அதிமுகவில் மீண்டும் எழுந்த கலகக் குரல்? அடுத்து நடக்கப்போவது என்ன?
தற்போது அதிமுகவில் தலைமை யுத்தம் ஏதும் இல்லை. மீண்டும் கட்சி ஒன்றிணைகிறதா இல்லையா என்பது தான் கேள்வி. சமீப நாட்களாக EPS அவர்களின் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை பார்த்தால் அவர் இன்னும் இந்த இயக்கத்தை ஒன்றிணைக்கும் பக்குவத்திற்கு வரவில்லை என்பதை தான் காட்டுகிறது.
ஏனென்றால் 2014 தேர்தலையும் 2024 தேர்தலையும் ஒப்பிட்டால் கோவையில் அண்ணாமலை 50 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்றுவிட்டார் என்கிறார் EPS. ஆனால் 2014 தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக 2024-ல் மூன்றாம் இடத்திற்கு சென்றுள்ளது. ஒரு கட்சித்தலைவராக வென்ற தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் குறைந்துள்ளது என்பதை அவர் பார்க்கவில்லை. அண்ணாமலை 50 ஆயிரம் வாக்குகள் குறைவாக வாங்கிவிட்டார் என்று பொதுவெளியில் கூறுவது திமுகவின் வெற்றியை கொண்டாடுவதாக தான் பார்க்கப்படும்.
ஒருங்கிணைப்பை பற்றி கேள்வி கேட்டால் ஓ.பி.எஸ் தலைமை கழகத்தை தாக்கிவிட்டார், கட்சி வாகனங்களை நொறுக்குகிவிட்டார், தொண்டர்களை தாக்கிவிட்டார் என்கிறார். அப்படி பார்த்தால் கே.சி.பழனிசாமி தலைமை கழகத்தை சூறையாடவில்லை, கட்சிக்காரர்களை தாக்கவில்லை, கட்சி வாகனங்களை நொறுக்கவில்லை. மேலும் பாஜக கூட்டணி வேண்டாம் என்று கட்சியில் இருந்து நீக்கப்படும் முன் கே.சி.பி கூறிய அதே கருத்தை தான் இன்று EPS ஏற்றிருக்கிறார். அவருடைய நீக்கம் ஏன் இன்னும் ரத்து செய்யப்படாமல் இருக்கிறது?
இன்னும் வெளியுலகிற்கே தெரியாத ஒரு விசயம் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே திரு.கே.சி.பி மற்றும் திரு.சி.வி.சண்முகம் இடையே 3 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் எந்த உறுதியான முடிவும் எடப்பாடி பழனிசாமி அவர்களால் எடுக்க முடியவில்லை. அவர் மீண்டும் மீண்டும் முயற்சிப்பது தன்னாலேயே அதிமுகவை மீண்டும் ஆளும் கட்சியாக கொண்டுவந்துவிட முடியும் என்பது தான்.
நிபந்தனை இல்லாமல் கட்சியில் இணைய தயார் என்கிறார் ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி அவர்களை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டு, அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு இரட்டை இலைக்கு கையெழுத்து போடுகிற உரிமையையும் வைத்துக்கொண்டு ஓ.பி.எஸ் அவர்களை இணைத்து அவருக்கு கௌரமாக ஒரு இடத்தை கொடுத்து, சசிகலா அவர்களையும் இணைத்து அவர்களுக்கும் ஒரு கௌரமாக ஒரு அங்கீகாரத்தை கொடுக்கலாம் என்பதற்கும் EPS தயாராக இல்லை.
ஒரு உண்மையை எடப்பாடி பழனிசாமி எப்போது புரிந்துகொள்வார் என்று தெரியவில்லை. என்ன நடந்தாலும் திமுக தற்போது கூட்டணி பலத்தோடு 45 சதவீதம் வாக்கு வங்கி வைத்துள்ளது. அதிமுக கடந்த தேர்தல் முடிவுகளின்படி 20 சதவீதம் வாக்கு வங்கி வைத்துள்ளது. எனவே அதிமுக ஒன்றாக இருக்கிறது உட்கட்சி பிரச்சனை இல்லை என்கிற “Perception” அமைத்தாலே மட்டுமே திமுக மீது உள்ள அதிருப்தியை முழுவதுமாக மக்கள் பரிசீலனை செய்வார்கள்.
ஏனென்றால் அதிமுகவின் வாக்கு வங்கி சமநிலையில் இல்லை. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் வெற்றிக்கான வாய்ப்பு சுத்தமாக இல்லை, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களிலும் இல்லை, கோவை, நீலகிரி, திருப்பூர், பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பாஜக வளர துடிக்கிறது. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் பாமக 5% வாக்குவங்கி பெற்றுள்ளது என்றால் அதிமுக 15% பெற்றுள்ளது என்கிற நிலை தான் இருக்கிறது. இதுவே போதும் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்தால் இணைப்பு தேவை இல்லை. ஆனால் மீண்டும் ஆளுகிற கட்சியாக அதிமுக உருவெடுக்கவேண்டும் என்றால் ஒன்றுபட்ட அதிமுக உருவாக்கப்பட வேண்டும்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காலத்திலும் அம்மா காலத்திலும் இருந்தவர்களை ஒன்றிணைத்துவிட்டால் மக்கள் அதிமுக தலைவர்களை சாதிய தலைவர்களாக பார்க்க மாட்டார்கள். எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா கால அதிமுகவாக இரட்டை இலை சின்னம் பொழிவுபெரும் மக்கள் இரட்டை இலைக்கு வாக்களிப்பார்கள். இதைத்தான் என் போன்றவர்கள் வலியுறுத்துகிறோம்.
கே.சி.பழனிசாமி (Ex MP, MLA)