கனிமொழி, ஜோதிமணி உள்பட 15 எம்.பி.க்கள் இடைநீக்கம்!
மக்களவை அத்துமீறல் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வலியுறுத்தி கடும் அமளியில் ஈடுபட்டதாக கனிமொழி, ஜோதிமணி உள்பட 15 எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி உள்பட 5 காங்கிரஸ் எம்.பி.க்களை எஞ்சிய தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, திமுக எம்.பி கனிமொழி, எஸ்.ஆர்.பார்த்திபன், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்ட 9 பேர் எஞ்சிய தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கான தீர்மானத்தையும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கொண்டு வந்தார்.
இதையடுத்து, நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம், ”நாடாளுமன்றத்துக்குள் நேற்று நடந்த பாதுகாப்பு அத்துமீறல் மிகப் பெரிய பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை தோல்வி. நேற்று நடந்த சம்பவத்தை அடுத்து அரசு எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியோ, உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ அவைக்கு வந்து தெரிவிக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். ஆனால், பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அவைக்கு வந்து பதில் அளிக்கக் கூடாது என்பதில் அவர்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள்.
பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் அவைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்று கோரியதற்காக மக்களவை உறுப்பினர்கள் 14 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் நகைப்புக்குரிய விஷயம் என்னவென்றால் அவையில் இல்லாத திமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபனும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இடைநீக்கம் பெயர் பட்டியலில் பலரது பெயரை தோராயமாக சேர்த்திருக்கிறார்கள் என்பது இதில் இருந்து தெரிய வருகிறது. அரசின் இந்தச் செயல் அர்த்தமற்றது. நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த மிகப் பெரிய விஷயத்தை அரசு அணுகும் விதம் மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. எங்கள் எதிர்ப்பை எந்தெந்த விதங்களில் தெரிவிக்க முடியுமோ அவற்றை நாங்கள் தெரிவிப்போம்.
நாடாளுமன்றம் நாளை கூடும்போதும் நாங்கள் எங்கள் கோரிக்கையை வலியுறுத்துவோம். நேற்று என்ன நடந்தது? அத்தகைய சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க அரசு என்ன திட்டமிட்டுள்ளது? என்ற கேள்விகளுக்கு அரசு பதில் அளிக்க வேண்டும். எங்களின் இந்த கோரிக்கை மிகவும் நியாயமானது. ஏனெனில், இது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பானது. நாடாளுமன்றம் என்பது நாட்டு மக்களுக்கானது; நாட்டின் பாதுகாப்பு தொடர்புடையது. எனவே, பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ சபைக்கு வந்து திட்டவட்டமான அறிக்கையை வழங்க வேண்டும்” என்று கூறினார்.
முன்னதாக, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிக்கை வாசித்தார். அப்போது, “நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. உறுப்பினர்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. எனவே, இது குறித்து அரசு கவலை கொள்கிறது. சம்பவம் நடந்த உடன் அவைத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தை சபாநாயகர் நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு பரிந்துறைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் சில பரிந்துரைகள் ஏற்கனவே அமலில் இருக்கின்றன. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த விவகாரம் குறித்து உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குரலில் பேச வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இதை யாரும் அரசியலாக்கக் கூடாது. கடந்த காலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நாடாளுமன்றத்தில் நடந்துள்ளன. 1974ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் இருந்து ரத்தன் சந்திர குப்தா என்பவர் உரக்க குரல் எழுப்பினார். அவரிடம் 2 துப்பாக்கிகள், ஒரு வெடிகுண்டு, துண்டு அறிக்கைகள் ஆகியவை இருந்தன. இதேபோல், அதே ஆண்டு ஜூலை 26ம் தேதி பிப்ளப் பாசு என்பவர் பார்வையாளர் மாடத்துக்கு வெடிபொருட்களைக் கொண்டு வந்தார். அதே ஆண்டு நவம்பர் 26ம் தேதி சத்யதீப் சிங் என்பவர் பார்வையாளர் மாடத்துக்கு வெடி பொருட்களைக் கொண்டு வந்தார். 1999-ம் ஆண்டு அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு தேதிகளில் இருவர் மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து கீழே குதித்துள்ளனர்.