எடப்பாடி பழனிசாமி வரும் 15 ஆம் தேதி ஆஜராக சம்மன்! அவதூறு வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


அதிமுகவின் முன்னாள் எம்பி கே.சி பழனிசாமி தொடர்ந்த குற்றவியல் அவதூறு வழக்கில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 15 ஆம் தேதி ஆஜராகும்படி கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்தது. தேர்தல் தோல்வி குறித்து கடந்த 2024 ம் ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது, அதிமுகவின் தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான் என்று விமர்சனம் செய்திருந்தார்.

கே.சி.பழனிசாமியின் விமர்சனம் குறித்து அப்போது கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “என்னை விமர்சனம் செய்த கே.சி.பழனிச்சாமி அதிமுக உறுப்பினரே கிடையாது. ரோட்டில் போவோர், வருபவர் எல்லாம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஆகிவிட முடியாது. அவர் பேசுவதற்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது,” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்து தம்மை அவமதிப்பதாக கருதிய கே.சி.பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது, கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இது குறித்து கே.சி.பழனிசாமியிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தியிருந்தது. விசாரணையின் போது தாம் அதிமுகவில் இருப்பதையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததற்கான ஆதாரங்களையும் அவர் சமர்பித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கான முகாந்திரம் இருப்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து இந்த வழக்கு கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கே சி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சிவக்குமார் ஆஜரானார். இதனைத் தொடர்ந்து குற்றவியல் அவதூறு வழக்கில் வரும் 15ஆம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணைக்கு எடப்பாடி பழனிசாமி ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Share on:

கோவையில் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் வந்த காரில் என்ன அது? அதிர்ந்த போலீசார்.. சிக்கிய 7 பேர் கும்பல்


கோவை பகுதியில் பெத்தமெட்டமைன், கொகைன் போன்ற உயர் ரக போதைப்பொருள் கடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் இருந்து போதைப் பொருளை கடத்தி வந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்று வந்தது தெரியவந்தது. ரூ.12 லட்சம் ரொக்கம், ரூ.50 லட்சம் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகம் முழுக்க போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும், தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றன. தமிழக அரசும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. மத்திய போதைத் தடுப்பு பிரிவு போலீசாரும் ரகசியமாக கண்காணித்து போதைப்பொருள் விற்பனையை தடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் கோவையில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கமிஷனர் சரவணசுந்தரத்தின் உத்தரவின் பேரில், கோவை ஆர் எஸ் புரம் பூ மார்க்கெட் பகுதியில் ரகசிய கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு காரில் வந்த சிலர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை விசாரிப்பதற்காக சென்றபோது, போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.

இதையடுத்து தப்பி ஓட முயன்ற 7 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில், முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதையடுத்து அவர்கள் 7 பேரையும் கைது செய்த போலீசார், போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் 7 பேரும் சேர்ந்து கோவை மட்டுமல்லாமல் தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் உயர் ரக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

மேலும் இந்த சம்பவத்தில் கோவை பொருளாதார குற்றப்பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் விஜயலட்சுமியின் மகன் மகா விஷ்ணு (வயது 28), விநாயகம், மணிகண்டன், கிருஷ்ணகாந்த், ஆதர்ஷ், ரோகன் ஷெட்டி மற்றும் ரித்திஷ் ஆகிய 7 பேர் என்பதும் தெரியவந்தது. விசாரணையில் மும்பையில் இருந்து போதைப்பொருளை கடத்தி வந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளனர்.

இது தொடர்பாக காரில் நடத்தப்பட்ட சோதனையில், மெத்தபெட்டமைன், கொக்கைன் போன்ற உயர் ரக போதைப் பொருட்களை இவர்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. ரூ.50 லட்சம் மதிப்பிலான இந்த போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ரூபாய் 25 லட்சம் ரொக்கம் மற்றும் 12 செல்போன்கள், 3 கார்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பொருட்களின் மதிப்பு ரூ.80 லட்சம் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து 7 பேரும் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Share on:

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. தமிழக அரசின் சமூக நலத்துறை செயலாளர் ஆஜராக உத்தரவு


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை செயலாளர் ஜெயஶ்ரீ முரளிதரன் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விக்ரம் என்பவரின் தாய் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்தார். இதனையடுத்து கருணை அடிப்படையில் தமக்கு அந்த வேலையை வழங்கக்கோரி விக்ரம் மனு அளித்தார்.

கருணை அடிப்படையில் பெண் வாரிசிகளுக்கு மட்டுமே அங்கன்வாடி ஊழியர் வேலை வழங்க முடியும் எனக்கூறி விக்ரமின் மனு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து விக்ரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், பெண் வாரிசுகளுக்கு மட்டுமே கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்ற அரசானையை உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் தனக்கு வேலை மறுக்கப்பட்டதாக கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கருணை அடிப்படையில் விக்ரமுக்கு வேலை வழங்குவது குறித்து எட்டு வாரங்களில் முடிவெடுக்கும்படி கடந்த 2024ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்தவில்லை எனக்கூறி விக்ரம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ஏப்ரல் ஒன்றாம் தேதி நேரில் ஆஜராகுமாறு சமூக நலத்துறை செயலாளர் ஜெயஶ்ரீ முரளிதரனுக்கு உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.
Share on:

ஆசிரியர்கள் பணியிடங்கள்.. மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்


கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறப்பு குழந்தைகளுக்கான ஆசிரியர்களாக 2002 ம் ஆண்டு தொகுப்பூதியம் அடிப்படையில் 1800 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு குழந்தைகளுக்கான, ஆசிரியர்கள், நிரந்தர பணியிடங்களாக உருவாக்க கோரி 723 சிறப்பு ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறப்பு குழந்தைகளுக்கான ஆசிரியர்களாக 2002 ம் ஆண்டு தொகுப்பூதியம் அடிப்படையில் 1800 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 4,500 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட இவர்கள், தற்போது 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமும், 5 ஆயிரம் ரூபாய் போக்குவரத்து செலவுக்காகவும் அரசிடம் இருந்து பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், சிறப்பு குழந்தைகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக உருவாக்க கோரி 723 சிறப்பு ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, சி.வி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான, வழக்கறிஞர் கவிதா ராமேஷ்வர், தமிழக முழுவதும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் சிறப்பு குழந்தைகள் இருக்கிறார்கள். 10 குழந்தைகளுக்கு 1 ஆசிரியர்கள் என்ற விகிதத்தின் அடிப்படையில் தமிழகத்தில் 13 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு பணியிடத்தை கூட உருவாக்காத மாநில அரசு 1800 பேரை சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் கீழ் தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்துள்ளது என்று வாதிட்டார்.

மேலும் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, மருத்து விடுப்பு உள்ளிட்ட எந்த சலுகைகளும் வழங்கப்படுவதில்லை என்றும் கூறினார். மேலும் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வாதத்தை கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி கார்த்திகேயன், இந்த மனுவுக்கு ஏப்ரல் 21 ம் தேதி பதிலளிக்க மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.
Share on:

முல்லைப் பெரியாறு அணையில் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு.. கோரிக்கைகளை அடுக்கிய தமிழகம்.. கேரளா முரண்டு..!


முல்லைப் பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தலைமையிலான புதிய கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் மற்றும் கேரள தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. முன்னதாக கேரளா நோக்கிச் செல்ல முயன்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட மூவர் குழு மற்றும் ஐவர் குழு கலைக்கப்பட்டது.தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மூலமாக புதிய குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி,தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்புக் குழுவை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் நியமித்தது.

இக்குழுவில் தமிழ்நாடு அரசு பிரதிநிதிகளாக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்ரமணியன், கேரள பிரதிநிதிகளாக அம்மாநில நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டிங்கு பிஸ்வால், நீர்ப்பாசனத் துறை தலைமைப் பொறியாளர் பிரியேஷ் மற்றும் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவன ஆய்வு அதிகாரி ஆனந்த் இராமசாமி, டெல்லியில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை குழு அதிகாரி விவேக் திரிபாதி என 7 பேர் கொண்ட குழுவினர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த புதிய கண்காணிப்புக் குழுவினர் தங்களது முதல் ஆய்வை இன்று முல்லைப்பெரியாறு அணையில் மேற்கொண்டனர். இதற்காக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி படகுத்துறைக்கு வந்த கண்காணிப்புக் குழுவினர் தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளுக்குச் சொந்தமான படகில் அணைக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இதில் முல்லைப்பெரியாறு பிரதான அணை,பேபி அணை, கேலரி, மதகுகள், சுரங்கப் பாதை மற்றும் சீப்பேஜ் வாட்டர் எனப்படும் கசிவு நீர் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்ய உள்ளனர். அதனைத் தொடர்ந்து இன்று மாலை குமுளி 1 ஆம் மைல் பகுதியில் உள்ள கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முல்லைப் பெரியாறு அணைக்கு வல்லக்கடவு வழியாக தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும், பொதுப் பணித் துறை அதிகாரிகள் எந்த தடங்கலும் இன்றி சென்று வர வேண்டும், முல்லைப் பெரியாறு அணையில் மராமத்து பணிகள் மேற்கொள்ள கேரள அரசு முட்டுக்கட்டை போடக் கூடாது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பேபி அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள முதல்கட்டமாக 13 மரங்களை வெட்ட அனுமதிக்க வேண்டும், பேபி அணையை பலப்படுத்தும் பணிகளை உடனே தொடங்க அனுமதிக்க வேண்டும், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்த வேண்டும்,கேரளா போலீஸ் ஆரை அணைப்பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தமிழக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கமிட்டியினர் முதல்முறையாக ஆய்வு செய்ய உள்ள நிலையில்,கேரள தரப்பில் அணை பாதுகாப்பு மற்றும் உறுதித் தன்மை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளையும் எழுப்பியதாகக் கூறப்படுக்கிறது.
Share on:

கோவையில் எரிந்த நிலையில் ஆசிரியையின் உடல்! வீட்டிலிருந்து 400 மீட்டர் தூரத்தில் என்ன நடந்தது?


கோவையில் எரிந்த நிலையில் பெண் ஆசிரியர் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கொலையா இல்லை தற்கொலையா என்று போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கோவை, மதுக்கரை அருகே நாச்சிபாளையம் பகுதியில் பெண்ணின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவம் குறித்து மதுக்கரை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் பெயர் பத்மா (56). வழுக்குபாறை அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வந்ததும், இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் என, இரு குழந்தைகள் உள்ளனர் என்பதும் தெரியவந்தது.

இவரின் மகள் வழக்கறிஞராக இருப்பதாகவும், மகன் கல்லூரி படிப்பு படித்துக் கொண்டிருப்பதாகவும், பள்ளிக்கூடம் செல்வதாக வீட்டிலிருந்தவர்களிடம் கூறி அவர் கிளம்பி சென்றதாக தெரிகிறது.

ஆனால் வீட்டில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள, குப்பை எரிக்கும் இடத்தில் இவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணத்திலும் டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள மக்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர்.

பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே இறப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்றும் சொல்லப்படுகிறது. வீட்டுக்கு அருகே குப்பை எரிக்கும் இடத்தில் ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் போலீஸார் எரித்துக் கொலை மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஈச்சனாரி பகுதியில் நேற்று மதியம் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத வாலிபர் உடல் கிடப்பதாக பெருங்குடி போலீசாருக்கு தகவல் வந்த நிலையில் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

மதுரையில் போலீஸார் எரித்துக் கொலை

இந்த நிலையில் எரிந்த நிலையில் உயிரிழந்த இளைஞர் விருதுநகரை சேர்ந்த 36 வயதான மலை அரசன். இவர் சிவகங்கை காளையார் கோவில் காவல் நிலையத்தில் தனிப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கடந்த ஒன்றாம் தேதி வாகன விபத்தில் படுகாயம் ஏற்பட்டு சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து சிந்தாமணி பகுதியில் உள்ள மருத்துவமனையில் மனைவி குறித்த கட்டண ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வாங்குவதற்காக மலையரசன் வந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படும் நிலையில்., மருத்துவமனை பகுதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஈச்சனாரி பகுதியில் அவரது உடல் பாதி எரிந்து நிலையில் கிடைக்கப்பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் காவல்துறையினர் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
Share on:

கேஸ் சிலிண்டர் தொடர்பான கட்டணமில்லா தொலைபேசியில் இந்தியில் மட்டுமே பதில்.. தமிழ் மக்கள் ஏமாற்றம்


பலருக்கும் விருப்ப மொழியாக தமிழ் இருந்த போதிலும், கேஸ் சிலிண்டர் தொடர்பான புகாரை பதிவு செய்வதற்கான கட்டணமில்லா தொலைபேசியில் இந்தி மொழியில் மட்டுமே பதில் அளிக்கப்படுகிறது. இதனால் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்யும் தமிழ் வாடிக்கையாளர்கள் தங்களது புகாரை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கட்டணமில்லா தொலைபேசியில் எதிர்முனையில் பேசும் நபருக்கு இந்தியை தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை என்று வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

சமையல் கேஸ் சிலிண்டர்களை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், இந்துஸ்தான் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் விநியோகிக்கின்றன. பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவையான கேஸ் சிலிண்டர்களை மேற்கொண்ட நிறுவனங்களில் தான் வாங்குகிறார்கள். வெகுசிலரே அதுவும் கடைகளுக்குத்தான் தனியார் நிறுவன சிலிண்டர்களை வாங்குகிறார்கள்.

கேஸ் சிலிண்டர் வினியோகத்தில் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவிக்க வேண்டும் என்றாலோ அல்லது சிலிண்டர் முன்பதிவுக்கு பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது சிலிண்டர் வினியோக நிறுவனத்தில் ஆதாரை பதிவு செய்வது போன்ற பல்வேறு குறைகளுக்கு தீர்வு காண வாடிக்கையாளர்களுக்கு கட்டணமில்லா தொலைப்பேசி எண் உள்ளது. அதன்படி எண்ணெய் நிறுவனங்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க 1800-2333-55 எனப்படும் பொதுவான கட்டணமில்லா தொலைபேசி எண் அமலில் இருக்கிறது.

கேஸ் சிலிண்டர்கள் பிரச்சனை தொடர்பாக குறைகளுக்காக இந்த கட்டணமில்லா தொலைபேசியை பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் போது எதிர்முனையில் பேசுபவர் இந்தியில் மட்டுமே பேசுகிறார் என்று கூறப்படுகிறது, இதனால் இந்தி தெரியாதவர்கள் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் மொழி தொடர்பாக பிரச்சனைகளை சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இதுபற்றி வாடிக்கையாளர்கள் சிலர் கூறுகையில், எண்ணெய் நிறுவனங்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க 1800-2333-55 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளது.இதில் தொடர்பு கொண்டு பேசும் போது, இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 6 மொழிகளில் தாங்கள் எந்த மொழியில் பேச விரும்புகிறீர்கள் என வாடிக்கையாளரிடம் கணினி வழி குரல் மூலம் விருப்பம் கேட்கிறார்கள்.

அதன்படியே நாம் பேச விரும்பும் மொழியை தேர்வு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. தமிழ்மொழிக்கான குறியீட்டை அழுத்தி தமிழ் மொழி என்ற நமது விருப்பத்தை தெரிவித்தாலும் எதிர்முனையில் பேசுபவர் இந்தியில் மட்டுமே பேசுகிறார். அவரிடம், ‘தமிழ்…’ என சொன்னால் கொஞ்சம் பொறுத்திருங்கள், இணைப்பை தருகிறேன் என இந்தியில் பதில் சொல்கிறார். இப்படி நீண்ட நேரம் காத்திருந்தாலும் தமிழில் பதில் சொல்வதற்கு யாரும் இல்லை. இதனால் வாடிக்கையாளர்கள் தமிழில் புகார் அளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் இணைப்பை துண்டிக்கும் நிலை ஏற்படுகிறது என்றார்கள்.

கட்டணமில்லா தொலைபேசியில் எதிர்முனையில் பேசும் நபருக்கு இந்தியை தவிர வேறு எந்த மொழியும் தெரியாத நிலை இருப்பதாகவும். சாதாரண ஆங்கிலத்தில் கூறினால் கூட எதிர்முனையில் பேசுபவர் அதை புரிந்து கொள்ள முடிவது இல்லை என்றும் தமிழில் பேச யாரும் இருப்பது இல்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது தமிழ்நாட்டில் புதிய சர்ச்சையாகி உள்ளது

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு இண்டேன், பாரத் கேஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் ஆகியவற்றின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கான இலவச தொலைபேசி அழைப்பில் (1800 2333 555) தொடர்பு கொண்டு பேசும் போதெல்லாம் இந்தியில் மட்டுமே பதிலளிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. இதுவும் ஒரு நவீன இந்தித் திணிப்பு தான். இதை அனுமதிக்க முடியாது.

தமிழ்நாட்டில் வணிகம் செய்யும் இந்த நிறுவனங்கள் தமிழ் மொழியில் சேவை வழங்க வேண்டும். இலவச தொலைபேசி அழைப்பைத் தொடர்பு கொள்பவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பதில் அளிக்கும் வாய்ப்பு இருக்கும் போதிலும் கூட, இந்தியில் மட்டும் தான் பதில் அளிக்கப்படுகிறது. தமிழில் உரையாட வேண்டும் என்று தெரிவித்தால் மீண்டும் தொடர்பு கொள்வதாகக் கூறி அழைப்பு துண்டிக்கப்படுகிறது. இதைத் திட்டமிட்ட இந்தித் திணிப்பாகவே பார்க்க வேண்டும்.

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும், ஆங்கிலத்திலும் பதிலளிக்க மறுப்பதை எண்ணெய் நிறுவனங்கள் நியாயப்படுத்த முடியாது. தமிழில் சேவை வழங்காமல் இந்தியில் மட்டுமே சேவை வழங்குவதற்காக எரிவாயு நிறுவனங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இந்தித் திணிப்பைக் கைவிட்டு, தமிழ், ஆங்கிலம் மற்றும் அனைத்து மாநில மொழிகளிலும் வாடிக்கையாளர் சேவை வழங்கப்படுவதை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Share on:

கேஸ் முடிவதை நினைச்சுகூட பார்க்க முடியாது.. செந்தில் பாலாஜிக்கு எதிராக வாதம்! தேதி குறித்தது ஐகோர்ட்


அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரிய மனு மீது மார்ச் 21 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, முழுமையான விசாரணை நடத்திய மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்டோருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தனர். இந்த கூடுதல் குற்றப்பத்திரிகைகளை இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க சென்னை எம்.பி எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், மனுவில் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ள நிலையில் அது குறித்து விரிவாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே அவகாசம் கேட்பதாக குற்றஞ்சாட்டினார்.

வேறு வேறு பதவிகளுக்காக பணம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை இணைத்து விசாரிக்க விசாரணை நீதிமன்ற நீதிபதிக்கு அதிகாரம் இல்லை எனவும் அப்படி விசாரித்தால் விசாரணை எப்போது முடியும் என நினைத்துக் கூட பார்க்க முடியாது எனக் கூறினார்.

இதனையடுத்து, இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மார்ச் 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார்.
Share on:

ஆன்லைன் ரம்மி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மார்ச் 21 வரை அவகாசம் – நீதின்றம் உத்தரவு


ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கி, நேரக் கட்டுப்பாடு விதித்து பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளை எதிர்த்த வழக்குகளில், மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க மார்ச் 21 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன் லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்தது செல்லும் என தீர்ப்பளித்தது.

அதேசமயம், திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், ஆன் லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடுவதற்கான வயது, நேரம் உள்ளிட்டவை தொடர்பாக அரசு விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில், இந்த சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து பிப்ரவரி 14ம் தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. அதில், ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கியதையும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்க கூடாது என நேர கட்டுப்பாடு விதித்ததையும் எதிர்த்து ப்ளே கேம்ஸ் 24*7 பிரைவேட் லிமிட்டெட், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எஸ்போர்ட் ப்ளேயர்ஸ் நலச்சங்கம் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது மத்திய – மாநில அரசுகள் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மார்ச் 21 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என அவகாசம் வழங்கி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளி வைத்தனர். மார்ச் 17ம் தேதி முதல் விசாரணை துவங்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Share on:

கோவை வனத்துறை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வடமாநிலத்தவர்.. மொத்தமாக சிக்க வைத்த சின்ன விஷயம்.


கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் செயல் பட்டு வருகிறது. இந்த நிறுவனமானது மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இங்கு டெக்னீசியன் பதவிக்கான தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக வடமாநிலங்களை சேர்ந்த 8 பேரை கோவை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். அப்படி சிக்கினார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனமானது மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இங்கு வனத் துறையினருக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் பணியாற்ற பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக வடமாநில இளைஞர்கள் ஏராளமானோர் இந்த பணிக்கு விண்ணப்பிக்கிறார்கள்.. அந்த வகையில் இங்குள்ள எம்.டி.எஸ். துறையில் டெக்னீசியன், டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. இந்த பணிக்கு எழுத்து தேர்வு கடந்த மாதம் 8, 9 – ந் தேதிகளில் நடந்தது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி உத்தரபிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

இதில் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதன்படி நேற்று கோவையில் நடைபெற்ற நேர்முக தேர்வில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வந்திருந்தார்கள். அப்போது ஒரு சிலரின் புகைப்படம் மற்றும் கைரேகை சரிபார்க்கப்பட்டிருந்தது. அதில் எழுத்து தேர்வு நடந்த போது சேகரித்த கைரேகைக்கும், நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வந்தவர்களிடம் பெறப்பட்ட கைரேகைக்கும் வேறுபாடு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 8 பேரும் ஆள் மாறாட்டம் செய்து தங்களது பெயரில் வேறு நபர்களை தேர்வு எழுத வைத்தது தெரியவந்திருந்தது.. இதுகுறித்து மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன அதிகாரிகள் கோவை சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரிஷிகுமார் (வயது 26), பிபன்குமார் (26), பிரசாந்த் சிங் (26), நரேந்திரகுமார் (24), ராஜஸ்தானை சேர்ந்த லோகேஷ் மீனா(24), அசோக்குமார் மீனா (26), அரியானாவை சேர்ந்த சுப்ராம்(26), பீகாரை சேர்ந்த ராஜன் கார் காண்ட் (21) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

மேலும் இவர்களுக்கு ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத உதவியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் நடைபெற்ற வனத்துறை தேர்வில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Share on: