சென்னையிலும் நுழைந்தது HMPV வைரஸ்- 2 குழந்தைகளுக்கு பாதிப்பு உறுதி! நாடு முழுவதும் 5 பேர் பாதிப்பு!


உலகை அச்சுறுத்தி வரும் சீனாவின் HMPV வைரஸ் சென்னையில் 2 குழந்தைகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் HMPV வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் 2 , குஜராத்தில் 1 குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக நாடுகளையே பெரும் துயரத்துக்குள்ளாக்கியது. பல லட்சம் உயிர்களை காவு வாங்கியது. கொரோனா பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மீண்டு வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சீனாவில் இருந்து குழந்தைகளை தாக்கக் கூடிய ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் HMPV என்ற புதிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளாமலேயே குழந்தைகளைத் தாக்கக் கூடியதாக இருக்கிறது HMPV வைரஸ்.

இந்தியாவிலும் HMPV வைரஸ் பாதிப்பு தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் முதலில் கர்நாடகா மாநிலத்தில் 3 மாத குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து 8 மாத குழந்தைக்கும் கண்டறியப்பட்டது. இதேபோல குஜராத்தில் ஒரு குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதியானது.

இந்த நிலையில் சென்னையிலும் 2 குழந்தைகளுக்கு HMPV பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல், இருமல் பாதிப்புடன் வந்த 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த HMPV வைரஸ் பாதிப்பு முற்றினால் நிமோனியா காய்ச்சல் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். குழந்தைகளைப் போல முதியவர்களையும் HMPV வைரஸ் தாக்கக் கூடியது எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
Share on: