2000 ஆண்டு பழமைவாய்ந்த பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா? சங்க இலக்கியம் சொல்வது என்ன?


தை பொங்கல் (ஜனவரி 14) தமிழகத்தில் முக்கியமாகக் கொண்டாடப்படுவது மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளில் மகர சங்கராந்தி எனும் பெயரில் அறுவடைப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கான பெயர்கள் மாநிலங்களின் மொழி, மரபுகள் மற்றும் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கின்றன.

திருக்குறளின் பல குறள்கள் தைப்பொங்கல் திருவிழா குறித்து நேரடியாக குறிப்பிடவில்லை, ஆனால் திருக்குறளின் பல குறள்கள் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், நன்றி உணர்வையும், சமுதாயத்தின் நலனுக்காக உற்சவங்களை கொண்டாடுவதன் பண்பையும் எடுத்துரைக்கின்றன. தைப் பொங்கல் என்பது நன்றி செலுத்தும் திருவிழாவாகும், குறிப்பாக விவசாயத்திற்கு, பூமிக்கு, சூரியனுக்கு, மற்றும் பசுமாடுகளுக்கு.

விவசாயத்தின் முக்கியத்துவம்:

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து.

விளக்கம்: உழுதுண்டு வாழ்பவர்கள் உலகத்தின் முதுகெலும்பாக இருக்கிறார்கள். அவர்களே பிறருக்கும் உணவளிக்கின்றனர்.

நன்றி உணர்வு: நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.

விளக்கம்: நன்றி மறக்காமல் இருப்பது மானுடத்தின் உயர்ந்த பண்பு. தைப்பொங்கல் விழாவில், விவசாயத்தின் மகிமையை பாராட்டி, நன்றி செலுத்தும் பண்பாடு வாழ்வியல் நெறியாகக் கொண்டாடப்படுகிறது. இது திருக்குறளின் சிந்தனையுடன் தத்ரூபமாகக் கூடி வருகிறது.

பொங்கலின் வரலாற்றுப் பின்னணி: பொங்கல் பண்டிகையின் வரலாறு 2,000 ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கணிக்கப்படுகிறது. இது தமிழர்களின் விவசாயச் சமூகத்தில் முக்கியமான பங்கு வகித்து வந்துள்ளது. சங்க காலத்தில் இருந்து இயற்கையை வணங்கும் பழக்கவழக்கங்கள் முக்கியமாகக் காணப்பட்டு, அந்த மண்ணின் மக்களின் வாழ்க்கை முறையை உருவாக்கியவை.

இந்த பண்டிகை, குறிப்பாக சூரியனின் போற்றுதலுக்கும் விவசாயத்தின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருப்பதால், தமிழர்களின் தெய்வீக, சமூக, பண்பாட்டு அடையாளமாகக் கருதப்படுகிறது.

சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல் “தையித் திங்கள் தங்கயம் படியும்” என்று நற்றிணையும் “தையித் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகையும் “”தைத் திங்கள் தங்கயம் போல்” என்று புறநானூறு “தையித் திங்கள் தங்கயம் போல” என்று ஐங்குறுநூறும், “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும், தொல்காப்பியமும் போன்ற பழமையான தமிழ் இலக்கியங்களில் பொங்கலின் முக்கியத்துவம் மற்றும் தொடர்புடைய சடங்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இத்தகைய இலக்கியங்கள், தமிழ் சமூகத்தின் முதன்மை மரபுகளைப் பதிவு செய்யும்போது, பொங்கல் விவசாய மரபுகளுடன் முடிச்சுப் போடப்பட்ட ஒரு பண்டிகையாக முன்னிலைப்படுத்துகின்றன. பண்டிகையின் முக்கியத்துவம் பொங்கல் தமிழர்களின் பாரம்பரிய மற்றும் முக்கியமான அறுவடைப் பண்டிகையாகும்.

இது தமிழர் வாழ்க்கையின் நிலையான மரபுகள், விவசாயம் மற்றும் இயற்கையின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தும் விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை சூரியனை பிரதானமாக வணங்கி, விவசாயத்தின் மூலதனமாக கருதும் இயற்கையின் சக்திகளை போற்றுகிறது. இது நன்றி செலுத்தும் விழாவாக விளங்குகிறது.

குறிப்பாக விவசாயிகள் உழைப்பின் முக்கியத்துவத்தையும் உணவு உற்பத்திக்கான இயற்கையின் பங்களிப்பையும் செழிப்பையும் கொண்டாடுவதற்கு. பொங்கல் விழா உலகம் முழுவதும் தமிழர்கள் வசிக்கும் நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இதில், பொங்கல் உணவு (சர்க்கரை கரும்பு, பால், அரிசி போன்றவற்றால் செய்யப்படும் உணவு) மிக முக்கியமானதாகும். இந்த நாள் குடும்பங்களையும் சமூகங்களையும் ஒன்று திரட்டும் விசேஷ நாளாகவும் விளங்குகிறது.

பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அவை போகி: பழைய பொருட்களை எரித்து, புதியதுக்கு வழி செய்யும் நாள். சூரிய பொங்கல்: சூரியனை வழிபட்டு, பொங்கல் சமைக்கும் நாள். மாட்டுப் பொங்கல்: மாடுகளை அலங்கரித்து, நன்றி செலுத்தும் நாள். காணும் பொங்கல்: உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சந்திப்பு நிகழும் நாள்.

தைப்பொங்கல் – ஓர் கவிதை ஆடியில் விதைத்த மண்ணின் கனவு, தை மாதம் வெகுளியெழும் நனவு. நெல்லின் முத்தரிசி மெல்ல நுகர, சூரியனைக் கண்டு நன்றி சொல்ல புறப்படுவார். புது பானையிலே பொங்கும் நெய்யுடன், சர்க்கரையும் பாலும் சேர்ந்து செய்யுடன். கழுவும் கரும்பு சுவையும் மஞ்சளின் நிறமும், புகழும் பசுவின் அருமை மக்களின் உறவுமாம். மழை தீர்க்கும் தாய் மண்ணின் வரமாம், அறுவடைக் கை நிறைய தமிழின் மரமாம். அவரையும் புடலையையும் படையலாய் வைக்கும், செந்நெற் சோறுடன் தமிழின் திருவிழா தைக்கும்.

கொதித்தெழும் பொங்கல் வாழ்க்கையின் பாடு, செழித்து மலர்க்கும் உழவரின் காதல் நீளாது. இயற்கை தாயின் பேரருள் பெருமை, தமிழனின் நெஞ்சில் நிலைக்கும் திருமை. வாழ்த்திடுவோம் சூரியனையும் மண்ணையும், கொண்டாடிடுவோம் கால்நடைகளின் புண்ணியத்தையும். தை பிறந்தால் வழி பிறக்கும் எனும் கோலோசை, தமிழனின் வாழ்வில் பொங்கல் விளக்கும் பிரகாசம்.

முடிவுரை: பொங்கல் பண்டிகை தமிழர்களின் கலாச்சாரச் செழுமையையும் பாரம்பரியத்தின் பெருமையையும் வெளிப்படுத்துகிறது. இது நம் நிலம், விவசாயம் மற்றும் இயற்கை வளங்களுக்கு நன்றி தெரிவிக்கும் மகிழ்ச்சியான திருவிழாவாக மட்டுமின்றி, குடும்பங்களையும் சமூகங்களையும் ஒன்றிணைக்கும் அம்சமாகவும் திகழ்கிறது. பொங்கல் போன்ற விழாக்கள் தமிழர் வாழ்வியலின் அடையாளம் என்பதையும், அவற்றின் மூலம் எப்போதும் நம் பாரம்பரியத்தை பெருமிதத்துடன் பாதுகாக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகின்றன.
Share on:

சதீஷுக்கு மரண தண்டனை! மொத்த குடும்பத்தை இழந்து நிற்கதியாய் சத்யாவின் சகோதரி! கோர்ட் முக்கிய உத்தரவு


சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளி சதீஷுக்கு, தூக்கு தண்டனை விதித்தும் 35 ஆயிரம் அபராதம் விதித்தும் சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், அபராத தொகை 35 ஆயிரம் ரூபாயில் 25 ஆயிரம் ரூபாயை பலியான சத்திய பிரியாவின் சகோதரிகளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும், தமிழக அரசின் இழப்பீட்டு நிதியத்தில் இருந்து 10 லட்சம் ரூபாய் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் மாணிக்கம். இவருடைய மகள் சத்யபிரியா. அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் . இவர் சத்யபிரியாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

இதனால் அவ்வப்போது சத்யாவை நேரில் சந்தித்து தன்னை காதலிக்குமாறு சதீஷ் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது. இப்படித்தான் கடந்த 2022 அக்டோபர் 13 ஆம் தேதி கல்லூரிக்கு செல்ல கல்லூரிக்குச் செல்ல சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்திற்கு சத்யபிரியா வந்தார்.

அப்போது அங்கு சதீஷும் வந்தார். ரயில் வரும் வரை காத்திருந்த சத்யபிரியாவிடம் போய் தன்னை காதலிக்குமாறு சதீஷ் வற்புறுத்தியுள்ளார். அதற்கு சத்யபிரியா என்னால் உன்னை காதலிக்க முடியாது. என் பின்னால் சுற்றுவதை நிறுத்திவிடு” என சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், சத்யபிரியாவை, தாம்பரம் சென்ற மின்சார ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்ததாக சதீஷ் கைது செய்யப்பட்டார்.

சிபிசிஐடி விசாரித்த இந்த வழக்கு தொடர்பாக, சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை நீதிபதி ஸ்ரீதேவி விசாரித்தார். சிபிசிஐடி தரப்பில் 70 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டனர். அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்ததை அடுத்து, சதீஷை குற்றவாளி என அறிவித்து டிசம்பர் 27ம் தேதி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

தண்டனை விவரங்கள் குறித்த விசாரணைக்காக வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளி சதீஷ், புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு, ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் தண்டனை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு வயதான பெற்றோர் இருப்பதாலும் தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாலும் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என சதீஷ் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு குற்றவாளிக்கு தூக்கு தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அபராத தொகை 35 ஆயிரம் ரூபாயில் 25 ஆயிரம் ரூபாய் பலியான சத்திய பிரியாவின் சகோதரிகளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும், தமிழக அரசின் இழப்பீட்டு நிதியத்தில் இருந்து 10 லட்சம் ரூபாய் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த தீர்ப்பை உறுதி செய்வதற்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். சத்யாவின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சத்யாவின் தாயாரும் உயிரிழந்தது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது. சத்யாவின் தங்கையான 8 வயது சிறுமி பெற்றோர் இன்றி நிர்கதியாக நிற்கும் நிலையில் அவருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share on:

3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் டீம்.. ஐகோர்ட் உத்தரவுப்படி அண்ணா பல்கலை மாணவி வழக்கை விசாரிக்கும் குழு!


அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை விசாரிக்க 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி டிசம்பர் 23 ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர்கள் வரலட்சுமி, மோகன்தாஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், காவல்துறை, அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க நேற்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லக்ஷ்மி நாராயணன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “புகார்கள் பதிவு செய்யப்பட்டதும் எப்.ஐ.ஆர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. பாலியல் வழக்கில் எப்படி எப்.ஐ.ஆர் கசிந்தது என சைபர் கிரைம் காவல்துறை விசாரணை செய்து வருகிறது.

எப்.ஐ.ஆர் கசிந்த விவகாரத்தில், எஃப்.ஐ.ஆரை பார்வையிட்ட 14 பேர் அடையாளம் காணப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. செல்போன் நிறுவனத்திடம் இருந்து குறிப்பிட்ட தகவல்கள் கேட்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் ஒரு குற்றவாளி மட்டுமே இருப்பதாக காவல்துறை ஆணையர் தெரிவித்தார். தொடர் விசாரணைக்குப் பின்னர்தான் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரிய வரும்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரத்த நீதிபதிகள், “யார் எப்.ஐ.ஆர் பதிவிறக்கம் செய்கிறார்கள் என கண்டுபிடிக்க வசதி இருந்தும் ஏன் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை? புகார் அளிப்பதற்கு காவல் நிலையத்திற்கு மக்கள் வருவதற்கே பயப்படும் நிலைதான் தற்போது உள்ளது. அரசு அதிகாரிகள் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பதில் என்ன சிரமம் உள்ளது.

மாறாக, பத்திரிகைகள் தவறாக திரித்து வெளியிட்டு விட்டதாக கூறக்கூடாது. 3 ஐபிஎஸ் அதிகாரிகள் குழு விசாரணை செய்வதில் தமிழக அரசுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. குழுவின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு இனி விசாரணை செய்யும்.” என உத்தரவிட்டனர்.

மேலும், “FIR பொதுவெளியில் கசிந்ததற்காக பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் அரசு இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த தொகையை குற்றத்தில் தொடர்புடையவர்களிடம்(காவல்துறை அதிகாரிகள் உட்பட) வசூலிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை. சென்னை காவல் ஆணையர் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவியிடம் இருந்து கல்வி கட்டணம், விடுதிக் கட்டணம் என ஏதும் அண்ணா பல்கலைக்கழகம் வசூலிக்கக் கூடாது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் பதிவு செய்யப்படும் எப்ஐஆர் வெளியாகாமல் இருப்பதை காவல்துறை ஆணையர் உறுதிபடுத்த வேண்டும்” என உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சிபிஐ விசாரணை கோரிக்கையை நிராகரித்தது சென்னை ஐகோர்ட். அதேசமயம், 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில், உடனடியாக குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது தமிழக அரசு. தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
Share on:

நீ ஒரு “சார்” உடன் இருக்க வேண்டும்.. அண்ணா பல்கலை. மாணவியை மிரட்டிய ஞானசேகரன்.. யாரந்த சார்?


சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுடன் இன்னொரு நபருக்கும் தொடர்பு உள்ளதாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அந்த மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் தந்த மற்றொரு நபர் யார் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஞானசேகரன் என்ற ஆள் மட்டும் தனியாக குற்றம் செய்யவில்லை என்று பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளாராம். அதோடு ஆடி காரில் ஒருவர் வந்ததாக கூறி உள்ளார்.

இதெல்லாம் போக.. உன்னுடைய வீடியோவை.. வைத்து இனி உன்னை அழைப்பேன். நீ வர வேண்டும். உன்னை ஒரு சாரிடம் கூட்டி செல்வேன். நீ ஒத்துழைக்க வேண்டும். நீ Sir ஒருவருடனும் இருக்க வேண்டும். தயாராக இரு என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

அந்த சார் யார்… அந்த சார் யார்.. அவர் பல்கலையில் வேலை செய்பவரா.. இல்லை வெளியே இருக்கும் ஏதாவது ஒரு சாரா என்ற கேள்வி எழுந்துள்ளது….
Share on:

Continue Reading

திருப்பூர் அருகே குப்பையில் கிடந்த பல நூறு ரேஷன் கார்டுகள்.. பல்லடம் அருகே வருவாய் துறை தீவிர விசாரணை


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் குப்பையில் கிடந்த 292 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் தீவிர விசாணை நடத்தினார்கள். குப்பையில் கிடந்தவை திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ரேஷன் கார்டுகள் என்பது தெரியவந்தது. கடந்த 2017 முதல் 2020-ம் ஆண்டு வரை அச்சிடப்பட்ட குடும்ப அட்டைகள் என்பதும் தெரியவந்துள்ளது.

ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், துவரம்பருப்பு மற்றும் பல்வேறு பொருட்களை வாங்குவதற்கு குடும்ப அட்டை வேண்டும். குடும்ப அட்டை இருந்தால் தான் மகளிர் உரிமை பெற முடியும். இதேபோல் அரசு தரும் பல்வேறு நிவாரண உதவிகளையும் பெற முடியும்.. குடும்ப அட்டை பெற வேண்டும் என்றால், அதற்கு வருவாய்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும். நீண்ட செயல்முறைக்கு பிறகே குடும்ப அட்டைகள் கிடைக்கும்.

இந்த சூழலில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகரில் உள்ள காட்டுப்பகுதியில் குப்பைகள் போடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நேற்று அங்கு குப்பை போடச்சென்ற சிலர் குவியல் குவியலாக ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் கிடப்பதை கண்டு அதிர்ந்து போனார்கள். இதுகுறித்து நாராணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு வந்த நாராணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பல்லடம் வட்ட வழங்கல் அலுவலர் அம்பிகா உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அங்கு குப்பைகளில் போடப்பட்ட தமிழ்நாடு அரசின் 292 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை கைப்பற்றினார்கள்.அந்த கார்டுகள் திருப்பூர் தெற்கு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த குடும்ப அட்டைகள் என்பது தெரியவந்தது. கடந்த 2017 முதல் 2020-ம் ஆண்டு வரை அச்சிடப்பட்ட குடும்ப அட்டைகள் என்பது தெரியவந்தது. இந்த அட்டைகள் எப்படி வந்தது என்பது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரேஷன் கார்டுகள் விண்ணப்பித்து பெறுவது என்பது எளிதானது அல்ல என்கிற நிலையில், சுமார் 292 பேருக்கு குடும்ப அட்டைகள் தராமல் குப்பையில் வீசப்பட்டது ஏன் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட குடும்ப அட்டைகள் பல்லடம் பகுதியில் உள்ள குப்பை தொட்டிக்கு எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் பல்லடம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Share on:

அரசு ஊழியரின் சொத்து, கடன்.. தனிப்பட்ட விவரங்கள் அல்ல – உயர்நீதிமன்றம் திட்டவட்டம்


அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத் துறை உதவிப் பொறியாளராக பணியாற்றிய காளிப்ரியன் என்பவரின் சொத்துக்கள், கடன்கள் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் திம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளார்.

ஆனால், இந்த தகவல்கள் அரசு ஊழியரின் தனிப்பட்ட விவரங்கள் எனவும், அவை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விலக்களிக்கப்பட்டவை எனவும் கூறி, தகவல்கள் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பான உத்தரவை எதிர்த்து சீனிவாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி, தகவல் உரிமைச் சட்டம் 8வது பிரிவின் கீழ் சில தனிப்பட்ட தகவல்கள் வழங்க விலக்களிக்கப்பட்டுள்ளது என்றும், அரசுப் பணி சார்ந்த தகவல்களை வழங்கலாம் எனவும், அரசு ஊழியர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வது அடிப்படை உரிமை எனவும் வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு ஊழியர்களின் பணியை பாதிக்கச் செய்யும் தகவல்கள் பாதுகாக்கப்பட்டவை தான் என்றபோதும், அரசு ஊழியர்களின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட வேண்டும் எனவும், அவை பொதுமக்கள் பரிசீலனையில் இருந்து பாதுகாக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல எனக் கூறிய நீதிபதி, தகவல்கள் வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரத்தை மீண்டும் மாநில தகவல் ஆணையத்துக்கு அனுப்பிய நீதிபதி, சட்டப்படி மீண்டும் பரிசீலித்து இரண்டு மாதங்களில் முடித்து வைக்க உத்தரவிட்டார்.
Share on:

நெல்லை கொலை.. காவலர்கள் மீது நடவடிக்கை! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் கவனக்குறைவாக இருந்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி நகரின் மையப் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாயாண்டி என்ற இளைஞர் நேற்று பட்டப்பகலில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். நீதிமன்ற வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களையும் மீறி இந்தப் படுகொலை நடந்திருந்தது.

மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் வரும் அனைவரும் தீவிர ஆய்வுக்குப் பிறகே அனுமதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. ஆனால், காவல்துறையின் சோதனையையும் மீறி கொலையாளிகள் ஆயுதங்களுடன் உள்ளே வந்தது எப்படி? அப்படியானால், காவல்துறையினர் கவனக்குறைவாக இருந்தார்களா? அல்லது கொலையாளிகள் ஆயுதங்களுடன் உள்ளே நுழைவதை காவல்துறையினரே கண்டும் காணாமலும் விட்டுவிட்டார்களா? என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன.

கொலை நடந்த சில மணி நேரங்களில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். இப்படி இருக்கையில், சம்பவம் நடந்தபோது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதேநேரம் கவனக்குறைவாக இருந்த போலீசார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Share on:

திருநெல்வேலி நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டி கொலை.. ஜாதி ரீதியிலான கொலையால் பழிக்குப்பழி


திருநெல்வேலி சாந்தி நகரில் திருநெல்வேலி – திருச்செந்தூர் ரோட்டில் மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ளது. இன்று காலையில் வழக்கம்போல் நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் பணிக்கு வந்து கொண்டிருந்தனர்.

அதேபோல் வழக்கு தொடர்பாக பொதுமக்களும் நீதிமன்றத்துக்காக வந்து கொண்டிருந்தனர். பொதுவாக திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு வருவோரை போலீசார் சோதனை செய்த பிறகு தான் உள்ளே அனுமதிப்பார்கள்.

இந்நிலையில் தான் இன்று காலையில் திருநெல்வேலி நீதிமன்ற வாசல் அருகே இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை 4 பேர் கும்பல் சுற்றி வளைத்தது. அந்த இளைஞர் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடிய நிலையில் விரட்டிய கும்பல் அந்த இளைஞரை சரமாரியாக வெட்டி கொன்றது. அதன்பிறகு 4 பேரும் காரில் ஏறி அங்கிருந்து தப்பினர். அப்போது ஒருவரை வழக்கறிஞர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படை்த்தனர். மற்ற 3 பேர் தப்பி சென்றனர்.

இதுபற்றி அறிந்தவுடன் பாளையங்கோட்டை போலீசார், போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து கொலையான நபரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். அப்போது கொலையானவர் கீழநத்தத்தை சேர்ந்த சண்முகம் மகன் மாயாண்டி என்பதும், அவர் கொலை வழக்கு ஒன்றில் ஆஜராக நீதிமன்றம் வந்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஹைகிரவுண்ட் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் கொலையான மாயாண்டியின் பின்னணி பற்றி போலீசார் விசாரிக்க தொடங்கினர். அப்போது தான் ஜாதி ரீதியாக நடந்த கொலைக்கு பழிக்கு பழி வாங்க அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதாவது திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தத்தை சேர்ந்தவர் ராஜா மணி. பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். இவர் திமுகவில் செயல்பட்டதோடு, பெட்டிக்கடை நடத்தியதோடு, வார்டு உறுப்பினராகவும் இருந்தார். கடந்த 2023 ஆகஸ்ட் 13ல் கீழநத்தத்தில் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த கும்பல் அவரை வெட்டி கொன்றது.

இந்த கொலையில் கீழ்நத்தத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் மாயாண்டி, இசக்கி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மாயாண்டி இன்று திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நிலையில் அவரை 4 பேர் கும்பல் வெட்டி கொன்று விட்டு காரில் தப்பிய நிலையில் ஒருவர் சிக்கி உள்ளார். 3 பேர் தப்பித்துவிட்டனர். இதனால் ஜாதி ரீதியிலான பிரச்சனையில் கடந்த ஆண்டு ராஜாமணியை கொன்ற நிலையில் அதற்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே தான் நீதிமன்றம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து மற்ற 3 கொலையாளிகளை போலீசார் தேடிவருகின்றனர். இந்த சம்பவத்தால் திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Share on:

ஒரே நாடு ஒரே தேர்தல்.. தேர்தல் முறையையே மாற்றும் சட்டம்.. ஆதரிக்கும், எதிர்க்கும் கட்சிகள் எவை எவை?


ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இன்று மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் லோக்சபாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை அறிமுகம் செய்தார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளி செய்தன. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் கட்சிகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளின் பட்டியல் இங்கே.

பா.ஜ.க
தேசிய மக்கள் கட்சி (NPP)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம்
அப்னா தால்
கண பரிஷத்
பிஜு ஜனதா தளம் (பிஜேடி)
ஜனதா தளம் (ஐக்கிய)
லோக் ஜன சக்தி கட்சி (ஆர்)
மிசோ தேசிய முன்னணி தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி
சிரோமணி அகாலி தளம் (SAD)
ஐக்கிய மக்கள் கட்சி லிபரல்
பாட்டாளி மக்கள் கட்சி
இந்திய குடியரசுக் கட்சி (ஏ)
தமிழ் மாநில காங்கிரஸ் (எம்)
ராஷ்ட்ரிய லோக் ஜனதா தளம்
ஐக்கிய கிசான் விகாஸ் கட்சி
பாரதிய சமாஜ் கட்சி
கோர்கா தேசிய லிபரல் முன்னணி
இந்துஸ்தானி ஆவம் மோர்ச்சா
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்
திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி
ஜன் சுரஜய் சக்தி ராஷ்ட்ரிய லோக்
ஜன சக்தி கட்சி மகாராஷ்டிரவாதி
கோமந்தக் கட்சி
நிஷாத் பார்ட்டி புதிய நிதி கட்சி
ராஷ்டிரவாதி காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்)
ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி
சிவசேனா
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா

ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கும் கட்சிகளின் பட்டியல்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை எதிர்க்கும் அரசியல் கட்சிகளின் பட்டியல் இங்கே.

ஆம் ஆத்மி கட்சி (AAP)
பகுஜன் சமாஜ் கட்சி (BSP)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
காங்கிரஸ் சமாஜ்வாதி கட்சி
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
திரிணாமுல் காங்கிரஸ்
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)
திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக)
நாகா மக்கள் முன்னணி
விடுதலை சிறுத்தைகள் கட்சி
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)
விடுதலை சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா

தேர்தல்:ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு பரிந்துரைத்தபடி, இந்த மசோதா உருவாக்கப்பட்டு அது அமைச்சரவை ஒப்புதலும் பெறப்பட்டு தற்போது தாக்கலாக உள்ளது . ஒரே நாடு ஒரே தேர்தலை அவ்வளவு எளிதாக நடத்தி விட முடியாது. இதற்கு சட்டம் ஒன்று கொண்டு வர வேண்டும் என்பதை தாண்டி அதோடு சில சட்டங்களை திருத்த வேண்டும். இன்று மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் வேறு சில சட்டங்களை திருத்த வேண்டும்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இந்திய அரசியலமைப்பில் குறைந்தபட்சம் ஐந்து பிரிவுகளில் திருத்தங்கள் தேவைப்படும்.

1. பாராளுமன்றத்தின் அவைகளின் காலம் தொடர்பான பிரிவு 83,

2. குடியரசுத் தலைவரால் மக்களவையை கலைப்பது தொடர்பான பிரிவு 85,

3. மாநிலத்தின் பதவிக் காலம் தொடர்பான பிரிவு 172 சட்டமன்றங்கள்,

4. மாநில சட்டமன்றங்களை கலைப்பது தொடர்பான சட்டப்பிரிவு 174

5.மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்துவது தொடர்பான பிரிவு 356 ஆகியவற்றில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
Share on:

அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழல், முறைகேடு.. என்னதான் செய்றீங்க? தமிழக அரசிடம் கேட்ட சென்னை ஐகோர்ட்!


தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த கோகிலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ள தனது கணவர் சிறையில் பார்த்த வேலைக்காக அவருக்கு வழங்கப்படும் ஊதியம் நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை என கூறியுள்ளார்.

வழக்கு விசாரணையின் போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தமிழகத்தில் உள்ள சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் 14 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக மத்திய தணிக்கைத் துறை கூறியது தொடர்பாக செய்தித் தாள்களில் வெளியான செய்தியை தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, இந்த குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது எனக் கூறிய நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருந்தனர். மேலும், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை டிசம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, அறிக்கையை தாக்கல் செய்தார்.

அறிக்கையை பார்த்த நீதிபதிகள், முறைகேடு தொடர்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய தணிக்கைக்குழுவின் அறிக்கை வெளியான நிலையில் கடந்த 13 ஆம் தேதி தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் இவ்வளவு நாட்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பினர்.

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடு தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? இது போன்ற புகார்களை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்கிறதா? எனக் கேள்வி எழுப்பினர். தவறு இழைத்த அதிகாரிகள் அனைத்து பலன்களையும் பெற்றுக்கொண்டு ஓய்வு பெற அனுமதிக்கக்கூடாது எனவும், இதுபோன்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறினர்.

இதற்கு பதில் அளித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், 2022 ஆம் ஆண்டு மத்திய தணிக்கை குழுவின் அறிக்கை வெளியானதில் இருந்து, அதுதொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு, அதன்பின்னர் தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஊழல் புகார்களை அரசு தீவிரமாக கருதுவதாகவும் உறுதி தெரிவித்தார்.

இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜனவரி 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Share on: