அமர் பிரசாத் ரெட்டி & கோவுக்கு 12 ஆயிரம் ‘பெனால்டி’!


அண்ணாமலை வீட்டுக்கு அருகே பாஜகவினர் அமைத்த கொடிக் கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் 12,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டு அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு 50 அடி உயரத்தில் பாஜக கொடிக் கம்பம் நிறுவப்பட்டது. இதற்கு அந்த பகுதியிலுள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அனுமதியின்றி கொடிக் கம்பம் வைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, காவல் துறையினரும் மாநகராட்சி ஊழியர்களும் சென்று அந்த கொடிக் கம்பத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.
பாஜக கொடிக் கம்பம் நடும் விவகாரத்தில் அதிகாரிகள் மற்றும் ஜேசிபி ஓட்டுநர் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந்தனர்
இந்த நிலையில், கொடிக் கம்பம் சேதப்படுத்திய வழக்கில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், அவரது ஜாமீன் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
அவரது ஜாமீன் மனுவில் சென்னை புழல் சிறையில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டிருந்தார். இந்த நிலையில், அமர் பிரசாத் ரெட்டி தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்ப ராஜ் ஆஜராகி, அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் கொடிக்கம்பம் வைத்துள்ளனர்
சேதப்படுத்தப்பட்ட ஜேசிபி வாகன உரிமையாளர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரும் தலா 2,000 ரூபாய் வழங்க வேண்டும், மேலும், 2 வாரங்களுக்கு காலை, மாலை என 2 நேரங்களும் கானாத்தூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து, அவர்கள் 6 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் 55 அடி உயரக் கம்பத்தில் கொடி கண்ணுக்கு தெரியாது. காக்கா, குருவி உட்கார மட்டுமே அந்தக் கொடிக் கம்பம் பயன்படும் எனத் தெரிவித்ததோடு மீண்டும் கொடிக் கம்பம் அமைக்கமாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் நிபந்தனை விதித்து அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கினார் நீதிபதி.
Share on:

எடப்பாடி பழனிசாமிக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியை கட்சியிலிருந்து நீக்கியது தொடர்பான ஆவணத்தை தாக்கல் செய்ய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தன்னைப் பற்றி தெரிவித்த கருத்துகள் தனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கே.சி.பழனிச்சாமியின் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே கட்சியிலிருந்து கே.சி.பழனிச்சாமியை நீக்கியதாக தெரிவிக்கப்பட்டது.சென்னை உயர் நீதிமன்றம் இதையடுத்து நீதிபதி, கட்சியில் இருந்து கே.சி.பழனிச்சாமியை நீக்கி பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Share on:

வேலுவுக்கு நிகராக ரெய்டு… அதிமுகவில் அசுர வளர்ச்சி, திமுகவிலும் டாப்!


திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நிகராக நெடுஞ்சாலைத் துறையில் முன்னணி ஒப்பந்ததாரராக உள்ள ‘அருணை வெங்கட்’ என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளார். திருவண்ணாமலை அருகே உள்ளள தென் மாத்தூர் கிராமத்தில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சொந்தமான வீடு மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் அவருக்கு சொந்தமான அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அருணை பொறியியல் கல்லூரி, ஜீவா வேலு மெட்ரிகுலேஷன் பள்ளி, கரண் கலைக் கல்லூரி, மகளிர் கம்பன் கலை கல்லூரி, ஜீவா வேலு பன்னாட்டு பள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தினார்கள். இந்த சோதனைகளுக்கு நடுவே, திருவண்ணாமலையைச் சேர்ந்த ‘அருணை கன்ஸ்ட்ரக்ஷன்’ நிறுவனத்தின் உரிமையாளர் வெங்கட் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளார்கள்.. சிறு கட்டுமானம் மற்றும் அரசு ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வந்தவர் தான் அருணை வெங்கட். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் முக்கிய தலைவர்களின் தொடர்பு கிடைத்ததால் அசுர வளர்ச்சி அடைந்தார்.. அதிமுக ஆட்சியில் முக்கியப் பிரமுகர்களுக்கு நெருக்கமானவராக மாறிய அருணை வெங்கட் அதிமுக ஆட்சியில் மிகப் பெரிய நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரராக வளர்ந்தார்.. அதிமுக ஆட்சியை போல், திமுக ஆட்சியிலும் பல கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை துறை ஒப்பந்தங்களை மேற்கொண்டு வந்துள்ளார். அதிமுகவினரை தாண்டி திமுகவினரும் அருணை வெங்கட்டுக்கு நெருக்கமாகி உள்ளனர். இவரது சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்ததால், எவ வேலுவை சோதிக்க வந்த வருமான வரித்துறை, இவரையும் டார்க்கெட் செய்து சோதனை நடத்தி உள்ளது. அருணை வெங்கட்டிடம் நடத்திய சோதனை குறித்த விவரத்தை வருமான வரித்துறை வெளியிட்டால் தான் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது தெரிய வரும். இதனிடையே அமைச்சர் எவ வேலு ஐடி ரெய்டு குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார் தான் எங்கெல்லாம் இடம் வாங்கியிருக்கிறேன் எனக் கேட்டு நேர்முக உதவியாளரை கண்ணீர் விட்டு அழும் அளவுக்கு நிர்பந்தப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் புகார் தெரிவித்தார். தனது ஓட்டுநரை அழைத்துச் சென்று தனிமைப்படுத்தி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள் என்றும் கல்லூரியில் கிளார்க்குகள், மருத்துவக் கல்லூரி எச்.ஆர் களை கேள்வி கேட்டு டார்ச்சர் செய்துள்ளார்கள் என்றும் அமைச்சர் எவ வேலு கூறினார்.
Share on:

அதிமுக கொடி, இரட்டை இலையை ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்தக்கூடாது!


பொது செயலாளர் தேர்தல் செல்லும் என்கிற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என்பதால், அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்

அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சினை தொடங்கியதில் இதே பிரச்சினைதான். இரட்டை குழல் துப்பாக்கிகள் போல செயல்பட்டு வந்த ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் பிரிந்தனர். நிர்வாகிகள், எம்எம்எல்ஏக்கள் பெரும்பாலோனோர் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் நிற்கவே கட்சி, சின்னம், கொடி முடங்காமல் தப்பியது.

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். கட்சியை விட்டு ஓ.பன்னீர் செல்வம், அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி நீக்கினாலும் அதை ஏற்க தயாராக இல்லை. அதிமுக லெட்டர் ஹெட் பயன்படுத்தி ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் அறிவிப்பு வெளியிடுகிறார் ஓ.பன்னீர் செல்வம். அதிமுக கொடி, சின்னத்தையும் பயன்படுத்தி வருகிறார் ஓ.பன்னீர் செல்வம்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதுமாக செயல்பட்டு வருகிறார். இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்கில் பொது செயலாளர் என தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளன. இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் கூறிவருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, அதிமுகவின் கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்த கூடாது என உத்தரவிட வேண்டும். பிரதான வழக்கின் விசாரணை முடியும்வரை, அவர்கள் கட்சி பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், உச்ச நீதிமன்றம் வரை நான்கு முறை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் கட்சியில் இருந்து பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கிய தீர்மானம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்சி சின்னம், கொடியை பயன்படுத்தி கட்சி உறுப்பினர்கள் என கூறி வருகின்றனர். மேலும், கட்சி லெட்டர்பேடை சட்டவிரோதமாக பயன்படுத்தி, ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி வருவதாக வாதிடப்பட்டது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, இந்த வழக்கு மூன்றாவது முறையாக விசாரணைக்கு வருகிறது, இதுவரை பதில் மனுதாக்கல் செய்யவில்லை, தன்னை பொது செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறி அவகாசம் வாங்கினார்கள், ஆனால் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாதிட்டார். ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தில் தாகல் செய்த வழக்கு நம்பர் ஆகிவிட்டது, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உள்ளோம், குறுகிய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அப்போது நீதிபதி சதீஷ்குமார்,எத்தனை முறை இந்த விவகாரத்தில் இப்படி வழக்கு தொடர்வீர்கள்? நேரம் கேட்பீர்கள்? எத்தனைமுறை ஒரே வாதத்தை வைப்பீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தரப்பில் நான்கைந்து மாதங்களில் முக்கியமான எம்.பி தேர்தல் வரவுள்ளது, ஆனால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக அதே பதவியை பயன்படுத்துகிறார், எங்களை கட்சியிலிருந்து நீக்கி அறிவிக்கிறார், பொதுமக்கள் மற்றும் கட்சியில் குழப்பம் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார் என வாதிடப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பொது செயலாளர் தேர்தல் செல்லும் என்கிற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என்பதால், அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு ஓ.பன்னீர் செல்வத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஹைகோர்ட் உத்தரவு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Share on:

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா?


சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 10 முறை நீட்டித்துள்ளது. 5 மாத காலமாக புழல் சிறையில் அடைபட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் எப்போது கிடைக்கும் என்று அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். இதய பாதிப்பு ஏற்படவே ஆபரேசன் செய்யப்பட்டது. ஒரு மாத காலம் மருத்துவமனையில் ஓய்வெடுத்த செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கடந்த 5மாத காலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 10 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 20ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து அவரது நீதிமன்ற காவலை நவம்பர் 6ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

5 மாத காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தனது உடல் நிலையை காரணம் கூறி உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனுத்தாக்கல் செய்துள்ளார். சிறையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த அறிக்கையை குறிப்பிட்டு வாதிட்டார். அதில் அவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், செந்தில் பாலாஜி அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் சேகரிக்கப்பட்ட தகவலின்படி, வேலை பெற்று தருவதாக கூறி 67 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், சிறை மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனையில் குறிப்பிட்ட சிகிச்சைக்கான வசதி இல்லாத நிலையில் மட்டுமே ஜாமின் வழங்க முடியும் எனவும் செந்தில் பாலாஜிக்கு அது போன்ற நிலை ஏற்படவில்லை எனவும் வாதிடப்பட்டார்.

மருத்துவ சிகிச்சை காரணங்களுக்காக ஜாமின் வழங்க முடியாது என ஏற்கனவே முதன்மை அமர்வு நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ள நிலையில், ஸ்டான்லி மருத்துவர்களின் அறிக்கைகளும் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சை அவசியம் என்று குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், அவருக்கு ஜாமின் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைத்து விடுவார் எனவும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
Share on:

மாணவர்களை தாக்கிய.. பாஜக நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது!


அரசு பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவர்களை தாக்கியதாக சென்னை கெரும்பாக்கத்தில் நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டார். சென்னை குன்றத்தூரில் இருந்து போரூர் வரை சென்ற அரசு பேருந்தில் மாணவர்கள் தொங்கியபடி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த நடிகையும் வழக்கறிஞருமான ரஞ்சனா நாச்சியார் அரசு பேருந்தை தடுத்து நிறுத்தினார்.அப்போது டிரைவரிடம் போய் படிக்கட்டில் இப்படி தொங்கிக் கொண்டு வருகிறார்கள். நீங்கள் கேட்கமாட்டீர்களா என்றார்

பேருந்தின் பின்பக்கம் சென்ற அவர், தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களை இழுத்து வெளியே தள்ளினார்

வர மறுத்த மாணவர்களை அடித்தார், அதிலும் பேருந்து மீது ஏறிய ஒரு பள்ளி மாணவனை சரமாரியாக அடித்தார். மேலும் பள்ளி பேட்ச்சையும் காட்டி அடித்தார். மேலும் மாணவர்களை நாய், ஏன்டா அறிவில்ல என அழைத்து கடுமையாக கத்தினார். அது படிக்கட்டில் யாரெல்லாம் நிற்கிறார்களோ அவர்களை எல்லாம் இறக்கிவிட்டார்

ரஞ்சனா மட்டும் அந்த பேருந்தை தடுக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் அந்த பேருந்தில் இருந்து யாராவது மாணவர்கள் கீழே விழுந்து காயமோ உயிரிழப்போ ஏற்பட்டிருக்கும்.

இவர் செய்தது 100 சதவீதம் சரி என வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. மேலும் படியில் பயணம், நொடியில் மரணம் என்பதை சில மாணவர்களும் இளைஞர்களும் புரிந்து கொண்டதாக இல்லை. அது போல் பஸ் டே, ஆயுத பூஜை வேளைகளில் பேருந்தின் மீது பயணிப்பதும், பேருந்து இயங்கும் போதே ஏறி நடப்பதும் என மாணவர்கள் விதிகளை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.

இந்த நிலையில் நடிகை ரஞ்சனா மீது மாணவர்களை தாக்கியதாக ஒரு வழக்கும், டிரைவர் , கன்டக்டரை அவதூறாக பேசியதாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று காலை கெரும்கம்பாக்கத்தில் உள்ள ரஞ்சனா நாச்சியார் வீட்டில் மாங்காடு போலீஸார் விசாரணை நடத்தியதை அடுத்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு இரு வேறு கருத்துகள் சமூகவலைதளங்களில் பதிவாகி வருகின்றன. இவர் செய்தது சரி என்றாலும் சட்டத்தை கையில் எடுக்க இவர் யார்? அங்கிருந்த போலீஸாரை அழைத்து சொல்லியிருக்கலாமே, குழந்தைகளின் பள்ளி அடையாளம் தெரியும் அளவுக்கு நடந்துக் கொள்வதா, அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.
Share on:

அதிமுக கவுன்சிலர்கள் மீது திமுக வார்டு உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்திற்குரியது!


மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த மன்ற கூட்டத்தில் அதிமுக திமுக கவுன்சிலர்கள் இடையே மோதல் திமுக கவுன்சிலர், அதிமுக கவுன்சிலர்கள் மீது நாற்காலியை தூக்கி வீசி எறிந்ததால் பரபரப்பு.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் அவசரக் கூட்டம் நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக முறையாக நகர பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அப்புறபடுத்தாமல் உள்ளதால் சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைத்து அதிமுக கவுன்சிலர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு பதில் அளிக்க வேண்டிய நகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் கூட்டத்தை நடத்த கூடாது அதிகாரிகள் வந்த பின் தான் கூட்டத்தை நடத்த வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர். ஆனால் நகராட்சி தலைவர் கூட்டத்தை நடத்த வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் கூறியதால் இரு தரப்பு கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் ஒரு கட்டத்தில் அது மோதலாக மாறியது.

அதிமுக கவுன்சிலர்கள் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக 17 வார்டு கவுன்சிலர் ரவிக்குமார் திடீரென அதிமுக பெண் கவுன்சிலர் மற்றும் விஜியலட்சுமி அகியோர் மீது கவுன்சிலர்கள் அமரும் இருக்கைகளை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதனால் வெகுண்டு எழுந்த அதிமுக கவுன்சிலர்களும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து நகராட்சி தலைவர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றும் பிரச்சினை முடிவுக்கு வராததால் மன்ற கூட்டத்தில் வைக்க பட்ட 11 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக ஆல் பாஸ் என கூறிவிட்டு சென்றார். இதனால் கோபமடைந்த அதிமுக கவுன்சிலர்கள் ஒன்பது பேரும் திமுக கவுன்சிலர்கள் குண்டர்கள் போல நடந்துகொள்வதாக கூறி மன்ற கூட்டத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நாற்காலியை தூக்கி எரிந்த கவுன்சிலர் ரவிக்குமார் மற்றும் ஸ்ரீராம் என்ற இரு கவுன்சிலர்கள் மீது அதிமுக கவுன்சிலர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
Share on:

பொது இடத்தில் சாதி பெயரை சொல்லி திட்டிய போலீஸ்! பறந்து வந்த சஸ்பெண்ட் ஆர்டர்.. உயர்நீதிமன்றம் அதிரடி


பொது இடத்தில் சாதி பெயரை குறிப்பிட்டு கணவன் மனைவி மற்றும் மகனை கண்மூடித்தனமாக தாக்கிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தோக்கவாடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜா அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் பேசி கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த உதவி ஆய்வாளர் முருகன், காவலர்கள் நம்மாழ்வார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அவர்களை சாதி ரீதியாக திட்டி, கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தங்களை சாதி ரீதியாக திட்டி தாக்கிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்கு பரிவு செய்யக்கோரி ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது, குடும்பத்தினரை தாக்கிய காவலர்கள் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யாததற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து விசாரணை முடிந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கிய அவர், சாதி பெயரை குறிப்பிட்டு தாக்கிய மூன்று காவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட அவர், இழப்பீட்டு தொகையை காவலர்கள் மூன்று பேரிடமிருந்து வசூலிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதேபோல காவலர்கள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து 12 வாரங்களில் விசாரணையை முடிக்க உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை அவர்களை பணியிட நீக்கம் செய்யவும் உத்தரவிட்டார். சாதி பெயரை சொல்லி திட்டிய வழக்கில் 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
Share on:

இன்று ’தமிழ்நாடு நாள்’; மாநிலம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்!


மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் நினைவாக இன்று ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பள்ளிகளில் தமிழர்களின் தொன்மை, கலாச்சாரம் மற்றும் பெருமையினை உணர்த்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி அன்றைய சென்னை மாகாணத்திலிருந்து கன்னட, தெலுங்கு மற்றும் மலையாள மொழி பேசும் பகுதிகள் பிரிக்கப்பட்டு தனி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இதனை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாட சமீபத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இத்தினத்தில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தை உலக அரங்கில் உயர்த்தும் விதமாக, மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதற்காக போராடிய சங்கரலிங்கனார் உள்ளிட்ட தலைவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்ந்து போற்றுவோம்.
Share on:

பெரம்பலூர் கல் குவாரி ஏலத்தில் தகராறு!


பெரம்பலூரில் கிரானைட் கல் குவாரி ஏலம் எடுப்பதில் நேற்று இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் ஆட்சியர் கு. கற்பகம் ஏலத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சுரங்கத்துறை உதவி இயக்குனர் (AD) அலுவலகத்தில் நேற்று (அக்.30) கிரானைட் கல் குவாரி ஏலம் நடைபெற்றது. குவாரிகளை குத்தகைக்கு எடுப்பதற்கான விண்ணப்பம் தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும்.

இதையொட்டி நேற்று ஒரு பிரிவினர் விண்ணப்பம் தாக்கல் செய்ய வந்த நிலையில் மற்றொரு பிரிவினர் அவர்களை விண்ணப்பிக்க விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அடிதடியில் இறங்கி கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஆட்சியர் கற்பகம் அடிதடி சத்தம் கேட்டு ஏ.டி அலுவலகத்திற்கு வந்தார். தகராறில் ஈடுபட்டவர்களை எச்சரித்த ஆட்சியர் அவர்களை உடனடியே வெளியேற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து நேற்று நடைபெறவிருந்த ஏலத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டார்.

மேலும், தகராறில் ஈடுபட்டவர்கள் மீது நேற்று மாலை வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கல் குவாரி ஏலம் இன்று(அக்.31) செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
Share on: