
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் 500% லாபம் கிடைக்கும் எனக் கூறி விபூதி அடித்து ரூ.14 கோடி மோசடி செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிக லாபம் என ஆசை காட்டி மோசடியில் ஈடுபட்ட மிகப்பெரிய கும்பலை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் வலைவீசி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் சென்னையைச் சேர்ந்த நபரை வாட்ஸ்அப் மூலம் ஒரு கும்பல் தொடர்பு கொண்டு முதலீடு செய்ய அழைத்துள்ளது. Black Rock Asset Management Business School என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரண்டே மாதத்தில் 500% லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். அந்த நிறுவனத்திற்கு SEBI அனுமதி இருப்பதாக கூறியுள்ளனர்.
அவர் நம்பும் வகையில் முதலீடு தொடர்பான செயலிகளை உருவாக்கி அனுப்பியுள்ளனர். அதில் பலரும் அதிக லாபம் பெற்றதுபோல போலியான பரிமாற்றங்கள் செய்து நம்ப வைத்து முதலீடு செய்ய வைத்துள்ளனர்.
BR IIFL PRO என்ற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்து முதலீடு செய்யுமாறு கூறியுள்ளனர். வாட்ஸ் அப் மூலம் தொடர்புகொண்ட அந்த கும்பலை நம்பி செயலியை பதிவிறக்கம் செய்து அந்த நபர் முதலீடு செய்துள்ளார். ஆனால், அந்தப் பணம் அதோடு போனதுதான். லாபமும் வரவில்லை, போட்ட முதலும் கிடைக்கவில்லை.
முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காத போதுதான், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து போலீசில் புகார் தெரிவித்துள்ளார். தேசிய சைபர் கிரைம் போர்டலில் அவர் புகார் அளித்ததன் பேரில் மாநில சைபர் கிரைம் பிரிவு வழக்கு பதிவு செய்தனர்.
அந்த நபரிடம் இருந்து மோசடி செய்யப்பட்ட பணம் வரவு வைக்கப்பட்ட 13 வங்கி கணக்குகள் உடனடியாக முடக்கப்பட்டன. இந்த மோசடி தொடர்பாக சுமார் 21 லட்சம் பணத்தை தனது வங்கிக் கணக்கில் பெற்ற செங்கல்பட்டை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
சுப்பிரமணியன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த மதன், திருநின்றவூரை சேர்ந்த சரவணபிரியன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஆவடியைச் சேர்ந்த சதீஷ்சிங், புளியந்தோப்பை சேர்ந்த ஷாபகத், மதுரை மணிகண்டன் ஆகியோரையும் கைது செய்தனர்.
மேலும், இந்த மோசடியில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. வடமாநில மோசடி கும்பலை சேர்ந்தவர்களை பிடிப்பதற்காக தமிழக சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.