43 தொகுதி! 19 லட்சம் வாக்குகள்! 2026-ல் அதிமுக ஆட்சி அமைக்க இதான் ஒரே வழி – முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி சொல்லும் சூத்திரம்!


முன்னாள் எம்பி கே.சி பழனிச்சாமி அதிமுக தோல்வி குறித்து, 2026-ல் எப்படி வெற்றி பெறலாம் என்பது குறித்து ஒரு புள்ளிவிவரத்துடன் கூடிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி குறைந்த வாக்குகள் வித்தியாசத்தி வெற்றிவாய்ப்பை தவறவிட்ட தொகுதிகள். சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த 29 தொகுதிகள்

1.)தி. நகர் -137, 2.) வேளச்சேரி -4,352, 3.) திருப்போரூர் -1947, 4.) செய்யூர் -4042, 5.) உத்திரமேரூர் -1622, 6.) காட்பாடி -746, 7.) ஜோலார்பேட்டை -1091, 8.) உளுந்தூர்பேட்டை -5256 , 9.) ராசிபுரம் -1952, 10.)திருச்செங்கோடு-2862, 11.) தாராபுரம் -1393, 12.)அந்தியூர் -1275 , 13.)உதகமண்டலம் -5348 , 14.)குன்னூர் -4105, 15.)திருப்பூர் தெற்கு -4709, 16.)அரியலூர் -3234, 17.) ஜெயங்கொண்டம் -5452 , 18.)விருத்தாச்சலம் -862, 19.)நெய்வேலி -977, 20.)பண்ருட்டி -4697, 21.)கடலூர் -5151, 22.)மயிலாடுதுறை -2742, 23.)பூம்புகார் -3299, 24.)திருமயம் -1382, 25. ராஜபாளையம் -3898, 26.)சங்கரன்கோவில் -5297, 27.)வாசுதேவநல்லூர்-2367 , 28.)தென்காசி -370, 29.)ராதாபுரம் -5925.

மொத்தமாக 86,490 வாக்குகள் வித்தியாசத்தில் 29 தொகுதிகள் இழப்பு

சுமார் 10 ஆயிரம் வாக்குகளுக்கும் கீழான வித்தியாசத்தில் தோல்வியடைந்த தொகுதிகள் 14

1.)பொன்னேரி -9689, 2.)வேலூர் -9181, 3.)அணைக்கட்டு -6360, 4.)குடியாத்தம் -6901, 5.)கலசப்பாக்கம் -9222, 6.)விக்கிரவாண்டி -9573, 7.)சேலம் வடக்கு -7588, 8.)ஈரோடு கிழக்கு -8904, 9.)காங்கேயம் -7331, 10.)குன்னம் -6329 , 11.)நாகப்பட்டினம் -7238, 12.)மதுரை தெற்கு -6515, 13.)ஆண்டிப்பட்டி -8538, 14.)ஒட்டப்பிடாரம் -8510

மொத்தமாக 1,11,879 வாக்குகள் வித்தியாசத்தில் 14 தொகுதிகள் இழப்பு

மொத்தமாக 10 ஆயிரம் வாக்குகளுக்கும் கீழ் 43 தொகுதிகளில் 1,98,369 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக ஆட்சியை இழந்திருக்கிறது. 2021-ல் ஆட்சி அதிகாரம் இருந்தும் இப்படிப்பட்ட தோல்வி ஏற்பட்டுள்ளது.

அதிமுக தொண்டர்கள் பரிசோதித்து பார்க்க வேண்டும் இந்த 43 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தால் அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்திருக்கும், எடப்பாடி பழனிசாமி என்கிற தனிநபரின் சுயநலம் தான் மட்டுமே அதிமுக என்று நிலைநிறுத்த முயற்சிப்பது, தன் சொல்லுக்கு எல்லோரும் கட்டுப்படவேண்டும் என்பது, விட்டுக்கொடுத்து அனுசரித்து அனைவரையும் அரவணைத்து செல்லுகிற பண்பு இல்லாத காரணத்தால் 2021-ல் ஆட்சியை இழந்தோம்.

அதை உணர்ந்து தான் ஒன்றுபட்ட அதிமுக உருவாக வேண்டும் என்று முயற்சித்து ஒருங்கிணைப்புக்குழு செயல்பட்டு வருகிறது. 2026-லாவது அதிமுக ஆட்சி அமைக்கவேண்டும் என்றால் ஒன்றுபட்ட அதிமுக உருவாக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Share on:

அரசு சட்ட கல்லூரிகளில் காலி பணியிடங்கள்! சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அரசு சட்ட கல்லுரிகளில் காலியாக உள்ள இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், பேராசிரியர்கள் தேர்வு தொடர்பாக விதிமுறைகளை வகுக்க நிபுணர் குழுவையும் நியமித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லுரிகளில் காலியாக உள்ள இணைப் போராசிரியர் பணிக்கு நேரடி நியமனங்கள் மேற்கொள்ளக் கோரி வசந்தகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் சட்டக்கல்வி இயக்குனர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்டக் கல்லூரிகளில், அனுமதிக்கப்பட்ட 20 இணை பேராசிரியர் பணியிடங்களில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், மொத்தமுள்ள 206 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில், 70 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த், சட்டக் கல்லூரிகளில் காலியாக இருக்கும்…

Share on:

Continue Reading

உண்ணாவிரத போராட்டங்களுக்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை.. சென்னை ஐகோர்ட் கருத்து!


உண்ணாவிரத போராட்டங்களுக்கு அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதியில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாம்சங் ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், சிஐடியு தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில், தொழிற்சங்கத்தை துவங்கி, அதை பதிவு செய்யக் கோரி விண்ணப்பித்தனர். சங்கத்தை பதிவு செய்யாததால் வழக்கு தொடர்ந்தனர்.

இதற்கிடையே, சங்கத்தை பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 91 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதியளிக்க உத்தரவிடக் கோரி, காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு செயலாளர் முத்துக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதி இல்லை என நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து, முழக்கம் எழுப்பி போரட்டத்தில் ஈடுபட அனுமதி அளிக்குமாறு மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. பின்னர், இந்த மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணயை வரும் நவம்பர் 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Share on:

ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு…


பல்வேறு சேவைகளை ரேஷன் கடை ஊழியர்கள் செய்தாலும், அவர்கள் ஒரே துறையின் கீழ் இல்லாமல் நான்கு துறைகளின் கீழ் உள்ளார்கள். இதனால் துறை ரீதியாக பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக கூறி வருகிறார்கள். இந்நிலையில் பொதுவினியோக திட்டத்திற்கு தனித்துறை ஏற்படுத்தக்கோரி ரேஷன் கடை ஊழியர்கள் வரும் நவம்பர் 7-ந்தேதி வேலை நிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறினார்.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 34,790 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன . இவற்றில் 33,377 கடைகள் கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படுகிறது. இதில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள முழு நேரக் கடைகள் 18,782 ஆகவும், பகுதி நேரக் கடைகள் 9,388 ஆகவும், ஆயிரம் முதல் ஆயிரத்து 500 குடும்ப அட்டைகள் கொண்ட முழு நேரக் கடைகள் 4,352 ஆகவும் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளுக்கு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து அனைத்து மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு, தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, ஆயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தில் அரிசி, கோதுமை, சர்க்கரை, சிறப்பு பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு, பாமாயில் விநியோகம் செய்யப்படுகிறது. அரிசியும், கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. சர்க்கரை ரூ.25, பருப்பு ரூ.30, பாமாயில் ரூ.25-க்கு வழங்கப்படுகிறது. அரசின் திட்டம் மூலம் 2 கோடியே 23 லட்சத்து 74 ஆயிரத்து 842 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுகிறார்கள். அதாவது சுமார் 7 கோடி மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

ரேஷன் கடைகள் என்பது தமிழ்நாட்டில் வங்கிகளைவிடவும் மக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளன. மக்களுக்கு தேவையான பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் உள்பட ரொக்கப்பணம் கூட ரேஷன் கடைகள் மூலமே விநியோகம் செய்யப்படுகிறது. ரேஷன் கடைகளில் புதிதாக வங்கி சேவையை ஆரம்பிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இப்படி பல்வேறு சேவைகளை ரேஷன் கடை ஊழியர்கள் செய்தாலும், அவர்கள் ஒரே துறையின் கீழ் இல்லாமல் நான்கு துறைகளின் கீழ் உள்ளார்கள். இதனால் எல்லாருக்குமே பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் பொதுவினியோக திட்டத்திற்கு தனித்துறை ஏற்படுத்தக்கோரி ரேஷன் கடை ஊழியர்கள் வரும் நவம்பர் 7-ந்தேதி வேலை நிறுத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்கள்.

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டில் பொது வினியோக திட்டம் 4 துறைகளின் நிர்வாகத்தில் இயங்கி வருகிறது. இதனால் பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறையையும் திருப்திபடுத்த வேண்டிய நிலையில் ரேஷன் கடை பணியாளர்கள் உள்ளனர். எனவே, பொது வினியோக திட்டத்துக்கு என தனித்துறை உருவாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 7-ந்தேதி மாநிலம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளையும் பூட்டி விட்டு, ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளோம். அன்று மாவட்ட தலைமையிடங்களில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம்” என்று கூறினார்.
Share on:

தொடரும் வாயுக் கசிவு! 9 மாணவிகளுக்கு மயக்கம்! சென்னை திருவொற்றியூர் பள்ளி தற்காலிகமாக மூடல்


சென்னை திருவொற்றியூர் விக்டரி பள்ளியை திறந்த முதல் நாளிலேயே வாயு கசிவால் 9 மாணவிகள் மயங்கி விழுந்ததை அடுத்து பள்ளியை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை திருவொற்றியூரில் விக்டரி பள்ளியில் கடந்த மாதம் 25 ஆம் தேதி திடீரென வாயுக் கசிவால் 35 மாணவர்கள் மயங்கி விழுந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்த நிலையில் பள்ளிக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே பள்ளியை திமுக எம்பி கலாநிதி வீராசாமி, பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் விக்டரி பள்ளி 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் திறப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து பள்ளி நிர்வாகத்துடன் இன்று காலை வாக்குவாதம் செய்தனர். வாயுக் கசிவு எதனால் வந்தது, அதை சரி செய்தாகிவிட்டதா போன்ற எந்த கேள்விகளுக்கும் விடைச் சொல்லாமல் பள்ளியை திறக்கக் கூடாது என வாக்குவாதம் செய்தனர்.

அப்போது சில மாணவிகள் தங்கள் வகுப்பறைக்குச் சென்றனர். அப்போது அவர்களில் 9 மாணவிகளுக்கு அடுத்தடுத்து வாந்தி மயக்கம் ஏற்பட்டது. சிலருக்கு மூச்சுத்திணறலும் இருந்ததால் பதறிய பெற்றோர் குழந்தைகளை தூக்கிக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளியை கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து வாயுக் கசிவிற்கான காரணத்தை கண்டறியும் வரை பள்ளியை தற்காலிகமாக மூடுமாறு உத்தரவிட்டனர்.
Share on:

தமிழகத்தில் 6.27 கோடி வாக்காளர்கள்.. எந்த சட்டசபை தொகுதியில் அதிகம்? எங்கு குறைவு?


தமிழகம் முழுவதும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் மாநிலத்தில் மொத்தம் 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி எது? குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதி எது? என்பது பற்றிய முக்கிய தகவலும் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 18 வயது பூர்த்தியானவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து ஓட்டளிக்கும் உரிமையை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி கொடுத்து வருகிறது. அந்த வகையில் 2025 ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தபணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி முதல் கடந்த 18 ம் தேதி வரை பல்வேறு பணிகள் நடந்தது.

குறிப்பாக வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை வாக்குச்சாவடி நிலை அலுவலர் சரிபார்த்தனர். அதோடு வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, வாக்காளர் பட்டியல் மற்றும் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் என்பது www.elections.tn.gov.in எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வரைவு வாக்காளர் பட்டியலின்படி பார்த்தால் தமிழகத்தில் மொத்தம் 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது 3.07 கோடியாக உள்ளது. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது 3.19 கோடியாக இருக்கிறது. இதன்மூலம் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர். 3ம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை என்பது 8,964 என்று உள்ளது.

அதேபோல் ஒரு தொகுதியில் அதிகபட்ச வாக்காளர்கள் உள்ளனர் என்றால் அந்த தொகுதியின் பெயர் சோழிங்கநல்லூர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதியில் மொத்தம் 6.76 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது 3.38 லட்சமாகவும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.37 லட்சமாகவும் உள்ளது. 3 ம் பாலினத்தவர்கள் 125 பேர் உள்ளனர்.

மேலும் குறைந்த வாக்காளர்கள் என்றால் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டசபை தொகுதியில் தான் உள்ளனர். இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது 1.73 லட்சம் என்ற அளவில் உள்ளது. இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 85,065 ஆக உள்ளது. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது 88,162 ஆக உள்ளது. 3ம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 3 என்று உள்ளது.

அதேபோல் சென்னை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் வெளியிட்டார். சென்னை மாவட்டத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளில் 19.41 லட்சம் ஆண்கள், 20.09 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்ளனர். சென்னையில் மொத்தம் 39,52,498 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இன்று வெளியான வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. அதனை பொதுமக்கள் பார்த்து தங்களின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். ஒருவேளை பெயர் விடுபட்டு இருந்தால் 16.11.2024, 17.11.2024, 23.11.2024, 24.11.2024 உள்ளிட்ட தேதிகளில் வாக்குச்சாவடிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று சேர்க்கலாம். அதேபோல் 2025 ஜனவரியில் 18 வயதை எட்ட உள்ளவர்களும் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யவும், திருத்தம் செய்யவும் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளலாம்.
Share on:

விஜய் பேச்சால் அதிமுகவுக்குதான் உண்மையான ஆபத்து.. அப்போ எடப்பாடி!


விஜய் திமுக, பாஜகவையும் எதிர்ப்பதாக சொல்லியிருப்பதனால் அதிமுகவுக்கு ஆபத்து இல்லை என்று நினைக்க வேண்டாம். விஜய் பேச்சால் அதிமுகவுக்கு தான் உண்மையான ஆபத்து என்று முன்னாள் அமைச்சர் கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், ஒன்றுபட்ட அதிமுக ஒன்றே இதற்கு தீர்வு என்றும், அதை நோக்கி பயணிப்பாரா எடப்பாடி பழனிசாமி என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் விஜய் பேசியது தமிழக அரசியலில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. திமுக, பாஜகவை நேரடியாக விமர்சித்து பேசிய விஜய், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்க கூடிய அதிமுகவை பற்றி ஒருவார்த்தை கூட சொல்லவில்லை. சொல்லப்போனால், மறைமுகமாக கூட தாக்கி பேசவில்லை.

வரும் காலத்தில், அரசியல் கள சூழல் மாறினால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க கூடிய நிலை கூட வரலாம் என்பதால் விஜய், அதிமுக குறித்து பேசுவதை தவிர்த்து இருக்கலாம் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. இத்தகைய சூழலில், அதிமுக எம்பியாக இருந்தவரும் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பு குழுவில் செயல்பட்டு வருபவருமான கேசி பழனிசாமி. விஜய்யால் அதிமுகவிற்கு தான் அதிக ஆபத்து என சொல்லியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

விஜயின் நேற்றைய மாநாட்டு செய்தி வெளிப்படையாக பாஜக சித்தாந்தத்தையும், திமுகவின் ஊழலையும் எதிர்ப்பதாக இருந்தாலும். இந்த 2 கட்சிகளையும் விட அதிமுகவுக்கு தான் அதிகமான ஆபத்து சூழ்ந்துள்ளது என்பதை உணர வேண்டும்.

* எடப்பாடி பழனிசாமி தனது காலத்தோடு அதிமுகவுக்கு முடிவுரை எழுதுகிறாரா? என்கிற அச்சம் அனைத்து அதிமுக தொண்டர்களுக்கும் ஏற்படுத்துகிறது. பாஜகவை எதிர்த்து சிறுபான்மையினர் வாக்குகளை கவர நினைத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் விஜயின் நேற்றைய பேச்சுக்கள் அதிமுகவுக்கு வருகிற திமுக எதிர்ப்பு வாக்குகளையும் பாஜக எதிர்ப்பு சிறுபான்மையினர் வாக்குகளையும் குறிவைப்பதாகவே அமைந்தது.

* நேற்று விஜய் சொன்ன “வலுவான தலைமை இல்லாமல் ஒரு சின்ன பையன் தலைமையில் போரை சந்தித்த பாண்டிய வம்சத்தின் “கதையின் அர்த்தம் திமுகவையும் பாஜகவையும் ஒருசேர எதிர்த்து நின்று வெல்லுகிற ஆற்றல் இன்றைய அதிமுக தலைமைக்கு இல்லை என்பதைத் தான் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார். அந்த இடத்தை தான் நிரப்பப் போவதாக சூளுரைத்திருக்கிறார். இதையே தான் ஜெயலலிதா அம்மா மறைவுக்கு பிறகு வெற்றிடம் உள்ளது என்று எல்லோரும் தெரிவித்தார்கள்.

* அப்பொழுது EPS அந்த வெற்றிடத்தை நிரப்பிவிடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள் ஆனால் நேற்றைய விஜய்யின் பேச்சு EPS-ம் அந்த வெற்றிடத்தை நிரப்பவில்லை, அது இன்றும் வெற்றிடமாக தான் உள்ளது அந்த இடத்தை நிரப்ப தான் களத்திற்கு வந்திருப்பதாக விஜய் பேசியிருக்கிறார்.

* கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு என்று தெரிவித்திருக்கிறார், 50 ஆண்டுகால அரசியலில் 30 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆண்ட அதிமுக விஜய் தலைமையில் ஆட்சி அமைய கூட்டணி கட்சியாக விஜயோடு இணைய முடியுமா? அல்லது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய விஜய் முன்வருவாரா?

* இதுவரைக்கும் எடப்பாடி பழனிசாமி தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம் என்று சொல்லவில்லை. அவர் சொன்னதெல்லாம் பலமான, வலிமையான, மெகா கூட்டணியை அமைப்போம் என்று கூட்டணியை தான் நம்பி இருந்தார். ஆனால் விஜயின் நேற்றைய பேச்சின் மூலம் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருவேளை அணிமாற நினைத்தால் விஜயை நோக்கித்தான் செல்வார்களே தவிர எடப்பாடியை நாடி வர வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதில் எப்படி அவர் வலிமையான கூட்டணியை அமைக்க போகிறார். அல்லது இதற்கு மாற்றாக என்ன திட்டம் வைத்திருக்கிறார் EPS?

* EPS தரப்பிலிருந்து பலர் ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் போன்று ஒரு கூட்டணியை ஏற்படுத்தலாம் என்கிற கருத்தை தெரிவிக்கிறார்கள். ஆனால் ஆந்திர அரசியல் வேறு தமிழக அரசியல் வேறு. சந்திரபாபு நாயுடு இதற்கு முன்பு அவர் தலைமையில் களம் கண்டு வென்று ஆட்சி அமைத்திருக்கிறார். வெற்றி தோல்வி என இரண்டையும் சந்தித்திருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி இதுவரை வெற்றியே காணாத தலைவராக வரலாறு படைத்துக்கொண்டிருக்கிறார்.

* அதையும் தாண்டி ஒருவேளை அதிமுக-தவெக கூட்டணி அமைந்தாலும் கூட அது ஒட்டுமொத்த அதிமுகவை விஜய்க்கு தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு அதற்கு பிரதிபலனாக சில காலம் EPS முதலமைச்சர் பதவியை அனுபவித்து அவரும் அவரோடு இருக்கிற முன்னாள் அமைச்சர்கள் தங்களை மேலும் வளப்படுத்திக்கொள்ளலாமே ஒழிய அதிமுக அதில் பலப்படாது மாறாக பலவீனம் தான் அடையும், மேலும் தன் தனித்துவத்தை இழக்கும்.

* விஜய் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் எனக் கூறும்பொழுது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரையும், என்.டி.ஆரையும் குறிப்பிட்டு சொல்லுகிறார், அவர்களை போற்றுகிறார்.ஆனால் ஜெயலலிதா அம்மாவை பற்றி எந்த ஒரு கருத்தும் அவர் குறிப்பிடவில்லை. அப்படியென்றால் எம்.ஜி.ஆர் காலத்து அதிமுக முன்னணியினரையும், தொண்டர்களையும், வாக்குவங்கியையும் அவர் கவர நினைக்கிறார். அம்மா காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்களை ஊழல்வாதிகளாகவே அவர் சித்தரிக்கிறார்.

* தமிழகத்தை மாற்று அரசியல் களத்திற்கு தயார்படுத்த முயல்கிறார். வெற்றியோ தோல்வியோ திமுக இதை எதிர்கொள்ளும், ஆனால் இரண்டும்கெட்டான் நிலையில் அதிமுக பயணிக்க கூடாது. வலுவான தடுப்பு ஆட்டத்தை, தன் பலத்தை உயர்த்திக்கொள்கிற யுக்தியை, இழப்புகள் ஏற்படாமல் தடுக்கிற செயல்களை செய்ய முன்வருவாரா எடப்பாடி பழனிசாமி? ஒன்றுபட்ட அதிமுக ஒன்றே இதற்கு தீர்வாகும். அதை நோக்கி பயணிப்பாரா எடப்பாடி பழனிசாமி? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Share on:

லஞ்சம் வாங்கி கோடிகளை குவித்த சென்னை பதிவாளர்.. கடைசி காலத்தில் ஆயுசுக்கும் மறக்க முடியாத தண்டனை


சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் கடந்த 1973-ம் ஆண்டு பத்திர பதிவுத்துறையில் சார்-பதிவாளராக பணியில் சேர்ந்தார். இவர் கடந்த 1991ம் ஆண்டு முதல் 2000 வரை சென்னையில் மாவட்ட பதிவாளராக பணியாற்றினார். இந்த காலக்கட்டத்தில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்தார் என புகார் எழுந்தது. இந்த வழக்கில் தற்போது 77 வயதாகும் முன்னாள் அரசு ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களை பொறுத்தவரை தங்கள் பணி காலத்தில் லஞ்சம் வாங்கினாலோ அல்லது வருமானத்திற்கு அதிமாக சொத்து சேர்த்தாலோ அப்போது அவர்கள் தண்டிகப்படவில்லை என்றாலும், அவர்களது இறுதி காலத்தில் தண்டிக்கப்படுவது அதிகமாக நடக்கிறது. எவ்வளவு சொத்து சேர்த்தாலும், அந்த சொத்துக்கள் நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டு, அரசுடைமை ஆக்கப்படும்.

பல அரசு ஊழியர்கள் ஓய்வு காலத்தில் வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார்கள். அதில் பலர் தண்டனைகளையும் அனுபவித்து வருகிறார்கள். வயதான காலத்தில் சிறைச்சாலை தண்டனை அனுபவிக்கும் நிலை பல அரசு ஊழியருக்கு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு லஞ்சம் வாங்கி கொடைக்கானலில் 100 கோடி சொத்து சேர்த்தவருக்கு மறக்க முடியாத தண்டனை கிடைத்தது.

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தாத்தையங்கார் பேட்டை, பில்லாதுரை கிராமத்தைச் சேர்ந்த 79 வயதாகும் ஜானகிராமன், தமிழ்நாட்டில் சார்பதிவாளராக பணிபுரிந்தவர். இவர் சார்பதிவாளராக 90களில் பணிபுரிந்தார். இவருடன் சார் பதிவாளராக இருந்த 1989-1993 காலக்கட்டத்தில், திருச்சி மாவட்டம் துறையூர், உறையூர், முசிறி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய முக்கிய இடங்களில் சார்பதிவாளராக பொறுப்பு வகித்திருந்தார்.

இந்த காலக்கட்டத்தில் முன்னாள் சார் பதிவாளர் ஜானகி ராமன் அவரது வருமானத்திற்கு அதிகமாக சட்டவிரோதமான வகையில் இவரது பெயரிலும், இவரது மனைவி வசந்தி (வயது 65) பெயரிலும் வாங்கிக் குவித்த சொத்துக்களின் அப்போதைய மதிப்பு ரூ.32,25,532/- (ரூபாய் முப்பத்தி இரண்டு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து ஐநூற்றி முப்பத்தி இரண்டு மட்டும்) ஆகும். அதாவது வழக்கமான சொத்தை விட 98% ஆகும்.

இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததன்பேரில், கடந்த 17.08.2001 அன்று அப்போதைய திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவில் காவல் ஆய்வாளர் அம்பிகாபதி என்பவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் புலன் விசாரணை நீண்ட காலமாக நடந்து வந்தது. அதன்பின்னர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை நடந்தது. 20 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் முன்னாள் சார் பதிவாளர் ஜானகிராமன் மற்றும் அவரது மனைவி வசந்தி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் வருமானத்திற்கு அதிகமாக குற்றவாளிகளால் சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுக்கு ஒப்படைக்குமாறும் நீதிபதி அப்போது தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

இதன் படி முன்னாள் சார்பதிவாளர் ஜானகிராமன், அவரது பெயரிலும், அவரது மனைவி வசந்தி பெயரிலும் வில்பட்டி மற்றும் கொடைக்கானல் பகுதியில் வாங்கிய சொத்தின் தற்போதைய மதிப்பு மட்டும் சுமார் 100 கோடிக்கும் மேல் என்று தகவல்கள் அப்போது வெளியானது. திருச்சி நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பாணியிலே சென்னை சிறப்பு நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் பத்திர பதிவுத்துறை அதிகாரி, மனைவிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த 77 வயதாகும் சந்திரசேகரன், கடந்த 1973-ம் ஆண்டு பத்திர பதிவுத்துறையில் சார்-பதிவாளராக பணியில் சேர்ந்தார். கடந்த 1991-ம் ஆண்டு முதல் மத்திய சென்னை பதிவுத்துறை அலுவலகத்தில் மாவட்ட பதிவாளராக (தணிக்கை) பணியாற்றி வந்தார். கடந்த 1.1.1991 முதல் 31.12.2000 வரையிலான பணிக்காலத்தில் இவர், வருமானத்துக்கு அதிகமாக 20 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்க்கு அவரது பெயரிலும், அவரது மனைவி லதா (65) பெயரிலும் சொத்து குவித்ததாக 2006-ம் ஆண்டு சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கணவன்-மனைவி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வருமானம், சந்திரசேகரின் வழக்கமான வருமானத்தை விட 250 சதவீதம் அதிகம் என லஞ்ச ஒழிப்புத்துறை அப்போது குற்றம்சாட்டியது.

இந்த வழக்கு விசாரணை சென்னை லஞ்ச ஒழிப்பு தடுப்புப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.பிரியா முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரியா, முன்னாள் சார் பதிவாளர் சந்திரசேகரன், அவரது மனைவி லதா ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர்களுக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். வருமானத்துக்கு அதிகமாக இவர்கள் சேர்த்த சொத்துகளை அரசுடமையாக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இப்போதைய மதிப்பின் படி பார்த்தால், அந்த சொத்துக்கள் கோடிகளை தாண்டும் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Share on:

திண்டுக்கல்லை புரட்டிய அரசுப் பேருந்து விபத்து.. 32 பேருக்கு நேர்ந்த கதி..


திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக பேருந்தை திருப்பியபோது அரசுப் பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் 32 க்கும் மேற்பட்ட பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் சாலை விபத்து சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சாலை பாதுகாப்பு குறித்து அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் தொடர்ந்து விபத்துகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒருவரின் அலட்சியம் ஒரு குடும்பத்தினரையே பாதிக்கும் என்பதை அறியாமல் பலரும் மிகவும் பொறுப்பில்லாமல் வாகனங்களை இயக்குகின்றனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க அரசுப் பேருந்தை திருப்பியபோது மரத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 32 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நத்தம், திண்டுக்கல், மதுரை அரசு மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள கோட்டைப்பட்டியில் இருந்து அரசுப் பேருந்து இன்று புறப்பட்டுள்ளது. கோட்டைப்பட்டியில் இருந்து நத்தம் நோக்கிச் செல்லும் இந்த அரசுப் பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். இந்தப் பேருந்தை கோபால்பட்டியைச் சேர்ந்த ஓட்டுநரான மோகன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், புதுப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது அரசுப் பேருந்தின் முன்னால் இருசக்கர வாகனம் ஒன்று சென்றுக்கொண்டிருந்துள்ளது, அப்போது, இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க அரசுப் பேருந்து ஓட்டுநர் பேருந்தை திருப்பியுள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து அப்பகுதியில் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 32 பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் இருந்தவர்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் 7 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 25 பேர் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share on:

பட்டா.. நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு.. அரசு நிலங்களில் வீடுகள்.. 162 ஏக்கர் ஏரி நிலைமை? ஹைகோர்ட் நறுக்


தமிழகம் முழுவதும் நீர்நிலைகள், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள நீர்நிலைகள், அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. இது தொடர்பாக கடந்த 2004ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது..

3 குழுக்கள் அமைத்து பணிகள் நடப்பதாக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்ட நிலையில், குழுக்கள் அமைத்திருந்தாலும், இன்னும் எத்தனை ஹெக்டேர் அரசு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது? எத்தனை ஹெக்டேர் பரப்பு நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன? லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால், அரசு குழுக்களால் என்ன பயன்? குழுக்கள் முறையாக கண்காணிக்கிறதா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியிருந்தது.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையும் துரிதமாகி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளும் வேகம் எடுத்திருந்ததை மறுக்க முடியாது. அதுபோல, தமிழகத்தில் எங்கு ஆக்கிரமிப்புகள் என்றாலும் அதில் நீதிமன்றம் தலையிட்டு, அது தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

அந்தவகையில், இந்நிலையில், சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள கோலடி ஏரியை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், இந்த விவ காரம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்தார். மேலும், அந்த பகுதியில் 20வருடங்களுக்கு மேல் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.

அப்போது குறுகிட்ட நீதிபதிகள், “20 ஆண்டுகள் இல்லை சோழர் காலத்தில் இருந்தே ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டுமென நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், 162 ஏக்கரில் இருந்த ஏரி தற்போது 112ஆக சுருங்கிவிட்டது” என்றனர்.

அப்போது குறுகிட்ட நீதிபதிகள், “20 ஆண்டுகள் இல்லை சோழர் காலத்தில் இருந்தே ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டுமென நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், 162 ஏக்கரில் இருந்த ஏரி தற்போது 112ஆக சுருங்கிவிட்டது” என்றனர்.

இதையடுத்து, அப்பகுதியில் வசிக்கும் நபர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ம.கவுதமன் “உரிய பட்டாவோடு மக்கள் வீடுகளை கட்டி வாழ்ந்துவருவதாகவும் அவர்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

அப்போதுநீதிபதிகள், “கடும் மழை காலத்தில் அந்த பகுதி மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டே தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துள்ளோம், இந்த வழக்கில் அவர்களையும் இணைக்க வேண்டும்.. இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரத்தை நியமிக்கிறோம்” என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நவம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Share on: