அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்த மக்கள்.. கலெக்டரையும் விடலையே.. விழுப்புரத்தில் பரபரப்பு


பெஞ்சல் புயலால் பெய்த கனமழையின் காரணமாக விழுப்புரம் மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வரும் சூழலில் இன்று வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், முன்னாள் எம்பியுமான கவுதம் சிகாமணி, கலெக்டர் பழனி ஆகியோர் மீது மக்கள் சேற்றை வாரி இறைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயலால் சென்னை உள்பட வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த புயல் கரையை கடந்தாலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகப்பட்சமாக 51 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், திண்டிவனம் உள்பட பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மரக்காணம், கோலியனூர், நன்னாட்டம்பாயைம், பஞ்சமா தேவி, கல்பட்டு, பிடாகம், குச்சிப்பாளையம், பேரங்கியூர், நன்னாடு, பெரும்பாக்கம், காணை, மாம்பலப்பட்டு, காங்கேயனூர், செஞ்சி, மேல்மலையனூர், வானூர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

வீடுகள், கடைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். பல இடங்கள் குட்டி தீவு போல் காட்சியளிக்கிறது. மேலும் விளைநிலங்களில் மழைநீர் புகுந்துள்ளதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் மழை நீர் வெளியேறாததால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினர், காவல்துறை, தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். பெஞ்சல் புயலின்போது தமிழக அரசு சென்னையை மட்டுமே கவனத்தில் கொண்டுள்ளது. பிற மாவட்டங்களை கண்டுகொள்ளாமல் விட்டதே இந்த வெள்ள பாதிப்புக்கு முக்கிய காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதற்கிடையே தான் இன்று வெள்ளம் பாதித்த இருவேல்பட்டு பகுதியில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து வெள்ள ஆய்வு மற்றும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் பொன்முடி இன்று சென்றார். அவருடன் மகனும், கள்ளக்குறிச்சி முன்னாள் எம்பியுமான கவுதம சிகாமணி, விழுப்புரம் கலெக்டர் பழனி உள்ளிட்டவர்கள் இருவேல்பட்டுக்கு சென்றனர்.

அப்போது அவர்களுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சேற்றை வாரி இறைத்தனர். அமைச்சர், பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, கலெக்டர் பழனி ஆகியோரின் மீது சேற்றை வாரி இறைத்தனர். பொன்முடி, கவுதம சிகாமணி, கலெக்டர் பழனி மற்றும் அருகே நின்ற நிர்வாகிகள், அதிகாரிகள், போலீசார் ஆகியோரின் சட்டைகளில் சேறு பட்டது. பொன்முடி வெள்ளை சட்டை, வேஷ்டி அணிந்திருந்த நிலையில் அவரது சட்டையில் சேறு பட்டு புள்ளி புள்ளியாக தெரிந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு அவர்களை போலீசார் பத்திரமாக காரில் அழைத்து சென்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வலைதளங்களில் பரவி வருகிறது.
Share on: