அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் அலுவலகத்துக்கே போகக்கூடாது.. சுப்ரீம் கோர்ட் விதித்த 5 நிபந்தனைகள்!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், 5 முக்கியமான நிபந்தனைகளை விதித்துள்ளது. அலுவல் கோப்புகளில் கையெழுத்து போடக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் தலைநகரான டெல்லியில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான நடந்து வருகிறது. டெல்லியில் கொண்டு வரப்பட்ட மதுபான கொள்கையில் முறைகேடு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அது தொடர்பாக விசாரிக்க டெல்லி துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டார். சிபிஐ உடன் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது.
அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா அமலாக்கத்துறையால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கும் கைது செய்யப்பட்டார்.
கெஜ்ரிவால் கைது: அமலாக்கத்துறையின் இந்த தொடர் கைது நடவடிக்கையால் ஆம் ஆத்மி அரசுக்கு அடுத்தடுத்து பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி அமலாக்கத்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். டெல்லி முதலமைச்சர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கெஜ்ரிவால் கைதுக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தனது கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்: நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. வரும் ஜூன் 1ஆம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், அவரை வரும் ஜூன் 2ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டுள்ளது.
இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதோடு, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம் 5 முக்கிய நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 நிபந்தனைகள்:
1. அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் அலுவலகம் மற்றும் டெல்லி தலைமைச் செயலகம் செல்லக்கூடாது.
2. டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்ஸேனாவின் ஒப்புதல் பெற்ற கோப்புகளுக்கு அவசியமானால் கையெழுத்திடுவது தவிர, வேறு அலுவல் சார்ந்த கோப்புகளில் அரவிந்த் கெஜ்ரிவால் கையெழுத்து போடக்கூடாது.
3. மதுபான கொள்கை முறைகேடு வழக்கு குறித்து, குறிப்பாக, அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்டு, தான் கைதாகியுள்ள சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் எந்தக் கருத்தும் தெரிவிக்கக் கூடாது.
4. அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மதுபான வழக்கு சம்பந்தப்பட்ட எந்த சாட்சியுடனும் தொடர்புகொள்ளக் கூடாது, டெல்லி மதுபான கொள்கை வழக்குடன் தொடர்புடைய அதிகாரப்பூர்வ கோப்புகளை அணுகுவது தடை செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரூ. 50,000 மதிப்புள்ள ஜாமீன் பத்திரங்களையும், அதே தொகைக்கு ஒரு உத்தரவாத பத்திரத்தையும் சிறைக் கண்காணிப்பாளர் ஏற்கும் வகையில் வழங்க வேண்டும்.