இ பாஸ்: நீலகிரியில் உள்ளவர்கள் வெளி மாவட்ட வாகனங்களை வைத்திருந்தால் என்ன செய்வது? வெளியான விளக்கம்


நீலகிரி மாவட்ட பதிவு எண் (TN43) கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார். வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களை வாங்கி வந்து உரிமம் மாற்றம் செய்து இருந்தால் ஆவணங்களை காட்டி இ- பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், மக்கள் வெப்பத்தை தாங்க முடியாமல் தவித்து வருகிறார்கள். கோடைகாலத்தில் வெயிலில் இருந்து தப்பிக்க மலைவாசஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்வது அதிகரித்துள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இ பாஸ் கட்டாயம்:சுற்றுலாப்பயணிகள் அதிமாக வந்து குவிந்து விடுவதால், கூட்டம் அலைமோதுகிறது. மேலும் அதிகரிக்கும் வாகனங்களால் போக்கு வரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக இருக்கிறது.இந்த நிலையில், ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்: இந்த உத்தரவை செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. உள்துறை மற்றும் பொதுத்துறை இணைந்து இ – பாஸ்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கியுள்ளது. இந்த நெறிமுறைகள் அனைத்தும் தயார் செய்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நீலகிரி மாவட்ட பதிவெண்: தகவல் தொழில் நுட்ப துறை சார்பாக இ பாஸ் பெறுவதற்கான இணையதளமும் உருவாக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில், இ- பாஸ் விதிமுறைகள் தொடர்பாக நீலகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் ஒரு அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நீலகிரி மாவட்ட பதிவு எண் (TN43) கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை.

வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரிக்கு மாற்றம் செய்திருப்பவர்கள், அதற்கான ஆவணங்களுடன் உதகை ஆர்.டி.ஓ. அலுவலகத்தை அணுகி இ-பாஸ் பெறலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார். இ-பாஸ் பெற வாகனத்தின் அசல் பதிவு சான்று, காப்பு சான்று, புகைப்பட சான்று அளிக்க வேண்டும் என்று வட்டார போக்குவரத்து அலுவலகம் தெரிவித்துள்ளார்.

இ பாஸ் விதிகள்: மே 7 முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு அமலுக்கு வர இன்னும் 4 நாட்களே உள்ளது. எனவே, ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு இ-பாஸ் வழங்குவதற்கான விதிகள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருநாளைக்கு எத்தனை வாகனங்கள் அனுமதிக்கப்படும்.. எதன் அடிப்படையில் இ- பாஸ் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இ பாஸ் பெறாமல் வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்றும் தெரிகிறது.
Share on: