கலெக்‌ஷன் மோடில் ஆளுங்கட்சி… சைலன்ட் மோடில் எதிர்க்கட்சி… கொந்தளிக்கும் கோவை மக்கள்!


கோவை மாநகராட்சி தி.மு.க மேயர், கவுன்சிலர் உள்ளிட்ட அனைவரும் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிவருகின்றனர். `தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து சென்னையில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூலகம் என்று குறிப்பிடத்தக்க திட்டங்களை நிறைவேற்றினாலும், இந்த இரண்டு ஆண்டுகளில் கோவைக்கு எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பணிகளும் மந்தமாக இருக்கின்றன’ என்ற புகார் எழுந்துவருகிறது. `இதையெல்லாம் தட்டிக் கேட்கவேண்டிய அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் சைலன்ட் மோடில் இருக்கிறார்கள்’ எனக் கொந்தளிக்கிறார்கள் கோவை பொதுமக்கள்.

இது குறித்து கோவை மூத்த வழக்கறிஞர் லோகநாதன் கூறுகையில், “சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கோவையும், கேரள மாநிலத்திலுள்ள கொச்சியும் ஒரே போன்ற நிலையில்தான் இருந்தன. இன்று அதன் வளர்ச்சி பிரமிக்கவைக்கிறது. இத்தனைக்கும் கோவைக்கும் கொச்சிக்கும் ஒரே நேரத்தில்தான் மெட்ரோ ரயில், விமான நிலைய விரிவாக்கத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மெட்ரோ ரயில் வெற்றிகரமாகச் செயல்பாட்டுக்கு வந்து, அங்கு அடுத்து வாட்டர் மெட்ரோ திட்டத்தையும் நிறைவேற்றிவிட்டனர். அதேபோல திருவனந்தபுரத்துக்கு அடுத்து, மிகப்பெரிய விமான நிலையமாக கொச்சி ஏர்போர்ட் வளர்ச்சி பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் பலர் வெளிநாட்டுக்குச் செல்ல, சென்னை விமான நிலையத்துக்கு பதிலாக கொச்சியைத் தேர்ந்தெடுக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த தொழில்துறை அதிகமுள்ள கோவையில் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடக்கவில்லை.

நீண்டகாலமாகவே கோவைக்கு வலுவான அரசியல் தலைவர் இல்லை. இங்கு அதிகாரிகளின் ஆதிக்கம்தான் அதிகம். கோவையின் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் ரியல் எஸ்டேட் தொழிலைச் சார்ந்தவர்கள். முதலீடு, லாபம் என்ற நோக்கத்திலான வணிகத்தில் ஈடுபடுபவர்கள். இவர்களாலேயே கோவை விமான நிலைய விரிவாக்கப் பணி பல ஆண்டுகளாக முடங்கிக்கிடக்கிறது. இதில் மத்திய அரசின் பங்கும் இருக்கிறது. அங்குள்ள பாதுகாப்புத்துறை நிலத்துக்கு மாற்று இடம் வழங்குவதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கோவை விமான நிலையமும் வளர்ச்சியடையவில்லை. பொதுவாக, ஆளுங்கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள்தான் எந்தச் சர்ச்சையிலும் சிக்கக் கூடாது என்று அமைதியாக இருப்பார்கள். ஆனால், எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளும் அமைதியாக இருப்பது கோவையில் மட்டும்தான்” என்றார்.

அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வும், எம்.பி-யுமான கே.சி.பழனிச்சாமி கூறுகையில், “தமிழ்நாடு அரசின் வருவாயில் கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், திட்டங்களில் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கோவையில் போக்குவரத்து நெருக்கடி பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மேற்கு புறவழிச்சாலைத் திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டனர். மேம்பாலப் பணிகளெல்லாம் முழுமையடையாமல் இருக்கின்றன. அவிநாசி – அத்திக்கடவு உள்ளிட்ட முக்கியத் திட்டங்களின் பணிகள் முடங்கியிருக்கின்றன. மின்கட்டண உயர்வால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

சட்டம்-ஒழுங்கு பிரச்னையால் கோவையின் அடையாளமும் மாறிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஊடகங்களில் அவர்களின் வழக்கு தொடர்பான பிரேக்கிங் செய்திகளில்தான் பார்க்க முடிகிறது. தேர்தல் நேரத்தில், `ஆட்சிக்கு வந்தவுடன் முதல் ஆளாக வேலுமணியைக் கைது செய்வோம். சூயஸ் திட்டத்தை ரத்துசெய்வோம்’ என்றார்கள் தி.மு.க-வினர். ஆனால், இதுவரை எதையும் செய்யவில்லை” என்றார்.

கோவை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ (அ.தி.மு.க) அம்மன் அர்ச்சுனன் கூறுகையில், “தி.மு.க அரசு புதிய திட்டங்களைக் கொண்டுவரவில்லை என்பதுடன், நாங்கள் கொண்டுவந்த திட்டங்களையும் முடக்கிவிட்டது. எப்படி கலெக்‌ஷன் செய்யலாம் என்றுதான் யோசிக்கின்றனர். மெட்ரோ ரயில் திட்டத்தின் டி.பி.ஆருக்கு எங்கள் ஆட்சியிலேயே நிதி ஒதுக்கிவிட்டோம். இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. கோவை சார்ந்து சட்டசபையில் வைக்கும் கோரிக்கைகளுக்கும் பதில் இல்லை. அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. தங்களுக்கு வாக்களிக்காத மக்களும் பொறாமைப்படும் அளவுக்குச் செயல்படுவோம் என முதல்வர் கூறினார். இப்போது வாக்களித்தவர்கள்கூட, `ஏன் வாக்களித்தோம்?’ என்று யோசிக்கின்றனர். நாங்கள் மக்களுக்காகப் போராட எப்போதும் தயாராக இருக்கிறோம்” என்றார்.

இது குறித்து கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமியிடம் விளக்கம் கேட்டோம். “கோவையை நாங்கள் ஒருபோதும் புறக்கணிக்கவில்லை. சில திட்டங்களின் பணிகள் அ.தி.மு.க ஆட்சியிலேயே மந்தமாகின. காத்திருப்பிலுள்ள திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திவருகிறோம். விரைவில் மேற்கு புறவழிச்சாலை திட்டப் பணிகள் தொடங்கவிருக்கின்றன. இதேபோல அடுத்தடுத்து திட்டங்கள் நிறைவேற்றப்படும். முதல்வர் என்னை பொறுப்பு அமைச்சராக நியமித்தபோது கட்சிப் பணிகளைவிட, பொது வேலைகள் பற்றித்தான் அதிகம் சொன்னார். கோவை வளர்ச்சிக்காக எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

வாக்களிக்காத மக்கள் பொறாமைப்படுகிறார்களோ இல்லையோ… பொறுமையிழக்காமல் பார்த்துக்கொள்வது முக்கியம் முதல்வரே?
Share on:

அறுந்து விழுந்த தேசியக் கொடி! ஊழியரை அடிக்கப் பாய்ந்த திமுக எம்.எல்.ஏ.!


தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தேசியக்கொடி அறுந்து விழுந்ததால் ஆத்திரமடைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், அருகில் நின்ற ஊழியரை எல்லோர் முன்னிலையிலும் அடிக்கப் பாய்ந்தார்.

சுதாரித்துக் கொண்ட அந்த ஊழியர் கையை தேக்கி, கொடியை தாம் கொடிமரத்தில் கட்டவில்லை என்றும் வேறொருவர் கட்டியதாகவும் எடுத்துக்கூறி அடியிலிருந்து எஸ்கேப் ஆனார். இருப்பினும் பொதுவெளியில் சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ. தன்னை அடிக்க கை ஓங்கியதை அந்த ஊழியர் அவமானமாகவே கருதினார். கொடியை ஏற்றுவதற்காக கயிற்றை பிடித்து மேலே இழுத்த போது பறக்க வேண்டிய கொடி, கயிற்றிலிருந்து அறுபட்டு கீழே விழுந்தது.

இதனை சற்றும் எதிர்பார்க்காத அன்பழகன் எம்.எல்.ஏ., கவனக்குறைவாக ஊழியர்கள் செயல்பட்டதை எண்ணி அவர்கள் மீது தனது கோபத்தை கொட்டினார். ஒரு கட்டத்தில் அடிக்கவும் கையை ஓங்கிவிட்டார்.

கும்பகோணத்தை போலவே தமிழ்நாட்டின் இன்னும் பல்வேறு இடங்களில் கொடியேற்று நிகழ்வின் போது இதேபோன்று களேபரங்கள் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.
Share on:

செல்வந்தர்கள் மட்டுமே மருத்துவராக முடியும்… நீட்டால் தற்கொலை செய்துகொண்ட ஜெகதீஸ்வரனின் நண்பர் வேதனை!


நீட் தேர்வை உடனடியாக தடை செய்ய வேண்டும் என சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் நண்பர் ஃபயாஸ்தின் உருக்கமாக கேட்டுக் கொண்டார்.

நீட் தேர்வால் மருத்துவ கனவை இழந்த குரோம்பேட்டை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், மகனை இழந்த தந்தை செல்வசேகரும் இன்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மறைந்த ஜெகதீஸ்வரனின் நண்பர் ஃபயாஸ்தின் நீட் தேர்வை உடனடியாக தடை செய்யவேண்டும் என்று மத்திய அரசுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” நீட் தகுதித் தேர்வு காரணமாக செல்வந்தர்கள் மட்டுமே மருத்துவராகும் நிலை இருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக, நடுத்தர அடித்தட்டு சமூக மக்களின் மருத்துவக் கனவுகளை நீட் தேர்வு சிதைப்பதாகவும் தெரிவித்தார்.
Share on:

செந்தில் பாலாஜி, அசோக் குமார் கைதுகள்.. அடுத்தது யார்?


தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி, தொடர்ந்து அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் அடுத்த விக்கெட் யார் என்பதுதான் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் பரபரப்பான விவாதமாக நடைபெற்று வருகிறது

செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். மருத்துவமனை, நீதிமன்ற போராட்டங்களைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி முடித்தது.

செந்தில் பாலாஜி வழக்கில் அவரது சகோதரர் அசோக் தேடப்பட்டு வந்தார். அசோக்கின் சொத்துகள் முடக்கப்பட்டன. இந்த நிலையில் கேரளாவின் கொச்சியில் இருந்த அசோக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாத நிலையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இவ்வழக்கில் அடுத்து யார் கைது செய்யப்படக் கூடும் என்பதுதான் கரூர், வேடசந்தூர் மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் அரசியல் கட்சியினரிடையே நடந்து வரும் விவாதம்.
Share on:

வேற்றுமை கூடாது என்பதற்காகத்தானே மாணவ மாணவியர்க்கு சீருடை….


மாணவனை மாணவர்களே கொடுமையாக தாக்குவது எவ்வகையில் நியாயம்…

சின்னதுரை படிக்கக்கூடாதா… சிறந்து விளங்கக்கூடாதா…

பிஞ்சு மனங்களில் நஞ்சா…. சிரத்தில் அறிவை இழந்து கரத்தில் அரிவாளை ஏந்துவதா….

சாதி இரண்டொழிய வேறில்லை என்று ஔவை மூதாட்டி எழுதியது பொய்யா….

கற்காலத்தில் சாதி இல்லை… தற்காலத்தில் மனிதநேயமே இல்லை…. எங்கே போகிறது என் நாடு….. என்ன சொல்வது என்றே புரியவில்லை..

நாங்குநேரி மாணவன் மீதும் அவரது சகோதரி மீதும் நடந்த தாக்குதலை கனத்த இதயத்தோடு வன்மையாக கண்டிக்கிறேன்…. இச்சம்பவத்தால் அதிர்ச்சியில் உயிரிழந்தவருக்கு என் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.

தவறு செய்தவர்கள் யாராயினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை!

இனி வரும் காலத்தில் இவ்வாறு நிகழா வண்ணம் சட்டம் தன் கடமையை கடுமையாக செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுகோள்….

சின்னதுரையும் அவரது சகோதரியும் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன். – கே.சி.பழனிசாமி
Share on:

சாலையோர மரண குழி.. கம்பி குத்தி துடிதுடித்து மரணித்த அரசு ஊழியர்!


இரு சக்கர வாகனத்தில் பயணித்த அரசு ஊழியர் ஒருவர் சாலையோர பள்ளத்தில் தடுமாறி விழுந்து கம்பிகள் குத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த திருவாரூர் காவல்துறையினர் சாலை பணி ஒப்பந்ததாரர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.

சாலை விரிவாக்கத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்த கம்பிகள் குத்தி குமார் உயிரிழந்ததாக தெரிகிறது. குமாரின் உடலை மீட்ட திருவாரூர் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

நண்பர்கள் 5 பேரும் விடுமுறை தினம் என்பதால் அவரது காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றனர்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கார் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

6 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அதில் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி கந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல சாலையோர பள்ளங்களினால் இன்று இரண்டு உயிர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Share on:

சென்னையில் 13 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு!


தனியார் நிறுவனம் ரூ.225 கோடி மோசடி செய்ததாக சிபிஐ பதிவு செய்த வழக்கு தொடர்பாக இன்று சென்னையில் 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்

சென்னையை சேர்ந்த தனியார் ஏற்றுமதி நிறுவனம் ரூ.225 கோடி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

நிறுவனத்துக்கு தொடர்புடைய 13 இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிறுவனத்தை சேர்ந்த ஜேம்ஸ் வால்டர் என்பவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சென்னை சோழிங்கநல்லூர், கோடம்பாக்கம், தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் சோதனை
Share on:

அண்ணாமலையை விமர்சித்தால்.. அதிமுக மாஜிக்களின் ஊழல் பட்டியல் ரிலீஸாகும்!


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்தால் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என மதுரை பாஜக நிர்வாகி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முதல் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்த நிலையில் அந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக வெல்லவில்லை.

இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் நாம் தோற்றோம் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியதிலிருந்து பிரச்சினை எழுந்தது. அதற்கு பாஜக விமர்சித்தது. இதையடுத்து வெறும் 4 எம்எல்ஏக்களை வைத்து கொண்டு சட்டசபையில் நாங்கள்தான் எதிர்க்கட்சி என கூறி வந்தது. இது அதிமுகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதிமுக எம்எல்ஏக்கள் குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தரம் தாழ்ந்த வார்த்தையால் விமர்சித்தார். அப்போதும் இரு தரப்புக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அவ்வப்போது இரு தரப்புக்கும் சண்டை ஏற்படுவதும் பின்னர் சமாதானமாக போவதுமாக இருந்தது. இந்த நிலையில்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை ஒரு பத்திரிகை பேட்டியில் ஊழல்வாதி என மறைமுகமாக விமர்சித்தார். இது அதிமுக தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இனிவரும் காலங்களில் திமுக. அதிமுக கட்சிகள் கூட்டணியின்றி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் 17% சதவீத வாக்கு வங்கிகளை கடந்து செல்கின்ற பாஜகவுடன் போட்டியிட தயாரா? நாங்கள் தேர்தல் களத்தில் பணிபுரிபவர்கள். உங்களுடைய பலமும், பலவீனமும் எங்களுக்கு தெரியும். ஆளும்கட்சி செய்கின்ற ஊழல்களை கண்டறிந்து DMK File 1 & DMK File 2 என்று நடவடிக்கை எடுத்து ஊழல் அமைச்சர்களை சிறைக்கு அனுப்பிய எங்களுக்கு ஆண்ட அதிமுகவின் ஊழல் அமைச்சர்களின் பட்டியலை தேடி எடுத்து எங்களுடைய தலைமைக்கு அனுப்ப எவ்வளவு நேரமாகும் என்று கருதுகிறீர்கள். மலையோடு மோதி மண்ணாகி விட வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம்.
Share on:

ED ஆபீஸில் செந்தில் பாலாஜியின் முதல் நாள் எப்படி?


போக்குவரத்து துறை அமைச்சராக அதிமுக ஆட்சியில் இருந்த செந்தில் பாலாஜி மீது வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. அந்த புகாரின் பேரில் அமலாக்கத் துறை சட்டவிரோத பணவர்த்தனையின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது. அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலிருந்து காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் என அவரது மனைவி ஹைகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு 3ஆவது நீதிபதியிடம் சென்றது. அவர் செந்தில் பாலாஜி தனது மீது தவறில்லை என்றால் அதை நிரூபிக்கட்டும். அவரது கைது சட்டவிரோதம் அல்ல என தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கு 3ஆவது நீதிபதியிடம் சென்றது. அவர் செந்தில் பாலாஜி தனது மீது தவறில்லை என்றால் அதை நிரூபிக்கட்டும். அவரது கைது சட்டவிரோதம் அல்ல என தீர்ப்பளித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது சட்டப்படி சரியானது. அமலாக்கத் துறை அடுத்த 5 நாட்களுக்கு அதாவது ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டனர்.

வரும் 12 ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து நேற்றைய தினம் புழல் சிறைக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றனர். அங்கு நீதிபதி அல்லியின் உத்தரவு கடிதத்தை வழங்கினர். இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு செந்தில் பாலாஜி அழைத்து வரப்பட்டார். அங்கு அவரிடம் 3 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அமலாக்கத் துறை சோதனையின் போது சிக்கிய ஆவணங்களை அடிப்படையாக வைத்து அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் ஓய்வெடுக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் இன்று காலை 6 மணிக்கு விசாரணை தொடங்கியதாக தெரிகிறது
Share on:

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும்: உச்ச நீதிமன்றம்


தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்த நிலையில், அவரை விடுவிக்கக் கோரி அவருடைய மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த, 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்தார். அவர் தனது தீர்ப்பில், செந்தில் பாலாஜியும் சட்டத்துக்கு உட்பட்டவர்தான் என்பதால் அவரை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என்றும், அவர் பரிபூரணமாகக் குணமடைந்த பிறகு அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பிலும், அமலாக்கத் துறை தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின்போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும் அமலாக்கத் துறை தரப்பில் துஷார் மேத்தாவும் ஆஜராகி தங்கள் வாதத்தை முன்வைத்தனர். செந்தில் பாலாஜியை தனிப்பட்ட முறையில் காவலில் எடுத்து விசாரிப்பது மிகவும் முக்கியமானது என அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக கடந்த ஆக.2ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பிறப்பித்த தீர்ப்பில், “செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டப்படி சரியான நடவடிக்கை. அதேபோல குற்றவியல் நடைமுறை சட்டம் 167 உட்பிரிவு (2)ன்- கீழ் அமலாக்கத் துறையினர் ஒருவரை கைது செய்யும்போது அந்த நபரை காவலில் வைக்கலாம் என கூறுகிறது. அது நீதிமன்ற காவலாகவும் இருக்கலாம் என்ற புரிதலின் அடிப்படையில் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல.

மேலும் அமலாக்கத் துறையினர் ஒருவரை கைது செய்யும் போது 15 நாட்களுக்கு மேல் காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான விவகாரத்தில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய அனுப்பம் ஜே குல்கர்னி என்ற வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டி உள்ளது. எனவே அந்த குறிப்பிட்ட விவகாரத்தை மட்டும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். அமலாக்கத் துறையினர் அடுத்த ஐந்து தினங்களுக்கு அதாவது ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார். அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “செந்தில் பாலாஜியின் உடல் நலத்தை நாங்கள் பார்த்துக் கொள்வோம்” என்று தெரிவித்தார். இதனையடுத்து நிலுவையில் இருந்த அனைத்து வழக்குகளும் முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Share on: