மாமியார் பாஜக எம்எல்ஏ தெரிந்தும்.. EPS-ஆல் கொண்டுவரப்பட்ட ஈரோடு வேட்பாளர் இன்று விலைபோய்விட்டாரா?கேசி.பழனிசாமி


ஈரோடு தொகுதியில் அதிமுகவினரை முழுவதுமாக வேட்பாளர் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ள கே.சி.பழனிசாமி, உங்கள் கட்சி, உங்கள் சின்னம் வெற்றிபெற வேண்டும் என்றால் நீங்கள் செலவு செய்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று கட்சிக்காரர்களிடம் கூறி வருவதாக தெரிவித்துள்ளார்

நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் ஈரோடு தொகுதி வேட்பாளர் தொடர்பாக அதிமுக முன்னாள் நிர்வாகி கே.சி.பழனிசாமி வெளியிட்ட சமூகவலைதள பதிவில், நம்பி ஏமாந்தாரா? அல்லது நம்பிக்கை துரோகம் செய்தாரா? எடப்பாடி பழனிசாமி என கேள்வி எழுப்பியுள்ளார்.

* ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் 3 மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு உறுதியாளிக்கப்பட்டு EPS-ஆல் கொண்டுவரப்பட்டவர் இன்று திமுகவிடம் விலைபோய்விட்டாரா?

* கடந்த 2 நாட்களாக கட்சிக்காரர்களை முழுமையாக புறக்கணித்தும் தான் மிகப்பெரிய தொகையை கொடுத்தே சீட்டு பெற்றதாக்கவும் அதனால் தேர்தல் செலவுகளுக்கு தன்னை யாரும் அணுக கூடாது உங்கள் கட்சி, உங்கள் சின்னம் வெற்றிபெற வேண்டும் என்றால் நீங்கள் செலவு செய்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று கட்சிக்காரர்களிடம் ஏன் கடந்த இரண்டு நாட்களாக அதிமுக வேட்பாளர் கோபப்படுகிறார்.

* சரி செய்ய முயற்சித்த முன்னாள் அமைச்சர்களிடமும் எனக்கு அழுத்தம் கொடுத்தால் நான் மாவட்ட ஆட்சியரை சந்தித்து போட்டியிலிருந்து விலகி விடுவேன் என்று எச்சரித்ததாக செய்திகள் வருகிறது.இந்த வேட்பாளரின் தாயார் 1991 தேர்தலில் #அதிமுக சார்பாக MP-யாக இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று விட்டு பிறகு பாஜகவில் இணைந்துவிட்டார். இவரது மாமியார் தற்போதைய பாஜக MLA இது எல்லாம் தெரிந்தும் ஏன் எடப்பாடி பழனிசாமி இவருக்கு வாய்ப்பு வழங்கினார்?

* அடிப்படைக் கட்சி உணர்வும், விசுவாசமும், தலைவர்கள் மீதான அபிமானமும், சின்னம் மற்றும் தொண்டர்கள் மீது பற்றுதல் இல்லாமல் பொருளாதார அடிப்படையில் ஒரு வியாபாரம் போல சின்னத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தின் விளைவு! தன்னை ஒரு கொடைவள்ளலாக மக்கள் மத்தியில் உருவகப்படுத்தி விட்டு கடுமையான போட்டியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை என்றதும் இவர் வாய்ப்புக்காக கொடுத்ததையும் இதுவரை செலவு செய்ததையும் எதிர் தரப்பிடம் பெற்றுக் கொண்டதால் இந்த திடீர் மனமாற்றமா?

* கட்சிக்காரர்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் கவனிப்பு வேலைகள் நடைபெறும் என்று அறிவித்துவிட்டு இப்போது வேட்பாளர் பின் வாங்குவதால் கட்சிக்காரர்கள் ஏதோ ஏமாற்றி விட்டார்களோ என்று அந்த பகுதியில் உள்ள வாக்காளர்களிடம் கெட்ட பெயர் வாங்குகிறார்கள். மேலும் வேட்பாளர் கொடுத்துவிடுவார் என்று நம்பி இதுவரை கடன் வாங்கி செலவு செய்த கட்சிக்காரர்களும் தற்பொழுது செலவு செய்ததை யாரிடம் கேட்பது என்று தெரியாமல் திணறுகிறார்கள். இது எதிர்காலத்தில் கட்சிக்கு ஒரு அவபெயரை ஏற்படுத்தும் அதே போல் இந்த செயல் இதை ஒட்டி இருக்கிற திருப்பூர், பொள்ளாச்சி, நாமக்கல், கரூர் போன்ற தொகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்துவது போல் இந்த வேட்பாளரின் செயல் அமைந்துவிட்டது.

* எடப்பாடி பழனிசாமியும் கே.சி.பழனிசாமியும் நின்று மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இதே நாடாளுமன்ற தொகுதியில் இன்று அசிங்கப்பட்டு அவமானப்பட்டு நிற்பதற்கு காரணம் அரசியலில் வியாபார யுக்தியா? அல்லது கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவருக்கு வாய்ப்பு கொடுத்த தலைமையின் தவறான முடிவா? தகுதியானவர்கள் பலர் இருந்தும் தன்னுடைய சுயநலம் மற்றும் ஆணவப்போக்கால் கட்சியை வழி நடத்துகிற பக்குவம் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டதா? தங்களை திருத்திக்கொள்வார்களா ? எடப்பாடியும், தங்கமணியும், வேலுமணியும். என கேசி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Share on:

அதிமுகவிற்கு மறக்க முடியாத இரண்டு லோக்சபா தேர்தல்கள்.. எம்ஜிஆர் – ஜெயலலிதா- எடப்பாடி வரை வாக்கு சதவீதம்


எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக, முதல் முதலாக லோக்சபா தேர்தலை சந்தித்த 1977 முதல் 2024 வரை சந்தித்த தேர்தல்களில் எத்தனை வாக்கு சதவீதம் வாங்கியது என்பது பற்றியும், வரலாற்றிலேயே குறைந்த வாக்கு சதவீதம் எப்போது வாங்கியது என்பது பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.

எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக, அவரது தலைமையில் 1977ம் ஆண்டு சந்தித்த முதல் லோக்சபா தேர்தலில், 30.04% வாக்குகள் பெற்றதுடன் 17 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் அடுத்து நடந்த 1980 தேர்தலில் 25.38 சதவீதம் வாக்குகள் பெற்று 2 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. 1984ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக 12 இடங்களில் வென்று 18.36 சதவீதம் வாக்குகளை பெற்றது.

எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் 1989ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் 17.2 சதவீதம் வாக்குகளை பெற்று 11 இடங்களில் வெற்றி பெற்றது.அதிமுக குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற காரணமும் இருக்கிறது.. ஜெயலலிதா முதல்வரான 1991 தேர்தல் வரை அதிமுக குறைவான இடங்களிலேயே காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்டு வந்தது. அதன் பின்பு மெல்லமெல்ல அதிமுக போட்டியிடும் தொகுதிகள் அதிகரித்த காரணத்தால் வாக்குசதவீதம் கூடியது. 1991ல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 18.1 சதவீதம் வாக்குகளுடன் 11 இடங்களில் வென்றது..

ஆனால் 1996ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் வெறும் 7.84% வாக்குகள் மட்டுமே பெற்றதுடன் ஒரு இடத்தில் கூட வெல்லாமல் படுதோல்வி அடைந்தது. இதுவே 1977ம் ஆண்டு தொடங்கி 2024 வரையிலான அதிமுக வரலாற்றில் பெற்ற குறைந்தபட்ச வாக்குசதவீதம் ஆகும்.

1998-ல் முதன்முறையாக பாஜக உடன் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணி வைத்து தேர்தலில் வென்றது. அப்போது 18 இடங்களில் வென்றதுடன், 25.89 சதவீதம் வாக்குகளை அதிமுக பெற்றது. மத்திய அமைச்சரவையில் முதன்முறையாக அதிமுக பங்கெடுத்தது. ஆனால் ஓராண்டில் பாஜக ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்துவிட்டார்.. அதன்பின்பு 1999ம் ஆண்டு நடந்த தேர்தலில் 10 இடங்களில் வென்ற அதிமுக 25.68 சதவீதம் வாக்குகளை பெற்றது. 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.. அதிமுக 2004ல் பெற்ற வாக்கு சதவீதம் 29.77 சதவீதம் வாக்குகளை பெற்றது.

2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 22.88 சதவீதம் வாக்குகளுடன் 9 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. 2014ம் ஆண்டு தேர்தலில் தமிழ்நாடு புதுச்சேரியில் மொத்தமாக ஜெயலலிதா தலைமையிலான அதிமுக களம் கண்டது. ‘மோடியா லேடியா’ என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டில் தனித்து களம் கண்ட ஜெயலலிதா, 37 இடங்களில் வென்றதுடன் 44.92% வாக்குகள் பெற்றார். இதுவே தமிழ்நாட்டில் இதுவரை அதிமுக பெற்ற அதிகபட்ச வாக்கு சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை லோக்சபா தேர்தல் வரலாற்றில் எந்தவொரு கட்சியும் இவ்வளவு பிரமாண்ட வெற்றியை இதுவரை பெற்றதில்லை .

இந்நிலையில் 2016ல் ஜெயலலிதா மறைந்த நிலையில், 2019ல் பாஜக உடன் எடப்பாடி பழனிசாமி ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக கூட்டணி வைத்தது. அந்தத் தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. 19.39% வாக்குகள் பெற்று ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. 2024 தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எதிர்கொள்கிறது. இந்ததேர்தலில் எத்தனை இடங்களில் அதிமுக வெல்லும்.. எத்தனை சதவீதம் வாக்குகளை வாங்கும் என்பதை அறிய ஜூன் 4ம்தேதி வரை காத்திருக்க வேண்டும்.
Share on:

தமிழகத்தில் 19ஆம் தேதி காலை, மதியம் சினிமா காட்சிகள் ரத்து.. தியேட்டர் உரிமையாளர்கள் அறிவிப்பு.


தமிழகத்தில் லோக்சபா தேர்தலையொட்டி 19ஆம் தேதி காலை மற்றும் மதியம் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கிடையே 4 முனை போட்டி நிலவுகிரது. அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் கூட்டணியில் உள்ளன.

அது போல் பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, தமாகா, புதிய நீதி கட்சி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.

தமிழகம், புதுவையில் ஒரே நாளில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதால் அரசியல் கட்சியினர், தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் 38 தொகுதிகளிலும் புதுவையில் ஒரு தொகுதியிலும் (இருப்பதே ஒன்றுதான்) வென்றது.

இது போன்றதொரு வெற்றியை எதிர்பார்த்து திமுக கூட்டணி காத்திருக்கிறது. இதை முறியடிக்க பாஜகவும் அதிமுகவும் போராடி வருகிறது. இந்த நிலையில் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதால் ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது போன்றதொரு வெற்றியை எதிர்பார்த்து திமுக கூட்டணி காத்திருக்கிறது. இதை முறியடிக்க பாஜகவும் அதிமுகவும் போராடி வருகிறது. இந்த நிலையில் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதால் ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விடுமுறை அறிவிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இதன் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பை நிறைவேற்ற தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது. அது போல் 100 சதவீத வாக்களிப்பை ஊக்குவிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அது போல் 100 சதவீத வாக்குப் பதிவை ஏற்படுத்தும் நோக்கில் அரசு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில் சினிமா தியேட்டர் உரிமையாளர்களும் 19ஆம் தேதி காலை, மதியம் காட்சிகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். மேலும் மாலை மற்றும் இரவு காட்சிகள் வழக்கம் போல் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
Share on:

செம்ம போட்டி! பறக்கப் போவது செங்கொடியா? திராவிட அதிமுக கொடியா? வலதுசாரி பாஜக கொடியா?


பின்னலாடை நகரமான திருப்பூர் தொகுதியில் திமுக- இடதுசாரிகள் மற்றும் அதிமுக வாக்கு வங்கி அதிகம். பாஜகவின் நம்பிக்கைக்குரிய தொகுதிகளில் ஒன்றாகவும் திருப்பூர் இருந்து வருகிறது.

திருப்பூர் லோக்சபா தொகுதியில் உள்ளடங்கிய சட்டசபை தொகுதிகள்: பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், திருப்பூர் வடக்கு திருப்பூர் தெற்கு. திருப்பூர் தொகுதி உருவாக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற 2 தேர்தல்களில் அதிமுகவும் கடந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான சிபிஐ வென்றது.

திருப்பூர் லோக்சபா தொகுதி மொத்த வாக்காளர்கள்: 15,98,443; ஆண்கள்- 7,86,475; பெண்கள்- 8,11,718; 3-ம் பாலினத்தவர் 250

2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்: சிவசாமி(அதிமுக) 2,95,731 கார்வேந்தன் (காங்கிரஸ்) 2,10,385 பாலசுப்பரமணியன்(கொமுபே) 95,299 தினேஷ்குமார்(தேமுதிக) 86,933

2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் சத்தியபாமா(அதிமுக) 4,42,778 செந்தில்நாதன்(திமுக) 2,05,411 தினேஷ்குமார்(தே.மு.தி.க) 2,63,463 ஈவிகேஎஸ் இளங்கோவன்(காங்கிரஸ்) 47,554

2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்

கே. சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட்) 5,08,725 ஆனந்தன்(அதிமுக) 4,15,357 சந்திரகுமார்(மக்கள் நீதி மய்யம்) 64,657 செல்வம்(அமமுக) 43,816 ஜெகநாதன்(நாம் தமிழர் கட்சி)42,189

2024-ல் களம் காணும் வேட்பாளர்கள்

கே.சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) அருணாச்சலம் (அதிமுக) முருகானந்தம் (பாஜக) சீதாலட்சுமி( நாம் தமிழர் கட்சி)

திருப்பூர் தொகுதி நிலவரம்: பின்னலாடை நகரம் என புகழ்பெற்றது திருப்பூர். திருப்பூர் நகரத்தைத் தவிர இதர பகுதிகளில் விவசாயம்தான் பிரதானமாக உள்ளது. நெல், கரும்பு, வாழை, தென்னை, பருத்தி உள்ளிட்டவை பிரதான சாகுபடி. தயிர், வெண்ணெய் உற்பத்தி, விசைத்தறித் தொழிலும் இங்கு முதன்மையானவை. வட மாநிலத் தொழிலாளர்கள் மற்றும் வெளி மாவட்டத் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் இங்கே குடியேறி உள்ளனர். திருப்பூர் பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள்தான் மக்களின் முதன்மையான எதிர்பார்ப்பு, திருப்பூர் தொகுதியை பொறுத்தவரை திமுக, சிபிஐ, அதிமுக வலுவான வாக்கு வங்கியைக் கொண்டவை. பாஜகவும் இங்கு கணிசமான வாக்கு வங்கியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பாஜகவின் நம்பிக்கைக்குரிய தொகுதிகளில் ஒன்றாக திருப்பூர் இருந்து வருகிறது. ஆனால் இந்த தேர்தலில் பாஜக பெறும் வாக்குகள்தான் இந்த நம்பிக்கையின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தும். இடதுசாரி சிபிஐயும் வலதுசாரி பாஜகவும் நேரடியாக களம் காண்கின்றன. திமுக- இடதுசாரிக்கு இணையான வாக்கு வங்கி கொண்ட அதிமுகவும் சவால்விடுக்கும் வகையில் பிரசாரம் மேற்கொண்டிருக்கிறது. தமிழர் நலன் பிரச்சனைகள், சூழல் சார்ந்த பிரச்சனைகளை பேசுகிறது நாம் தமிழர் கட்சி.
Share on:

அதிமுகவை பற்றி பேச அண்ணாமலை யார்? பாஜகவை வளர்க்க அவர் கவனம் செலுத்தல.. பொங்கிய கேசி பழனிசாமி.


அதிமுகவை சிதைப்பதிலேயே அண்ணாமலையின் கவனம் இருப்பதாகவும், பாஜக வளர அவர் ஒன்றும் செய்யவில்லை என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி கே சி பழனிசாமி கூறியுள்ளார். மேலும் பாஜகவின் வாக்கு வங்கியை உயர்த்தமுடியவில்லை என்கிற விரக்தியில் தான் இப்படி அண்ணாமலை பேசுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜக கூட்டணி அமைக்காமல் அதிமுக இந்த லோக்சபா தேர்தலை சந்திக்கிறது. இதையடுத்து, பாஜக தலைமையிலான கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்தனர். தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

தேர்தலுக்கு பிறகு அதிமுக காணாமல் போகும் என அண்ணாமலை நேற்று பேசிய நிலையில் அதற்கு எடப்பாடி பழனிசாமி காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். இதனிடையே, இன்று தேனியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை, லோக்சபா தேர்தலுகு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசமாகும் என்று பேசி பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுகவினரும் காட்டமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ அண்ணாமலையை விமர்சித்து கருத்து கூறினர். இந்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி கே சி பழனிசாமி, அதிமுகவை பற்றி பேச அண்ணாமலை யார்? என்றும், அண்ணாமலை அதிமுகவை சிதைப்பதிலேயே கவனம் செலுத்துவதாகவும், பாஜக வளர அவர் ஒன்றும் செய்யவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- அண்ணாமலை இன்று அதிமுக -வை பற்றி கூறியுள்ளது!

* ஜூன் 4-க்கு பிறகு அதிமுக தினகரன் வசமாகும்.
* அதிமுக முன்பே தினகரன் பக்கம் சென்றிருந்தால் ஸ்டாலின் முதல்வராகி இருக்க மாட்டார்.
* அதிமுக தொண்டர்கள் அனைவரும் தினகரன் பக்கமே இருக்கிறார்கள்.
* விரைவில் இ.பி.எஸ் தலைமையிலான அதிமுக இருக்காது.

அம்மா மறைவிற்கு பிறகு சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சசிகலா, தினகரன் குடும்பத்தை சேர்ந்தவர்களின் ஆதிக்கத்திலிருந்து அதிமுகவை மீட்க வேண்டும் என்று ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் தமிழக வாக்காளர்களும் குரல் கொடுத்தார்கள். நான் தேர்தல் ஆணையத்தில் அதற்கு வழக்கு தொடுத்திருந்தேன்.

ஓ.பி.எஸ் அதன் பிறகு தர்மயுத்தம் செய்தார். அம்மாவால் 2011-ல் வெளியேற்றப்பட்ட சசிகலாவின் குடும்பத்திடம் இருந்து அதிமுகவை மீட்க வேண்டும் என்று போராடி அதில் தொண்டர்கள் வெற்றிகண்டார்கள். அதற்கு பிறகு EPS & OPS இருவரும் இணைந்து தொண்டர்களால் தான் தலைமை தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்கிற விதியை பாஜக ஆதரவோடு திருத்தி பொதுக்குழுவால் தலைமை, ஒற்றை வாக்கு இரட்டை தலைமை மற்றும் 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழியவேண்டும் 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழியவேண்டும் என்கிற எல்லா EPS & OPS நடவடிக்கைகளுக்கு பாஜக துணைபோனது.

ஆனால் இன்று அண்ணாமலை இந்த கருத்துக்களை சொல்வது யார் பாஜகவிற்கு அடிமையாக இருக்கிறார்களோ, அதிமுகவை பாஜகவிற்கு துணை அமைப்பாக கொண்டுசெல்ல யார் ஒத்துழைக்கிறார்களோ அவர்கள் தலைமையில் அதிமுக செயல்பட வேண்டும் என்கிற பாஜகவின் முயற்சியை ஒவ்வொரு அதிமுக தொண்டனும் ஒன்றுபட்டு முறியடிப்பான்.

அண்ணாமலை யார்? அதிமுகவின் தலைமையை பற்றி பேசுவதற்கு, அதற்கு என்ன அருகதை இருக்கிறது அண்ணாமலைக்கு? அதிமுகவை சிதைப்பதிலேயே அண்ணாமலை கவனம் செலுத்துகிறாரே ஒழிய பாஜகவை வளர்ப்பதில் அல்ல. இந்த தேர்தலில் தலைகீழாக நின்றும் அதிமுக வாக்கு வங்கியை அசைக்க முடியவில்லை. பாஜக வாக்கு வங்கியை உயர்த்தமுடியவில்லை என்கிற விரக்தியின் வெளிப்பாடு தான் அண்ணாமலையின் இந்த அர்த்தமற்ற பேச்சுக்கள்.

அதிமுகவை மீண்டும் தொண்டர்கள் இயக்கமாக மாற்றுவோம். தொண்டர் பலத்தை உறுதிப்படுத்துவோம் தேர்தலுக்கு பிறகு தொண்டர்களால் ஒரு தலைமையை உருவாக்க முயற்சிப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Share on:

அழியபோவது அதிமுகவா? அண்ணாமலையின் ஆனவமா? – KC Palanisamy


* பிரதமர் மோடி பல்லடத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களையும் அம்மா அவர்களையும் புகழ்ந்து பேசுகிறார் அப்பொழுது அண்ணாமலை மோடியிடம் சொல்ல வேண்டியது தானே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா அம்மாவும் தேவை இல்லை என்று. பிரதமருக்கு அவர்களின் அருமை தெரிகிறது ஆனால் அண்ணாமலைக்கு இன்னும் அந்த அரசியல் முதிர்ச்சி இல்லை.

* பாஜகவால் தான் அதிமுக சென்ற சட்டமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளை வென்றது இல்லையென்றால் 30 தொகுதிகளுக்கு கீழ்தான் வென்றிருக்கும் என்கிறார் அண்ணாமலை அப்படி என்றால் அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலையை ஏன் அந்த பாஜக வாக்காளர்கள் தோற்கடித்தார்கள்? அதிமுக கூட்டணியில் வென்ற 4 சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்து மீண்டும் தேர்தலை சந்தித்தால் பாஜகவின் பலம் தெரியும். இதுவரை திமுக மற்றும் அதிமுக தயவில் மட்டுமே சில தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.

* அண்ணாமலையால் பாஜக வளரவில்லை! கோவையில் 2014- ல் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் 45 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியடைந்தார் என்று தானே அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்.

* கடைசி நிமிடம் வரை எப்படியாவது அதிமுகவுடன் கூட்டணி வேண்டும் என்று கதவு திறந்து இருக்கிறது என்றெல்லாம் போராடியது பாஜக தேசிய தலைமை வேண்டுமானாலும் அண்ணாமலையை தலைமை பதவியில் இருந்து நீக்கி விடுகிறோம் என்கிற உத்தரவாதம் எல்லாம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதிமுக தொண்டர்கள் வெற்றியோ தோல்வியோ பாஜகவோடு உறவு வேண்டாம் என்பதில் மிகத் தெளிவாக உறுதியோடு பயணிக்கிறார்கள்.

* தமிழகத்திற்கு 10 லட்சம் கோடி கொடுத்திருக்கிறோம் மற்ற மாநிலங்களுக்கு இவ்வளவு கொடுக்கவில்லை என்கிறார். ஆனால் தமிழகத்திலிருந்து எவ்வளவு வரி மத்திய அரசுக்கு வந்தது அதற்கு உண்டான முறையான பங்கீடு வரவில்லை என்பதுதான் தமிழக மக்களின் குற்றச்சாட்டு இதில் மற்ற மாநிலங்களுக்கு கொடுத்தது பற்றி பேசுவது சரியான ஒப்பீடு அல்ல.

* தேர்தல் முடிந்து பாருங்கள் ஓ.பி.எஸ் கைக்கு கட்சி வந்துவிடும் என்கிறார். அண்ணாமலை யார்? அதிமுகவின் தலைமையை முடிவு செய்வதற்கு. தொண்டர்களால் தான் தலைமை என்ற புரட்சித்தலைவரின் விதியை மற்றிகொடுததே நீங்கள் தானே. ஓ.பி.எஸ் உடன் பயணித்தவர்கள் எவ்வளவு பேர் அவரது பாஜக நிலைப்பாட்டிற்காக இன்று அவருடன் தொடர்கிறார்கள்? அதிமுக உணர்வாளர்கள் அவரை விட்டு விலகி விட்டார்கள்.

* கட்சி முக்குலத்தோர் கவுண்டர் என சாதி ரீதியாக பிரிந்து இருக்கிறது என்கிறார் அண்ணாமலை ஆனால் அந்த பிரித்தாலும் சூழ்ச்சியை முன்னெடுத்ததே பாஜக தானே. ஒரு பிரதம அமைச்சரே “நல்ல சாதிய பின்புலம் உள்ளவர் அண்ணாமலை” என்று சொல்வதில் இருந்தே சாதிய அரசியல் செய்வது யார்? என்பது தெரிகிறது.

* முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் என்கிறீர்கள் அந்த ஊழல்வாதிகளை பாதுகாப்பதே நீங்கள் தானே. ADMK Files வெளியிடுவேன் என்றீர்களே ஏன் இன்றுவரை அதை வெளியிடவில்லை? அதற்காக பெறப்பட்ட தொகை எவ்வளவு? அந்த ஊழல்வாதிகள் மீது என்ன காரணத்தினால் இன்று வரை மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? உங்களுக்கும் அதில் பங்கு இருக்கிற காரணத்தால் தான் இன்று வரை அதில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா? நீங்கள் மாட்டினிடம் பணம் வாங்கியது என்ன ஆனது மாநில தலைவராக இருந்து பெற்றுக் கொடுத்தது அண்ணாமலை தானே அது நேர்மையாக வந்த பணமா?

* திமுகவை எதிர்க்க மட்டுமே அதிமுக துவக்கப்பட்டது என்றால் தமிழக அரசியலின் அரிச்சுவடியே அண்ணாமலைக்கு தெரியவில்லை என்று தான் அர்த்தம். அண்ணா காலத்திலேயே அடித்தட்டு மக்களிடம் திராவிட உணர்வை வளர்த்தவர் எம்.ஜி.ஆர். திமுக திசை மாறிய பொழுது அண்ணா வழியிலான திராவிட இயக்கமாக அதிமுகவை உருவாக்கியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

* தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் கோவையில் போட்டியிடும் அண்ணாமலை பாஜக 10 ஆண்டுகளில் கோவைக்கு செய்த நலத்திட்டங்கள் என்ன? அண்ணாமலை வெற்றி பெற்றால் பாஜக ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்த போகும் திட்டங்கள் என்ன? இதுகுறித்து பேச எதுவுமே இல்லை என்பதால் அதிமுகவை குறைகூறி மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார். அண்ணாமலை கோவையில் வெற்றிபெற்றால் கோவையில் மத ரீதியிலான மற்றும் சாதி ரீதியிலான பதற்றத்தை உருவாக்கிவிடுமோ என்கிற அச்சத்தை அண்ணாமலை மேலும் வழுபடுத்தியிருகிரார். சாதி, மத அரசியலை மட்டுமே கையிலேடுக்கிறார் வளர்ச்சிக்கான திட்டங்களை பற்றி பேச மறுக்கிறார்.
Share on:

தேர்தல் விதிமுறை தேர்தல் நடைபெற உள்ள ஏப்ரல் 19ம்தேதி வரை மட்டுமல்ல.. ஜூன் 4ம் தேதி வரை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலையொட்டி ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000- க்கு மேல் பரிசுப் பொருட்கள் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படுகிறது . இந்த விதிமுறை தேர்தல் நடைபெற உள்ள ஏப்ரல் 19ம்தேதி வரை மட்டுமல்ல.. ஜூன் 4ம் தேதி வரை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

17வது லோக்சபாவின் உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் 16ந் தேதி நிறைவு பெற போகிறது. இதையொட்டி 18வது லோக்சபா உறுப்பினர்களை தேர்வு லோக்சபா தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பதை கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி ஏப்ரல் மாதம் 19ந் தேதி முதல் ஜூன் 1ந் தேதி முடிய 7 கட்டங்களாக இந்தியாவில் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 19ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற போகிறது.

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ந் தேதி, 2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ந் தேதி, 3ம் கட்ட தேர்தல் மே 7ந் தேதி, 4ம் கட்ட தேர்தல் மே 13ந் தேதி, 5ம் கட்ட தேர்தல் மே 20ந் தேதி, 6ம் கட்ட தேர்தல் மே 25ந் தேதி, 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ந் தேதிகளில் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ந் தேதி தமிழ்நாடு (ஒரே நாளில்), உத்தரகாண்ட், மத்தியபிரதேசத்தில் ஒருபகுதி, உத்தரபிரதேசத்தின் ஒருபகுதி, ராஜஸ்தானின் ஒரு பகுதி, சிக்கிம், மேகாலயா, திரிபுரா, அசாமின் ஒருபகுதி, மேற்கு வங்காளத்தின் ஒருபகுதி, மிசோரம், நாகாலாந்து, அருணாச்சலபிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் பீகாரில் 4 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் ஆகியவற்றில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னமும் 10 நாட்களே வாரங்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிரமாக களம் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.. அனலுக்கும் வெயிலுக்கு நடுவே பிரச்சாரங்கள் அனல் பறக்கிறது.. ஒருபக்கம் வேட்பாளர்கள் செலவு செய்ய பணத்தை ரொக்கமாக கொண்டு செல்வார்கள் என்ற சந்தேகத்தில் மாநிலம் முழுவதும் பறக்கும்படை தீவிரமாக சோதனை செய்து வருகிறது.

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு 50000 பணத்தை தாண்டி எடுத்த சென்றால், செங்கல்பட்டை கூட தாண்ட முடியாத அளவிற்கு கடுமையான சோதனைகள் நடக்கிறது. எல்லா மாவட்டங்களில் வேட்பாளர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. பல கோடி பணம் கைப்பற்றப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகத்தின் பேரில் தினமும் கோடிக்கணக்கான ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

தேர்தல் விதிமுறை என்ன: ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000- க்கு மேல் பரிசுப் பொருட்கள் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கை நாள் எண். ECI/PN/23/2024 நாள் 16.03.2024-ல் இந்திய பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து (16.03.2024) தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, “பாரபட்சமற்ற ஆரோக்கியமான, அமைதியான முறையில் தேர்தல் நடத்திடவும், தேர்தல் நேரத்தில் முறையற்ற வகையில் பணம் பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் அளித்து பொதுமக்களை தவறான வழியில் ஓட்டு அளிக்க தூண்டுவதனை தடுத்திடும் பொருட்டும், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பறக்கும்படை மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, ரூ.50,000-க்கு மேல் ரொக்கப்பணம் மற்றும் மதுபாட்டில்கள், போதைப்பொருட்கள், சுவரொட்டிகள், பதாகைகள், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை வாகனங்களிலோ, பிற வகைகளிலோ எடுத்துச் செல்லும் நேர்வுகளில் மேற்படி குழுக்களால் ஆய்வின் பொழுது வாக்காளர்களைக் கவரும் வகையில் கொண்டு செல்வது உறுதி செய்யப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும்.

எனவே, ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000- க்கு மேல் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லும் போது பொதுமக்கள், வணிகர்கள் அதற்கான உரிய ஆதார ஆவணங்களுடன் கொண்டு செல்லவேண்டும். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் மேற்கண்ட இனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேற்படி பறிமுதல் செய்யப்பட்ட இனங்களுக்கான நபர்கள் உரிய ஆதார ஆவணங்களை மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள அறை எண்: 186-இல் உள்ள மேல்முறையீட்டு அலுவலரான திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்களிடம் மேல்முறையீடு செய்யலாம்.

பறிமுதல் செய்யப்படும் பொழுது காவல் துறையினரால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட இனங்களில் நீதிமன்ற உத்தரவிற்கு பின்னரே உரிய வழிமுறைகளை பின்பற்றி பணம், பொருட்கள் திரும்ப வழங்கப்படும். எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மேற்சொன்ன விதிமுறைகளை தவறாமல் பின்பற்றிட வேண்டும்” என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.

பொதுவாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காலம் வரை ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000- க்கு மேல் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படும்.. அந்த வகையில் இந்த விதிமுறை தேர்தல் நடைபெற உள்ள ஏப்ரல் 19ம்தேதி வரை மட்டுமல்ல.. ஜூன் 4ம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Share on:

கோவையில் பிரபல மருத்துவமனையில் நடந்த ஐடி ரெய்டு.. கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்?


கோவையில தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பிரபல மருத்துவமனை ஒன்றில் ஐடி ரெய்டு நடந்தது.. இதில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்பில், பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் பல்வேறு தொகுதிகளல் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் சார்பில் வருமான வரித்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 2-ந் தேதி சென்னையில் 5 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் தென்காசி, திருப்பூர், செய்யாறு ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். தற்போது தேர்தல் நெருங்கும் நிலையில், பணம் பதுக்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து வருமான வரித்துறையினர் நேற்று மீண்டும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்..

இந்நிலையில் கோவையில் ஒரே குழுமத்தின் மருத்துவமனைகள் சரவணம்பட்டி மற்றும் சிங்கநல்லூரில் செயல்படுகிறது. இதேபோல் மதுக்கரையில் செட்டிபாளையம் பிரிவில் இந்த குழுமத்திற்கு நர்சிங் கல்லூரி ஒன்றும் நடத்தி வருகிறார். இந்த கல்லூரி மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மூடப்பட்ட கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் ஏராளமான பணம் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையில் 15 பேர் கொண்ட அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது அந்த மருத்துவமனை உரிமையாளரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்நிலையில் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனை குழும்மத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டுக்கட்டமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பணம் எவ்வளவு என்பது குறித்து வருமான வரித்துறை விவரங்களை வெளியிடவில்லை.. இதுகுறித்து வருமான வரித்துறையிடம் தேர்தல் ஆணையம் பல்வேறு விவரங்களை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Share on:

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வருமானவரித்துறை சோதனை: ரூ. 4 கோடி பறிமுதல்


நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயற்சி நடப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னையில் விருகம்பாக்கம், ஓட்டேரி, சேலம், திருச்சி, தென்காசி, செய்யாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Share on:

ராணுவ வீரர்கள் தபாலில் எப்படி வாக்களிக்க வேண்டும்… தேர்தல் ஆணையம் வெளியிட்ட விதிமுறை.


லோக்கபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், ராணுவ வீரர்கள் தபாலில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

முதற்கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் ராணுவ வீரர்களின் தபால் வாக்குப்பதிவு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக வெளியிட்டிருக்கிறது. அதனை இப்போது பார்ப்போம்..

1.தபால் வாக்கு சீட்டு, அறிவிப்பு படிவம், வாக்குச் சீட்டுகளை அனுப்புவதற்கான கவர், மற்றும் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் அனுப்ப வேண்டும்.

2.இந்த ஆவணங்களை, ராணுவ முகாமின் யூனிட் அதிகாரி அல்லது ஒருங்கிணைப்பு அதிகாரி அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஓடிபி மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

3. பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த தபால் வாக்குகள் தொடர்பான ஆவணங்களை சம்பந்தப்பட்ட ராணுவ வீரரிடம் அளிக்க வேண்டும்.

4.இது தொடர்பாக ஒரு பதிவேட்டை சம்பந்தப்பட்ட யூனிட் அதிகாரி அல்லது ஒருங்கிணைப்பு அதிகாரி பராமரிக்க வேண்டும்.

5.சம்பந்தப்பட்ட ராணுவ வீரர் வாக்கு சீட்டில் தனது வாக்கை பதிவு செய்து அதற்கான ஆவணங்களுடன் விரைவு தபால் மூலம் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

6.தபால் மூலம் அனுப்புவதற்கு எந்தவித ஸ்டாம்ப்பும் ஒட்ட தேவையில்லை. இதற்கான கட்டணம் தலைமை தேர்தல் அதிகாரி மூலம் செலுத்தப்படும். இதில் முறைகேடு ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு வாக்குச்சீட்டுக்கும் ‘கியு-ஆர் கோடு’ (QR Code Sticker) ஸ்டிக்கர் இருக்கும்.

7.வாக்கு எண்ணிக்கையின் அந்த கியு-ஆர் கோட்டை ஸ்கேன் செய்த பிறகு மட்டுமே வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த வகையான வாக்குகளை தேர்தல் நடத்தும் அதிகாரியின் முன்புதான் என்ன வேண்டும்.

இந்த வழிகாட்டுதல்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகள் உள்ள அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்” இவ்வாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Share on: