
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட உட்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக தலைமை மாற்றத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது; இந்த தீர்ப்பின் மூலம் டெல்லி கழுகுகள் தமிழ்நாட்டை வட்டமிட ஆரம்பித்துவிட்டன எனவும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களை இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக மனுதாரர்களில் ஒருவரான கேசி பழனிசாமி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அதிமுக ஒரு தலைமை மாற்றத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதாக நாம் எடுத்து கொள்ளலாம். எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவுக்கு ஏற்படுகிற பாதகத்தை சரி செய்கிற நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் என்கிற டெல்லி கழுகு தற்போது எடப்பாடி பழனிசாமியை சுற்றி வருகிறது. அதிமுக என்ற கட்சி உயிர்ப்போடு இருக்க வேண்டும். தோல்விகள் தவிர்க்கப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமி வலிமையான கூட்டணி அமைப்பேன் என கூறிவருகிறார்; ஆனால் எந்த தேர்தலிலும் அவர் வலிமையான கூட்டணியை அமைக்கவில்லை.
அதிமுகவின் மூத்த தலைவர்கள் மட்டுமல்ல.. தொண்டர்களும் தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் ஆளும் வாய்ப்பை பெற முடியுமா? என்கிற கேள்வியும் அதிமுகவில் எழுந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரையில் தேவைக்கு அதிகமான சுயநலத்துடன் நடந்து கொள்கிறார். எங்களைப் போன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரவணைத்து எடப்பாடி பழனிசாமியால் சென்றிருக்க முடியும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. இதை செய்ய தவறியதாலே வழக்குகள் எல்லாம் தொடர வேண்டிய நிலைமை உருவானது.
நாங்கள் 1972-ம் ஆண்டு முதல் அதிமுகவுடன்தான் பயணிக்கிறோம்; இன்றைக்கு இருக்கிற எடப்பாடி பழனிசாமியோடு அல்ல. அதிமுகவின் பொதுச்செயலாளர் என்பவர் அதிமுகவின் தொண்டர்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதிமுகவில் நீண்டகாலம் பயணிப்பவர்கள் இந்த கட்சி ஒன்றுபட வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் கூட அதிமுகவில் இருக்கிற தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக ஒன்றுபட வேண்டும் என பேசினர்; அப்படி பேசியவர்களை கடுமையான வார்த்தைகளில்.. அதாவது நீங்க எல்லாம் சசிகலாவோடு போய் தனியாக கட்சி நடத்திக்கொள்ளலாமே என கூறியவர்தான் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருக்கிறது; இதனைத்தான் செங்கோட்டையன் போன்றவர்கள் எடப்பாடிக்கு எதிராக பேசுவதில் இருந்து புரிந்து கொள்ள முடியும். 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டுமானால் கட்சி ஒன்றுபட்டாக வேண்டும்; தலைமை மாற்றம் ஏற்பட வேண்டும்; தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்; எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணியின் சுயநல நடவடிக்கைகள் அதிமுகவின் எதிர்காலத்தைப் பாதிக்கும்.
அதிமுகவில் நிச்சயம் தலைமை மாற்றம் ஏற்படும்; அதிமுகவின் சின்னம் சிறிது காலத்துக்கு முடக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது அதிமுக ஒன்றுபடவும் வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு கேசி பழனிசாமி தெரிவித்தார்.