கட்டம் கட்டப்படும் செந்தில் பாலாஜி? தமிழ்நாடு டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை ரெய்டு


சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை குறி வைத்து அமலாக்கத் துறை இன்று ரெய்டை தொடங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் 15 மாதங்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, பல்வேறு பிரயத்தனத்திற்கு பிறகு கடந்த 2024 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.

அவர் ஜாமீனில் வந்த அடுத்த இரு நாட்களிலேயே அவருக்கு தமிழ்நாடு மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின.

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்களும் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தி பாலாஜியின் ஆதரவாளர்களான கரூர் ராயனூரில் வசிக்கும் கொங்கு மெஸ் மணி மற்றும் கரூர் ஆத்தூர் பிரிவு அருகே கோதை நகரில் வசிக்கும் சக்தி மெஸ் சக்திவேல், செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும் பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரருமான எம்சிஎஸ் சங்கரின் வீடு இருக்கும் கரூர் பழனியப்பா நகரிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் காலை முதல் 5 கார்களில் வந்த 20 பேர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

தற்போது 7 மணி நேரத்திற்கு மேலாக அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் செந்தில் பாலாஜி வசம் உள்ள மதுவிலக்குத் துறையின் கீழ் இயங்கும் சென்னை எழும்பூரில் தாளமுத்த நடராசன் மாளிகையில் உள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தி வருகிறது. இது அரசியல் வட்டாரத்தை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share on: