பில்டப் கொடுத்த அண்ணாமலை – கடைசியில் `ஒத்திவைப்பு’ – சொதப்பியதா இணைப்பு விழா?!


நாடாளுமன்ற தேர்தல் களம் சூடாகிக் கொண்டிருக்கிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் புள்ளிகள் மாற்றுக் கட்சிகளில் இணைவது இயல்புதான். அந்த வகையில் கடந்த சில நாள்களாக அதிமுக உள்ளிட்ட கட்சியின் முக்கியப் புள்ளிகள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘ கோவையில் திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் பாஜக-வில் இணைய உள்ளார்கள்.’ என்று கூறியிருந்தார். இதையடுத்து பாஜக-வினரும் சமூகவலைதளங்களில், ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்.’ என்று சொல்லி அதிமுக முன்னாள் அமைச்சர்களின் பெயர்களை சொல்லி பில்டப் ஏற்றினார்கள்.

பிரதமர் மோடி கலந்துகொள்ளும் கூட்டம் பல்லடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதால் பாஜக தங்களது செல்வாக்கை நிரூபிக்க உள்ளதாக அக்கட்சியினர் கூறிவந்தனர். நேரம் ஆக.. ஆக.. முன்னாள் அமைச்சர்.. சிட்டிங் எம்எல்ஏ என்று பலரின் பெயர்கள் அடிபட்டன. இதனிடையே கோவை விமானநிலையம் வந்த அண்ணாமலை, ‘ரெசிடன்ஸி ஹோட்டல்ல பிரஸ்மீட் இருக்கு. அங்க வாங்க. சுடச்சுட செய்தி தரேன்.’ என்று கூறினார்.

பாஜகவினர் அளித்தத் தகவலின் அடிப்படையில் செய்தியாளர்கள் மாலை 5 மணியளவில் ரெசிடன்ஸி ஹோட்டல் சென்றுவிட்டனர். அங்கு கதவில் ஒருபுறம் பிரதமர் மோடி புகைப்படமும், மறுபுறம் தாமரை சின்னத்தின் படமும் வைக்கப்பட்டிருந்தது. சில புதிய பாஜக துண்டுகளும் வைக்கப்பட்டிருந்தன. அங்கு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன் என்பவர் மட்டும் நீண்ட நேரமாக காத்திருந்தார்.

பாஜக நிர்வாகிகள் அவ்வபோது வருவதும், போவதுமாக இருந்தனர். ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாகியும் இணைப்பு விழா தொடங்கவில்லை. அண்ணாமலை அங்கு வரவும் இல்லை. ஒருகட்டத்தில் பாஜகவினரே, ‘நிகழ்ச்சி இல்லை.’ என கூறி சென்றார்கள்.

இதையடுத்து பாஜக மூத்தத் தலைவர்கள் சுதாகர் ரெட்டி, எல். முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அங்கு வந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ‘மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா நிகழ்ச்சி தள்ளி போய் உள்ளது. பாதுகாப்பு அம்சம் உள்ளிட்ட காரணங்களால் இணைப்பு விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சியில் இருந்தும் பாஜகவுக்கு வர உள்ளார்கள். மாற்றுக் கட்சியினர் மோடி ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்து அவர்களாக வருகிறார்கள்.’ என்றனர்.

நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு , எல். முருகன் கடும் கோபமடைந்தார். ‘நான் வக்கீல். வானதியும் வக்கீல். எங்கு எப்படி பேச வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். நீங்க எப்படிக் கேட்டாலும் ஒரே பதில்தான். இணைப்பு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.’ என்று மீண்டும் மீண்டும் அதே பதிலை கூறினார்.

இந்நிலையில் அங்கு நீண்ட நேரமாக காத்திருந்த ராஜா அம்மையப்பன் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘நான் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டேன். இங்கு வேறு வேலையாக வந்தேன்.’ `ஹோட்டலில் தங்கியிருந்தேன்.’ `நான் வேறு கட்சியில் இணைந்துவிட்டேன்.’ `ஏமாற்றம் எல்லாம் இல்லை.’ ` பாஜகவில் சேரவில்லை என்றும் சொல்ல மாட்டேன்.’

`பிரதமரை சந்திக்க வாய்ப்பு கொடுத்துள்ளனர்.’ `நான் இங்கு கட்சியில் எல்லாம் இணைய வரவில்லை.’ `அது நாங்கள் இல்லை.’ `கட்சியில் இணைவதை அப்பறம் பார்த்துக் கொள்ளலாம்.’ என்று செய்தியாளர்களின் கேள்விக்கு மாறி மாறி குழப்பி குழப்பி பதிலளித்து சென்றார்.
Share on:

ஐ.பெரியசாமிக்கு நீதிபதி செக்.. 2012 முதல் 2024 வரை வீட்டு வசதி முறைகேடு வழக்கு கடந்து வந்த பாதை.


அமைச்சர் என்பவர் மக்கள் மத்தியில் சுத்தமானவராக இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஐ. பெரியசாமிக்கு எதிரான வழக்கில் கருத்து தெரிவித்துள்ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் இருந்து ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் விசாரிக்க ஆணை பிறப்பித்துள்ளார் ஹைகோர்ட் நீதிபதி.

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஐ.பெரியசாமி. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அமைச்சரவையில் முக்கியமான துறைகளின் அமைச்சராகவும் இருந்தவர் ஐ.பெரியசாமி. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். நகைக்கடன் ரத்து தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற முக்கியக் காரணமாக இருந்தார்.

2006 முதல் 2011 வரையிலான ஆண்டு திமுக ஆட்சியின் போது, வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். கடந்த 2008ஆம் ஆண்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது.

இந்த புகார் தொடர்பாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012ஆம் ஆண்டு , அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

பத்தாண்டுகளுக்கும் மேலாக வழக்கு நடைபெற்றது. விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இதனால் வீட்டு வசதி வாரிய துறைக்கு எந்த ஒரு இழப்பும் ஏற்படவில்லை, சந்தை விலைக்குதான் விற்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இதற்கு அமைச்சர் உடந்தையாக இருந்தார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரங்கள் இல்லை என்றும் சுட்டிக்காட்டினர். மேலும் வழக்குத் தொடர்வதற்கு முறையான அனுமதி பெறவில்லை என்றும், புகாருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வாதிட்டனர். அத்துடன், அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட இந்த வழக்கிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் ஐ.பெரியசாமியை வழக்கில் இருந்து விடுவித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய, சென்னை உயநீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, வழக்கில் சாட்சி விசாரணை துவங்கிய பின்பு விடுவிக்க கோரியது ஏன்? வழக்குப்பதியும் போது குற்றம் சாட்டப்பட்டவர் என்ன பொறுப்பில் இருந்தார்? என்பன உள்ளிட்ட ஐந்து கேள்விகளை எழுப்பிய நீதிபதி, இதுசம்பந்தமாக விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

அதற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், முதல் தகவல் அறிக்கையில் ஐ.பெரியசாமியின் பெயர் இல்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபோதுதான் அவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

ஐ.பெரியசாமிக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநரிடம் ஒப்புதல் பெறாமல் சபாநாயகரிடம் ஒப்புதல் பெறப்பட்டது சட்டப்படி தவறு என்பதால்தான் சாட்சி விசாரணை தொடங்கிய பின்னர் விடுவிக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. முறையான அனுமதியில்லாமல் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க முடியாது. அப்படி விசாரிப்பது நீதிமன்ற நேரத்தையும், பொதுமக்களின் பணத்தையும் வீணடிப்பதாகும் என்றும் தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார். சபாநாயகரின் ஒப்புதல் சட்டப்படி செல்லாது என்பதால் சிறப்பு நீதிமன்றம் மனதைச் செலுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளது. அது சரியானது என்று வாதிட்டார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பு வாதம் முடிந்ததையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பு தனது தரப்பு வாதத்தை முன் வைத்தது. லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “அரசிடம் சம்பளம் பெறும் பொது ஊழியர் என்பதால் வழக்கு தொடர ஆளுநரிடம் தான் அனுமதி பெற வேண்டும். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது” என்று வாதிட்டார்.

இதனை கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், ஆளுநரிடம் அனுமதி பெறவில்லை என்று கூறுகிறீர்கள்.. லஞ்ச ஒழிப்புத் துறை ஏன் ஆளுநரிடம் அனுமதி பெற முறையாக முயற்சி செய்யவில்லை” என்றும் கேள்வி எழுப்பினார். இந்த விஷயத்தில் இன்னும் காலம் கடந்துவிடவில்லை, இனி மேலும் சென்று ஆளுநருடைய அனுமதியை பெறலாம் என்று என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து ஏன் மேல்முறையீடு செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதி, “இது லஞ்ச ஒழிப்புத் துறையின் செயல்பாடின்மையை காட்டுகிறது. இதனால்தான் இந்த வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அதேபோல சிறப்பு நீதிமன்றமும் ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிடவில்லை என்றும் குறிப்பிட்டார் ஆனந்த் வெங்கடேஷ்.

அமைச்சர் என்பவர் மக்கள் மத்தியில் சுத்தமானவராக இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கின் தீர்ப்பை பிப்ரவரி 26ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் ஐ பெரிய சாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 26 ஆம் தேதிக்குள் எம்பி எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு மாற்று நடவடிக்கை முடிந்த பிறகு மார்ச் 28ஆம் தேதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் எம் பி எம் எல் ஏக்கருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கான பிணையை செலுத்த வேண்டும் எனவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாவிட்டால் அவர்களுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பிக்கலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

தினந்தோறும் வழக்கின் விசாரணையை நடத்த வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்திற்குள் முடித்து உயர் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
Share on:

கோமலவள்ளி டூ அம்மா.. MGR கொடுத்த வாள்; ஜெயலலிதா சிங்கமான கதை!


எம்ஜிஆரை சந்தித்தது ஜெயலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கான விதையாக அமைந்தது. எம்ஜிஆர் தன் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக ஜெயலலிதாவை நியமித்தார்.

பிறப்புசந்தியா – ஜெயராம் தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக 1948 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ந்தேதி மைசூரில் பிறந்தார் ஜெயலலிதா. இவரது இயற்பெயர் கோமலவள்ளி. இவரை குடும்பத்தினர் அம்மு என செல்லமாக அழைத்தனர்.ஜெயலலிதாவிற்கு ஒரு வயது ஆன போது அவரது தந்தை ஜெயராம் மறைந்தார். இதற்கிடையில் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவிற்கு சினிமா வாய்ப்புகள் தேடி வந்தன. கற்கோட்டை என்ற படத்தின் மூலம் திரை உலகில் கால் பதித்தார். அப்போது சென்னையில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் அம்முவும் அவரது சகோதரரும் சேர்க்கப்பட்டனர். ஆனால் குழந்தைகளை சரியாக கவனிக்க முடியாத தாய் சந்தியா அவரை பெங்களூருவில் பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இதையடுதது பிஷப் கார்ட்டன்ஸ் பள்ளியில் சேர்க்கப்பட்டார். மீண்டும் சென்னைகே அழைத்து வரப்பட்ட ஜெயலலிதா சர்ச் பார்க் கான்வென்டில் சேர்க்கப்பட்டார்.

1963ல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவர் இளம் வயதில் கல்லூரி விரிவுரையாளராக விரும்பினார். ஆனால் காலம் அவரை சினிமா, அரசியல் என்று கை பிடித்து அழைத்து வந்து விட்டது. சினிமா நாடகத்துறையில் பிஸியாக இருந்த ஜெயலலிதா ஆர்.எம்.வீரப்பனின் முன்னிலையில் நடந்த நாட்டிய நிகழச்சி ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வுக்கு வித்திட்டது.

எம்ஜிஆரை சந்தித்தது ஜெயலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கான விதையாக அமைந்தது. எம்ஜிஆர் தன் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக ஜெயலலிதாவை நியமித்தார். 1986ல் மதுரை மாநாட்டில் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி செங்கோலை ஜெயலலிதா எம்ஜிஆருக்கு கொடுத்தார். அதை ஜெயலலிதாவிற்கே எம்ஜிஆர் திருப்பி கொடுத்தார்.

இதற்கிடையில் 1987 டிசம்பர் 24ந்தேதி எம்ஜிஆரின் மறைவிற்கு பின் ஜானகி முதல்வரானார். ஆனால் வெறும் 24 நாட்களில் அவரது ஆட்சி கவிழ்ந்தது. அதிமுக ஜா, ஜெ என இரு அணிகளாக பிரிந்து அடுத்து வந்த 1989ம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்தித்தன. இதில் ஜெ. அணி 27 இடங்களில் வெற்றி பெற்றது. ஜானகி அணி ஒரு இடத்தை பெற்று படுதோல்வி அடைந்தது.

ஜெ அணியினர் 21.15 சதவிதம் வாக்குகள் பெற்றனர். இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் முதல் எதிர்க்கட்சி தலைவராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்.1989 பிப்ரவரி மாதம் அதிமுகவின் இரு பிரிவுகளும் ஜெயலலிதா தலைமையில் இணைந்தது. பின் 1991ல் ஜெயலிலிதா தலைமையில் போட்டியிட்ட அதிமுக 168 தொகுதிகளில் போட்டியிட்டு 164 இடங்களில் வென்றது. ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். 1996ம் ஆண்டு தேர்தலில் போலி எண்கவுண்டர், வளர்ப்பு மகன் திருமணம் உள்ளிட்ட பல காரணங்களால் படு தோல்வியை தழுவினார்.

மீண்டும் 2001ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வர் ஆனார். டான்சி வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதால் தகுதியிழப்பில் அவர் முதல் பதவியை இழக்க நேரிட்டது.இதையடுத்து 2006 சட்டமன்றதேர்தலில் மதிமுக, விடுதலை சிறுத்தைகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வெறும் 69 இடங்கள்தான் கிடைத்தது. பின்னர் 2009ல் நடந்த மக்களவை தேர்தலிலும் அதிமுகவிற்கு தோல்வியே கிடைத்தது.ஆனால் 2011ம் ஆண்டு 150 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைத்தார். பின்னர் 2016 ம்ஆண்டு நடந்த சட்ட மன்ற தேர்தலிலும் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வர் பதவியை அலங்கரித்தார்.

இந்நிலையில் 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ந்தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவால்,சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.75 நாட்கள் சிகிச்சைக்குப்பின் உடல் நலம் தேறிவந்ததாகக் கூறப்பட்ட நிலையில் திடீர் மாரடைப்பால் டிசம்பர் மாதம் 5-ம் தேதி நள்ளிரவு 11.30 மணியளவில் இறந்தார்.பல்வேறு மக்கள் நல திட்டங்களால் தமிழக மக்களுக்கு மிகவும் நெருக்கம் ஆனார். பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதி உதவி திட்டம், மாணவர்களுக்கு இலவச சைக்கிள், அம்மா உணவகம் என தமிழகம் தலை நிமிர ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார். இதனால் அதிமுகவினர் மட்டும் இன்றி அனைத்து தரப்பினராலும் அம்மா என்று அழைக்கப்பட்டார் என்றால் மிகையல்ல.
Share on:

விவசாயிகள் போராட்டம் தீவிரம்! போருக்கு செல்வதுபோல் படையெடுப்பு.


இரும்பு தடுப்புகள், முக கவசம், பீரங்கிபோல் மாற்றியமைக்கப்பட்ட டிராக்டர், அதிகசக்தி உடைய புல்டோசர்கள் என, போருக்கு செல்வது போல், பஞ்சாப் விவசாயிகள் டில்லியை நோக்கி தங்கள் பேரணியை நேற்று மீண்டும் துவக்கினர். இதனால், போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம், விவசாயக் கடன் தள்ளுபடி உட்படபல கோரிக்கைகளை முன் வைத்து, பஞ்சாபைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர், 13ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘டில்லி சலோ’ எனப்படும் டில்லியை நோக்கி என்ற பேரணியைத் துவக்கினர்.

கடந்த, 2020 – 2021ல் விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் மிகப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நாள் நீடித்ததால், அந்த சட்டங்களை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது.அதையடுத்து, தற்போதைய போராட்டத்தை தடுக்கும் வகையில், பஞ்சாப் – ஹரியானா எல்லையில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஹரியானாவுக்குள் விவசாயிகள் நுழைய முடியாதபடி, பல அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன. கான்கிரீட் தடுப்புச்சுவர்கள், இரும்பு முள் வேலிகள் என, தடுப்புகள் அமைக்கப்பட்டன.

இதனால், பஞ்சாப் – ஹரியானா எல்லையிலேயே விவசாயிகள் முகாமிட்டிருந்தனர். கடந்த போராட்டத்தைப் போல, டிராக்டர்கள் மற்றும் பஸ்கள், வேன்கள் என, பலவகையான வாகனங்களில் விவசாயிகள் பேரணியாக வந்தனர். அடுத்த சில மாதங்களுக்கு தேவையான சமையல் பொருட்களையும் எடுத்து வந்தனர்.

போராட்டத்தை திரும்பப் பெற வைப்பதற்காக மத்திய அரசு சார்பில், பியுஷ் கோயல், அர்ஜுன் முண்டா, நித்யானந்த் ராய் அடங்கிய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்த அமைச்சர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன், நான்கு சுற்று பேச்சு நடத்தினர்.

மத்திய அரசு பல திட்டங்களை தெரிவித்தும், விவசாய சங்கத்தினர் மசியவில்லை. டில்லியை நோக்கி தங்களுடைய பேரணி தொடரும் என அறிவித்தனர்.கடந்த சில நாட்களாக, ஹரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு, ஹரியானா போலீசார், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறு விமானம் வாயிலாக, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.

போலீசின் இந்த முயற்சியை தடுக்க, விவசாயிகள், காற்றாடிகளைப் பயன்படுத்தி, ட்ரோன்களை சேதப்படுத்தினர்.மேலும், ‘முல்தானி மிட்டி’ எனப்படும் மூலிகை மண்ணை முகத்தில் பூசிக் கொண்டனர். இதன் வாயிலாக புகைக் குண்டுகளால் ஏற்படும் வெப்பத்தை தணித்தனர். இதைத் தவிர, ஈரம் செய்யப்பட்ட கோணிப்பைகளைப் பயன்படுத்தி, கண்ணீர் புகைக் குண்டுகளை செயலிழக்க வைத்தனர்.

தற்போது போராட்டத்தை தீவிரபடுத்தியுள்ள விவசாயிகள், அடுத்தக்கட்டத்துக்கு தயாராகி உள்ளனர். மொத்தம், 14,000 விவசாயிகள், 1,200 டிராக்டர்கள், 300 கார்கள், 10 மினி பஸ்களுடன் வந்துள்ளனர். இதைத் தவிர, இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்டவையும் வைத்துள்ளனர்.

தடுப்புகளை தகர்த்தெறிவதற்காக, புல்டோசர்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களையும் எடுத்து வந்துள்ளனர். தடுப்புகளை தகர்த்தெரிவதுடன், அதை அப்புறப்படுத்தவும் இவற்றை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.இதைத் தவிர போருக்கு தயாராவது போல், இரும்பு தகடுகளாலான கேடயம், டிராக்டர்களின் முன்பகுதியில் கனமான இரும்பு பாலங்கள் பொருத்தியுள்ளனர். இதற்கு ஒருபடி மேலாக, சில டிராக்டர்களை, கவச பீரங்கிபோல் வடிவமைத்துள்ளனர்.

டிராக்டர்களின் முன்பகுதியில், இரும்பு தகடுகளை பொருத்தியுள்ளனர். போலீசார் தடியடி நடத்தினால் தடுப்பதற்கு இந்த ஏற்பாடு. இதைத் தவிர, உடலில் பொருத்திக் கொள்வதற்கான தகடுகளையும் வடிவமைத்துள்ளனர்.

கண்ணீர் புகைகுண்டுகளை சமாளிக்க, முக கவசம், கண்களை பாதுகாக்கும் கவசம் உள்ளிட்டையும் தயாராக வைத்துள்ளனர். இதற்கிடையே, ஹரியானா எல்லையில், விவசாயிகளை கலைப்பதற்காக போலீசார் நேற்று கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதில், சுபகரண் சிங், 21, என்ற இளைஞர் இறந்ததாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து நடந்த மோதலில், 12 போலீசார் காயமடைந்தனர்.இதையடுத்து, போராட்டத்தை இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நாளை அறிவிப்பதாகவும், விவசாய சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
Share on:

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அமர்வில் காரசாரமாக நடைபெற்ற விசாரணை!


சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எட்டு மாதங்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார்.

ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்று முறை மனு தாக்கல் செய்தும் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் தலா ஒரு முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் நடைபெற்று வந்தது.

செந்தில் பாலாஜி சார்பாக மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதாடினார். செந்தில் பாலாஜி மீது 30 வழக்குகள் உள்ளதாக குறிப்பிட்டதற்கு மறுத்துள்ளார். “செந்தில் பாலாஜி மீதான அனைத்து வழக்குகளும் தேர்தல், போராட்டங்கள் தொடர்பானவை. சண்முகம் என்பவருக்கும் செந்தில் பாலாஜிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முறைகேட்டுக்கான முகாந்திரம் இல்லாமல் சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுக்கு நேரடியாக எந்த ஆதாரமும் இல்லை. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு தயார், எனவே ஜாமீன் வழங்க வேண்டும்” என கோரினார்.

அமலாக்கத்துறை தரப்பில், “தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களில் எந்த திருத்தத்தையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை. அனைத்தும் நேர்மையான ஆவணங்கள் தான். ஆதாரங்கள் அனைத்தும் மற்றொரு புலனாய்வு அமைப்பால் சேகரிக்கப்பட்டவை” என்று தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்திவைத்தார்.
Share on:

அவதூறு பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! – நடிகை திரிஷா திட்டவட்டம்


தன்னை பற்றி அவதூறு பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகை திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இணையத்தில் நடிகை திரிஷா தொடர்படுத்தி அவதூறு கருத்துகள் பரவின. அதற்கு திரைத்துறையில் இருந்து இயக்குநர் சேரன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே நடிகை திரிஷா இந்த விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மற்றும் கேவலமான மனிதர்களைத் திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட நபர் மீது உறுதியான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் சொல்ல வேண்டிய மற்றும் செய்ய வேண்டிய அனைத்தையும் எனது சட்ட வல்லுநர்கள் மேற்கொள்வார்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Share on:

அம்மா இருந்த பதவியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?


* தி.மு.க-வினருடன் திரை மறைவு தொடர்பு வைத்திருப்பவர்களை கட்சியிலிருந்து நீக்கி, அதிமுக-வை கட்டுக்கோப்பாக வைத்திருந்த ஜெயலலிதா அம்மா இருந்த பதவியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?

* சட்டசபை தேர்தலின் போது சென்னை திருவல்லிக்கேணியில் உதய நிதியை எதிர்த்து போட்டியிட நடிகை குஷ்பு பாஜக-வில் சீட் கேட்டார். அதை பாஜக-விற்கு கொடுக்காமல் அந்த தொகுதியை கேட்காத பா.ம.க-வுக்கு கொடுத்து சுலப வெற்றியை அளித்தவுடன் அவர் மாநிலம் முழுவதும் சுற்றி சுற்றி பிரச்சாரம் செய்ய மறைமுகமாக உதவியது யார்?

* பொன்முடி, எ.வ.வேலு ஆகியோருக்கு எதிராக அதிமுக சார்பில் வலுவான வேட்பாளர்களை நிறுத்தி நெருக்கடி கொடுக்காமல் அப்போது வலுவில்லாத பா.ஜ.க-விடம் தள்ளிவிட்டு அவர்களுக்கு சுலப வெற்றியை பரிசளித்தது ஏன் என்று எடப்பாடி பழனிசாமி விளக்க வேண்டும்.

* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக-வின் கோட்டையாக இருந்த கோவை உள்ளிட்ட கொங்கு பகுதிகளில் பெயரளவிற்கு கூட போராடாமல் 100 சதவீத வெற்றியை திமுகவிற்கு அள்ளிக்கொடுத்ததன் பின்னணியை எடப்பாடி பழனிசாமி விளக்க வேண்டும்.

* அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் ஒரு பெட்டியில், “லஞ்ச ஒழிப்புத் துறைக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஒரு துரும்பை கூட கிள்ளிப் போட வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு ஆளும்கட்சியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அ.தி.மு.க-வினர் மீது நடவடிக்கை இல்லை” என்கிறார். இது எந்த வகையான ஒப்பந்தம்?

* இவற்றையெல்லாம் விட சட்டசபையில் ஆளும் தி.மு.க-வை மயிலிறகால் வருடுவது போல் EPS & Co பேசுவதும். முதல்வர் ஸ்டாலின் பெரிய மனதுடன் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஒதுக்குவதும் எப்படி நடக்கிறது?
Share on:

சரியான எதிர்க்கட்சி அரசியலை செய்கிறாரா எடப்பாடி பழனிசாமி?


* எதிலும் உறுதியான முடிவில்லை பாஜக – திமுக மோதல்களைச் சாதகமாக்கி, அரசியல் செய்வதிலும் தடுமாறுகிறார் எடப்பாடி பழனிசாமி. கிளாம்பாக்கம் சர்ச்சை, ஆளுநர்-சபாநாயகர் சர்ச்சை போன்ற கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் தவறவிடுகிறார் எதிர்க்கட்சி தலைவராக சட்டமன்றத்தில் அவரது குரல் வலுவாக ஒலிக்கவில்லை.

* கடந்த ஓராண்டாக, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு ஆதரவாக EPS பேசாத மேடை இல்லை. ஆனால், அந்தத் திட்டத்துக்கு எதிராக, சட்டமன்றத்தில் திமுக தனித் தீர்மானம் கொண்டுவந்தபோது ஆணித்தரமாகத் தன் வாதத்தை EPS பேசியிருக்க வேண்டும். அதை செய்யவில்லை ஆளுநர்-சபாநாயகர் சர்ச்சையில் கூட ‘இது ஆளுநருக்கும் சபாநாயகருக்கு இடையேயுள்ள பிரச்சனை நாங்கள் இதுகுறித்து என்ன சொல்வது ஆளுநரையும் அரசையும்தான் கேட்க வேண்டும்’ எனப் பூசி மெழுகிவிட்டுக் கழண்டுகொண்டார். ஆளுநருக்கும் அரசுக்கும் இடையேயான பிரச்சனையில்தானே ஒரு எதிர்க்கட்சி அரசியல் செய்ய முடியும்.

* அதிமுக ஆட்சியின்போது, மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு அம்மாவின் பெயரைச் சூட்ட முடிவெடுக்கப்பட்டது. அதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு, அப்போதைய ஆளுநருக்கு அனுப்பியும் வைக்கப்பட்டது. ஆளுநராக ஆர்.என்.ரவி வந்த பிறகு, அந்த மசோதாவையும் சேர்த்து மொத்தம் பத்து மசோதாக்களைத் திருப்பியனுப்பியுள்ளார்.ஆளுநரைக் கண்டிக்குவிதமாக கடந்த ஆண்டு நவம்பரில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.செப்டம்பர் மாதமே பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு EPS அவையிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டார்.

* இரட்டை குதிரைச் சவாரி தலைகுப்புறத்தான் கவிழ்ந்துவிலும். அதுபோல ஆளுநர் விவகாரத்தில் ஆதரவுமில்லை… எதிர்ப்புமில்லை என EPS தயங்குவது கட்சியின் பின்பதையே பலவீனமாகும்.

* நாடாளுமன்றத்தில் MP-க்கள் நீக்கம் நடந்தபோது, மாநிலங்களுக்கான நிதிப் பங்கீடு விவகாரம் பற்றியெரிந்தபோது உறுதியாக எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை. ராமர் கோவில் விவகாரத்தில் சரி, விவசாயிகள் போராட்டத்திலும் சரி தனது நிலைப்பாட்டை தெரிவிக்க தவறிவிட்டார் EPS.

* கடந்த பிப்ரவரி 1-ம் தேதி, மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலானது. நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கு கருத்து தெரிவித்த நிலையில், அதிமுக மட்டும் எதுவும் சொல்லவில்லை. தமிழ்நாட்டை 31 ஆண்டுகள் ஆண்ட ஒரு கட்சி மத்திய பட்ஜெட்டுக்கு கருத்து தெரிவிக்கவில்லை என்பது அரசியல்ரீதியாக எவ்வளவு பெரிய பின்னடைவு? பட்ஜெட்டுக்கு ஆதரவாகக் கருத்து சொன்னால் ‘கூட்டணி முறிவு என்பது நாடகம்’ என திமுக வசை பாடும். பட்ஜெட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்தால் டெல்லியின் அஸ்திரங்கள் பாயும் ‘நமக்கேன் வம்பு’ என்று அமைதியாகிவிட்டாரா EPS?
Share on:

‛‛கேன்சர் தரும் ரசாயனம்’’.. உறுதி செய்த ஆய்வு! மெரினா பஞ்சுமிட்டாயின் ஷாக் பின்னணி..


பஞ்சு மிட்டாய் கண்ணை பறிக்கும் நிறத்தில் இருக்க அதில் உடல் நலத்திற்கு கேடு ஏற்படுத்தும் ரசாயனம் சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாயை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்து சோதனை செய்தனர். சோதனையில், ஆபத்தான ரசாயனம் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

பஞ்சு மிட்டாய் எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கும் உணவு பொருள். கடற்கரை தொடங்கி கடை வீதிகள் வரை இவற்றை பார்க்க முடியும். ஆனால் இந்த பஞ்சு மிட்டாயில் ஆபத்தான ரசாயனம் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்திருக்கிறது. அதாவது, புதுச்சேரி கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களில் வடமாநில இளைஞர்கள் இந்த பஞ்சுமிட்டாயை விற்பனை செய்து வந்திருக்கின்றனர். இதில் பயன்படுத்தப்படும் ரசாயன பொருள் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் தீப்பெட்டி மற்றும் ஊதுவத்தி ஆகியவற்றில் கலக்கப்படும், ‘ரோடமின் பி’ என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இந்த ரசாயனம் நமது வயிற்றிற்குள் போனால் புற்றுநோயை ஏற்படுத்தும். பஞ்சு மிட்டாய் ரோஸ், சிவப்பு என கண்ணை பறிக்கும் நிறத்தில் இருப்பதற்காக நிறமிகள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், குறைந்த விலை என்பதால் ‘ரோடமின் பி’ போன்ற ஆபத்தான ரசாயனங்களை பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

இது தொடர்பாக பஞ்சு மிட்டாய் விற்பனையாளர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மட்டுமல்லாது புதுச்சேரி முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்பனையில் ஈடுபட்டுவருபவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், “புதுச்சேரியில் ஆய்வின் போது பஞ்சு மிட்டாயில் ஆபத்தான ரசாயனம் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே பஞ்சுமிட்டாய் உற்பத்தி செய்யும் பகுதிகளில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது. இனி பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய வேண்டும் எனில் உணவு பாதுகாப்பு துறையின் தர சான்றிதழ் அவசியம் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. சில வியாபாரிகள் தமிழகத்திலிருந்து பொருட்களை வாங்கி வந்ததாக கூறியிருக்கிறார்கள். எனவே அங்கும் இதுபோன்று சோதனை நடைபெறும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து கடந்த 8ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யும் வடமாநில தொழிலாளர்களிடமிருந்து பஞ்சு மிட்டாய் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் பல்லாவரத்தில் பஞ்சு மிட்டாய் தயாரிக்கும் ஆலையிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்கு சேகரிக்கப்பட்ட ரசாயனங்களும் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பஞ்சுமிட்டாய்களில் ஆபத்தான ரசாயனம் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து பஞ்சு மிட்டாய் விற்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
Share on:

எப்படி நம்புறது? 30 வழக்குகளில் சிக்கியுள்ளார் செந்தில் பாலாஜி.. கிடுக்கிப்பிடி போட்ட அமலாக்கத்துறை!


செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் இன்று அதிரடியாக வாதங்களை வைத்துள்ளார் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரால் சுந்தரேசன். 30 கேஸில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவரை ஜாமீனில் விட்டால் அவர் எந்த குற்றமும் செய்யமாட்டார் என எப்படி நம்புவது என கேள்வி எழுப்பியுள்ளது அமலாக்கத்துறை.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பு நேற்று வைத்த வாதங்களுக்கு பதிலளித்து, அமலாக்கத் துறை தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது அவர், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பதவிக்கு ஏற்றவாறு, 2 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை என மொத்தம், 67 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு மூன்று வழக்குகள் தொடர்ந்துள்ளது.

இந்த வழக்குகளில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், சென்னை எம்.பி. – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறபு நீதிமன்றத்தில் உள்ளன. அந்த ஆதாரங்களை, உயர் நீதிமன்ற உத்தரவின்படி மட்டுமே அமலாக்கத் துறை பெற்றது. அந்த ஆதாரங்கள் திருத்தப்படவில்லை என விளக்கினார்.

மேலும், முந்தைய ஜாமீன் மனு தள்ளுபடிக்கு பிறகு இந்த வழக்கில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தவிர, வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதுவும் ஜாமீன் மனு விசாரணை துவங்குவதற்கு ஒரு நாள் முன் தான் ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும் இன்னமும் அவர் செல்வாக்கான நபராகவே உள்ளார்.

ஏற்கனவே பணம் கொடுத்தவர்களிடம் செந்தில் பாலாஜி சமரசம் செய்திருக்கிறார். வழக்கில் சாட்சிகள் இன்னும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படாத நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைக்கக் கூடும். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சண்முகம், சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார்.

தொடர்ந்து, வழக்கில் உள்ள ஆதாரங்கள் அனைத்தும் மற்றொரு புலனாய்வு அமைப்பால் சேகரிக்கப்பட்டவை. அவை 2020ஆம் ஆண்டில் பெறப்பட்டு, தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அமலாக்கத்துறை எந்த ஆதாரத்தையும் உருவாக்கவும் இல்லை, திருத்தவும் இல்லை. மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கு ஆவணங்களை மட்டுமே நம்பியுள்ளது எனக் குறிப்பிட்டார் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன்.

30 வழக்குகளில் சிக்கியுள்ளவரை ஜாமீனில் விட்டால்: மேலும், 30 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர் ஜாமீனில் விடுதலையானால் எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டார் என நம்ப எந்த காரணமும் இல்லை. சாட்சி விசாரணை துவங்க அமலாக்கத் துறை தயாராக உள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்காத அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதத்தை நிறைவு செய்தார்.
Share on: