முல்லைப் பெரியாறு அணையில் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு.. கோரிக்கைகளை அடுக்கிய தமிழகம்.. கேரளா முரண்டு..!


முல்லைப் பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தலைமையிலான புதிய கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் மற்றும் கேரள தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. முன்னதாக கேரளா நோக்கிச் செல்ல முயன்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட மூவர் குழு மற்றும் ஐவர் குழு கலைக்கப்பட்டது.தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மூலமாக புதிய குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி,தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்புக் குழுவை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் நியமித்தது.

இக்குழுவில் தமிழ்நாடு அரசு பிரதிநிதிகளாக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்ரமணியன், கேரள பிரதிநிதிகளாக அம்மாநில நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டிங்கு பிஸ்வால், நீர்ப்பாசனத் துறை தலைமைப் பொறியாளர் பிரியேஷ் மற்றும் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவன ஆய்வு அதிகாரி ஆனந்த் இராமசாமி, டெல்லியில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை குழு அதிகாரி விவேக் திரிபாதி என 7 பேர் கொண்ட குழுவினர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த புதிய கண்காணிப்புக் குழுவினர் தங்களது முதல் ஆய்வை இன்று முல்லைப்பெரியாறு அணையில் மேற்கொண்டனர். இதற்காக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி படகுத்துறைக்கு வந்த கண்காணிப்புக் குழுவினர் தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளுக்குச் சொந்தமான படகில் அணைக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இதில் முல்லைப்பெரியாறு பிரதான அணை,பேபி அணை, கேலரி, மதகுகள், சுரங்கப் பாதை மற்றும் சீப்பேஜ் வாட்டர் எனப்படும் கசிவு நீர் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்ய உள்ளனர். அதனைத் தொடர்ந்து இன்று மாலை குமுளி 1 ஆம் மைல் பகுதியில் உள்ள கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முல்லைப் பெரியாறு அணைக்கு வல்லக்கடவு வழியாக தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும், பொதுப் பணித் துறை அதிகாரிகள் எந்த தடங்கலும் இன்றி சென்று வர வேண்டும், முல்லைப் பெரியாறு அணையில் மராமத்து பணிகள் மேற்கொள்ள கேரள அரசு முட்டுக்கட்டை போடக் கூடாது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பேபி அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள முதல்கட்டமாக 13 மரங்களை வெட்ட அனுமதிக்க வேண்டும், பேபி அணையை பலப்படுத்தும் பணிகளை உடனே தொடங்க அனுமதிக்க வேண்டும், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்த வேண்டும்,கேரளா போலீஸ் ஆரை அணைப்பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தமிழக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கமிட்டியினர் முதல்முறையாக ஆய்வு செய்ய உள்ள நிலையில்,கேரள தரப்பில் அணை பாதுகாப்பு மற்றும் உறுதித் தன்மை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளையும் எழுப்பியதாகக் கூறப்படுக்கிறது.
Share on:

கோவையில் எரிந்த நிலையில் ஆசிரியையின் உடல்! வீட்டிலிருந்து 400 மீட்டர் தூரத்தில் என்ன நடந்தது?


கோவையில் எரிந்த நிலையில் பெண் ஆசிரியர் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கொலையா இல்லை தற்கொலையா என்று போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கோவை, மதுக்கரை அருகே நாச்சிபாளையம் பகுதியில் பெண்ணின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவம் குறித்து மதுக்கரை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் பெயர் பத்மா (56). வழுக்குபாறை அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வந்ததும், இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் என, இரு குழந்தைகள் உள்ளனர் என்பதும் தெரியவந்தது.

இவரின் மகள் வழக்கறிஞராக இருப்பதாகவும், மகன் கல்லூரி படிப்பு படித்துக் கொண்டிருப்பதாகவும், பள்ளிக்கூடம் செல்வதாக வீட்டிலிருந்தவர்களிடம் கூறி அவர் கிளம்பி சென்றதாக தெரிகிறது.

ஆனால் வீட்டில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள, குப்பை எரிக்கும் இடத்தில் இவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணத்திலும் டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள மக்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர்.

பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே இறப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்றும் சொல்லப்படுகிறது. வீட்டுக்கு அருகே குப்பை எரிக்கும் இடத்தில் ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் போலீஸார் எரித்துக் கொலை மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஈச்சனாரி பகுதியில் நேற்று மதியம் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத வாலிபர் உடல் கிடப்பதாக பெருங்குடி போலீசாருக்கு தகவல் வந்த நிலையில் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

மதுரையில் போலீஸார் எரித்துக் கொலை

இந்த நிலையில் எரிந்த நிலையில் உயிரிழந்த இளைஞர் விருதுநகரை சேர்ந்த 36 வயதான மலை அரசன். இவர் சிவகங்கை காளையார் கோவில் காவல் நிலையத்தில் தனிப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கடந்த ஒன்றாம் தேதி வாகன விபத்தில் படுகாயம் ஏற்பட்டு சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து சிந்தாமணி பகுதியில் உள்ள மருத்துவமனையில் மனைவி குறித்த கட்டண ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வாங்குவதற்காக மலையரசன் வந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படும் நிலையில்., மருத்துவமனை பகுதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஈச்சனாரி பகுதியில் அவரது உடல் பாதி எரிந்து நிலையில் கிடைக்கப்பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் காவல்துறையினர் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
Share on:

கேஸ் சிலிண்டர் தொடர்பான கட்டணமில்லா தொலைபேசியில் இந்தியில் மட்டுமே பதில்.. தமிழ் மக்கள் ஏமாற்றம்


பலருக்கும் விருப்ப மொழியாக தமிழ் இருந்த போதிலும், கேஸ் சிலிண்டர் தொடர்பான புகாரை பதிவு செய்வதற்கான கட்டணமில்லா தொலைபேசியில் இந்தி மொழியில் மட்டுமே பதில் அளிக்கப்படுகிறது. இதனால் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்யும் தமிழ் வாடிக்கையாளர்கள் தங்களது புகாரை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கட்டணமில்லா தொலைபேசியில் எதிர்முனையில் பேசும் நபருக்கு இந்தியை தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை என்று வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

சமையல் கேஸ் சிலிண்டர்களை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், இந்துஸ்தான் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் விநியோகிக்கின்றன. பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவையான கேஸ் சிலிண்டர்களை மேற்கொண்ட நிறுவனங்களில் தான் வாங்குகிறார்கள். வெகுசிலரே அதுவும் கடைகளுக்குத்தான் தனியார் நிறுவன சிலிண்டர்களை வாங்குகிறார்கள்.

கேஸ் சிலிண்டர் வினியோகத்தில் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவிக்க வேண்டும் என்றாலோ அல்லது சிலிண்டர் முன்பதிவுக்கு பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது சிலிண்டர் வினியோக நிறுவனத்தில் ஆதாரை பதிவு செய்வது போன்ற பல்வேறு குறைகளுக்கு தீர்வு காண வாடிக்கையாளர்களுக்கு கட்டணமில்லா தொலைப்பேசி எண் உள்ளது. அதன்படி எண்ணெய் நிறுவனங்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க 1800-2333-55 எனப்படும் பொதுவான கட்டணமில்லா தொலைபேசி எண் அமலில் இருக்கிறது.

கேஸ் சிலிண்டர்கள் பிரச்சனை தொடர்பாக குறைகளுக்காக இந்த கட்டணமில்லா தொலைபேசியை பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் போது எதிர்முனையில் பேசுபவர் இந்தியில் மட்டுமே பேசுகிறார் என்று கூறப்படுகிறது, இதனால் இந்தி தெரியாதவர்கள் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் மொழி தொடர்பாக பிரச்சனைகளை சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இதுபற்றி வாடிக்கையாளர்கள் சிலர் கூறுகையில், எண்ணெய் நிறுவனங்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க 1800-2333-55 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளது.இதில் தொடர்பு கொண்டு பேசும் போது, இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 6 மொழிகளில் தாங்கள் எந்த மொழியில் பேச விரும்புகிறீர்கள் என வாடிக்கையாளரிடம் கணினி வழி குரல் மூலம் விருப்பம் கேட்கிறார்கள்.

அதன்படியே நாம் பேச விரும்பும் மொழியை தேர்வு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. தமிழ்மொழிக்கான குறியீட்டை அழுத்தி தமிழ் மொழி என்ற நமது விருப்பத்தை தெரிவித்தாலும் எதிர்முனையில் பேசுபவர் இந்தியில் மட்டுமே பேசுகிறார். அவரிடம், ‘தமிழ்…’ என சொன்னால் கொஞ்சம் பொறுத்திருங்கள், இணைப்பை தருகிறேன் என இந்தியில் பதில் சொல்கிறார். இப்படி நீண்ட நேரம் காத்திருந்தாலும் தமிழில் பதில் சொல்வதற்கு யாரும் இல்லை. இதனால் வாடிக்கையாளர்கள் தமிழில் புகார் அளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் இணைப்பை துண்டிக்கும் நிலை ஏற்படுகிறது என்றார்கள்.

கட்டணமில்லா தொலைபேசியில் எதிர்முனையில் பேசும் நபருக்கு இந்தியை தவிர வேறு எந்த மொழியும் தெரியாத நிலை இருப்பதாகவும். சாதாரண ஆங்கிலத்தில் கூறினால் கூட எதிர்முனையில் பேசுபவர் அதை புரிந்து கொள்ள முடிவது இல்லை என்றும் தமிழில் பேச யாரும் இருப்பது இல்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது தமிழ்நாட்டில் புதிய சர்ச்சையாகி உள்ளது

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு இண்டேன், பாரத் கேஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் ஆகியவற்றின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கான இலவச தொலைபேசி அழைப்பில் (1800 2333 555) தொடர்பு கொண்டு பேசும் போதெல்லாம் இந்தியில் மட்டுமே பதிலளிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. இதுவும் ஒரு நவீன இந்தித் திணிப்பு தான். இதை அனுமதிக்க முடியாது.

தமிழ்நாட்டில் வணிகம் செய்யும் இந்த நிறுவனங்கள் தமிழ் மொழியில் சேவை வழங்க வேண்டும். இலவச தொலைபேசி அழைப்பைத் தொடர்பு கொள்பவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பதில் அளிக்கும் வாய்ப்பு இருக்கும் போதிலும் கூட, இந்தியில் மட்டும் தான் பதில் அளிக்கப்படுகிறது. தமிழில் உரையாட வேண்டும் என்று தெரிவித்தால் மீண்டும் தொடர்பு கொள்வதாகக் கூறி அழைப்பு துண்டிக்கப்படுகிறது. இதைத் திட்டமிட்ட இந்தித் திணிப்பாகவே பார்க்க வேண்டும்.

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும், ஆங்கிலத்திலும் பதிலளிக்க மறுப்பதை எண்ணெய் நிறுவனங்கள் நியாயப்படுத்த முடியாது. தமிழில் சேவை வழங்காமல் இந்தியில் மட்டுமே சேவை வழங்குவதற்காக எரிவாயு நிறுவனங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இந்தித் திணிப்பைக் கைவிட்டு, தமிழ், ஆங்கிலம் மற்றும் அனைத்து மாநில மொழிகளிலும் வாடிக்கையாளர் சேவை வழங்கப்படுவதை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Share on:

கேஸ் முடிவதை நினைச்சுகூட பார்க்க முடியாது.. செந்தில் பாலாஜிக்கு எதிராக வாதம்! தேதி குறித்தது ஐகோர்ட்


அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரிய மனு மீது மார்ச் 21 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, முழுமையான விசாரணை நடத்திய மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்டோருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தனர். இந்த கூடுதல் குற்றப்பத்திரிகைகளை இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க சென்னை எம்.பி எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், மனுவில் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ள நிலையில் அது குறித்து விரிவாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே அவகாசம் கேட்பதாக குற்றஞ்சாட்டினார்.

வேறு வேறு பதவிகளுக்காக பணம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை இணைத்து விசாரிக்க விசாரணை நீதிமன்ற நீதிபதிக்கு அதிகாரம் இல்லை எனவும் அப்படி விசாரித்தால் விசாரணை எப்போது முடியும் என நினைத்துக் கூட பார்க்க முடியாது எனக் கூறினார்.

இதனையடுத்து, இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மார்ச் 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார்.
Share on:

ஆன்லைன் ரம்மி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மார்ச் 21 வரை அவகாசம் – நீதின்றம் உத்தரவு


ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கி, நேரக் கட்டுப்பாடு விதித்து பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளை எதிர்த்த வழக்குகளில், மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க மார்ச் 21 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன் லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்தது செல்லும் என தீர்ப்பளித்தது.

அதேசமயம், திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், ஆன் லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடுவதற்கான வயது, நேரம் உள்ளிட்டவை தொடர்பாக அரசு விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில், இந்த சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து பிப்ரவரி 14ம் தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. அதில், ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கியதையும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்க கூடாது என நேர கட்டுப்பாடு விதித்ததையும் எதிர்த்து ப்ளே கேம்ஸ் 24*7 பிரைவேட் லிமிட்டெட், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எஸ்போர்ட் ப்ளேயர்ஸ் நலச்சங்கம் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது மத்திய – மாநில அரசுகள் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மார்ச் 21 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என அவகாசம் வழங்கி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளி வைத்தனர். மார்ச் 17ம் தேதி முதல் விசாரணை துவங்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Share on:

கோவை வனத்துறை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வடமாநிலத்தவர்.. மொத்தமாக சிக்க வைத்த சின்ன விஷயம்.


கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் செயல் பட்டு வருகிறது. இந்த நிறுவனமானது மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இங்கு டெக்னீசியன் பதவிக்கான தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக வடமாநிலங்களை சேர்ந்த 8 பேரை கோவை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். அப்படி சிக்கினார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனமானது மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இங்கு வனத் துறையினருக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் பணியாற்ற பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக வடமாநில இளைஞர்கள் ஏராளமானோர் இந்த பணிக்கு விண்ணப்பிக்கிறார்கள்.. அந்த வகையில் இங்குள்ள எம்.டி.எஸ். துறையில் டெக்னீசியன், டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. இந்த பணிக்கு எழுத்து தேர்வு கடந்த மாதம் 8, 9 – ந் தேதிகளில் நடந்தது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி உத்தரபிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

இதில் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதன்படி நேற்று கோவையில் நடைபெற்ற நேர்முக தேர்வில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வந்திருந்தார்கள். அப்போது ஒரு சிலரின் புகைப்படம் மற்றும் கைரேகை சரிபார்க்கப்பட்டிருந்தது. அதில் எழுத்து தேர்வு நடந்த போது சேகரித்த கைரேகைக்கும், நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வந்தவர்களிடம் பெறப்பட்ட கைரேகைக்கும் வேறுபாடு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 8 பேரும் ஆள் மாறாட்டம் செய்து தங்களது பெயரில் வேறு நபர்களை தேர்வு எழுத வைத்தது தெரியவந்திருந்தது.. இதுகுறித்து மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன அதிகாரிகள் கோவை சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரிஷிகுமார் (வயது 26), பிபன்குமார் (26), பிரசாந்த் சிங் (26), நரேந்திரகுமார் (24), ராஜஸ்தானை சேர்ந்த லோகேஷ் மீனா(24), அசோக்குமார் மீனா (26), அரியானாவை சேர்ந்த சுப்ராம்(26), பீகாரை சேர்ந்த ராஜன் கார் காண்ட் (21) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

மேலும் இவர்களுக்கு ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத உதவியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் நடைபெற்ற வனத்துறை தேர்வில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Share on:

சர்வதேச அளவில் வரப்போகும் பொருளாதார மந்த நிலை? பயமுறுத்தும் டிரம்ப்


சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை வரப்போவதாக பொருளாதார வல்லுனநர்கள் பலரும் எச்சரித்து வரும் நிலையில் இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் அளித்த பதில்தான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிபர் டிரம்ப் அளித்த பதிலில், நான் பெரிய விஷயம் செய்துகொண்டு இருக்கிறேன். நாம் பெரிய விஷயம் செய்யும் போது.. பெரிய விஷயங்கள் நடக்கும். அதற்காக பொருளாதார மந்த நிலை வரும் என்று என்னால் சொல்ல முடியாது. இது போன்ற விஷயங்களை கணிக்க முடியாது.. நான் கணிக்க விரும்பவில்லை என்று பயமுறுத்தும் வகையில் பேசி உள்ளார்.

பொருளாதார மந்தநிலை பற்றி அமெரிக்க அதிபராக வராது என்று சொல்லாமல்.. அவர் இப்படி பேசி இருப்பது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தொடர் வர்த்த போர் காரணமாக.. அமெரிக்க மார்க்கெட்டில் 1 ட்ரில்லியன் டாலருக்கும் மேல் சரிவு ஏற்பட்டு உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக போரை அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்துள்ளார். சீனாவிற்கு எதிராக அமெரிக்கா வர்த்தக போரை அறிவித்த நிலையில் அமெரிக்காவின் முடிவிற்கு பதிலடியாக சீனா பதில் வரியை விதித்து உள்ளது. அதன்படி டிரம்புக்கு பதிலடி கொடுத்தது சீனா. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி, கோதுமை, சோளம் மற்றும் பருத்திக்கு கூடுதல் 15% வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வர்த்தக போரை அதிகாரபூர்வமாக டிரம்ப் தொடங்கி உள்ளார். அதன்படி மெக்சிகோ மற்றும் கனடா மீது 25 சதவீத வரிகளையும், சீனா மீது 10 சதவீத வரிகளையும் விதித்து அவர் உத்தரவிட்டு உள்ளார்

சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகியவை அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையில் முதலிடம் வகிக்கின்றன, சீனா அதிகப்பட்சமாக 30.2 சதவிகிதம், மெக்ஸிகோ 19 சதவிகிதம் மற்றும் கனடா 14 சதவிகிதம் வரி பற்றாக்குறையில் பங்கு வகிக்கின்றன.

ஏற்கனவே அமெரிக்க நிலக்கரி மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதி மீது 15% வரியை சீனா விதித்து உள்ளது, அதன் எண்ணெய் மற்றும் விவசாய உபகரணங்கள் மீது 10% வரியை சீனா விதித்து உள்ளது. இதனால் அமெரிக்காவில் இருந்து நிலக்கரி மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, எண்ணெய் மற்றும் விவசாய உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது குறையலாம். இதனால் அமெரிக்காவிற்கு கடுமையான இழப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

டிரம்ப்பின் செயலால்.. அமெரிக்கா மிகப்பெரிய சிக்கலில் மாட்டி உள்ளது. கிட்டத்தட்ட சர்வதேச அளவில் வர்த்தக போர் மூண்டு உள்ளது. பனிப்போருக்கு பின்பாக மிக மோசமான வர்த்தக போர் ஏற்பட்டு உள்ளது. உலக அளவில் மார்க்கெட்டில் இதனால் பெரிய அளவில் சரிவுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தொடர் வர்த்த போர் காரணமாக.. அமெரிக்க மார்க்கெட்டில் 1 ட்ரில்லியன் டாலருக்கும் மேல் சரிவு ஏற்பட்டு உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.95 கோடி கோடி ஆகும். வர்த்தக போர் காரணமாக டாலர் மதிப்பு சரியலாம். இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக மார்க்கெட்டில் இருந்து வெளியேறுகிறார்கள். பங்குசந்தை சரியலாம் என்பதால் கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்கள். இதனால் சந்தை மேலும் சரிந்து வருகிறது.

அமெரிக்க பங்குச்சந்தை தினம் தினம் 200 புள்ளிகள் வரை சரிந்து வருகிறது. மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு மார்க்கெட் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 10 மட்டும் ஆயிரம் புள்ளிகள் சென்செக்ஸ் வர்த்தகத்தில் சரிந்து உள்ளது.

81 ஆயிரம் புள்ளிகளில் இருந்து 72 ஆயிரம் புள்ளிகளுக்கு சென்செக்ஸ் சரிந்து உள்ளது. தொடர்ந்து சென்செக்ஸ் சரிவது இந்திய மார்க்கெட்டில் பெரிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பின் வரும் காரணங்கள் உள்ளன.
Share on:

அமித்ஷாவுக்கு பதில் நடிகர் சந்தான பாரதியின் போட்டோ…


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மத்திய தொழில்பாதுகாப்பு படை பயிற்சி மையத்துக்கு 2 நாள் பயணமாக இன்று அமித்ஷா வருகிறார். அமித்ஷாவை வரவேற்கும் வகையில் பாஜகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் அமித்ஷாவுக்கு பதில் நடிகர் சந்தான பாரதியின் போட்டோ இடம்பெற்று உள்ளதால் பலரும் பாஜகவினரை கிண்டல், விமர்சனம் செய்து வரும் சூழலில் போஸ்டரில் இடம்பெற்றிருக்கும் பெண் நிர்வாகி மறுப்பு தெரிவித்து விளக்கமளித்துள்ளார்.

பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர் அமித்ஷா. இவர் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக உள்ளார். அமித்ஷா இன்றும், நாளையும் 2 நாள் பயணமாக தமிழகம் வருகை தர உள்ளார்.

தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையத்துக்கு தான் இன்று அமித்ஷா வருகை தர உள்ளார்.

அமித்ஷாவை வரவேற்கும் வகையில் ராணிப்பேட்டை, அரக்கோண, தக்கோலத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் அமித்ஷாவின் போட்டோவிற்கு பதில் நடிகரும், இயக்குநருமான சந்தான பாரதியின் போட்டோ இடம்பெற்றுள்ளது. அதில் சந்தானபாரதியின் போட்டோவுடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ‛‛ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் இந்தியாவின் இரும்பு மனிதரே! வாழும் வரலாறே! வருக! வருக! என எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் அருள்மொழி, மாநில செயற்குழு உறுப்பினர் ராணிப்பேட்டை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் பாஜகவினர் தாமரை.
Share on:

கட்டம் கட்டப்படும் செந்தில் பாலாஜி? தமிழ்நாடு டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை ரெய்டு


சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை குறி வைத்து அமலாக்கத் துறை இன்று ரெய்டை தொடங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் 15 மாதங்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, பல்வேறு பிரயத்தனத்திற்கு பிறகு கடந்த 2024 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.

அவர் ஜாமீனில் வந்த அடுத்த இரு நாட்களிலேயே அவருக்கு தமிழ்நாடு மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின.

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்களும் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தி பாலாஜியின் ஆதரவாளர்களான கரூர் ராயனூரில் வசிக்கும் கொங்கு மெஸ் மணி மற்றும் கரூர் ஆத்தூர் பிரிவு அருகே கோதை நகரில் வசிக்கும் சக்தி மெஸ் சக்திவேல், செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும் பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரருமான எம்சிஎஸ் சங்கரின் வீடு இருக்கும் கரூர் பழனியப்பா நகரிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் காலை முதல் 5 கார்களில் வந்த 20 பேர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

தற்போது 7 மணி நேரத்திற்கு மேலாக அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் செந்தில் பாலாஜி வசம் உள்ள மதுவிலக்குத் துறையின் கீழ் இயங்கும் சென்னை எழும்பூரில் தாளமுத்த நடராசன் மாளிகையில் உள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தி வருகிறது. இது அரசியல் வட்டாரத்தை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share on:

சிறுவன் முகத்தில் துப்பியதால் தான் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – மயிலாடுதுறை கலெக்டர் சர்ச்சை


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 3 வயது குழந்தை பாலியல் தொல்லை கொடுத்து முகத்தில் கல்லால் தாக்கிய வழக்கில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு பற்றி மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி, 3 வயது குழந்தை சிறுவனின் முகத்தில் துப்பியது தான் சம்பவத்துக்கு காரணம் என்று கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 3 வயது சிறுமி. அங்கன்வாடி சென்று வந்தார். இந்நிலையில் தான் 16 வயது சிறுவன் சாக்லேட் தருவதாக கூறி சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறுமி எதிர்ப்பு தெரிவித்து அழுத நிலையில் சிறுவன் குழந்தையின் தலை மற்றும் முகத்தில் கல்லால் தாக்கிவிட்டு ஓடிவிட்டார். இதில் சிறுமியின் கண்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சிறுமி நீண்டநேரமாகியும் வீட்டுக்கு வராததால் பெற்றோர் தேடிப்பார்த்தனர். அப்போது ரத்த காயத்துடன் சிறுமி உயிருக்கு போராடினர். அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி சிறுமியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரில் போலீசார் 16 வயது சிறுவனை கைது செய்தனர். இதுபற்றி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி இன்று கூறிய கருத்து சர்ச்சையாகி உள்ளது. மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலெக்டர் மகாபாரதி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது

கடந்த வாரம் 3 வயது சிறுமிக்கு நடந்த சம்பவத்தை பார்த்தீர்களே ஆனால் அந்த குழந்தையே தவறாக நடந்துள்ளது. நீங்கள் கவனித்து பார்த்தால் அது உங்களுக்கு தெரியும். எனக்கு கிடைத்த ரிப்போர்ட்டின்படி அந்த பையனின் முகத்தில் குழந்தை துப்பி உள்ளது. இதுதான் காரணம். 2 பேரையுமே பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் Prevention is better than anything cure(வருமுன் காப்பதே சிறந்தது). Cure-யை விட Prevention ஆக செயல்பட வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்த்தால் குழந்தைகளுக்கு சொல்லி தருவது குறித்து பெற்றோர்களுக்கு உணர வைக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் எல்லாம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். இருப்பினும் குழந்தைகளுக்கு நாம் நேரடியாக சொல்லி தர முடியாது. குழந்தைகளுக்கு பெற்றோர் தான் எது தவறு என்று சொல்லி கொடுக்க வேண்டும். சின்னவயது, 2 வயது, 3 வயது குழந்தையை அழைத்து அவர்களுக்கு சில விஷயங்களை சொல்லி புரிய வைப்பது கடினம். பெற்றோர்கள் தான் அதனை புரிய வைக்க வேண்டும். ” என்று கூறியுள்ளார்.

3 வயது சிறுமி முகத்தில் துப்பியதால் தான் 16 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதியே இப்படி கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ள நிலையில் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே தான் தனது பேச்சு குறித்த மயிலாடுதுறை கலெக்டர் மாகாபாரதி விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛குழந்தைகளுக்கு அவர்களின் இளம் பருவத்திலேயே பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கருத்துகளை பதிவு செய்தேன்” என்று கூறியுள்ளார். இருப்பினும் அவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில் தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
Share on: