சென்னை பூந்தமல்லி அருகே இன்றும் இடுப்பளவு தண்ணீர்! படகில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்!


சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டை யமுனா நகரில் இன்றும் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் படகில் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலைக்கு குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 4ம் தேதி மற்றும் 5ம் தேதி பெய்த கனமழையால் சென்னை மாநகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. வெறும் 36 மணி நேரத்தில் மீனம்பாக்கத்தில் 43 செ.மீ., பெருங்குடியில் 44 செ.மீ மழை பதிவாகி இருந்தது.

சென்னையில் வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், ராயபுரம், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர், வண்ணாரப்பேட்டை, துரைப்பாக்கம், சிறுசேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், பெருங்குடி, காட்டுப்பாக்கம், பெரும்பாக்கம், கீழ்கட்டளை , கோவிலம்பாக்கம், குரோம்பேட்டை, கொரட்டூர், பட்டரை வாக்கம், கொளத்தூர், திருவொற்றியூர் கார்கில் நகர், எண்ணூர், போரூர், அய்யப்பன்தாங்கல், தியாகராய நகர், சைதாப்பேட்டை, சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், கோடம்பாக்கம், எழும்பூர், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், நசரதப்பேட்டை, பூந்தமல்லி , தண்டையார்பேட்டை, கொளத்தூர், கொரட்டூர், ஆவடி, வில்லிவாக்கம், மயிலாப்பூர் உள்பட பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. இதில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் குறைந்த இயல்பு நிலை தற்போது திரும்பி உள்ளது.

அதேநேரம் தண்ணீர் வெளியேற வழி இல்லாததால் வரதராஜபுரம், மண்ணிவாக்கம், பரத்வாஜ் நகர், கிருஷ்ணா நகர், மணிமங்கலம், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை நீடித்தது. அவர்களை தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்தனர். தற்போது ஓரளவு இயல்பு நிலை அங்கும் திரும்பி வருகிறது. ஆனால் இன்னமும் முழுமையாகதிரும்பவில்லை.. இதேபோல் செம்மஞ்சேரி, எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளிலும் பாதிப்புஅதிகமாக இருந்தது. அங்குமே ஓரளவு இயல்பு நிலை திரும்பி உள்ளது.

சென்னை நகரை பொறுத்தவரை எங்குமே பெரிய அளவில் பாதிப்பு தற்போது இல்லை.. அதேநேரம் சென்னையின் புறநகர் பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகும் என்கிற நிலை தான் உள்ளது. அதற்கு சாட்சியாக வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது. சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டை யமுனா நகரில் இன்றும் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் படகில் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலைக்கு குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர்.

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள நசரத்பேட்டை யமுனா நகரில் தண்ணீர் வெளியேற முறையான வசதி இல்லாத பகுதியாக உள்ளது. இதுதான் மழை நின்று ஒரு வாரம் ஆன பின்னரும் தண்ணீர்தேங்க காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த வீடியோவை வெளியிட்டுள்ள சிலர், சென்னையில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக கூறுவோர், இதை பாருங்கள் என்று தெரிவித்துள்ளனர்.
Share on:

குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறோம்! அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட வண்ணாரப்பேட்டை மக்கள்!


குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறோம் என ஆவேசத்தை வெளிப்படுத்திய சென்னை வண்ணாரப்பேட்டை பகுதி மக்கள் அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்டு நிவாரணம் கோரினர்.மிக் ஜாம் புயலால் சென்னையில் 2 நாட்களாக கொட்டித் தீர்த்த மழையால் வரலாறு காணாத பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழை ஓய்ந்து 3 நாட்களுக்கு பிறகும் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. இதனால் மக்கள் சொல்லொணாத் துயரில் ஆழ்ந்துள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மீட்புப் பணிகளும் சீரமைப்பு பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கிட தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அமைச்சர்களும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அமைச்சர் சேகர்பாபு சென்னை வண்ணாரப்பேட்டை பகுதி மக்களை சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கவும், குறைகளை கேட்கவும் சென்றிருந்தார். அப்போது அவரை சூழ்ந்துக்கொண்ட மக்கள், குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறோம், உணவு இல்லை பால் இல்லை என ஆவேசமாக கூறி முற்றுகையிட்டனர். எல்லோரும் ஒரே நேரத்தில் பேச முயன்றதால் யார் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது தெரியாமல் தவித்த அமைச்சர் சேகர்பாபு ஒவ்வொருவராக தன்னிடம் குறைகளை கூறுங்கள் என்றார்.

ஆனாலும் எல்லோரும் ஒரே நேரத்தில் குரல் எழுப்பியதால் அந்த இடமே சிறிது நேரம் பரபரப்பானது. இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு சூழலை பொறுமையாக கையாண்டு அரசு மேற்கொண்டு வரும் பணிகள் பற்றி எடுத்துக் கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்கள் பத்திரமாக மீட்க உத்தரவிட்ட அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுத்தார்.
Share on:

மிரட்டி மிக்ஜாம் புயல்.. சென்னையில் பல இடங்களில் பால் விநியோகம் கடுமையாக பாதிப்பு! எப்போது சீராகும்


மிக்ஜாம் புயல் சென்னையில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள, நகரில் பல்வேறு இடங்களிலும் பால் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னைவாசிகள் கடும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.

வங்கக் கடலில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நேற்று சென்னைக்கு அருகே வந்தது. அப்போது புயல் தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில், சென்னையில் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.நேற்று முன்தினம் இரவு ஆரம்பித்த மழை நேற்று நள்ளிரவு வரை பல்வேறு இடங்களிலும் கொட்டி தீர்த்தது. இதனால் சென்னையில் எல்லா இடங்களிலும் நீர் தேங்கி இக்கட்டான சூழல் ஏற்பட்டது.

வெள்ள நீரைக் கடல் உள்வாங்கவில்லை என்றும் இதன் காரணமாகவே சென்னையில் பல்வேறு இடங்களிலும் நீர் தேங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றிரவு மழை குறைந்து குறைந்த நிலையில், கடல் சீற்றமும் குறைந்தது. இதையடுத்து நீர் வடியத் தொடங்கியது. இப்போது நகரின் முக்கிய சாலைகளில் மட்டும் நீர் வடிந்துள்ளது. உட்புற சாலைகளில் இன்னும் நீர் வடியவில்லை. குறிப்பாகத் தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் அதிகம் தேங்கியுள்ளது.

மழை நீரை அகற்றும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இன்று இரவுக்குள் 75% இடங்களில் மழை நீர் அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், மழை காரணமாக மின் இணைப்பும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் புயலால் மழை நீர் தேங்கியுள்ள நிலையில், பல இடங்களில் நீர் கடல் போல் காட்சியளிக்கிறது.

இந்த கனமழையால் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆவின் பாலும் பல இடங்களில் கிடைக்கவில்லை என்றே பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இதனால் சென்னைவாசிகள், குறிப்பாகக் குழந்தைகளை வைத்திருக்கும் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை புறநகர்ப் பகுதிகளான மேடவாக்கம், வேங்கை வாசல், காமராஜபுரம் பகுதிகளில் ஆவின் பால் கிடைப்பதில்லை. இன்னும் சில இடங்களில் தனியார் பால் மட்டுமே இருப்பதாகவும் அதன் விலை அதிகமாக இருப்பதாகப் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

இதற்கிடையே ஆவின் பால் விநியோகத்தில் சில இடங்களில் மட்டுமே சிக்கல் இருப்பதாகவும் அதையும் விரைவாகச் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். சோழிங்கநல்லூர் உள்ளிட்ட சென்னை அருகில் உள்ள பால் பண்ணைகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. பால் விநியோகத்தைச் சீராக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
Share on:

மிக்ஜாம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 8,000 கன அடி நீர் திறப்பு-அடையாறு ஆற்றில் பெரும் வெள்ளம்!


மிக்ஜாம் புயல் கொட்டித் தீர்க்கும் பெருமழை வெள்ளத்தால் செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து வினாடிக்கு 12,000 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது வினாடிக்கு 8,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது

சென்னைக்கு அருகே மையம் கொண்டிருக்கிறது மிக்ஜாம் புயல். மிக வலுவான மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடைவிடாத பெருமழை கொட்டித் தீர்க்கிறது. 1976-ம் ஆண்டுக்குப் பின்னர் 47 ஆண்டுகளில் இல்லாத பெருமழையை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் எதிர்கொண்டிருக்கின்றன.

இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து 12,000 கன அடியாக இருந்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி. தற்போது ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்டியதால் நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று காலை 3,000 கன அடி நீர் அடையாறு ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 6,000 கன அடிநீர் திறக்கப்பட்டது.

தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 8,000 கன அடிநீர் திறக்கப்படுகிறது. இதனால் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. சென்னையில் அடையாறு ஆற்றின் கரையோ மக்களுக்கு கூடுதல் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. சென்னை பெருநகரம் முழுவதும் ஏற்கனவே பேய்மழை வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் அடையாறு ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் ஏரியில் இருந்து 8,000 கன அடி நீருடன் கூடுதலாக நீர் திறக்கக் கூடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர் வரத்து, நீர் திறப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Share on:

நெடுஞ்சாலையில் மடக்கிய போலீஸ்.. திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி சிக்கியது எப்படி?


திண்டுக்கல்லில் அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் சிக்கியது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் சட்ட விரோத பணபரிமாற்ற புகார்களில் சிக்கும் தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகளுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறது. எதிர்க்கட்சிகளின் ஆளும் மாநிலங்களில் அரசியல் பழிவாங்கலுக்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு ஏவி விடுவதாக குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன.

அந்த வகையில், டெல்லி, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்நாள் முன்னாள் அமைச்சர்கள், தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள் வீடுகள், அலுவலகங்களில் பல்வேறு வழக்குகளின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தினர். அண்மையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், மணல் குவாரி விவகாரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.

ரூ.20 லட்சம் லஞ்சம்: இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதேபோல திண்டுக்கல் மாவட்டத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொழிலதிபர் ரத்தினம் உள்ளிட்டோர் வீடுகளில் அடுத்தடுத்து சோதனை நடத்தி இருந்தனர்.

தற்போது மணல் விவகாரத்தில் தொழிலதிபர் ரத்தினம் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் டாக்டர் சுரேஷ் பாபு மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் இருந்து டாக்டர் சுரேஷ் பாபுவை விடுதலை செய்ய ரூ3 கோடி லஞ்சம் வேண்டும் என்று அமலாக்கத்துறையில் பணி செய்வதாக கூறிக் கொண்ட அங்கித் திவாரி என்பவர் கேட்டுள்ளார். இதில் முதல் கட்டமாக ரூ20 லட்சம் தர ஒப்புக் கொண்டார் டாக்டர் சுரேஷ் பாபு. கடந்த மாதம் ரூ.20 லட்சம் பெற்றுக் கொண்டார் அங்கித் திவாரி.

ரசாயனம் தடவிய பணம்: ஆனால் மேலும் ரூ31 லட்சம் தந்தாக வேண்டும் என டாக்டர் சுரேஷ் பாபுவை அங்கித் திவாரி மிரட்டி இருக்கிறார். இதனால் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் டாக்டர் சுரேஷ் பாபு புகார் கொடுத்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். இதற்காக ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அங்கித் திவாரியிடம் கொடுக்க சுரேஷ் பாபுவுக்கு அறுவுறுத்தியுள்ளனர்.

இதன்படியே டாக்டர் சுரேஷ் பாபுவும், ரசாயனம் தடயவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்துள்ளார். மதுரை நெடுஞ்சாலையில் வைத்து சுரேஷ் பாபுவிடம் ரூ.31 லட்சம் வாங்கிக் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கிருந்து செல்ல முயன்றுள்ளர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அங்கித் திவாரி, தப்பி ஓட முயன்றுள்ளார்.

இதன்படியே டாக்டர் சுரேஷ் பாபுவும், ரசாயனம் தடயவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்துள்ளார். மதுரை நெடுஞ்சாலையில் வைத்து சுரேஷ் பாபுவிடம் ரூ.31 லட்சம் வாங்கிக் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கிருந்து செல்ல முயன்றுள்ளர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அங்கித் திவாரி, தப்பி ஓட முயன்றுள்ளார்.
Share on:

டிசம்பர் 4-ஆம் தேதி அதிகாலை புயல்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!


தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது.

இது மேலும் தீவிரமடைந்து புயலாக மாறி வரும் 4ஆம் தேதி அதிகாலை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிக்கு இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த நான்கு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை முதல் மிக கன மழை வரை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் சென்னை வானிலை ஆய்வு மைய தகவல்கள் படி, நவம்பர் 30ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று காலை முதல் மழை பெய்யாவிட்டாலும், மாலை நேரம் முதல் மிக கன மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 1ம்தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2ம் தேதி கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 3ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 4ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.
Share on:

கோவை நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளை – ஏ.சி. வென்டிலேட்டர் வழியே நுழைந்தது எப்படி?


கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகைக்கடையில், ‘ஏசி வென்டிலேட்டர்’ குழாய் வழியாக புகுந்த மர்ம நபர் 200 பவுன் அளவுக்கான தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

கோவை மாநகரின் முக்கிய வணிகப்பகுதியான காந்திபுரம் 100 அடி ரோடு பகுதியில் அதிக அளவிலான நகைக்கடைகள், ஆடை உள்பட பல கடைகள் உள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்தப் பகுதியில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகைக்கடை அமைந்துள்ளது.

இன்று காலை 9:30 மணிக்கு பணியாளர்கள் கடையை திறந்து பார்த்த போது, முதல் மற்றும் இரண்டாவது தளத்தில், ரேக்குகளில் அடுக்கி வைக்கப்படிருந்த தங்க நகைகள் கொள்ளை போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், காட்டூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கைரேகை நிபுணர்களை வைத்தும், மோப்பநாய் வில்மாவை வரவழைத்தும் சோதனை செய்து தடயங்களை சேகரித்தனர்.
Share on:

எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்! கேசி பழனிசாமி வழக்கை தொடர்ந்து விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!


அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து மாஜிஸ்ட்ரேட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவதூறு வழக்கின் விசாரணையைத் தொடர உத்தரவிட்டுள்ளது.

அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்ட விரோதமாகப் பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் தன்னை பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் தனக்கும், தனது நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, எடப்பாடி பழனிசாமியை அவதூறு வழக்கின் கீழ் தண்டிக்கக் கோரி சென்னையில் உள்ள ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கே.சி.பழனிசாமியின் வழக்கைத் தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை நடைபெற்றபோது, கே.சி.பழனிச்சாமி தரப்பில் அவதூறு கருத்திற்கான அனைத்து ஆதாரங்களும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவதூறு வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது தவறானது என வாதிடப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே கட்சியிலிருந்து கே.சி.பழனிசாமியை நீக்கியதாகவும், அதன்பின்னர் கட்சி தொடர்பான அவரது செயல்பாடுகளைத் தடுக்கவே வழக்கு தொடர்ந்ததாகவும், அதில் தெரிவித்த கருத்துகள் அவதூறானவை இல்லை என வாதிடப்பட்டது.

இதையடுத்து, கட்சியில் இருந்து உறுப்பினர் நீக்கம் தொடர்பான நடைமுறைகளையும், கே.சி.பழனிசாமியை நீக்கியது தொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவு மற்றும் கே.சி.பழனிசாமிக்கு எதிரான ஆதாரங்கள் ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்யவில்லை.

இந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், அவதூறு வழக்கை ரத்து செய்து ஜார்ஜ் டவுன் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக உத்தரவிட்டார். மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கைத் தொடர்ந்து நடத்த வேண்டுமென ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
Share on:

“ரூ.4500 கோடி!” சென்னை உயர்நீதிமன்றத்தில் மணல் குவாரி வழக்கில் அமலாக்க துறை பரபரப்பு குற்றச்சாட்டு!


சென்னை: சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறை சில பரபர வாதங்களை முன்வைத்தது.

கடந்த செப். 12ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கும் மணல் குவாரிகள், சேமிப்பு கிடங்குகள், குவாரி அதிபர்களின் வீடுகளில் என மொத்தம் 34 இடங்களில் அமலாக்கத் துறை அதிரடியாகச் சோதனை நடத்தினர். அதில் ரூ.12.82 கோடி ரொக்கம், 1,024 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.

இந்த விவகாரத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் முத்தையா உள்ளிட்டோர் நேரில் ஆஜராகும்படி அமலாக்க துறை சம்மன் அனுப்பியிருந்தது.

அதைத் தொடர்ந்து நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் முத்தையா அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இதற்கிடையே கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் 5 மாவட்ட கலெக்டர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அதில் அமலாக்கத் துறை அதிகார துஷ்பிரயோகம் செய்து, வரம்பு மீறி சோதனை நடத்தி வருவதாகவும் மாநில நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் விதமாக மத்திய அரசின் கைப்பாவையாக உள்நோக்கத்துடன் அமலாக்கத் துறை செயல்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.

மேலும், முக்கியமாகச் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் கனிமவளம் சேர்க்கப்படவில்லை என்றும் அப்படியிருக்கும் போது, மாவட்ட ஆட்சியர்களுக்குச் சம்மன் அனுப்பவே அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், அதிகார வரம்பை மீறியும் வகையிலும் மாநில அரசு அதிகாரிகளைத் துன்புறுத்தும் நோக்கிலும் இந்த சம்மனை அமலாக்கத் துறை அனுப்பியுள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் சேர்க்கப்படாத சட்டத்தின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியாது என்றும் சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக விசாரணை நடத்துவது மாநில அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் வாதிட்டார்.
Share on:

எம்ஜிஆர் தனிக்கட்சி துவங்காமல் இருந்திருந்தால்- கே.சி.பழனிசாமி


திமுகவிற்கு மாற்று பாஜக என்ற கட்டமைப்பு உருவாக்கப்படுவது அதை தகர்த்து திமுகவிற்கு மாற்று அதிமுக அதிமுகவிற்கு மாற்று திமுக மற்ற கட்சிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்கிற கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
”திமுகவை வளர்த்தது எம்ஜிஆர். திமுகவில் இருந்து வெளியேறி தனி கட்சி துவங்கி தமிழகத்தில் திமுக VS அதிமுக என்று இருதுருவ அரசியலை கட்டமைத்ததும் எம்ஜிஆர் .இதன் மூலம் திராவிட கலாச்சாரம் வலுப்பெற்றது. ஒருவேளை எம்ஜிஆர் தனிக்கட்சி துவங்காமல் இருந்திருந்தால் தமிழகத்தில் தேசிய கட்சிகள் நுழைந்திருக்கும்.

அதேபோல் நிகழ்காலத்திலும் திமுக VS அதிமுக என்று இருதுருவ அரசியலை தாங்கி பிடிக்க வேண்டும். இதில் அதிமுக பலவீனமாக இருந்தால் பாஜக எனும் மதவாத சக்தி தமிழகத்தில் ஊடுருவிவிடும். இதை தடுக்க அதிமுக வலிமையாக இருப்பது மிக அவசியம்.

நங்கள் பாஜகவுடன் கூட்டணி இல்லை எதிர்க்கிறோம் என்பது உதட்டளவில் மட்டும் இல்லாமல் செயலளவில் கடுமையாக அதிமுக பாஜகவை எதிர்த்து களமிறங்க வேண்டும். இன்றைய ஆபத்து திமுகவிற்கு மாற்று பாஜக என்ற கட்டமைப்பு உருவாக்கப்படுவது அதை தகர்த்து திமுகவிற்கு மாற்று அதிமுக அதிமுகவிற்கு மாற்று திமுக மற்ற கட்சிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்கிற கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் ”என்று தெரிவித்துள்ளார்.
Share on: