” இருவருமே துரோகிகள்தான் “

அதிமுக தொண்டர்கள் தற்போது விரக்தியும் ஆத்திரமுமாக கனன்று கொண்டுஇருக்கிறார்கள் .பன்னீர் -எடப்பாடி தரப்பின் அரசியல் விளையாட்டில் எந்த ஆர்வமும் இயலாமல் இருக்கிறார்கள்.கழகத்தின் பொன்விழா விமரிசையாக கொண்டாடப்படவேண்டிய நேரத்தில் ,நீதிமன்ற விசாரணைகளிலும் ,போட்டி பேட்டிகளிலும் மட்டுமே கட்சி கரைந்துகொண்டிருக்கிறது . ‘ஒற்றை தலைமைக்காக கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது ‘ என ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமான தீர்ப்பு வரும்போதும், ‘பொதுக்குழு முடிவுகள் செல்லும்’ என எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு வரும்போதும், அவரவர் ஆதரவு நிர்வாகிகள்தான் இனிப்பு வழங்குகிறார்கள் ஆதாய எதிர்பார்ப்பில் கூட இருப்பவர்கள்தான் பட்டாசை கொளுத்துகிறார்கள். மற்றபடி தமிழகத்தின் எந்த ஊரிலும் சிறு சலசலப்புகூட இல்லை .பன்னீர்-எடப்பாடி இருவருமே கட்சி நலனுக்குகாகவோ, தொண்டர்கள் நலனுக்காகவோ சண்டை போடவில்லை. தங்களின் பதவியை,அதிகாரத்தை தக்கவைப்பதற்காகவே நீதிமன்ற படியேறியிருக்கிறார்கள் ஒவ்வொரு முறை தீர்ப்பு மாறி மாறி வரும் போதும் ,கட்சி என்னவாகுமோ என்கிற பயமும் குழப்பமும்தான் மிஞ்சுகின்றன .மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த முதல் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் – தான். எந்த இடத்திலும்,தமிழ்நாட்டின் கொள்கைக்காக அவர் சமரசம் செய்ததில்லை. ஜெயலலிதா நினைத்திருந்தால், சொத்து குவிப்பு வழக்கிலிருந்து தப்பிப்பதற்கு பாஜக-வுடன் சமரசம் செய்திருக்கலாம் .சிறைக்கு போகாமலேயே இருந்திருக்கலாம் .ஆனால் அவர் அப்படி செய்யவில்லை தன் இறுதி மூச்சுவரை கட்சியின் கௌரவத்திற்காக களத்தில் தைரியமாக நின்றார்.

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை தோல்விக்கான காரணங்கள் குறித்து உடனடியாக ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படும் .ஆனால், 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த பிறகும் ,தோல்விக்கான காரணத்தை ஆராய ஒரு கூட்டம்கூட நடத்தவில்லை.கழகம் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் செல்வதை அனுமதிக்க முடியாது என வீரவசனம் பேசிய பன்னீர் ,இப்போது அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அதே சசிகலா குடும்பத்திற்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறார். அம்மா மரணத்தில் சந்தேகத்தை உருவாக்கிய பன்னீர், அது குறித்த விசாரணையில் தெரியாது தெரியாது என்று சொல்வது துரோகமில்லையா .

ஆட்சியை தக்கவைக்க அதிகாரத்தை தக்கவைக்க நிர்வாகிகளுடன் டீல் பேசி முடிப்பதிலேயேதான் எடப்பாடியின் மொத்த நேரமும் கழிகிறது. இன்றைக்கு பாஜக எதிர்த்தால் ,மோதி பார்த்துவிடலாம் என்று நினைக்கும் எடப்பாடி ,2019,2021 தேர்தல்களில் தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப இந்த முடிவை துணிச்சலாக எடுத்திருந்தால் அதிமுக-வுக்கு சரிவு வந்திருக்காது.
அன்று தன் ஆட்சி போய்விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர் ,இன்று இரட்டை தலைமை மீது பழிபோட்டுவிட்டுதப்பிக்க பார்க்கிறார்.

கோஷ்டிபூசலால், அதன் பிறகு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது இவர்கள் இருவருக்கும் இடையேயான போட்டியில், FORM B -யில் கையெழுத்திடும் கடைமையை தவறிவிட்டார்கள் .இதனால் மாநகரம் முதல் பேரூராட்சி வரை விடுபட்ட இடங்களுக்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சி தொண்டர்களுக்கு சின்னம் கிடைக்காமல் போனது கட்சி சின்னா பின்னமாகிகொண்டுஇருக்கிறது.தன் உடல்நிலை மோசமாக இருந்த போதும் கூட, நேர்காணல் நடத்திதான் வேட்பாளர் தேர்வை செய்தார் ஜெயலலிதா கட்சிக்காக உண்மையாக உழைத்த தொண்டர்கள், லைம்லைட்டில் இல்லாத பலருக்கும் அப்போது நியாயமாக வாய்ப்பளிக்கப்பட்டது அந்த நாள் திரும்பாதா ? என்கிற ஏக்கம் பல தொண்டர்களிடம் இருக்கிறது.

1980இல் கட்சி தொண்டரின் வீடு திருமணத்திற்கு போனார் அப்போது அமைச்சர்கள் நீங்கள் இதற்கு 0வரணுமா என்று கேட்டதற்கு, அவன்தான்யா நம்மளை கொடிகட்டுன கார்ல போக வெச்சுருக்கான் அவன்தான் நமக்கு அரியாசனம் தந்திருக்கான் கையில கோடியை பிடிச்சுக்கிட்டு எந்த பிரதிபலனும் பார்க்காம உழைச்ச அந்த அடிமட்ட தொண்டன்தான் நமக்கு முக்கியம்.என்னைக்கும் அவனை மறந்துடாதீங்க ‘ என்றார் .இன்று நடக்கும் அதிகார போட்டியில் ,அந்த தொண்டனை பன்னீரும் எடப்பாடியும் மறந்ததோடு கடுமையாக அலட்சியம் செய்கிறார்கள்.நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என உருண்டுகொண்டே இருப்பதை தொண்டர்கள் விரும்பவில்லை .2017-ல் நடந்ததை போல ,சின்னம் முடங்கிவிடுமோ என்கிற கலக்கமும் ஏற்பட்டிருக்கிறது .இந்த கலகத்தைத்தான் பாஜக ,திமுக கட்சிகள் எதிர்பார்க்கின்றன இவர்களும் இடம்கொடுக்கிறார்கள் அந்த வகையில் கட்சிக்கு இருவருமே துரோகிகள்தான் “

Share on: