“எடப்பாடி பழனிசாமி ஐந்து நிமிடம் சிந்தித்தால் போதும்..” கே.சி.பழனிசாமி கூறுவது என்ன? – KC Palanisamy


Ex MP K.C.Palanisamy: மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் உறுப்பினர்களாக இருந்து வெளியேறியவர்கள், மாற்றுக் கட்சியில் இணைந்தவர்கள் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும், பிரிந்து கிடந்தால் தேசிய கட்சிகள் உள்ளே நுழைந்துவிடும் எனவும் முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, “அதிமுக வெற்றி வாகை சூடும் கட்சியாக செயல்பட வேண்டும். கிளை, நகரம், ஒன்றியம், மாவட்ட அளவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் உறுப்பினர்களாக இருந்து வெளியேறியவர்கள், மாற்றுக் கட்சியில் இணைந்தவர்கள் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்கான பணியை செய்கிறோம்.

கடந்த கால கசப்புகளை மறந்து, நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும் வகையில் அதிமுகவைக் கட்டமைக்க வேண்டும். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேச ஓரிரு நாட்களில் கடிதம் வழங்கப்படும். எடப்பாடியிடம் கருத்து கேட்ட பிறகு மற்றவர்களிடம் பேசப்படும்.

எடப்பாடி பழனிசாமியும் இணைப்பை விரும்புவார் என எதிர்பார்க்கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் திமுக 90 சதவீத வெற்றியைப் பெற்றுள்ளது. யாரையும் குறை சொல்ல வரவில்லை, இறங்கி வந்து ஒன்றிணைந்தால் தான் வெற்றி கிடைக்கும். அதிமுகவை ஒருங்கிணைக்கும் நிலைப்பாட்டில் மாபெரும் வெற்றியைப் பெறுவோம்.

எடப்பாடி பழனிசாமி, சசிகலா அனைவரும் ஒருங்கிணைந்து வர வேண்டும். ஓபிஎஸ் ஒருங்கிணைய தயார் எனக் கூறிவிட்டார். அமமுகவை கலைத்துவிட்டு டிடிவி தினகரன் வந்தால் எந்த தவறும் இல்லை. எடப்பாடி பழனிசாமி ஐந்து நிமிடம் சிந்தித்தால், அதிமுகவிற்கு விடிவுகாலம் பிறக்கும்.

எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்வார் என நம்புகிறோம். பிரிந்து கிடந்தால் தேசிய கட்சிகள் உள்ளே நுழைந்துவிடும். திராவிட கட்சிகள் தான் தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்பதே எங்கள் ஒரே கொள்கை” என்றார்.
Share on: