தப்பி ஓடிய பிரதமர்… வங்க தேசத்தில் நடப்பது என்ன?


இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள், ஒரு கட்டத்தில் வங்க தேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று தலைநகரம் டாக்காவை நோக்கி ஊர்வலம் கிளம்பினார்கள். கடந்த ஜூலை 18 முதல் வங்க தேசம் கொந்தளிப்பில் இருக்கிறது. வங்க தேசத்தின் சுதந்திரத்துக்காகப் போராடியவர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் 30 சதவிகிதம் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வன்முறை வெடித்தது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சுடப்பட்டு இறந்திருக்கிறார்கள். ஊரடங்கு உத்தரவு போட்டாலும் மாணவர்கள் வீதிக்கு வந்து போராடினார்கள்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் காயமடைந்தாலும் போராட்டம் ஓயவில்லை. திரை நட்சத்திரங்கள் முதல் முன்னாள் ராணுவ அதிகாரிகள் வரை அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க, ஒரு கட்டத்தில் அவர்களை அடக்கிய ராணுவம் பின்வாங்கியது. அதன் விளைவாக அவர்கள் உற்சாகமாக தலைநகருக்குக் கிளம்ப, பிரதமர் ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே ஓடியிருக்கிறார். நாடு முழுக்க போராட்டக்காரர்கள் அரசு அலுவலகங்களை அடித்து நொறுக்கி தங்கள் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்.

20 ஆண்டுகள் வங்க தேசத்தின் பிரதமராக இருந்தவர், ஒரு நாட்டின் ஆட்சியாளராக அதிக காலம் இருந்த பெண் தலைவர் என்றெல்லாம் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஹசீனா. ஐந்தாவது முறையாக சில மாதங்களுக்கு முன்புதான் தேர்தலில் ஜெயித்து பிரதமர் ஆனார். ஆனாலும் மக்கள் போராட்டம் அவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. அவருக்கு ஏன் இந்த நிலை? அதற்கு வங்க தேசத்தின் வரலாற்றைக் கொஞ்சம் பார்க்க வேண்டும். இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தான் வசம் சென்றது கிழக்கு வங்காளம். அதாவது, இந்தியாவின் மேற்கிலும் கிழக்கிலுமாக இரண்டு நிலப்பரப்புகள் பாகிஸ்தான் என்ற நாடாக இருந்தன. மேற்கில் இருந்த பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கு இந்தக் கிழக்கு நிலத்தின்மீது இளக்காரம் இருந்தது.

கிழக்கு வங்காளத்தில் இருக்கும் மக்கள் வங்க மொழி பேசினர். ஆனால், பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ மொழியாக உருது மட்டுமே இருக்கும் என்று அரசு அறிவித்தது. இதை எதிர்த்து டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 1952 பிப்ரவரி 21-ம் தேதி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன்பின்னும் அடங்காத மாணவர் போராட்டத்துக்கு அரசு பணிந்தது. ஒரு மொழியின் உரிமைக்காக உலகில் நடைபெற்ற மிகத் தீவிரமான போராட்டமாக அது கருதப்படுகிறது. அதன் அடையாளமாகவே பிப்ரவரி 21-ம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது.

அந்த மொழி உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான். அதன் தொடர்ச்சியாக அவாமி லீக் கட்சியை ஆரம்பித்தார். பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தொடர்ந்து கிழக்கு வங்காளத்தை புறக்கணிப்பதை எதிர்த்து அரசியல் போராட்டங்கள் நடத்திய அவர், ஒரு கட்டத்தில் ‘வங்கம் சுதந்திரம் அடைவதைத் தவிர இதற்கு வேறு தீர்வு இல்லை’ என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்தப் பகுதியில் பெரும் அடக்குமுறையில் ஈடுபட்டது. அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் தலையீட்டால் அங்கு அமைதி பிறந்தது. வங்க தேசம் என்ற புதிய நாடு உருவானது.

இந்த நாட்டின் சுதந்திரத்துக்குப் போராடியவர் என்பதால் ‘வங்கத்தின் நண்பன்’ என்று பொருள்படும் வகையில் ‘வங்கபந்து’ என்று அழைக்கப்படுகிறார் முஜிபுர் ரஹ்மான். வங்க தேச மக்களுக்கு அவர்மீது மிகுந்த மரியாதை உண்டு. சுதந்திர வங்க தேசத்தின் பிரதமராகவும், பிறகு ஜனாதிபதியாகவும் இருந்தவரை ராணுவப் புரட்சி செய்து கொன்றார்கள். அப்போது முஜிபுர் ரஹ்மானின் குடும்பமே ராணுவத்தால் கொல்லப்பட, வெளிநாட்டில் இருந்த முஜிபுரின் மகள் ஷேக் ஹசீனாவும் அவர் தங்கை ஷேக் ரெஹானாவும் மட்டுமே உயிர் பிழைத்தார்கள்.

பாகிஸ்தான் போலவே ராணுவ ஆட்சியில் சிக்கிக்கொள்ளும் ஒரு நாடாக வங்க தேசம் இருக்கிறது. இந்த ராணுவ ஆட்சிக்காலத்தில் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்தது இந்தியா. ஆறு ஆண்டுகள் இங்கே இருந்தபடி தன் நாட்டில் மீண்டும் ஜனநாயகம் மலர்வதற்காகப் போராடிய ஹசீனா, அவாமி லீக் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு வங்க தேசத்துக்குப் போனார். பத்தாண்டு காலம் அங்கேயும் இருந்தபடி ஜனநாயகப் போராட்டம் நடத்தினார். பெரும்பாலான காலம் வீட்டுச்சிறையில் இருந்தார். கடந்த 1996-ம் ஆண்டு முதல்முறையாக பிரதமர் ஆனார்.

பிறகு தோல்விகள்… 2009-ம் ஆண்டு அவர் மீண்டும் பிரதமர் ஆனார். அதன்பின் அந்த நாற்காலியிலிருந்து இப்போதுதான் இறங்கியிருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் வங்க தேசம் பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக ஜவுளி ஏற்றுமதி அங்கு லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தது. இந்தியாவைவிட தனிநபர் வருமானம் அதிகம் கொண்ட நாடாக அது வளர்ந்தது. ஆனால், கொரோனா பேரிடரும், அதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் உக்ரைன் யுத்தமும் ஐரோப்பாவை பெரிதும் பாதித்தன. அதன் விளைவாக வங்க தேசத்தின் ஜவுளித் தொழில் வீழ்ச்சி கண்டது.

இளைஞர்கள் அதிகம் இருக்கும் ஒரு நாட்டில் வேலைவாய்ப்பும் பொருளாதார வளர்ச்சியும் இல்லாமல் போனால், கலகம் ஏற்படும். அதுதான் இப்போது வங்க தேசத்தில் நடந்திருக்கிறது. தொடர்ச்சியாகத் தேர்தல்களில் வெல்வதற்காக எதிர்க்கட்சிகளைக் கடுமையாக நசுக்கினார் ஷேக் ஹசீனா. முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியக் கட்சியின் தலைவி கலிதா ஜியா உள்பட பல தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டனர். வேறு சில கட்சிகளுக்குத் தேர்தலில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. ஒருகாலத்தில் ஜனநாயகத்துக்காக போராடிய ஷேக் ஹசீனா இப்போது சர்வாதிகாரியாக மாறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. தனக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை ராணுவத்தையும் போலீஸையும் வைத்து நசுக்கினார் ஷேக் ஹசீனா.

இந்த நேரத்தில் நடைபெற்ற இன்னொரு சம்பவம்தான் அவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது. வங்கதேச விடுதலைக்காகப் போராடியவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 30% இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு உத்தரவு போடப்பட்டது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அது அமலாகவில்லை. இந்நிலையில் அதை அமல்படுத்த வேண்டும் என்று சிலர் நீதிமன்றம் போய் தீர்ப்பு வாங்கினார்கள்.

ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிதான் வங்க தேச சுதந்திரத்துக்காகப் போராடியது. இயல்பாகவே, தன் கட்சியில் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதற்கு பிரதமர் இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்திக்கொள்வார் என்று மக்களிடம் எதிர்ப்பு எழுந்தது. ஏற்கெனவே வேலைவாய்ப்பு இல்லாமல் விரக்தியில் இருந்த இளைஞர்களும் மாணவர்களும் வீதியில் இறங்கிப் போராடினார்கள். ஆயிரக்கணக்கானவர்களைக் கைது செய்தும், நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றும் போராட்டத்தை அடக்க முயன்றது அரசு. ஆனால், போராட்டம் நிற்கவில்லை.

இதனிடையே வங்க தேச உச்ச நீதிமன்றம் தலையிட்டு, சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் இட ஒதுக்கீட்டை ஐந்து சதவிகிதமாகக் குறைத்தது. ஆனாலும் மாணவர்களை அது திருப்திப்படுத்தவில்லை. அந்தப் போராட்டம்தான் ஷேக் ஹசீனாவைத் தூக்கி எறிந்திருக்கிறது. வங்க தேச ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் ஏறி இந்தியாவுக்கு வந்து தஞ்சம் புகுந்திருக்கிறார் ஹசீனா.

இந்தியாவுக்கும் வங்க தேசத்துக்கும் தொப்புள்கொடி உறவு உண்டு. அந்த தேசத்தை உருவாக்கித் தந்த தாய் இந்தியா. குறிப்பாக ஹசீனா எப்போதும் இந்தியாவுக்கு நெருக்கமாக இருப்பார். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்புக்கு வங்க தேசத்தில் வலுவான தளம் உண்டு. வங்க தேசத்தில் சமீப ஆண்டுகளில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் பெருகியிருப்பதில் ஐ.எஸ்.ஐ அமைப்புக்குப் பங்கு உண்டு. அங்கு செயல்படும் ஜமாத் – இ – இஸ்லாமி கட்சிக்கும் ஐ.எஸ்.ஐ அமைப்புக்கும் நெருக்கம் இருக்கிறது.

அந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக நிகழ்த்தப்படும் சதிகளை முறியடிக்க உதவியவர் ஹசீனா. இந்தியாவுக்கும் வங்க தேசத்துக்குமான எல்லை என்பது 4,096 கி.மீ தூரத்துக்கு நீள்கிறது. இதில் பல இடங்களில் தடுப்பு வேலிகள் கூட கிடையாது. இந்தியாவுக்கு எதிரான ஓர் அரசு அங்கு அமைவது நம் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

சீனாவும்கூட சமீப ஆண்டுகளில் வங்க தேசத்துக்கு பல உதவிகள் செய்து தன் செல்வாக்கை நிலைநாட்ட பல வழிகளில் முயன்று வருகிறது. நதிகளைத் தூர்வாருவது, துறைமுகம் கட்டுவது, விமான நிலையங்களை சீரமைப்பது என்று பல திட்டங்களை சீனா அங்கு செய்கிறது. ஏற்கனவே மியான்மரும் சீனாவின் அரவணைப்பில் இருக்கும் நிலையில், வங்க தேசமும் ஆட்சி மாற்றத்தால் சீனாவுக்கு நெருக்கமாகப் போய்விட்டால் நமக்கு சங்கடங்கள் அதிகமாகும். அதனால்தான் வங்க தேசத்தில் நிலவும் கொந்தளிப்பு நம்மைக் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.
Share on:

கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடத்தில் இன்று காலை முதல் நீர் திறப்பு!


கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடத்தில் இன்று காலை முதல் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 9,105 கன அடி, வெண்ணாற்றில் வினாடிக்கு 9,017 கன அடி, கல்லணை கால்வாயில் வினாடிக்கு 2,513 கன அடி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 6,548 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பாசனத்துக்காக ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் திறந்துவிடப்படும். ஆனால் இந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட மறுத்தது. இதனால் மேட்டூர் அணையும் வறண்டே காணப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் முழுவதும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை இடைவிடாமல் கொட்டியது. இதனால் காவிரி ஆறு, அதன் துணை ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த பெருவெள்ளத்தால் கர்நாடகா அணைகள் நிரம்பி வழிய, உபரி நீர் தமிழ்நாட்டுக்கு திறந்துவிடப்பட்டது.

இதனையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென அதிகரித்தது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த 28-ந் தேதி திறந்துவிடப்பட்டது. இதனால் காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து சீறிப் பாய்ந்த காவிரி ஆறு, முக்கொம்பை வந்தடைந்து காவிரி, கொள்ளிடமாக பிரிந்து பின்னர் கல்லணைக்கு சென்றது. கல்லணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவிரி டெல்டா பாசனத்துக்காக நீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை முதல் கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 9,105 கன அடி, வெண்ணாற்றில் வினாடிக்கு 9,017 கன அடி, கல்லணை கால்வாயில் வினாடிக்கு 2,513 கன அடி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 6,548 கன அடி நீர் காவிரி டெல்டா பாசனத்துக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. கல்லணை வாய்க்கால் என்பது பட்டுக்கோட்டை, பேராவூரணிக்கு காவிரி நீரை கொண்டு சேர்க்கும். வெண்ணாறு ஆற்றில் திறக்கப்படும் நீர் தஞ்சாவூர் பகுதிகளை சென்றடையும். காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீர் கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக பூம்புகார் சென்றடையும். இதனால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Share on:

அழுக்குத் துணிக்குள் மறைக்கப்பட்ட லஞ்சப் பணம்.. பட்டுக்கோட்டை நகராட்சியில் ரூ. 6.54 லட்சம் பறிமுதல்!


தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் கட்டடம் கட்ட அனுமதி வழங்க லட்சக்கணக்கில் லஞ்சப் பணம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு வந்த புகாரின்பேரில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் 6.54 லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் முதல் பொறியாளர் வரை அதிகாரிகள் பலர் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் ஆணையராகப் பணியாற்றி வருபவர் குமரன். பட்டுக்கோட்டை நகராட்சியின் அவசரக் கூட்டம் நேற்று நடத்தப்பட்டதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, நகரமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை முடித்துச் சென்ற பிறகு நகராட்சி அதிகாரிகளை வைத்து குமரன் கூட்டத்தை நடத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில் வீட்டுமனை சம்பந்தமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் அருண் பிரசாத், சரவணன், பத்மாவதி ஆகியோர் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நகராட்சி அதிகாரிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசராணையை முடித்தவுடன் ஒவ்வொரு அதிகாரிகளிடம் இருந்து எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவைத்துள்ளனர்.

இந்த சோதனையில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இடத்திற்கு அனுமதி வழங்குவதற்காக லஞ்சப் பணத்தை பெற்று மறைத்து வைத்திருந்த பொறியாளர் மனோகரனிடம் இருந்து 84 ஆயிரம் ரூபாய், ஒப்பந்ததாரர் எடிசன் என்பவரிடம் இருந்து 66 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், போலீசாரை கண்ட நகராட்சி கமிஷனர் குமரனின் டிரைவர் வெங்கடேஷன் நகராட்சி அலுவலகத்தின் காம்பவுண்டு சுவரில் இருந்து 8,000 ஆயிரம் ரூபாயை துாக்கி வீசியதை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், கமிஷனர் குமரன் தனது 5 லட்சம் ரூபாயை ஓட்டுநரின் அழுக்குத் துணிகளுக்குள் மறைத்து வைக்க கூறியது தெரியவந்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அந்தப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து, நகராட்சி ஆணையர் குமரன், உதவி பொறியாளர் மனோகரன், டிரைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய உள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
Share on:

கொள்ளிடம் தடுப்பணை சேதம்.. சாய்ந்து விழுந்த உயர் மின்னழுத்த கோபுரம்.. திருச்சி ஆட்சியர் கூறுவது என்ன?


காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஆகையால், திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி முக்கொம்பு மேலணைக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீரானது வந்து கொண்டிருக்கிறது. ஆகையால், காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீரைப் பிரித்து திறந்து விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதனையடுத்து, கொள்ளிடம் ஆற்றில் நீரோட்டம் ஏற்படும் போது, நேப்பியர் பாலம் அருகே மண் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க பாலத்திற்கு அருகே தடுப்பணை கட்டப்பட்டது. மொத்தம் 850 மீட்டர் நீளத்தில் 6.55 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த தடுப்பணை, சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. இந்நிலையில், காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுப்பதால் கொள்ளிடம் ஆற்றில் நேற்று 60,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த நீரோட்டத்தை தாக்குப் பிடிக்க முடியாமல், புதிய தடுப்பணையின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. நீரோட்டம் அதிகரித்ததால் தடுப்பணையை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு நீர்வரத்து அதிகரித்ததால் புதிதாகக் கட்டப்பட்ட தடுப்பணை சேதமடைந்துள்ளது. மேலும், வெள்ளப்பெருக்கு குறைந்த பின்பே, தடுப்பணை எவ்வளவு தூரத்திற்கு சேதமடைந்தது என்பது முழுமையாக தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கொள்ளிடம் பாலத்தின் அருகில் உயர் மின்னழுத்த கோபுரத்தின் கான்கிரீட் தூண்கள் சாய்ந்து விழும் நிலையில் இருந்தது. ஆகையால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், உயர் மின்னழுத்த கோபுரம் சாயாமல் இருப்பதற்கு இரும்புக் கம்பிகள் கொண்டு அதனை வலுப்படுத்துவதற்கு மின்வாரிய ஊழியர்கள் இரவு என பாராமல் பணியைச் செய்து உயர்மின் கோபுரத்தை இரும்பு கம்பியால் இழுத்துக் கட்டினர்.

இருப்பினும், கடைசி நேரத்தில் தண்ணீரின் வேகம் தாங்க முடியாமல் நள்ளிரவு ஒரு மணி அளவில் உயர் மின் அழுத்தக் கோபுரம் தண்ணீரில் சாய்ந்தது விழுந்தது. இந்த நிலையில், இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் ஆய்வு செய்தார்.

அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “தற்போது கொள்ளிடம் ஆற்றில் 1.35 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதனால் பாலத்தில் மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் 800 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்ட தடுப்புச் சுவரில் தற்போது 15 மீட்டர் அளவிற்கு சேதம் அடைந்துள்ளதாகக் கூறினார்.

மேலும், முழுமையாக நீர் வடிந்த பிறகு பாலம் உடைந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தப்படும் என தெரிவித்தார். நீரின் வேகத்தால் இரண்டு மின்னழுத்த கோபுரங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், தண்ணீர் ஒரு பக்கமே பாய்ந்தோடியதால் மண்ணரிப்பு ஏற்பட்டு மின் கோபுரங்கள் சாய்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மின் கோபுரங்கள் சாய்ந்திருந்தாலும் மாற்று ஏற்பாடு மூலம் தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
Share on:

வயநாட்டில் 200-ஐ தாண்டும் உயிரிழப்பு எண்ணிக்கை; 2-வது நாளாகத் தொடரும் மீட்புப் பணிகள்!


செவ்வாய்கிழமை அதிகாலையில் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி பஞ்சாயத்தின் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் இந்த கிராமம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. விடிவதற்குள் கிராமம் முற்றிலும் மாறிவிட்டது.

கிட்டத்தட்ட சூரல்மாலா கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளும் கடைகளும் சேற்றில் புதைந்துள்ளன. உருக்குலைந்த கார்களும், இரு சக்கர வாகனங்களும் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

செவ்வாய்கிழமை அதிகாலையில் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி பஞ்சாயத்தின் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் இந்த கிராமம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. விடிவதற்குள் கிராமம் முற்றிலும் மாறிவிட்டது.

சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள முண்டக்கை என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால், சூரல்மலையில் சேறும், சகதியும் சேர்ந்தது மட்டுமின்றி, எருவழஞ்சி ஆறும் போக்கை மாற்றி கிராமத்தின் நடுவே ஓடியது.

ஒரு தோட்டத்தின் தொழிலாளர் குடியிருப்பு உட்பட அதன் புதிய பாதையில் உள்ள அனைத்தையும் வெள்ளம் அடித்துச் சென்றது. மேலும் அரசு மேல்நிலைப் பள்ளியின் பெரும் பகுதிகளையும் அழித்தது.

சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்களைக் காணவில்லை, மாணவர்களின் இருப்பிடம் குறித்து பெற்றோருடன் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறேன், என்று பள்ளியின் முதல்வர் கூறினார்.

முண்டக்கை செல்ல முயன்ற மீட்புப் பணியாளர்கள், சூரல்மாலாவை இணைக்கும் பாலம் நிலச்சரிவில் இடிந்ததால் மணிக்கணக்கில் சிக்கித் தவித்தனர்.

சூரல்மலை கிராமத்தை சேர்ந்த அலிகோயா கூறுகையில், இது மண்சரிவு அபாயம் இல்லாத பகுதி என்பதால் இதுபோன்ற ஒரு அவலத்தை தான் எதிர்பார்க்கவில்லை, என்றார்.

மலப்புரம் மாவட்டத்தின் நிலம்பூர் பகுதியில் பல கிலோமீட்டர் தொலைவில் பல சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், கிராமத்தைச் சேர்ந்த பலர் அடித்துச் செல்லப்பட்டனர்.

செவ்வாய்கிழமை நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பு, ஞாயிற்றுக்கிழமை முண்டக்கை மலையில் மிகச்சிறிய நிலச்சரிவால், மக்கள் பாதுகாப்பாக இருக்க சூரல்மாலாவில் உள்ள பள்ளியில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டது. திங்கள்கிழமை வரை தொடர்ந்து மழை பெய்ததால், அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர், இதனால் செவ்வாய்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட பேரழிவில் இருந்து தப்பினர்.

முண்டக்கை நிலச்சரிவில் உறவினர்கள் 5 பேரை இழந்து தவிக்கும் டோலி என்ற பெண், முண்டக்கை பகுதியில் இருந்து அதிகளவிலான மக்களை அதிகாரிகள் வேறு இடத்திற்கு மாற்றியிருந்தால் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம்.

திங்கட்கிழமை காலையிலேயே நானும் என் கணவர் ஜோஸும் சுல்தான் பத்தேரி நகருக்குச் சென்றோம். இல்லையெனில், நாங்களும் இடிபாடுகளில் சிக்கி இறந்திருப்போம், என்றார்.
Share on:

அப்படியே மண்ணுக்குள் புதைந்த கிராமங்கள்… கேரள வயநாட்டில் இந்த திடீர் நிலச்சரிவுக்கு என்ன காரணம்?


கேரளா மாநிலத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், அங்கு சுமார் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். இதில் சிக்கி இதுவரை 19க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே கேரளாவில் ஏற்பட்ட இந்த திடீர் நிலச்சரிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து சில தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை காரணமாகக் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே கேரள மாநிலத்தில் நேற்றிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

அங்கே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த இடத்தை சென்றடைவதே மீட்புப் படையினருக்குக் கடினமாக இருக்கும் நிலையில், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், “மேப்பாடி அருகே மலைப்பகுதிகளில் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், மலப்புரம், நீலம்பூர் பகுதிக்குப் பாயும் சாலியாறு ஆற்றில் பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். வயநாட்டில் உள்ள மேப்பாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட முண்டக்கை மற்றும் சூரல்மாலா பகுதிகளில் அமைந்துள்ள கிராமங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது” என்று அவர்கள் தெரிவித்தனர்.

நிலச்சரிவைத் தொடர்ந்து கோவை சூலூரில் இருந்து வயநாட்டிற்கு இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன.. தவிர, இந்திய ராணுவத்தின் பாதுகாப்புப் படையின் இரண்டு பட்டாலியன்களும் கண்ணூரில் இருந்து வயநாட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கே அவர்கள் மீட்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், “நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கையில் ஏராளமான வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளன. அந்த இடத்திற்குச் செல்லும் பாலம் கூட அடித்துச் செல்லப்பட்டதால், இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களுக்கு உதவக் கிராம மக்கள் விரைந்து செல்ல முடியவில்லை. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழும் பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது” என்றார்.

என்ன காரணம்: வயநாடு உட்பட கேரளாவின் பல வட மாவட்டங்களில் நேற்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. கேரளாவின் பெரும்பாலான பகுதிகள் மழைகளால் சூழப்பட்ட பகுதிகள் இப்போது நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளும் அதேபோலத் தான்.. அங்கே நேற்று காலை முதல் பல மணி நேரம் கனமழை கொட்டிய நிலையில், அதுவே நிலச்சரிவை ஏற்படுத்தியுள்ளது.
Share on:

திருச்சி – ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்: வகுப்பறையில் நிகழ்ந்த கொடூரம்!


சமீபகாலமாக பள்ளிகளில் மாணவர்கள் மத்தியின் சாதி மோதல்களும், வன்முறை சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நாங்குநேரி அருகே சக மாணவனை வீடு தேடிச் சென்று அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தடுக்க முயன்ற மாணவரின் தங்கையையும் அரிவாளால் வெட்டினர்.

இதுமட்டுமல்லாமல் ஆங்காங்கே மாணவர்கள் மோதலில் ஈடுபடும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த சூழலில் திருச்சியில் வகுப்பறையில் ஆசிரியரை மாணவன் வெட்டிய சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், தடுக்க முயன்ற ஆசிரியருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவன் ஒருவன் வெளி ஆட்களை அழைத்து வந்து வகுப்பறைக்குள் புகுந்து ஒரு மாணவனை வெட்டியுள்ளார். அப்போது அதை தடுக்க முயன்ற ஆசிரியர் சிவகுமார் தலையிலும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதனால் படு காயமடைந்த ஆசிரியர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Share on:

கூலிப்படையை வைத்து மிரட்டிய முன்னாள் தாசில்தார்.. போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!


நில அபகரிப்புக்கு, உடந்தையாக இருந்ததாக அளித்த புகாரை திரும்பப் பெறும்படி மிரட்டல் விடுத்ததாக திருப்பத்தூர் முன்னாள் தாசில்தாருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய ஜோலார்பேட்டை போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி அருகே உள்ள அதனவூர் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்துக்கான பட்டாவில், கோவிந்தராஜ் என்பவரின் பெயரை சேர்த்து அப்போதைய திருப்பத்தூர் தாசில்தாராக இருந்த சிவபிரகாசம் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தாசில்தாருக்கு எதிராக அளித்த புகாரை விசாரித்து 12 வாரங்களில் சட்ட விதிக்குட்பட்டு நடவடிக்கை எடுக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு இந்த வழக்கை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், புகாரை திரும்பப் பெறும்படி கூலிப்படையினரை வைத்து தன்னை மிரட்டி வருவதாகவும், இதுசம்பந்தமாக ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தும், தாசில்தார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், தனது புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குமரேசன் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், தாசில்தார் சிவபிரகாசம் மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் மீதான விசாரணை நிலை அறிக்கையை ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.
Share on:

கோவை, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு தீயை அணைக்க போனவர்களுக்கு காபி, டீ, செலவு மட்டும் ரூ.27.51 லட்சமாம்


கோவை மாவட்டம், வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க ஏற்பட்ட செலவினங்கள் குறித்து மாநகராட்சியில் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த கணக்கை பார்ப்பவர்களுக்கு தூக்கி வாரிப்போடும் என்பது நிச்சயம்.

கோவை வெள்ளலூர் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் இருந்தும் சேகரிக்கப்படும் குப்பைகளும் இப்பகுதியில் கொட்டி தரம் பிரிக்கப்படும். இங்கு அளவுக்கு அதிகமான குப்பைகள் சேகரமாகும் நிலையில், அடிக்கடி இப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவதும் வழக்கம். இதனால், குப்பைக் கிடங்கில் தீயை அணைக்கும் பணிக்காக இங்கு நிரந்தரமாகவே தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குப்பை கிடங்கு பகுதியில் உள்ள உரம் தயாரிக்கும் இடத்தின் அருகில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து 17ம் தேதி வரை நீடித்தது. கட்டுக்கடங்காத தீயைக் கட்டுப்படுத்துவதற்காக விமானப் படையில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள், 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், காவல் துறை, மருத்துவக் குழு, அலுவலர்களும் இப்பணியில் ஈடுபட்டனர்.

குப்பைகளை அகற்றுவதற்கான ஜேசிபி, ஜெட்லிங் மெஷின் உள்ளிட்ட வாகனங்களுக்கு டீசல், பெட்ரோல், கிரீஸ் ஆயில் ஆகியவற்றுக்கான செலவினம் மற்றும் தீயணைப்பு பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு சாப்பாடு, டீ, காபி உள்ளிட்டவை ஆகியவை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டன.

அந்த வகையில், உணவு, டீ, காபி, குளிர்பானங்கள், பழங்கள் ஆகியவற்றுக்கு மட்டும் 27,51,678 ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது. மேலும், டீசல் பெட்ரோல், கீரிஸ் ஆயில் 18,29,731 ரூபாயும், காலணிகள் 52,348 ரூபாயும், முகக்கவசம் 1,82,900 ரூபாயும், பொக்லைன், லாரி வாடகை 23,48,661 ரூபாயும், தண்ணீர் டேங்கர் லாரி வாடகை (பேரூராட்சி, தனியார் வாகனம்) 5,05,000 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
Share on:

மாஞ்சோலை விவகாரம்.! விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடிவு.!!


நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை கடந்த 1929-ம் ஆண்டு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. வரும் 2028-ம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் குத்தகை காலம் முடியவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே அந்த நிறுவனம், தேயிலை தோட்டத் தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப முடிவு செய்தது.

இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், மாஞ்சோலையில் இருந்து தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டது. மேலும் இந்த தேயிலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில், மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியேற்ற விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துராமன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு தேசிய மனித உரிமை ஆணையத்தில் விசாரணைக்கு வருகிறது.
Share on: