அன்று சைதாப்பேட்டை பள்ளி.. இன்று மீனாட்சி கல்லூரி! மத குருவை வரவழைத்து நிகழ்ச்சி! மாணவர்கள் மறியல்


சென்னை மீனாட்சி மகளிர் கல்லூரியில், இந்து மத குருவை வரவழைத்து நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் மாணவிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தி இருந்ததாக சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில், இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் மதம் சார்ந்த தலையீடுகள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் மதம் சார்ந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது பெரும் சலசலப்பை கிளப்பியிருந்தது. பள்ளியின் சார்பில் ஆண்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு பேச்சாளராக மகாவிஷ்ணு அழைக்கப்பட்டிருந்தார். இவர் பரம்பொருள் பவுன்டேஷனை நடத்தி வரும் ஆன்மிக சொற்பொழிவாளராக அறியப்படுகிறார்.

அறிவியலையும், ஆன்மிக கருத்துக்களையும் இணைத்து, அதன் மூலம் பிற்போக்கு கருத்துக்களை பேசி ஏமாற்றி வருகிறார் என்று இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இப்படி இருக்கையில் மகாவிஷ்ணு பள்ளியில் பேசியதும் சர்ச்சையாகியிருந்தது. இதை தடுக்க முயன்ற பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் இவர் எதிர் கேள்வி கேட்டு முடக்கியிருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக ஷேராகியிருந்தது.

இதனையடுத்து மகாவிஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் கைது செய்தனர். அரசு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தொடர்ச்சியாக மதம் சார்ந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அரசு தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.

இப்படி இருக்கையில், தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியில் இந்து மத குருவை வரவழைத்து நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதனை எதிர்த்து இந்திய மாணவர்கள் சங்கம் (SFI) மறியல் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்துள்ளனர்.

அதாவது மீனாட்சி கல்லூரிக்கு அருகில் காளிகாம்பாள் கோயில் இருக்கிறது. இக்கோயிலில் நிகழ்ச்சி நடத்த பெங்களூரை மையமாக கொண்ட ஆசிரமத்தை சேர்ந்த ஸ்ரீ விதுஷேக்ரா பாரதி சுவாமிகள் வரவழைக்கப்பட்டிருக்கின்றார். ஆனால் கோயில் நிகழ்ச்சி முடிந்ததும், அவரை வைத்து கல்லூரியிலும் நிகழ்ச்சிகளை நடத்த நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. அதன்படி, இன்றும் நாளையும் இந்நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மாணவிகள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

அப்படி பங்கேற்காவிடில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாது என்றும் பேராசிரியர்கள் சார்பில் மிரட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. மாணவிகளை மிரட்டும் தொனியில் பேசிய ஆடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

அந்த ஆடியோவில், “மாணவிகள் அனைவரும் 12ம் தேதி ஆடிடோரியத்தில் ஒன்றுகூட வேண்டும். அங்கு வருகைப்பதிவு எடுக்கப்படும். அனைவரும் கட்டாயமாக வர வேண்டும் என செயலாளர் உத்தரவிட்டுள்ளார். நிகழ்ச்சி முடி தாமதமாகும் என்பதால் பெற்றோரை அழைக்க வர சொல்லி விடுகங்கள். வரவில்லை எனில் தேர்வு முடிவுகளை வெளியிட மாட்டார்கள். என்றோ ஒருநாள் தானே உங்களை அழைக்கிறார்கள். அன்று கூட உங்களால் வரமுடியவில்லை எனில் அப்புறம் என்ன? மற்ற மதத்தை சேர்ந்த மாணவிகள் காரணம் சொன்னால் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்து மதத்தை சேர்ந்த மாணவிகள் வரவில்லை எனில் நாளை அதன் பின் விளைவுகளை சந்தித்துதான் ஆக வேண்டும்” என பேராசிரியை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
Share on:

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் தமிழகத்தில் அதிக பாதிப்பு! எச்சரிக்கும் ஆய்வாளர்கள்


உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் குறித்து விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு இந்த பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் 67 தீவிர வானிலை நிகழ்வுகள் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு காலநிலை மாற்ற நிகழ்வுகள் அதிகமாக பதிவாகியுள்ளதாக, காலநிலை இந்தியா 2024 அறிக்கை தெரிவித்திருக்கிறது. அதன்படி, கடந்த 2023ம் ஆண்டு வெறும் 27 நாட்கள்தான் தமிழ்நாட்டில் தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டு வெப்பநிலை அதிகரிப்பு, கனமழை மற்றும் சூறாவளி போன்றவை அதிகரித்துள்ளன. இதனால் 25 மனித இறப்புகள், 14 கால்நடைகள் இறப்பு மற்றும் 149 வீடுகள் சேதமடைந்துள்ளன. மட்டுமல்லாது தமிழகத்தில் 1,039 ஹெக்டேர் அளவில் நெல், கரும்பு மற்றும் நிலக்கடலை பயிர்கள் சேதம் ஏற்பட்டுள்ளன.

கேரளாவிலும், கர்நாடகாவிலும் கூட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில்தான் தீவிர வானிலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. தேசிய அளவில் பார்த்தால், 2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 274 நாட்களில் 255 நாட்களில் இந்தியா தீவிர வானிலையை அனுபவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான தீவிர காலநிலை பாதிப்புகளை விட இது அதிகமாகும்.

காலநிலை மாற்றம் என்றால் என்ன?: உலகம் வெப்பமயமாதலால் ஏற்படுகிறது. அதாவது பூமியின் சராசரி வெப்பத்தை விட அதிக வெப்பம் உருவாகும் போது அதை காலநிலை மாற்றம் என்று சொல்கிறோம். இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாக தொழில் வளர்ச்சி. 1900க்கு முன்பு பூமியின் வெப்ப நிலை எவ்வளவு இருந்ததோ, அது 1900க்கு பிறகு வேகமாக அதிகரிக்க தொடங்கியது. ஏனெனில் இந்த காலத்தில்தான் நிலக்கரி, பெட்ரோல், இயற்கை எரிவாயு உள்ளிட்டவை மூலம் புதிய தொழிற்சாலைகள் உருவாகின.

நிலக்கரி, பெட்ரோல், இயற்கை எரிவாயு ஆகியவற்றை எரிப்பதன் மூலம் கார்பன் டை ஆக்சைடு (CO₂), மீத்தேன் (CH₄), மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு (N₂O) போன்ற வாயுக்கள் வெளியாகின. இது சூரியனிலிருந்து வரும் வெப்பத்தை வெளியேற்றாமல் தனக்குள்ளேயே வைத்துக்கொள்கிறது. இதனால் பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது. இது பனி உருகுவதற்கு காரமாகிறது. பனி உருகும்போது கடலின் மட்டம் அதிகரிக்கிறது. இது புயல்கள் மற்றும் மழை அளவை அதிகரிக்கிறது.

இதனால் ஏற்படும் வெள்ளம் உள்ளிட்டவை பயிர்கள், கால்நடைகள் உள்ளிட்டவற்றை அழிப்பதை மட்டுமல்லாது, புதிய நோய்கள் உருவாகவும் காரணமாக அமைந்துவிடுகின்றன.

இந்த பிரச்னையை சரி செய்யாவிட்டால், பூமியின் சுழற்சியில் கூட பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும், குடிநீர் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக உருவாகி மொத்த உலகமும் அழிந்துவிடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கு தமிழ்நாடு முன்னோடியாக இருந்துவிடக்கூடாது என்பது அனைவரின் கவலையாக இருக்கிறது.
Share on:

இதற்கு மேல் முடியாது குருநாதா.. அடையாறு டூ நாவலூர்.. சென்னை ஓஎம்ஆர் சாலை குறித்து குமுறும் மக்கள்


தமிழ்நாட்டிலேயே பணக்கார பகுதி என்றால் அது சென்னை ஓஎம்ஆர் சாலை பகுதி தான். பழைய மகாபலிபுரம் சாலை பகுதி தான் தமிழ்நாட்டிலேயே மிக அதிகமான ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியாகும். பல லட்சம் பேர் வேலை செய்யும் 25 கிமீ நீளமுள்ள ஐடி காரிடர் பகுதியான ஓஎம்ஆர் பகுதியில் மோசமான சாலை, கழிவுநீர் இணைப்பு இல்லை, குடிநீர் இணைப்பு இல்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

சென்னையில் தொழில் நுட்ப நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதி என்றால், பழைய மகாபலிபுரம் சாலை பகுதி தான். சென்னை அடையாறு தொடங்கி திருவான்மியூர், பெருங்குடி, கந்தன்சாவடி, தரமணி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், சிறுசேரி, நாவலூர், தாழம்பூர், கேளம்பாக்கம், படூர் என சென்னை ஓஎம்ஆர் சாலை அப்படியே திருப்போரூர் தாண்டி மகாபலிபுரம் வரை செல்கிறது. இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் எப்போதுமே காணப்படும்.

இதில் அடையாறு தொடங்கி கேளம்பாக்கம் வரை 25 கிலோ மீட்டர் தூரமுள்ள ஐடி கேரிடர் சாலை பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் இணைப்பு சாலைகள் முறையாக இல்லை என்றும்,. சரியான கழிவு நீர் இணைப்புகள் இல்லை எனறும், தண்ணீர் இணைப்புகள் இல்லை என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.

பிரதான சாலையான ஓஎம்ஆர் சாலையில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் உள்ள நிலையில், அங்கு மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது. இந்த மெட்ரோ பணிகள் காரணமாக அங்கு சாலைகள் மோசமான நிலையில் உள்ளதாக குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டுகிறார்கள். சுங்கச்சாவடிகள் அமைத்து சுங்க கட்டணம் வசூலித்த காலம் வரை சரியாக பராமரிக்கப்பட்ட சாலைகள்,. இப்போது சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்ட பிறகு அங்கு சர்வீஸ் சாலைகள் சீரற்ற வகையில் மாறிவிட்டதாகவும், சாலைகள் மோசமான நிலையில் பாரமரிப்பு இன்றி உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சென்னை மெட்ரோ பணிகள், சென்னை குடிநீர் வடிகால் வாரிய பணிகள் மற்றும் எரிவாயு திட்ட பணிகள் காரணமாக வடிகால் கால்வாய்கள் அடைக்கப்பட்டிருப்பதாகவும், புதிதாக தோண்டப்பட்ட கால்வாக்ள், சாலை பயணத்தை மிகவும் கடுமையாக்கி உள்ளதாகவும் ஓஎம்ஆர்வாசிகள் சொல்கிறார்கள். சென்னை மெட்ரோ, நெடுஞ்சாலைகள் துறை மற்றும் சென்னை மாநகராட்சி ஆகிய துறைகளில் நடந்த பொறுப்பு மாற்றங்களால் ஓஎம்ஆர் சாலை புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஓஎம்ஆர் குடியிருப்புவாசிகள் குமுறுகிறார்கள்.

இதுபற்றி நெட்டிசன் ஒருவர் கூறுகையில், ஓஎம்ஆரை ஒட்டியுள்ள பகுதிகளில் இணைப்பு சாலைகள் மிக மோசமானதாக இருக்கிறது. குடிநீர் இணைப்பு இல்லை , கழிவுநீர் இணைப்பு இல்லை , ஆனால் ஓஎம்ஆர் குடியிருப்பு வாசிகள் மற்றும் அங்கு சொத்து வைத்துவர்கள் மட்டுமே சமமாக வரி செலுத்த வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மக்களைப் பற்றி எந்த அரசியல் கட்சியும் கவலைப்படவில்லை என்றும் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், இது தான் ஓஎம்ஆர் சாலையின் அவல நிலை. சென்னையின் முக்கியமான வழித்தடங்களில் ஒன்று தான் ஓஎம்ஆர். பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைக் கொண்டுள்ள இந்த பகுதியின் நிலையைப் பாருங்கள். தமிழகத்தில் நகர்ப்புற நிர்வாகம் நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது.. இதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இதேபோல் மூன்றாவதாக நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், ஒவ்வொரு நாளும் நான் இந்த ஓஎம்ஆர் சாலையில் வண்டி ஓட்டுகிறேன். இது மோசமான சாலை, பள்ளங்கள் அதிகமாக உள்ளது. சர்வீஸ் சாலைகளும் மோசமான உள்ளது. இந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. இதன் காரணமாக தினசரி சில சிறிய விபத்துக்கள் நடக்கின்றன. ஓஎம்ஆர் சாலை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இரு சக்கர வாகனங்களுக்கு இது மிகவும் ஆபத்தான சாலையாக உள்ளது. தயவுசெய்து நடவடிக்கை எடுங்கள் என்று கூறியுள்ளார்.

அடுத்தாக நெட்டிசன் வெளியிட்ட பதிவில், ஓஎம்ஆர் சாலை என்பது சென்னையின் தகவல் தொழில்நுட்பக் கூட்டத்தின் உயிர்நாடியாக இருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட நிலையில் அந்த பகுதியை பார்ப்பதற்கு மிகவும் மனவருத்தமாக இருக்கிறது. சென்னை நகரத்தின் தேவைகளுக்கு ஏற்ப நகர்ப்புற நிர்வாகத்தில், இப்போது ஒரு தீவிரமான மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. நகரம் எதிர்காலத்தில் வேகமாக வளரும் போது , உள்கட்டமைப்பும் வளர வேண்டும். ஆனால் அப்படியே பழைய காலம் போலவே சிக்கி இருப்பது போல் உள்ளது. நமது தலைவர்கள் கவனத்தில் கொண்டு விரைந்து செயல்படுவார்கள் என்று நம்புவோம். ஒரு வேளை, அந்தப் பகுதியைச் சுத்தப்படுத்தவும் பராமரிக்கவும் ஒரு சமூகம் சார்ந்த முயற்சியைத் தொடங்கலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Share on:

43 தொகுதி! 19 லட்சம் வாக்குகள்! 2026-ல் அதிமுக ஆட்சி அமைக்க இதான் ஒரே வழி – முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி சொல்லும் சூத்திரம்!


முன்னாள் எம்பி கே.சி பழனிச்சாமி அதிமுக தோல்வி குறித்து, 2026-ல் எப்படி வெற்றி பெறலாம் என்பது குறித்து ஒரு புள்ளிவிவரத்துடன் கூடிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி குறைந்த வாக்குகள் வித்தியாசத்தி வெற்றிவாய்ப்பை தவறவிட்ட தொகுதிகள். சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த 29 தொகுதிகள்

1.)தி. நகர் -137, 2.) வேளச்சேரி -4,352, 3.) திருப்போரூர் -1947, 4.) செய்யூர் -4042, 5.) உத்திரமேரூர் -1622, 6.) காட்பாடி -746, 7.) ஜோலார்பேட்டை -1091, 8.) உளுந்தூர்பேட்டை -5256 , 9.) ராசிபுரம் -1952, 10.)திருச்செங்கோடு-2862, 11.) தாராபுரம் -1393, 12.)அந்தியூர் -1275 , 13.)உதகமண்டலம் -5348 , 14.)குன்னூர் -4105, 15.)திருப்பூர் தெற்கு -4709, 16.)அரியலூர் -3234, 17.) ஜெயங்கொண்டம் -5452 , 18.)விருத்தாச்சலம் -862, 19.)நெய்வேலி -977, 20.)பண்ருட்டி -4697, 21.)கடலூர் -5151, 22.)மயிலாடுதுறை -2742, 23.)பூம்புகார் -3299, 24.)திருமயம் -1382, 25. ராஜபாளையம் -3898, 26.)சங்கரன்கோவில் -5297, 27.)வாசுதேவநல்லூர்-2367 , 28.)தென்காசி -370, 29.)ராதாபுரம் -5925.

மொத்தமாக 86,490 வாக்குகள் வித்தியாசத்தில் 29 தொகுதிகள் இழப்பு

சுமார் 10 ஆயிரம் வாக்குகளுக்கும் கீழான வித்தியாசத்தில் தோல்வியடைந்த தொகுதிகள் 14

1.)பொன்னேரி -9689, 2.)வேலூர் -9181, 3.)அணைக்கட்டு -6360, 4.)குடியாத்தம் -6901, 5.)கலசப்பாக்கம் -9222, 6.)விக்கிரவாண்டி -9573, 7.)சேலம் வடக்கு -7588, 8.)ஈரோடு கிழக்கு -8904, 9.)காங்கேயம் -7331, 10.)குன்னம் -6329 , 11.)நாகப்பட்டினம் -7238, 12.)மதுரை தெற்கு -6515, 13.)ஆண்டிப்பட்டி -8538, 14.)ஒட்டப்பிடாரம் -8510

மொத்தமாக 1,11,879 வாக்குகள் வித்தியாசத்தில் 14 தொகுதிகள் இழப்பு

மொத்தமாக 10 ஆயிரம் வாக்குகளுக்கும் கீழ் 43 தொகுதிகளில் 1,98,369 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக ஆட்சியை இழந்திருக்கிறது. 2021-ல் ஆட்சி அதிகாரம் இருந்தும் இப்படிப்பட்ட தோல்வி ஏற்பட்டுள்ளது.

அதிமுக தொண்டர்கள் பரிசோதித்து பார்க்க வேண்டும் இந்த 43 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தால் அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்திருக்கும், எடப்பாடி பழனிசாமி என்கிற தனிநபரின் சுயநலம் தான் மட்டுமே அதிமுக என்று நிலைநிறுத்த முயற்சிப்பது, தன் சொல்லுக்கு எல்லோரும் கட்டுப்படவேண்டும் என்பது, விட்டுக்கொடுத்து அனுசரித்து அனைவரையும் அரவணைத்து செல்லுகிற பண்பு இல்லாத காரணத்தால் 2021-ல் ஆட்சியை இழந்தோம்.

அதை உணர்ந்து தான் ஒன்றுபட்ட அதிமுக உருவாக வேண்டும் என்று முயற்சித்து ஒருங்கிணைப்புக்குழு செயல்பட்டு வருகிறது. 2026-லாவது அதிமுக ஆட்சி அமைக்கவேண்டும் என்றால் ஒன்றுபட்ட அதிமுக உருவாக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Share on:

அரசு சட்ட கல்லூரிகளில் காலி பணியிடங்கள்! சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அரசு சட்ட கல்லுரிகளில் காலியாக உள்ள இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், பேராசிரியர்கள் தேர்வு தொடர்பாக விதிமுறைகளை வகுக்க நிபுணர் குழுவையும் நியமித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லுரிகளில் காலியாக உள்ள இணைப் போராசிரியர் பணிக்கு நேரடி நியமனங்கள் மேற்கொள்ளக் கோரி வசந்தகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் சட்டக்கல்வி இயக்குனர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்டக் கல்லூரிகளில், அனுமதிக்கப்பட்ட 20 இணை பேராசிரியர் பணியிடங்களில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், மொத்தமுள்ள 206 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில், 70 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த், சட்டக் கல்லூரிகளில் காலியாக இருக்கும்…

Share on:

Continue Reading

உண்ணாவிரத போராட்டங்களுக்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை.. சென்னை ஐகோர்ட் கருத்து!


உண்ணாவிரத போராட்டங்களுக்கு அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதியில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாம்சங் ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், சிஐடியு தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில், தொழிற்சங்கத்தை துவங்கி, அதை பதிவு செய்யக் கோரி விண்ணப்பித்தனர். சங்கத்தை பதிவு செய்யாததால் வழக்கு தொடர்ந்தனர்.

இதற்கிடையே, சங்கத்தை பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 91 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதியளிக்க உத்தரவிடக் கோரி, காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு செயலாளர் முத்துக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதி இல்லை என நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து, முழக்கம் எழுப்பி போரட்டத்தில் ஈடுபட அனுமதி அளிக்குமாறு மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. பின்னர், இந்த மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணயை வரும் நவம்பர் 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Share on:

ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு…


பல்வேறு சேவைகளை ரேஷன் கடை ஊழியர்கள் செய்தாலும், அவர்கள் ஒரே துறையின் கீழ் இல்லாமல் நான்கு துறைகளின் கீழ் உள்ளார்கள். இதனால் துறை ரீதியாக பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக கூறி வருகிறார்கள். இந்நிலையில் பொதுவினியோக திட்டத்திற்கு தனித்துறை ஏற்படுத்தக்கோரி ரேஷன் கடை ஊழியர்கள் வரும் நவம்பர் 7-ந்தேதி வேலை நிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறினார்.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 34,790 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன . இவற்றில் 33,377 கடைகள் கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படுகிறது. இதில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள முழு நேரக் கடைகள் 18,782 ஆகவும், பகுதி நேரக் கடைகள் 9,388 ஆகவும், ஆயிரம் முதல் ஆயிரத்து 500 குடும்ப அட்டைகள் கொண்ட முழு நேரக் கடைகள் 4,352 ஆகவும் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளுக்கு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து அனைத்து மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு, தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, ஆயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தில் அரிசி, கோதுமை, சர்க்கரை, சிறப்பு பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு, பாமாயில் விநியோகம் செய்யப்படுகிறது. அரிசியும், கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. சர்க்கரை ரூ.25, பருப்பு ரூ.30, பாமாயில் ரூ.25-க்கு வழங்கப்படுகிறது. அரசின் திட்டம் மூலம் 2 கோடியே 23 லட்சத்து 74 ஆயிரத்து 842 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுகிறார்கள். அதாவது சுமார் 7 கோடி மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

ரேஷன் கடைகள் என்பது தமிழ்நாட்டில் வங்கிகளைவிடவும் மக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளன. மக்களுக்கு தேவையான பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் உள்பட ரொக்கப்பணம் கூட ரேஷன் கடைகள் மூலமே விநியோகம் செய்யப்படுகிறது. ரேஷன் கடைகளில் புதிதாக வங்கி சேவையை ஆரம்பிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இப்படி பல்வேறு சேவைகளை ரேஷன் கடை ஊழியர்கள் செய்தாலும், அவர்கள் ஒரே துறையின் கீழ் இல்லாமல் நான்கு துறைகளின் கீழ் உள்ளார்கள். இதனால் எல்லாருக்குமே பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் பொதுவினியோக திட்டத்திற்கு தனித்துறை ஏற்படுத்தக்கோரி ரேஷன் கடை ஊழியர்கள் வரும் நவம்பர் 7-ந்தேதி வேலை நிறுத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்கள்.

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டில் பொது வினியோக திட்டம் 4 துறைகளின் நிர்வாகத்தில் இயங்கி வருகிறது. இதனால் பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறையையும் திருப்திபடுத்த வேண்டிய நிலையில் ரேஷன் கடை பணியாளர்கள் உள்ளனர். எனவே, பொது வினியோக திட்டத்துக்கு என தனித்துறை உருவாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 7-ந்தேதி மாநிலம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளையும் பூட்டி விட்டு, ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளோம். அன்று மாவட்ட தலைமையிடங்களில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம்” என்று கூறினார்.
Share on:

தொடரும் வாயுக் கசிவு! 9 மாணவிகளுக்கு மயக்கம்! சென்னை திருவொற்றியூர் பள்ளி தற்காலிகமாக மூடல்


சென்னை திருவொற்றியூர் விக்டரி பள்ளியை திறந்த முதல் நாளிலேயே வாயு கசிவால் 9 மாணவிகள் மயங்கி விழுந்ததை அடுத்து பள்ளியை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை திருவொற்றியூரில் விக்டரி பள்ளியில் கடந்த மாதம் 25 ஆம் தேதி திடீரென வாயுக் கசிவால் 35 மாணவர்கள் மயங்கி விழுந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்த நிலையில் பள்ளிக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே பள்ளியை திமுக எம்பி கலாநிதி வீராசாமி, பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் விக்டரி பள்ளி 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் திறப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து பள்ளி நிர்வாகத்துடன் இன்று காலை வாக்குவாதம் செய்தனர். வாயுக் கசிவு எதனால் வந்தது, அதை சரி செய்தாகிவிட்டதா போன்ற எந்த கேள்விகளுக்கும் விடைச் சொல்லாமல் பள்ளியை திறக்கக் கூடாது என வாக்குவாதம் செய்தனர்.

அப்போது சில மாணவிகள் தங்கள் வகுப்பறைக்குச் சென்றனர். அப்போது அவர்களில் 9 மாணவிகளுக்கு அடுத்தடுத்து வாந்தி மயக்கம் ஏற்பட்டது. சிலருக்கு மூச்சுத்திணறலும் இருந்ததால் பதறிய பெற்றோர் குழந்தைகளை தூக்கிக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளியை கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து வாயுக் கசிவிற்கான காரணத்தை கண்டறியும் வரை பள்ளியை தற்காலிகமாக மூடுமாறு உத்தரவிட்டனர்.
Share on:

தமிழகத்தில் 6.27 கோடி வாக்காளர்கள்.. எந்த சட்டசபை தொகுதியில் அதிகம்? எங்கு குறைவு?


தமிழகம் முழுவதும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் மாநிலத்தில் மொத்தம் 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி எது? குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதி எது? என்பது பற்றிய முக்கிய தகவலும் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 18 வயது பூர்த்தியானவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து ஓட்டளிக்கும் உரிமையை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி கொடுத்து வருகிறது. அந்த வகையில் 2025 ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தபணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி முதல் கடந்த 18 ம் தேதி வரை பல்வேறு பணிகள் நடந்தது.

குறிப்பாக வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை வாக்குச்சாவடி நிலை அலுவலர் சரிபார்த்தனர். அதோடு வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, வாக்காளர் பட்டியல் மற்றும் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் என்பது www.elections.tn.gov.in எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வரைவு வாக்காளர் பட்டியலின்படி பார்த்தால் தமிழகத்தில் மொத்தம் 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது 3.07 கோடியாக உள்ளது. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது 3.19 கோடியாக இருக்கிறது. இதன்மூலம் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர். 3ம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை என்பது 8,964 என்று உள்ளது.

அதேபோல் ஒரு தொகுதியில் அதிகபட்ச வாக்காளர்கள் உள்ளனர் என்றால் அந்த தொகுதியின் பெயர் சோழிங்கநல்லூர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதியில் மொத்தம் 6.76 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது 3.38 லட்சமாகவும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.37 லட்சமாகவும் உள்ளது. 3 ம் பாலினத்தவர்கள் 125 பேர் உள்ளனர்.

மேலும் குறைந்த வாக்காளர்கள் என்றால் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டசபை தொகுதியில் தான் உள்ளனர். இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது 1.73 லட்சம் என்ற அளவில் உள்ளது. இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 85,065 ஆக உள்ளது. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது 88,162 ஆக உள்ளது. 3ம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 3 என்று உள்ளது.

அதேபோல் சென்னை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் வெளியிட்டார். சென்னை மாவட்டத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளில் 19.41 லட்சம் ஆண்கள், 20.09 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்ளனர். சென்னையில் மொத்தம் 39,52,498 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இன்று வெளியான வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. அதனை பொதுமக்கள் பார்த்து தங்களின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். ஒருவேளை பெயர் விடுபட்டு இருந்தால் 16.11.2024, 17.11.2024, 23.11.2024, 24.11.2024 உள்ளிட்ட தேதிகளில் வாக்குச்சாவடிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று சேர்க்கலாம். அதேபோல் 2025 ஜனவரியில் 18 வயதை எட்ட உள்ளவர்களும் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யவும், திருத்தம் செய்யவும் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளலாம்.
Share on:

விஜய் பேச்சால் அதிமுகவுக்குதான் உண்மையான ஆபத்து.. அப்போ எடப்பாடி!


விஜய் திமுக, பாஜகவையும் எதிர்ப்பதாக சொல்லியிருப்பதனால் அதிமுகவுக்கு ஆபத்து இல்லை என்று நினைக்க வேண்டாம். விஜய் பேச்சால் அதிமுகவுக்கு தான் உண்மையான ஆபத்து என்று முன்னாள் அமைச்சர் கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், ஒன்றுபட்ட அதிமுக ஒன்றே இதற்கு தீர்வு என்றும், அதை நோக்கி பயணிப்பாரா எடப்பாடி பழனிசாமி என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் விஜய் பேசியது தமிழக அரசியலில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. திமுக, பாஜகவை நேரடியாக விமர்சித்து பேசிய விஜய், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்க கூடிய அதிமுகவை பற்றி ஒருவார்த்தை கூட சொல்லவில்லை. சொல்லப்போனால், மறைமுகமாக கூட தாக்கி பேசவில்லை.

வரும் காலத்தில், அரசியல் கள சூழல் மாறினால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க கூடிய நிலை கூட வரலாம் என்பதால் விஜய், அதிமுக குறித்து பேசுவதை தவிர்த்து இருக்கலாம் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. இத்தகைய சூழலில், அதிமுக எம்பியாக இருந்தவரும் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பு குழுவில் செயல்பட்டு வருபவருமான கேசி பழனிசாமி. விஜய்யால் அதிமுகவிற்கு தான் அதிக ஆபத்து என சொல்லியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

விஜயின் நேற்றைய மாநாட்டு செய்தி வெளிப்படையாக பாஜக சித்தாந்தத்தையும், திமுகவின் ஊழலையும் எதிர்ப்பதாக இருந்தாலும். இந்த 2 கட்சிகளையும் விட அதிமுகவுக்கு தான் அதிகமான ஆபத்து சூழ்ந்துள்ளது என்பதை உணர வேண்டும்.

* எடப்பாடி பழனிசாமி தனது காலத்தோடு அதிமுகவுக்கு முடிவுரை எழுதுகிறாரா? என்கிற அச்சம் அனைத்து அதிமுக தொண்டர்களுக்கும் ஏற்படுத்துகிறது. பாஜகவை எதிர்த்து சிறுபான்மையினர் வாக்குகளை கவர நினைத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் விஜயின் நேற்றைய பேச்சுக்கள் அதிமுகவுக்கு வருகிற திமுக எதிர்ப்பு வாக்குகளையும் பாஜக எதிர்ப்பு சிறுபான்மையினர் வாக்குகளையும் குறிவைப்பதாகவே அமைந்தது.

* நேற்று விஜய் சொன்ன “வலுவான தலைமை இல்லாமல் ஒரு சின்ன பையன் தலைமையில் போரை சந்தித்த பாண்டிய வம்சத்தின் “கதையின் அர்த்தம் திமுகவையும் பாஜகவையும் ஒருசேர எதிர்த்து நின்று வெல்லுகிற ஆற்றல் இன்றைய அதிமுக தலைமைக்கு இல்லை என்பதைத் தான் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார். அந்த இடத்தை தான் நிரப்பப் போவதாக சூளுரைத்திருக்கிறார். இதையே தான் ஜெயலலிதா அம்மா மறைவுக்கு பிறகு வெற்றிடம் உள்ளது என்று எல்லோரும் தெரிவித்தார்கள்.

* அப்பொழுது EPS அந்த வெற்றிடத்தை நிரப்பிவிடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள் ஆனால் நேற்றைய விஜய்யின் பேச்சு EPS-ம் அந்த வெற்றிடத்தை நிரப்பவில்லை, அது இன்றும் வெற்றிடமாக தான் உள்ளது அந்த இடத்தை நிரப்ப தான் களத்திற்கு வந்திருப்பதாக விஜய் பேசியிருக்கிறார்.

* கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு என்று தெரிவித்திருக்கிறார், 50 ஆண்டுகால அரசியலில் 30 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆண்ட அதிமுக விஜய் தலைமையில் ஆட்சி அமைய கூட்டணி கட்சியாக விஜயோடு இணைய முடியுமா? அல்லது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய விஜய் முன்வருவாரா?

* இதுவரைக்கும் எடப்பாடி பழனிசாமி தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம் என்று சொல்லவில்லை. அவர் சொன்னதெல்லாம் பலமான, வலிமையான, மெகா கூட்டணியை அமைப்போம் என்று கூட்டணியை தான் நம்பி இருந்தார். ஆனால் விஜயின் நேற்றைய பேச்சின் மூலம் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருவேளை அணிமாற நினைத்தால் விஜயை நோக்கித்தான் செல்வார்களே தவிர எடப்பாடியை நாடி வர வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதில் எப்படி அவர் வலிமையான கூட்டணியை அமைக்க போகிறார். அல்லது இதற்கு மாற்றாக என்ன திட்டம் வைத்திருக்கிறார் EPS?

* EPS தரப்பிலிருந்து பலர் ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் போன்று ஒரு கூட்டணியை ஏற்படுத்தலாம் என்கிற கருத்தை தெரிவிக்கிறார்கள். ஆனால் ஆந்திர அரசியல் வேறு தமிழக அரசியல் வேறு. சந்திரபாபு நாயுடு இதற்கு முன்பு அவர் தலைமையில் களம் கண்டு வென்று ஆட்சி அமைத்திருக்கிறார். வெற்றி தோல்வி என இரண்டையும் சந்தித்திருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி இதுவரை வெற்றியே காணாத தலைவராக வரலாறு படைத்துக்கொண்டிருக்கிறார்.

* அதையும் தாண்டி ஒருவேளை அதிமுக-தவெக கூட்டணி அமைந்தாலும் கூட அது ஒட்டுமொத்த அதிமுகவை விஜய்க்கு தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு அதற்கு பிரதிபலனாக சில காலம் EPS முதலமைச்சர் பதவியை அனுபவித்து அவரும் அவரோடு இருக்கிற முன்னாள் அமைச்சர்கள் தங்களை மேலும் வளப்படுத்திக்கொள்ளலாமே ஒழிய அதிமுக அதில் பலப்படாது மாறாக பலவீனம் தான் அடையும், மேலும் தன் தனித்துவத்தை இழக்கும்.

* விஜய் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் எனக் கூறும்பொழுது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரையும், என்.டி.ஆரையும் குறிப்பிட்டு சொல்லுகிறார், அவர்களை போற்றுகிறார்.ஆனால் ஜெயலலிதா அம்மாவை பற்றி எந்த ஒரு கருத்தும் அவர் குறிப்பிடவில்லை. அப்படியென்றால் எம்.ஜி.ஆர் காலத்து அதிமுக முன்னணியினரையும், தொண்டர்களையும், வாக்குவங்கியையும் அவர் கவர நினைக்கிறார். அம்மா காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்களை ஊழல்வாதிகளாகவே அவர் சித்தரிக்கிறார்.

* தமிழகத்தை மாற்று அரசியல் களத்திற்கு தயார்படுத்த முயல்கிறார். வெற்றியோ தோல்வியோ திமுக இதை எதிர்கொள்ளும், ஆனால் இரண்டும்கெட்டான் நிலையில் அதிமுக பயணிக்க கூடாது. வலுவான தடுப்பு ஆட்டத்தை, தன் பலத்தை உயர்த்திக்கொள்கிற யுக்தியை, இழப்புகள் ஏற்படாமல் தடுக்கிற செயல்களை செய்ய முன்வருவாரா எடப்பாடி பழனிசாமி? ஒன்றுபட்ட அதிமுக ஒன்றே இதற்கு தீர்வாகும். அதை நோக்கி பயணிப்பாரா எடப்பாடி பழனிசாமி? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Share on: