இபிஎஸ் பொதுச்செயலாளர் அறிவிக்கப்பட்டதும் மனசுல எம்ஜிஆர் நினைப்போ? எதுக்கு இந்த போலி வேடம்? கே.சி.பழனிசாமி!


தேர்தலில் வெற்றிபெற்று காட்டினாள் மட்டுமே தலைவராக இருக்க முடியும். அந்த வெற்றியும் என்பது எல்லோரும் சேர்ந்த கூட்டு முயற்ச்சியாக மட்டும் தான் இருக்குமே தவிர எடப்பாடி என்கிற தனிமனிதனுக்கான வெற்றி என்று அது அமையாது என கே.சி.பழனிசாமி காட்டமாக கூறியுள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி அவ்வப்போது அதிமுக குறித்தும், எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை குறித்தும் விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், அம்மாவும் மக்கள் செல்வாக்கை நிரூபித்தால் மட்டுமே போற்றப்பட்டார்கள். போலியாக உருவகப்படுத்திக்கொள்ளவில்லை என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: பொதுச்செயலாளர் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து தன்னை ஒரு #புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்-ஆகவும் #ஜெயலலிதா அம்மா-வாகவும் பாவித்து ஒரு மாய தோற்றத்தை உருவாக்க எடப்பாடி முயற்சிக்கிறார். அவருடைய அடிவருடிகள் அவரை அடுத்த #எம்ஜிஆர் போலவும் அம்மா போன்ற ஆளுமை மிக்க தலைவர் போன்றும் காட்ட நினைக்கிறார்கள். ஆனால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், அம்மாவும் மக்கள் செல்வாக்கை நிரூபித்தால் மட்டுமே போற்றப்பட்டார்கள். போலியாக உருவகப்படுத்திக்கொள்ளவில்லை.

* எடப்பாடி பழனிசாமியின் உண்மையான பிறந்த நாள் (20.03.1954) ஆனால் அரசாங்க ஆவணங்களில் (12.05.1954) என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் அனைவரும் (மே,12) கொண்டாடுகிறார்கள். ஆனால் அதையே எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து கொண்டாடுகிறார்.

* தேர்தல் கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன் களப்பணியை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அம்மா பாணியில் அறிவித்தார். ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு மன்சூர் அலிகான் தான் முன்வந்தார். தே.மு.தி.க-வை தவிர்த்து வேறு எந்த கட்சியும் கூட்டணியில் இடம்பெறவில்லை.

* தேர்தல் முடிவுகள் வரும் முன்பே யார் சரிவர வேலை செய்யவில்லை என்று ஒருவர்மீது ஒருவர் குற்றச்சாட்டு ஆரம்பமாகிவிட்டது. இதுபோன்று தன்னை உருவகப்படுத்துகிற போலிகளை மக்கள் நம்பமாட்டார்கள். எடப்பாடி எடப்பாடியாகவே இருங்கள். தேர்தலில் வெற்றிபெற்று காட்டினாள் மட்டுமே தலைவராக இருக்க முடியும். அந்த வெற்றியும் என்பது எல்லோரும் சேர்ந்த கூட்டு முயற்ச்சியாக மட்டும் தான் இருக்குமே தவிர எடப்பாடி என்கிற தனிமனிதனுக்கான வெற்றி என்று அது அமையாது. இதை உணர்ந்து செயல்படுவது நல்லது.

* உங்களுக்காக இன்று பலர் மண் சோறு சாப்பிடலாம், தீ சட்டி ஏந்தலாம் அது எல்லாம் உங்கள் மூலமாக பணம் சம்பாதித்தவர்கள் உங்களை மகிழ்வித்து இன்னும் பலனடைய நினைக்கிறவர்கள் செய்யலாம். ஆனால் இது எல்லாம் ஆட்சியை பிடிப்பதற்கு உதவாது. எனவே மக்களை தேடி, தொண்டர்களை தேடி இந்த இயக்கம் பயணிக்க வேண்டும். சிந்தித்து செயல்படுங்கள் என கே.சி.பழனிசாமி எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
Share on: