந்தைகளுக்கு நாம் நேரடியாக சொல்லி தர முடியாது. குழந்தைகளுக்கு பெற்றோர் தான் எது தவறு என்று சொல்லி கொடுக்க வேண்டும். சின்னவயது, 2 வயது, 3 வயது குழந்தையை அழைத்து அவர்களுக்கு சில விஷயங்களை சொல்லி புரிய வைப்பது கடினம். பெற்றோர்கள் தான் அதனை புரிய வைக்க வேண்டும். ” என்று கூறியுள்ளார்.
3 வயது சிறுமி முகத்தில் துப்பியதால் தான் 16 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதியே இப்படி கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ள நிலையில் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் தனது பேச்சு குறித்த மயிலாடுதுறை கலெக்டர் மாகாபாரதி விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛குழந்தைகளுக்கு அவர்களின் இளம் பருவத்திலேயே பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கருத்துகளை பதிவு செய்தேன்” என்று கூறியுள்ளார். இருப்பினும் அவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில் தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து விசாரிக்க சென்னை எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில், 2011 முதல் 2015ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, இளநிலை பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், நடத்துனர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு பணம் பெற்றுக் கொண்டு நியமனம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மேல்விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றமும் முழுமையான விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில், போக்குவரத்துறையில் ஒவ்வொரு பதவிக்கும் பணம் பெற்றது தொடர்பாக தனித்தனியாக கூடுதல் குற்றப்பத்திரிகைகளை காவல்துறையினர் தாக்கல் செய்த நிலையில் அவற்றை தனி வழக்காக தான் விசாரித்து இருக்க வேண்டுமே தவிர ஒன்றாக இணைத்து இருக்கக் கூடாது என்றும் இந்த வழக்கை ஒன்றாக இணைத்ததால் விசாரணைக்கு பல ஆண்டுகள் எடுக்கும் என்பதால் வழக்கை நினைத்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி இளந்திரையன், மனுவுக்கு மார்ச் 13ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளி வைத்தார்.
கோயில் நகரமான மதுரை குப்பை நகரமாக மாறி வருகிறது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
சாலை ஓரங்களில் குப்பைகள் கொட்டப்படுவது கிட்டத்தட்ட எல்லா நகரங்களிலுமே மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி, தானே நேரில் இதனை பார்ப்பதாக கூறி வேதனை தெரிவித்துள்ளார்.
தேவகோட்டையைச் சேர்ந்த பஞ்சநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘தேவகோட்டையில் வள்ளி விநாயகர் ஊருணி உள்ளது. இந்த ஊருணியில் பலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். தேவகோட்டை நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மைப் பணியாளர்களும் ஊருணி வடகரையில் கொட்டி வருகின்றனர்.
தமிழ்நாடு நகரப்புற உள்ளாட்சிகள் சட்டத்தின்படி நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டிய உள்ளாட்சி அமைப்பே குப்பைகளை கொட்டி மாசுபடுத்துவது சட்ட விரோதம். குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் காற்று மாசும் ஏற்பட்டு வருகிறது. எனவே ஊருணியில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி விவேக்குமார் சிங் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அருண் சாமிநாதன், ஊருணியில் குப்பைகள் கொட்டப்பட்டதற்கான புகைப்படங்களை தாக்கல் செய்தார்.
இதையடுத்து, நீதிபதி, “மதுரை அமர்வுக்கு வந்ததில் இருந்து மதுரை – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் சைக்கிள் பயிற்சி செய்து வருகிறேன். அப்போது சாலையில் இரு பக்கத்திலும் குப்பைகள் குவிக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. அந்த குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதையும் பார்க்க முடிகிறது. இதனால் அப்பகுதியே புகை மண்டலம் ஆகிவிடுகிறது.
மதுரை கோயில் நகரம் என அழைக்கப்படும் சூழலில், தற்போது மதுரை குப்பை நகரமாக மாறி வருவது வேதனை அளிக்கிறது. இதை உள்ளாட்சி அமைப்புகள் கண்டும் காணாமல் இருக்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. குப்பைகளை முழுமையாக அகற்ற வேண்டும். வள்ளி விநாயகர் ஊரணி குப்பைகளை கொட்டி மாசுப்படுத்தப்படுவதை ஏற்க முடியாது.
எனவே, தேவகோட்டை நகராட்சி ஆணையர், ஊருணியை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். விசாரணை மார்ச் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.
எடப்பாடி பழனிசாமி தைரியம் இருந்தால் செங்கோட்டையனை நீக்கி பார்க்கட்டும் என தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி செங்கோட்டையனை நீக்கினால் எடப்பாடி தலைமை இருக்காது என எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். அதிருப்தியில் இன்றைக்கு செங்கோட்டையன் ஆரம்பித்திருக்கிறார். இனி தொடர்ச்சியாக பலர் வருவார்கள் என கே.சி.பழனிசாமி கூறினார்.
கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி, “எடப்பாடி பழனிச்சாமி குறித்து செங்கோட்டையன் பதிலளிக்காமல் சென்றது, அவர் இன்னும் திருப்தியடையவில்லை என்பதை காட்டுகிறது. தைரியம் இருந்தால் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை நீக்கி பார்க்கட்டும். எடப்பாடி பழனிச்சாமி இந்த இயக்கத்தை ஒருங்கிணைக்கத் தவறினார், சுயநலத்துடன் நடந்து கொள்கிறார். அதிமுகவில் எல்லோரும் ஒன்றிணைக்கபட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கிறோம். உலகமே அதைத்தான் எதிர்பார்க்கிறது, ஆனால் ஒரு ஆளுக்கு மட்டும் அது புரிய மாட்டிங்கிறது. திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வர…
கடனை செலுத்திவிட்ட பின்னரும் அடமான பத்திரங்களை கொடுக்கவில்லை என்று கூறி தொடரப்பட்ட வழக்கில், கரூர் வைஸ்யா வங்கியின் மேனேஜருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
ஏழை மக்களை துன்புறுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. வழக்கமாக வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அபராதம் விதித்து வந்த நிலையில், தற்போது வங்கி மேனேஜருக்கே அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
தென்காசியை சேர்ந்த மாரித்துரை என்பவர் ஆவணங்களை அடமானமாக வைத்து வங்கியில் கடன் பெற்றிருந்தார். பெற்ற கடனை கொஞ்சம் கொஞ்சமாக அவர் அடைத்திருக்கிறார். ஆனால் முழு கடனை அடைத்த பின்னரும் கூட, அடமானமாக வைக்கப்பட்ட ஆவணங்களை திருப்பி தர வங்கி மறுத்திருக்கிறது. காரணம் கேட்டால், கூடுதலாக ரூ.5 லட்சம் வரை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதனையடுத்து மாரித்துரை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.
வழக்கு விசாரணை இன்று வந்த நிலையில், இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டார். விசாரணையின் முடிவில் கரூர் வைஸ்யா வங்கியின் தலைமை மேலாளர் ஸ்ரீநாத் குமாருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மட்டுமல்லாது, வரும் 17ம் தேதிக்குள் அடமானத்திற்கு பெறப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் மனுதாரரின் வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். உரிய கடனை செலுத்திய பின்பும் ஆவணங்களை வழங்க மறுத்தது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி, ஏழை மக்களை துன்புறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
வழக்கமாக மினிமம் பேலன்ஸ் இல்லை, வேறு வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுத்துவிட்டீர்கள், எஸ்எம்எஸ் சேவை கட்டணம் என வாடிக்கையாளர்களிடமிருந்துதான் வங்கிகள் பணம் பிடுங்கும். ஆனால், வங்கி தலைமை மேனேஜருக்கே நீதிமன்றம் அபராதம் விதித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
கடந்த 2019-20 மற்றும் 2023-24ம் ஆண்டுகளுக்கு இடையில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று கூறி, ரூ.8,495 கோடியை பொதுத்துறை வங்கிகள், பொதுமக்களிடமிருந்து அபராதமாக பிடித்தம் செய்திருக்கின்றன. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக தமிழக அரசு ஓராண்டுக்கு செலவிடும் தொகையை விட இது அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.
சிவகங்கை அருகே புல்லட் வாகனத்தை ஓட்டிய பட்டியலின மாணவரின் கைகள் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “பட்டியலின சாதியில் பிறந்து எப்படி இந்த புல்லட் வண்டியை ஓட்டலாம், கை இருந்தால் தானே புல்லட் ஓட்டுவ” என்று கூறி 3 பேர் கையை வெட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த மாணவரின் புல்லட் வாகனத்தை அடித்து உடைத்து சூறையாடி இருக்கின்றனர்.
சாதி வெறியால் புல்லட் வாகனத்தை ஓட்டிய கல்லூரி மாணவரின் கையை வெட்டிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேளக்காடாவர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் – செல்லம்மா தம்பதியினர். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு அய்யாசாமி என்ற மகன் இருக்கிறார். இவர் சிவகங்கையில் உள்ள அரசு கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
அய்யாசாமியின் தந்தை சிறுவயதிலேயே உயிரிழந்ததன் காரணமாக, அவரின் தாய் செல்லம்மா, அய்யாசாமியின் சித்தப்பா பூமிநாதனை திருமணம் செய்து ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் உழைப்பால் பொருளாதார ரீதியாக ஓர் அளவிற்கு முன்னேறிய பூமிநாதன், கடந்த ஆண்டு புல்லட் வாகனத்தை வாங்கி இருக்கிறார். இது அங்கிருந்த சில முன்னேறிய சாதி இளைஞர்களுக்கு பிடிக்கவில்லை.
இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோதம் இருந்த நிலையில், புல்லட் வாகனம் வாங்கியதால் கூடுதல் விரக்தியடைந்து இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் பூமிநாதனின் புல்லட் வாகனத்தை 2 இளைஞர்கள் சேர்ந்து அடித்து உடைத்திருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பூமிநாதன் மற்றும் அய்யாசாமி இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், நேற்று கல்லூரியை முடித்து அய்யாசாமி புல்லட் வாகனத்தில் வீட்டை நோக்கி வந்து இருக்கிறார். அப்போது 3 இளைஞர்கள் அவரை வழிமறித்து, பட்டியலின சாதியில் பிறந்து எப்படி இந்த புல்லட் வண்டியை ஓட்டலாம், கை இருந்தால் தானே புல்லட் ஓட்டுவ” என்று கூறி அய்யாசாமியின் கையை வெட்டி இருக்கின்றனர்.
அங்கிருந்து தப்பியோடிய அய்யாசாமி, விரைவாக பெற்றோரிடம் சென்றுள்ளார். அதன்பின் அவருக்கு உடனடியாக மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அய்யாசாமிக்கு வெட்டப்பட்ட கையை சேர்க்கும் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. இதனிடையே அய்யாசாமியின் வீட்டிற்கு சென்ற அந்த இளைஞர்கள், வீட்டை அடித்து உடைத்து சூறையாடியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிப்காட் காவல்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்ட மாற்று சமூகத்தைச் சேர்ந்த வல்லரசு, ஆதி ஈஸ்வரன் மற்றும் வினோத் ஆகிய 3 பேரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை தரப்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வினோத் மற்றும் ஆதி ஈஸ்வரன் ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட உட்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக தலைமை மாற்றத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது; இந்த தீர்ப்பின் மூலம் டெல்லி கழுகுகள் தமிழ்நாட்டை வட்டமிட ஆரம்பித்துவிட்டன எனவும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களை இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக மனுதாரர்களில் ஒருவரான கேசி பழனிசாமி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அதிமுக ஒரு தலைமை மாற்றத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதாக நாம் எடுத்து கொள்ளலாம். எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவுக்கு ஏற்படுகிற பாதகத்தை சரி செய்கிற நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் என்கிற டெல்லி கழுகு தற்போது எடப்பாடி பழனிசாமியை சுற்றி வருகிறது. அதிமுக என்ற கட்சி உயிர்ப்போடு இருக்க வேண்டும். தோல்விகள் தவிர்க்கப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமி வலிமையான கூட்டணி அமைப்பேன் என கூறிவருகிறார்; ஆனால் எந்த தேர்தலிலும் அவர் வலிமையான கூட்டணியை அமைக்கவில்லை.
அதிமுகவின் மூத்த தலைவர்கள் மட்டுமல்ல.. தொண்டர்களும் தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் ஆளும் வாய்ப்பை பெற முடியுமா? என்கிற கேள்வியும் அதிமுகவில் எழுந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரையில் தேவைக்கு அதிகமான சுயநலத்துடன் நடந்து கொள்கிறார். எங்களைப் போன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரவணைத்து எடப்பாடி பழனிசாமியால் சென்றிருக்க முடியும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. இதை செய்ய தவறியதாலே வழக்குகள் எல்லாம் தொடர வேண்டிய நிலைமை உருவானது.
நாங்கள் 1972-ம் ஆண்டு முதல் அதிமுகவுடன்தான் பயணிக்கிறோம்; இன்றைக்கு இருக்கிற எடப்பாடி பழனிசாமியோடு அல்ல. அதிமுகவின் பொதுச்செயலாளர் என்பவர் அதிமுகவின் தொண்டர்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதிமுகவில் நீண்டகாலம் பயணிப்பவர்கள் இந்த கட்சி ஒன்றுபட வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் கூட அதிமுகவில் இருக்கிற தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக ஒன்றுபட வேண்டும் என பேசினர்; அப்படி பேசியவர்களை கடுமையான வார்த்தைகளில்.. அதாவது நீங்க எல்லாம் சசிகலாவோடு போய் தனியாக கட்சி நடத்திக்கொள்ளலாமே என கூறியவர்தான் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருக்கிறது; இதனைத்தான் செங்கோட்டையன் போன்றவர்கள் எடப்பாடிக்கு எதிராக பேசுவதில் இருந்து புரிந்து கொள்ள முடியும். 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டுமானால் கட்சி ஒன்றுபட்டாக வேண்டும்; தலைமை மாற்றம் ஏற்பட வேண்டும்; தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்; எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணியின் சுயநல நடவடிக்கைகள் அதிமுகவின் எதிர்காலத்தைப் பாதிக்கும்.
அதிமுகவில் நிச்சயம் தலைமை மாற்றம் ஏற்படும்; அதிமுகவின் சின்னம் சிறிது காலத்துக்கு முடக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது அதிமுக ஒன்றுபடவும் வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு கேசி பழனிசாமி தெரிவித்தார்.
வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் வயிற்றில் இருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்று உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கர்ப்பிணி இளம்பெண் ஒருவர் திருப்பூரில் பணியாற்றி வருகிறார். இவர் மருத்துவ பரிசோதனைக்காக சொந்த ஊர் புறப்பட்டுள்ளார். கோவை – திருப்பதி பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணத்தை தொடங்கிய அவர், மகளிர் பெட்டியில் இருந்திருக்கிறார். ஜோலார்பேட்டை அருகே ரயில் சென்ற போது, திடீரென இளைஞர் ஒருவர் ரயிலில் ஏறி இருக்கிறார்.
அந்த நேரத்தில் மகளிர் பெட்டியில் இருந்த அனைவரும் அந்த ரயில் நிறுத்தத்தில் இறங்கிவிட்ட நிலையில், கர்ப்பிணி பெண் மட்டுமே தனியே இருந்திருக்கிறார். இதனையடுத்து ரயிலில் ஏறிய இளைஞர், கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த கர்ப்பிணி பெண் உடனடியாக செயினை இழுத்து ரயிலை நிறுத்த முயற்சித்துள்ளார்.
ஆனால் கர்ப்பிணி பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து அந்த இளைஞர் கதவிற்கு அருகே சென்றுள்ளார். அப்போது கீழே விழுந்துவிடக் கூடாது என்று கர்ப்பிணி கவனம் கொள்ள, அவரின் கைகளை உடைத்து இளைஞர் கீழே தள்ளிவிட்டுள்ளார். இதன்பின் அருகில் இருந்தவர்களால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணி பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இதன்பின் கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கேவி குப்பம் அருகே உள்ள பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் அளிக்கப்பட்ட பேட்டி ஒளிபரப்பாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே பல்வேறு குற்றச் செயல்களில் ஹேமராஜ் ஈடுபட்டிருந்ததும் தெரிய வந்தது. இதனிடையே கைதான ஹேமராஜ் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதேபோல் ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.
தேசிய மகளிர் ஆணையம் தரப்பில் தமிழக டிஜிபி-யிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இந்த நிலையில் கோவை – திருப்பதி ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் நலமாக இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. காயமடைந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பாக ரூ.50 ஆயிரம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது. இதன்பின் ரயில்வே அதிகாரிகள் கர்ப்பிணி பெண்ணை சந்தித்து நிவாரண உதவியை வழங்கினர்.
இந்த நிலையில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்று உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்பின், அறுவை சிகிச்சை மூலமாக இறந்த சிசுவை அகற்ற மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.