எடப்பாடி பழனிச்சாமிக்கு தண்டனை உறுதி: கே.சி.பழனிசாமி நம்பிக்கை!


முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. நீதிமன்றம் வழக்கை மே 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. தனக்கு இந்த வழக்கில் உரிய தண்டனை கிடைக்கும் என்று கே.சி.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தன்னை அவதூறாக பேசியதாக கே.சி.பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். கே.சி.பழனிசாமி, கோவையின் முன்னாள் எம்.பி ஆவார். இந்த வழக்கை கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி இன்று நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் ஆஜரானார். கே.சி.பழனிசாமி நீதிமன்றத்திற்கு வந்தார். நீதிபதி வழக்கு விசாரணையை மே மாதம் இரண்டாம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

நீதிமன்ற வளாகத்தில் கே.சி.பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, எடப்பாடி பழனிச்சாமி மீதான அவதூறு வழக்கு குறித்து கருத்து தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஒரு பேட்டி அளித்தார். அதில், ஜெயலலிதா தன்னை கட்சியில் இருந்து நீக்கியதாகவும், “தெருவில் செல்பவர்” என்றும் கூறியதாக கே.சி.பழனிசாமி கூறினார்.

இது தொடர்பாக கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மூன்று வாய்ப்புகள் கொடுத்தும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் எந்த ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால், உயர் நீதிமன்றம் குற்ற வழக்கு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி வேண்டுமென்றே தன்னை அவதூறு செய்யும் வகையில் மீண்டும் பேசியதாக கே.சி.பழனிசாமி குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் மற்றொரு அவதூறு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

சட்டமன்ற கூட்டத்தொடர் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் அவருக்கு உரிய தண்டனை கிடைக்கும் என்று கே.சி.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார். தெருவில் செல்பவர் என்று எடப்பாடி பழனிச்சாமி தன்னை கூறியது, தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கே.சி.பழனிசாமி கூறினார்.
Share on:

அதிமுகவின் இறுதி யாத்திரை துவக்கம்! மாபெரும் தவறை செய்த இபிஎஸ்! கொதிக்கும் கே.சி.பழனிசாமி!


அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி. மத்திய பாஜக அரசுக்கு எதிராக பேசியதால் கடந்த 2018ம் ஆண்டு அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதன் பிறகு அக்கட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக கருத்துகள் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி என்று அமித்ஷா அறிவித்திருந்தாலும் கூட்டணி ஆட்சி என்பதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சுயநலத்திற்காகவும் வழக்குகளில் இருந்து தன்னையும் தன்னுடன் இருக்கும் முன்னாள் அமைச்சர்களையும் அவர்கள் குடும்பத்தையும் பினாமிகளையும் காப்பாற்றவேண்டும் என்பதற்காக 1972ல் துவக்கப்பட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அம்மா வழியில் #திராவிட சித்தாந்தங்களில் பயணித்த அதிமுகவை ஒட்டுமொத்தமாக பாஜகவிடம் ஒப்படைத்துவிட்டார்.

இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி என்று அமித்ஷா அறிவித்திருந்தாலும் கூட்டணி ஆட்சி என்பதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாஜக தமிழகத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆட்சி அமைப்பதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். கூட்டணி ஆட்சி என்பது 1980லேயே காங்கிரஸ் மற்றும் திமுகவால் முயற்சிக்கப்பட்டு தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒன்று.

அதேபோல ஒன்றுபட்ட அதிமுக உருவாக்கப்படவேண்டும் என்பதை எடப்பாடி பழனிசாமி விரும்பாமல், தன் கட்டுப்பாட்டில் மட்டுமே இந்த கட்சியை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி, தன் சுயநலத்திற்காக அதிமுகவின் இறுதி யாத்திரையை துவங்கிவிட்டார். இன்றைய நாள் அதிமுக வரலாற்றில் ஒரு #கருப்பு_நாள்.

“மோடியா? லேடியா?” என்று கேட்ட #ஜெயலலிதா அம்மாவின் ஆன்மா, “சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்ட இயக்கம்” என்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ஆன்மா மற்றும் இவர்கள் வழி வந்த ஒன்றரை கோடி தொண்டர்கள் இந்த மாபெரும் தவறை செய்த EPS & Co-க்களை மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Share on:

D-க்கு 2 வருடங்களாக டிமிக்கி கொடுத்த அசோக் குமார்.. ‘ஸ்விட்ச் ஆஃப்’ மோட்.. வெளியே வந்தது எப்படி?


சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட போது தலைமறைவான அசோக் குமார், சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அமலாக்கத்துறை, அசோக் குமாரை வலைவீசி தேடி வந்த நிலையில் அவர் சிக்கவில்லை.

2011 – 2015 வரையிலான காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசுப் போக்கு வரத்துக் கழகப் பணியாளர்களை நியமிப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2023 ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி ரெய்டுக்கு பிறகு செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, கரூர் ராம் நகரில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வந்த புதிய பங்களாவில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர், வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால், பலமுறை சம்மன் அனுப்பியும், அசோக்குமார் ஆஜராகாமல், தொடர்ந்து ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக தலைமறைவாகவே இருந்து வந்தார்.

அசோக் குமாரின் மொபைல் எண்கள் ஸ்விட்ச் ஆஃப் மோடிலேயே இருந்தன. அசோக் குமார் வெளி மாநிலத்தில் தலைமறைவாக இருப்பதாகவும், வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார் என்றும் தகவல்கள் பரவி வந்தன. இதற்கிடையே, கரூர் ராமேஸ்வரபட்டியில் வசிக்கும் தனது பெற்றோரை அசோக் குமார் அவ்வப்போது பார்த்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. எனினும், அவர் அமலாக்கத் துறையினரிடம் சிக்கவில்லை.

கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவர் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வெளியே வரவில்லை. இந்த வழக்கில் ஓராண்டுக்கும் மேலாகச் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு பலமுறை நிராகரிக்கப்பட்டது. ஒரு முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதி ஜெயசந்திரன், அசோக்குமார் தலைமறைவாக உள்ள நிலையில் ஜாமீன் கொடுக்க முடியாது என்றார்.

இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல கட்ட முயற்சிக்கு பிறகு ஒரு வழியாக ஜாமீன் பெற்றார் செந்தில் பாலாஜி. அதன் பிறகு செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து விடுதலை ஆனதும் அமைச்சராக மீண்டும் பதவியேற்றார். அப்போது அசோக் குமார் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அப்போதும் வெளியே வரவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியை ரகசியமாக சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

கரூர் – சேலம் புறவழிச்சாலையில் ராம் நகர் பகுதியில் கட்டப்பட்டு வந்த சொகுசு பங்களா கட்டப்பட்ட நிலம் வாங்கியதில் மோசடி இருப்பதாகவும், அந்த கட்டடத்திற்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு கட்டி வந்ததாகவும் புகார்கள் எழுந்தன. இந்த கட்டுமான பணிகளும் நிறுத்தப்பட்டன.

இந்தச் சூழலில் தான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுப்பிய சம்மனை தொடர்ந்து இன்று நேரில் ஆஜராகி உள்ளார் அசோக் குமார். அசோக் குமாருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நீதிமன்றம், ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் ஜாமீன் உத்தரவாத தொகையாக ரூ.2 லட்சம் செலுத்த அசோக்குமார் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது.
Share on:

ரெய்டு முடிந்த கையோடு.. அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரை அழைத்து சென்ற அமலாக்கத்துறை!


அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர் மற்றும் அவரது மகன் வீட்டில் நேற்றைய தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டை நடத்தினர். நேரு வீட்டில் நடந்த சோதனை நேற்று முடிந்த நிலையில், பிற இடங்களில் ரெய்டு இன்றும் தொடர்ந்தது. இதற்கிடையே இப்போது அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.

நேற்று காலை அமைச்சர் நேருவின் சகோதரருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனங்கள், மின் உற்பத்தி நிறுவனங்களின் சென்னை அலுவலகங்களில் ரெய்டு நடந்தது. நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் வங்கி கணக்கில் இருந்து நடந்த பணப்பரிமாற்றத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாகவே ரெய்டு நடந்ததாகச் சொல்லப்படுகிறது.

நேரு வீட்டில் நடந்த சோதனை நேற்று முடிந்த நிலையில், பிற இடங்களில் ரெய்டு இன்றும் தொடர்ந்தது. இதற்கிடையே அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்காக அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.

நேற்றைய தினம் கே.என்.நேரு, அவரது சகோதரர் மற்றும் அவரது மகன் இல்லங்களிலும் சோதனை நடைபெற்றது. இந்தச் சூழலில் தான் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கே.என்.நேருவின் உறவினர்கள் வீட்டில் தொடர்ந்து சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் தமிழகம் முழுதும் 20 இடங்களில் ரெய்டு நடந்தது. கே.என்.ரவிச்சந்திரனுக்கு சொந்தமான டிவிஹெச் நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடந்தது.

அதன்படி சென்னை பிஷப் கார்டன் பகுதியில் கே.என்.ரவிச்சந்திரனின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில் டிவிஹெச் நிறுவனத்தின் உரிமையாளர் என்ற முறையில் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அவரை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து விசாரிக்க உள்ளதாகத் தெரிகிறது.
Share on:

“ஞானசேகரன் தான் செய்தார் என்பதற்கு ஆதாரம் இருக்கு”.. கோர்ட்டில் சொன்ன போலீஸ் தரப்பு!


அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரங்கள் உள்ளதால் அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கூடாது என தமிழக அரசு போக்சோ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஞானசேகரன் என்பவர் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை விசாரிக்க 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அறிவித்தது. அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு சார்பில், ஞானசேகரனுக்கு எதிராக மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது எனவும் ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை காவல்துறை கூறியுள்ளதால், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் ஞானசேகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால், இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஞானசேகரன் நேரில் ஆஜர்படுத்தபட்டார். வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு காவல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அனைத்து முகாந்திரங்களும் உள்ளதாகவும், இவர் தான் குற்றம் புரிந்து உள்ளார் என்பதற்கு அனைத்து ஆதாரங்களும் உள்ளதால், ஞானசேகரனை வழக்கில் இருந்து விடுவிக்கக் கூடாது எனவும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஞானசேகரன் தன்னை விடுவிக்க கோரிய மனு மீது வாதங்களை முன் வைப்பதற்காக, விசாரணையை நீதிபதி நாளைக்கு தள்ளி வைத்துள்ளார்.
Share on:

எடப்பாடி பழனிசாமி வரும் 15 ஆம் தேதி ஆஜராக சம்மன்! அவதூறு வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


அதிமுகவின் முன்னாள் எம்பி கே.சி பழனிசாமி தொடர்ந்த குற்றவியல் அவதூறு வழக்கில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 15 ஆம் தேதி ஆஜராகும்படி கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்தது. தேர்தல் தோல்வி குறித்து கடந்த 2024 ம் ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது, அதிமுகவின் தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான் என்று விமர்சனம் செய்திருந்தார்.

கே.சி.பழனிசாமியின் விமர்சனம் குறித்து அப்போது கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “என்னை விமர்சனம் செய்த கே.சி.பழனிச்சாமி அதிமுக உறுப்பினரே கிடையாது. ரோட்டில் போவோர், வருபவர் எல்லாம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஆகிவிட முடியாது. அவர் பேசுவதற்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது,” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்து தம்மை அவமதிப்பதாக கருதிய கே.சி.பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது, கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இது குறித்து கே.சி.பழனிசாமியிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தியிருந்தது. விசாரணையின் போது தாம் அதிமுகவில் இருப்பதையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததற்கான ஆதாரங்களையும் அவர் சமர்பித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கான முகாந்திரம் இருப்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து இந்த வழக்கு கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கே சி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சிவக்குமார் ஆஜரானார். இதனைத் தொடர்ந்து குற்றவியல் அவதூறு வழக்கில் வரும் 15ஆம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணைக்கு எடப்பாடி பழனிசாமி ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Share on:

கோவையில் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் வந்த காரில் என்ன அது? அதிர்ந்த போலீசார்.. சிக்கிய 7 பேர் கும்பல்


கோவை பகுதியில் பெத்தமெட்டமைன், கொகைன் போன்ற உயர் ரக போதைப்பொருள் கடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் இருந்து போதைப் பொருளை கடத்தி வந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்று வந்தது தெரியவந்தது. ரூ.12 லட்சம் ரொக்கம், ரூ.50 லட்சம் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகம் முழுக்க போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும், தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றன. தமிழக அரசும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. மத்திய போதைத் தடுப்பு பிரிவு போலீசாரும் ரகசியமாக கண்காணித்து போதைப்பொருள் விற்பனையை தடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் கோவையில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கமிஷனர் சரவணசுந்தரத்தின் உத்தரவின் பேரில், கோவை ஆர் எஸ் புரம் பூ மார்க்கெட் பகுதியில் ரகசிய கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு காரில் வந்த சிலர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை விசாரிப்பதற்காக சென்றபோது, போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.

இதையடுத்து தப்பி ஓட முயன்ற 7 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில், முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதையடுத்து அவர்கள் 7 பேரையும் கைது செய்த போலீசார், போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் 7 பேரும் சேர்ந்து கோவை மட்டுமல்லாமல் தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் உயர் ரக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

மேலும் இந்த சம்பவத்தில் கோவை பொருளாதார குற்றப்பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் விஜயலட்சுமியின் மகன் மகா விஷ்ணு (வயது 28), விநாயகம், மணிகண்டன், கிருஷ்ணகாந்த், ஆதர்ஷ், ரோகன் ஷெட்டி மற்றும் ரித்திஷ் ஆகிய 7 பேர் என்பதும் தெரியவந்தது. விசாரணையில் மும்பையில் இருந்து போதைப்பொருளை கடத்தி வந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளனர்.

இது தொடர்பாக காரில் நடத்தப்பட்ட சோதனையில், மெத்தபெட்டமைன், கொக்கைன் போன்ற உயர் ரக போதைப் பொருட்களை இவர்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. ரூ.50 லட்சம் மதிப்பிலான இந்த போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ரூபாய் 25 லட்சம் ரொக்கம் மற்றும் 12 செல்போன்கள், 3 கார்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பொருட்களின் மதிப்பு ரூ.80 லட்சம் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து 7 பேரும் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Share on:

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. தமிழக அரசின் சமூக நலத்துறை செயலாளர் ஆஜராக உத்தரவு


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை செயலாளர் ஜெயஶ்ரீ முரளிதரன் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விக்ரம் என்பவரின் தாய் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்தார். இதனையடுத்து கருணை அடிப்படையில் தமக்கு அந்த வேலையை வழங்கக்கோரி விக்ரம் மனு அளித்தார்.

கருணை அடிப்படையில் பெண் வாரிசிகளுக்கு மட்டுமே அங்கன்வாடி ஊழியர் வேலை வழங்க முடியும் எனக்கூறி விக்ரமின் மனு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து விக்ரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், பெண் வாரிசுகளுக்கு மட்டுமே கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்ற அரசானையை உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் தனக்கு வேலை மறுக்கப்பட்டதாக கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கருணை அடிப்படையில் விக்ரமுக்கு வேலை வழங்குவது குறித்து எட்டு வாரங்களில் முடிவெடுக்கும்படி கடந்த 2024ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்தவில்லை எனக்கூறி விக்ரம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ஏப்ரல் ஒன்றாம் தேதி நேரில் ஆஜராகுமாறு சமூக நலத்துறை செயலாளர் ஜெயஶ்ரீ முரளிதரனுக்கு உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.
Share on:

ஆசிரியர்கள் பணியிடங்கள்.. மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்


கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறப்பு குழந்தைகளுக்கான ஆசிரியர்களாக 2002 ம் ஆண்டு தொகுப்பூதியம் அடிப்படையில் 1800 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு குழந்தைகளுக்கான, ஆசிரியர்கள், நிரந்தர பணியிடங்களாக உருவாக்க கோரி 723 சிறப்பு ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறப்பு குழந்தைகளுக்கான ஆசிரியர்களாக 2002 ம் ஆண்டு தொகுப்பூதியம் அடிப்படையில் 1800 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 4,500 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட இவர்கள், தற்போது 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமும், 5 ஆயிரம் ரூபாய் போக்குவரத்து செலவுக்காகவும் அரசிடம் இருந்து பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், சிறப்பு குழந்தைகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக உருவாக்க கோரி 723 சிறப்பு ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, சி.வி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான, வழக்கறிஞர் கவிதா ராமேஷ்வர், தமிழக முழுவதும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் சிறப்பு குழந்தைகள் இருக்கிறார்கள். 10 குழந்தைகளுக்கு 1 ஆசிரியர்கள் என்ற விகிதத்தின் அடிப்படையில் தமிழகத்தில் 13 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு பணியிடத்தை கூட உருவாக்காத மாநில அரசு 1800 பேரை சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் கீழ் தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்துள்ளது என்று வாதிட்டார்.

மேலும் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, மருத்து விடுப்பு உள்ளிட்ட எந்த சலுகைகளும் வழங்கப்படுவதில்லை என்றும் கூறினார். மேலும் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வாதத்தை கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி கார்த்திகேயன், இந்த மனுவுக்கு ஏப்ரல் 21 ம் தேதி பதிலளிக்க மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.
Share on:

முல்லைப் பெரியாறு அணையில் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு.. கோரிக்கைகளை அடுக்கிய தமிழகம்.. கேரளா முரண்டு..!


முல்லைப் பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தலைமையிலான புதிய கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் மற்றும் கேரள தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. முன்னதாக கேரளா நோக்கிச் செல்ல முயன்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட மூவர் குழு மற்றும் ஐவர் குழு கலைக்கப்பட்டது.தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மூலமாக புதிய குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி,தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்புக் குழுவை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் நியமித்தது.

இக்குழுவில் தமிழ்நாடு அரசு பிரதிநிதிகளாக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்ரமணியன், கேரள பிரதிநிதிகளாக அம்மாநில நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டிங்கு பிஸ்வால், நீர்ப்பாசனத் துறை தலைமைப் பொறியாளர் பிரியேஷ் மற்றும் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவன ஆய்வு அதிகாரி ஆனந்த் இராமசாமி, டெல்லியில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை குழு அதிகாரி விவேக் திரிபாதி என 7 பேர் கொண்ட குழுவினர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த புதிய கண்காணிப்புக் குழுவினர் தங்களது முதல் ஆய்வை இன்று முல்லைப்பெரியாறு அணையில் மேற்கொண்டனர். இதற்காக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி படகுத்துறைக்கு வந்த கண்காணிப்புக் குழுவினர் தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளுக்குச் சொந்தமான படகில் அணைக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இதில் முல்லைப்பெரியாறு பிரதான அணை,பேபி அணை, கேலரி, மதகுகள், சுரங்கப் பாதை மற்றும் சீப்பேஜ் வாட்டர் எனப்படும் கசிவு நீர் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்ய உள்ளனர். அதனைத் தொடர்ந்து இன்று மாலை குமுளி 1 ஆம் மைல் பகுதியில் உள்ள கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முல்லைப் பெரியாறு அணைக்கு வல்லக்கடவு வழியாக தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும், பொதுப் பணித் துறை அதிகாரிகள் எந்த தடங்கலும் இன்றி சென்று வர வேண்டும், முல்லைப் பெரியாறு அணையில் மராமத்து பணிகள் மேற்கொள்ள கேரள அரசு முட்டுக்கட்டை போடக் கூடாது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பேபி அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள முதல்கட்டமாக 13 மரங்களை வெட்ட அனுமதிக்க வேண்டும், பேபி அணையை பலப்படுத்தும் பணிகளை உடனே தொடங்க அனுமதிக்க வேண்டும், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்த வேண்டும்,கேரளா போலீஸ் ஆரை அணைப்பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தமிழக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கமிட்டியினர் முதல்முறையாக ஆய்வு செய்ய உள்ள நிலையில்,கேரள தரப்பில் அணை பாதுகாப்பு மற்றும் உறுதித் தன்மை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளையும் எழுப்பியதாகக் கூறப்படுக்கிறது.
Share on: